பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 27, 2017

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள்

2--1--2018 முதல் 6--1--2018 வரை திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா. 6ஆம் தேதி ஆராதனை பஞ்சரத்ன கீர்த்தனைகளோடு நடைபெறும். 

(இந்த நிகழ்ச்சியை யொட்டி திருவையாறு பாரதி இயக்கம் ஒவ்வோராண்டும் நடத்தும் புத்தகக் கண்காட்சி & விற்பனை பாரதி இயக்க ஸ்டாலில் நடைபெறும்)

ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் காலம் 1767 – 1848. இவரைத் தியாகராஜர், தியாகபிரம்மம் என்றெல்லாம் குறிப்பிடுவர். பிறந்த ஊர் திருவாரூர், வசித்து இராமபக்தி சாம்ராஜ்யத்தில் திளைத்த ஊர் திருவையாறு. தந்தையார் ராமபிரம்மம், தாயார் சீதாம்மாள். பெற்றோருக்கு இவர் மூன்றாவது குமாரர் இவர் குரு ஷொண்டி வெங்கடரமணையா. இவர் 18ஆம் வயதில் திருமணம்.

இவர்கள் தெலுங்கு பேசும் பகுதியிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதால் இவரது தாய் மொழி தெலுங்கு. இவர் சொத்து சுகம் இவற்றுக்கு ஆசைப்படாமல், இராம பக்தியொன்றே தனக்கு போதும் என்றிருந்ததால், மன்னர் சரபோஜி இவரைத் தன் அரசவைக்கு அழைத்தபோதும் போகாமல் “நிதி சால சுகமா? ராம நின் சேவா சுகமா?” என்று கல்யாணி ராகக் கீர்த்தனையைப் பாடி தன் பற்றற்ற தன்மையை உலகுக்கு வெளிப்படுத்தியவர்.

இவருக்கு ஒரு மகான் இராம நாமத்தை பலகோடி முறை ஜெபிக்கவேண்டுமென சொன்னதன் பேரில் இவர் இராம நாமத்தை எண்ணற்ற முறை ஓதிக்கொண்டிருந்தார். இவர் அடாணாவில் ஏலநீதயராது எனும் கீர்த்தனையையும், பிலஹரியில் கனுகொண்டினி எனும் கீர்த்தனையையும் இராமதரிசனம் கிடைத்தபோது பாடியதாகத் தெரிகிறது.

தெய்வானுகூலத்தால் இவருக்கு ஸ்வரார்ணம் என்றொரு சங்கீத நூல் கிடைக்கப் பெற்றார். அதிலிருந்து இவர் சங்கீத லட்சணங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். தினசரி உஞ்சவிருத்தி எடுப்பதும், இராம லக்ஷ்மண சீதா, அனுமன் விக்ரகத்தை வைத்து அன்றாடம் பூஜைகள் செய்வதிலும் இவர் காலம் சென்றது. இவருக்குப் பல சீடர்கள் அமைந்தார்கள், அவர்களுக்கெல்லாம் இவர் இசையை போதித்து வந்தார்.

இவரது தந்தையின் நண்பர் ஒரு துறவி இவரை காஞ்சிபுரத்துக்கு அழைத்தார். அங்கு சென்ற இவர் கோவூர் எனும் ஊருக்குச் சென்று அங்கிருந்த ஒரு பிரபுவின் ஆதரவோடு சில நாட்கள் தங்கியிருந்து கோவூர் பஞ்சரத்னம் பாடினார். பிறகு வாலாஜாபேட்டை எனும் ஊருக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கினார். திருப்பதி சென்று அங்கு தன் மனத்தை மறைக்கும் பாசம், அக்ஞானம் எனும் திரைகள் மறைப்பதைச் சொல்லி, அந்தத் திரை நீங்கி பெருமான் தரிசனம் கிட்டாதா என்று ஏங்கிப் பாடியிருக்கிறார்.  வழியில் இவரை மறித்து வழிப்பறி செய்ய முயன்ற கள்வர்களை யாரோ வில்லேந்திய வீரர்கள் வந்து காப்பாற்றியதை அந்த இராமபிரானே தம்பி இலக்குவனுடன் வந்து காப்பாற்றியதாக இவர் நம்பினார்.

இவர் இயற்றியுள்ள கீர்த்தனங்கள் சுமார் 2400ஐத் தாண்டும். கீர்த்தனங்கள் தவிர இவர் பிரஹலாத பக்தி விஜயம், நெளகா சரித்திரம் போன்ற இசை நாடகங்களையும் இயற்றியிருக்கிறார். இவர் பாடல்களில் மிகச் சிறந்த பாடல்களை பஞ்சரத்னம் என்ற பெயரோடு சிலவிடங்களில் பாடினார். அவை திருவொற்றியூர் பஞ்சரத்னம், கோவூர் பஞ்சரத்னம், ஸ்ரீரங்க பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம் ஆகியவை. இவருடைய கீர்த்தனைகளைப் பாடுகின்றபோதே அந்தப் பாடல்களின் உட்கருத்தின் ரஸம் வெளிப்படும் விதத்தில் பாடக் கூடியவர். நவரஸங்களில் ஸ்ருங்கார ரஸம் தவிர இதர ரஸங்களில் எல்லாம் இவர் பாடியிருப்பது குறிப்பிடத் தக்கது. இவர் இயற்றிய இசை நாடகங்களில் ஸ்ருங்கார ரஸத்தைக் கொணர்ந்திருக்கலாம் என்றாலும் அவர் அதைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இவருக்குச் சீடர்களாக பலர் வந்து சேர்ந்தனர். அவர்களில் தஞ்சாவூர் ராமராவ் என்பவர் மூத்த சீடர். அடுத்து வீணை குப்பையர், வாலாஜாபேட்டை வெங்கடரமண பாகவதர், அவருடைய மகன் வாலாஜாபேட்டை கிருஷ்ண பாகவதர், உமையாள்புரம் சுந்தர பாகவதர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சித்தூர் ராதாகிருஷ்ணையர், தில்லைஸ்தானம் சீடர்கள் ராமய்யங்கார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

1945இல் இவர் மனைவி காலமானார். அதன் பின்னர் அவருடைய சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் மகவை ஈன்றார். இவர் 1847ஆம் ஆண்டில் தனது 80ஆம் ஆண்டில் ராமபிரான் திருவடி சேர்ந்தார். 


No comments: