திருவையாறு
பாரதி இயக்கமும், தஞ்சாவூர் நியுடவுன் ரோட்டரி சங்கமும், தஞ்சை காந்தி இயக்கமும் இணைந்து
ஒவ்வோராண்டும் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவை ஏதேனுமொரு கிராமத்தில் நடத்துவது
வழக்கம். முந்தைய ஆண்டுகளில் இது திருப்பூந்துருத்தி, கணபதி அக்ரகாரம், தில்லைத்தானம்,
கடுவெளி, கல்யாணபுரம் போன்ற கிராமங்களில் நடைபெற்றிருக்கிறது. அது போல இந்த ஆண்டு
“காந்தி ஜெயந்தி” விழாவை உலக அகிம்சை தினமாக திருவையாற்றை அடுத்த விளாங்குடி கிராமத்தில்
கொண்டாடினார்கள். இந்த விழாவில் பாரதி இயக்கத்தோடு, திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமமும்,
அரசர் கல்லூரி சமூக நலத்துறை மாணவியர்களும் கலந்து கொண்டு மகாத்மா காந்திஜியின் நினைவுக்கு
அஞ்சலி செலுத்தினார்கள்.
“காந்தி
ஜெயந்தி” அகிம்சை தின விழாவுக்கு காந்தி இயக்கத் தலைவர் இரா.மோகன் தலைமை வகித்தார்.
தஞ்சை நியுடவுன் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.ஜஸ்டின் ஆபிரகாம், முன்னாள் தலைவர் வி.விஜய்
ஆனந்த் ஆகியோரும் உள்ளூர் பிரமுகர்களும் திரளாக வந்திருந்தனர். திருவையாறு அரசர் கல்லூரியில்
சமூக சேவைத் துறை மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவுக்காக விளாங்குடியில்
வேளாளர் தெருவில் இருந்த விநாயகர் கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது.
உள்ளூர் வாசிகள் பலரும் இந்த விழா தங்கள் கிராமத்தில் நடப்பது அறிந்து மகிழ்ச்சியோடு
ஒத்துழைத்து பலரும் கலந்து கொண்டனர்.
பேராசிரியர்
மணிக்குமரி அனைவரையும் வரவேற்று காந்திஜியின் பங்களிப்பை இந்த நாட்டு மக்கள் என்றைக்கும்
மறக்க முடியாது என்றும் அவருடைய கோட்பாடுகளைப் பின்பற்றுவதே மிகச் சிறந்த சமூக சேவை
என்பதையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்தார்.
தலைவர்
இரா.மோகன் பேசும்போது காந்திஜி சொன்ன கிராமப் பொருளாதார முன்னேற்றம் குறித்தும், தர்மகர்த்தா
முறை பற்றி காந்திஜி சொன்ன கருத்துக்கள் இன்றைய அரசியல் நிலைமைக்கு அவசியமாகக் கடைபிடிக்க
வேண்டிய வழி என்றும் சொன்னார்.
பாரதி
இலக்கியப் பயிலக இயக்குனர் தஞ்சை வெ.கோபாலன் சிறப்புரையாற்றினார். மகாத்மா காந்தி இளம்
வயதிலேயே இருளைக் கண்டால் பயப்படுபவர் என்பதால் இருட்டில் போகும்போது ராம் ராம் என்று
சொன்னால் பயம் போய்விடும் என்று தாய் சொன்னதற்கேற்ப அதைக் கடைபிடித்ததோடு குண்டடி பட்டுத்
தான் சாயும்போது கூட “ஹே ராம்” என்றே சொல்லி வீழ்ந்தார். காந்திஜி தென்னாப்பிரிக்காவில்
ப்ரிட்டோரியா செல்லுகையில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது கருப்பர்கள் முதல் வகுப்பில்
பயணம் செய்யக் கூடாது என்று சொல்லி அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வெள்ளையர்களின்
நிறவெறியைச் சுட்டிக் காட்டினார்.
காந்திஜி
தெ.ஆப்பிரிக்காவில் நேட்டால் இந்தியர் காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கி நடத்தியதும்,
அங்கிருந்த இந்தியர்களின் அடிமை வாழ்வை நீக்கவும் இவர் பாடுபட்ட் வரலாற்றைச் சொன்னார்.
1915இல் இந்தியா திரும்பிய காந்திஜியை அவருடைய குருதாதர் கோபாலகிருஷ்ண கோகலேயின் ஆணைக்
கிணங்க ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து இந்திய மக்களின் நிலைமையை நேரில் கண்டறிந்ததையும்,
மதுரைக்கருகில் ரயிலில் பயணம் செல்கையில் வயலில் விவசாயிகள் அணிந்திருக்கும் எளிய உடைகளுக்குக்
காரணம் அறிந்து தானும் இரட்டை ஆடைக்கு மாறியதையும் எடுத்துரைத்தார்.
காந்திஜி
நடத்திய சட்டமறுப்பு, அன்னிய துணி எதிர்ப்பு, உப்புக்கு விதிக்கப்பட்ட அநியாய வரியை
எதிர்த்து நடத்திய தண்டி யாத்திரை உப்பு சத்தியாக்கிரகம் ஆகியவை பற்றியும், செளரிசாவ்ரா
எனுமிடத்தில் அவரது அகிம்சை கொள்கைக்கு எதிராக வன்முறை வெடித்ததால் தன்னுடைய போராட்டத்தையே
நிறுதிய வரலாற்றையும் எடுத்துரைத்தார்.
ஆங்கிலேயர் பல தூதுக்குழுக்களை இங்கே அனுப்பியும்,
லண்டனில் வட்ட மேஜை மாநாடுகளை நடத்தியதும், அதனால் எல்லாம் எந்தவித பலனும் இல்லாத நிலையில்
காந்திஜி 1942 ஆகஸ்ட்டில் பம்பாயில் நடந்த மகாநாட்டில் நிறைவேற்றிய “க்விட் இந்தியா”
போராட்டத்தைப் பற்றியும், தலைவர்களின் கைதை அடுத்து நாட்டில் நிலவிய கலவரங்களைப் பற்றியும்
சொன்னார். காந்திஜி உட்பட எல்லா தலைவர்களையும் சிறையில் தள்ளிய பிறகு மக்கள் தாங்களாகவே
எழுச்சியுற்று நடத்திய போராட்டம் வன்முறையாக இருந்ததற்கு மகாத்மா எந்தவிதத்திலும் காரணமல்ல
என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்தப் போராட்டத்தோடு பம்பாயில் கடல்படையில் கலவரம்
வந்ததும், இங்கிலாந்தில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்து கிளமெண்ட் ஆட்லி பதவிக்கு வந்ததும்
இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது என்று முடிவான வரலாற்றை எடுத்துரைத்தார்.
இந்திய சுதந்திரம் நாட்டின் பிரிவினையோடு தொடங்கிய
விதத்தையும், மக்கள் மதரீதியாக இடமாற்றம் செய்யும் அவசியம் ஏற்பட்டு பயங்கரமான மதக்
கலவரங்கள் ஏற்பட்டதையும், அவற்றைத் தீர்த்து வைத்து சமாதானம் செய்ய காந்திஜி பாடுபட்டதையும்
எடுத்துச் சொன்னார். டெல்லி மாநகரம் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் அடைந்தபோது காந்திஜி
இப்போதைய வங்கதேசத்தில் நவகாளி எனும் இடத்தில் மதக் கலவரத்தை நிறுத்த பாடுபட்ட வரலாற்றையும்,
அதன் தொடர்ச்சியாக 1948 ஜனவரி 30இல் காந்திஜி சுடப்பட்டு மாண்டுபோன செய்தியையும் சொல்லி,
எப்படி அமெரிக்கா ஜார்ஜ் வாஷ்ங்டனையும், ஆப்ரகாம் லிங்கனையும் போற்றுகிறதோ அதுபோல இந்தியாவில்
மகாத்மா காந்தி தேசத் தந்தை என்று போற்றப் படுகிறார் என்றார்.
நியு டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.ஜஸ்டின்
ஆப்ரகாம், முன்னாள் தலைவர் வி.விஜய் ஆனந்த் ஆகியோரும் பேசினர். உள்ளூர் வாசியும் சுதந்திரப்
போர் தியாகி மாணிக்கம் பிள்ளையின் மகன் காந்திஜியின் நகைச்சுவை உணர்வு குறித்து விளக்கினார்.
உள்ளூர் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
காந்தி இயக்கத் தலைவர் இரா.மோகனின் நன்றியுரையுடன்
விழா நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment