·
சிறுகதை
தஞ்சை வெ. கோபாலன்
“ரமா அக்கா!” எதிர் வீட்டில் இருந்த ரமாவை உரக்கக் கூவி அழைத்தாள் உமா.
இவ்விருவருக்குள்ளும்
பல ரகசியங்கள் பரிமாரிக்கொள்ளப்படும். காலை, பகல், மாலை, இரவு எந்நேரத்திலும் இவ்விருவரின்
கூவல் அக்கம்பக்கத்தாரை முகம் சுழிக்க வைக்கும்.
இவ்விருவருமே கணவனால்
கைவிடப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கூடாதோ, சரி கணவனை உதறித் தள்ளியவர்கள்; சுதந்திரப்
பறவைகள். காலையில் எழுந்து உணவு தயாரித்து வேளா வேளைக்கு அதனை உண்டு களித்த பிறகு மீதமுள்ள
நேரங்களில் அக்கம் பக்கத்தார் பற்றிய ‘கிசு கிசு’க்கள் தான். ஒருத்திக்கு அவள் முன்னாள்
கணவன் தரும் ஜீவனாம்சம் எனும் மாதாந்தர சம்பளம் வந்து விடுகிறது. பிழைப்புக்குக் கவலையில்லை.
மற்றவளுக்கு அப்பப்போ கிடைக்கும் வேலைகளுக்குக் கிடைக்கும் கூலி. அதைக் கூலி எனலாமோ?
ஊகூம் கூடாது. ஒரு சின்னஞ் சிறிய வேலைக்குக் கூட பெரிய தொகையை வசூலித்து விடுவாள்,
அதனால் அதனை கூலி என்பது தவறு, நல்ல வருமானம். இப்படி கவலை இல்லாமல் வாழ்வினை நடத்தும்
இவர்களது பொழுது போக்கு, மற்றவர்களைப் பற்றிய வம்பு, பிறரது துன்பங்களைக் கண்டு மகிழ்வது.
ஆனாலும் அவ்வப்போது பிறருக்கு உதவி புரிவதைப் போல சென்று நின்றுகொண்டு அவர்களைப்
பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விவாதித்து மகிழ்வது. இது ஒரு நல்ல ஜோடி.
இவர்கள் தெருவில்
பணி நிறைவு பெற்ற பெரியவர் ஒருவர். எழுபத்தி ஐந்து வயதைக் கடந்தவராயினும் சாய்வு நாற்காலியில்
உட்கார்ந்து பேப்பர் படித்துப் பொழுதை ஓட்டுபவர் அல்ல. பொழுதுக்கும் ஏதாவது படித்துக்
கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பவர். பொதுக் காரியங்களில் ஆர்வம் கொண்டு பல இடங்களுக்கும்
சென்று வருபவர். இத்தனைக்கும் இவர் தனிக்கட்டை. இவர் மனைவி காலமாகி பல காலம் ஆகிவிட்டது;
பிள்ளை குட்டிகள் வேறு ஊர்களில் இருப்பதால் அவர்களை எப்போதாவது சென்று பார்த்து வருவார்,
அல்லது அவர்கள் வந்து பார்த்துச் செல்வார்கள்.
இந்த நிலையில்
இவருடைய அக்காவின் பேத்தி அதே ஊரில் ஒரு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தவள்,
முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய குடும்பம்
அதே ஊரில் வேறு இடத்தில் இருந்தது. அவள் கணவன் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்,
வாரந்தோறும் ஊருக்கு வருவார். அந்தப் பெண்ணுடன் அவளுடைய தாய் மட்டும் இந்த ஊரில் வசித்தாள்.
அவள் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவள். நம் கல்வி முறையில் தமிழைப் பாடமாக எடுத்துக்
கொண்டு படித்தவர்கள் தவிர மற்றவர்கள் தமிழில் வல்லமை பெறுவதில்லை. இவளுடைய முனைவர்
பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்புக்குச் சில தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்து
எழுத வேண்டிய சூழ்நிலை. அதற்காக அந்தப் பெண் அடிக்கடி இந்தப் பெரியவரிடம் வந்து தமிழில்
விளக்கங்களைக் கேட்டுக் கொண்டு செல்வாள்.
இப்படி அந்தப்
பெண் அடிக்கடி அந்தப் பெரியவரை வந்து பார்த்துச் செல்வதைக் கவனித்த இந்த ரமா, உமாவுக்கு
மனதில் ஒரு குறுகுறுப்பு. இவ்விருவருக்குள்ளும் அப்படியென்ன உறவு? அவள் ஏன் அடிக்கடி
இவரைத் தேடிக் கொண்டு வருகிறாள் என்பதை இவ்விருவரும் பல நாட்கள் விவாதித்து ஒரு முடிவான
முடிவுக்கு வரமுடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.
இந்த மர்ம முடிச்சை
அவிழ்க்காத வரையில் அவர்களுக்கு உணவு இறங்கவில்லை, இரவில் படுத்தால் உறக்கம் வரவில்லை
என்ன செய்வது? அவர் வீட்டுக்கு அருகிலுள்ள சிலரை நயிச்சியமாகப் பேசி ரகசியத்தை அறிந்து
கொள்ள முயன்றனர். அவர்களோ தங்களுக்கு அது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாதே, எங்கள்
கவலைகளே எங்களுக்குப் பெரிதாக இருக்கும்போது இப்படி ஊர் அக்கப்போரை எப்படித் தெரிந்து
கொள்ள முடியும் என்று கையை விரித்து விட்டனர்.
எப்படியும் இந்த
இரகசியத்தைத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும், இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று
இன்று அதற்கொரு முடிவு தெரிந்தாகணும் என்றுதான் உமா ரமாவை உரக்க சத்தமிட்டுக் கூப்பிட்டாள்.
இதுபோன்ற வம்புக்காகவே காத்துக் கொண்டிருந்த ரமா ஓடோடி வந்து என்ன என்ன என்று பதறிக்
கொண்டு கேட்டாள்.
“அதுதான் அக்கா,
அந்த பெரியவர் விஷயம். அந்தப் பொண்ணு அடுத்த தெருவிலேருந்து இங்கே வந்து இவரோடு என்ன
பேச்சு. அப்படி இவங்களுக்குள்ள என்னதான் விஷயம் இருக்கு, அதை இன்னிக்குக் கண்டிப்பா
தெரிஞ்சுகிட்டே ஆகணும்” என்றாள் உமா.
“சரி, சரி ஏதாவது
செஞ்சு அதைத் தெரிஞ்சுக்கலாம், நீயே யோசனை பண்ணிச் சொல்லு” என்றாள் ரமா.
உமாவுக்கு ஒரு
யோசனை பளிச்சிட்டது. “இன்னிக்கு விடுமுறை நாள். அவள் கண்டிப்பா அவரைத் தேடி அவர் வீட்டுக்கு
வருவாள். அப்போது நான் ஏதாவது சந்தேகம் கேட்பது போல போயி திடீர்னு அவங்க முன்னாலே
போயி நின்னு, அவங்க என்னதான் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு பார்த்துட்டு வந்து சொல்றேன்னு”
சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
ரமாவுக்கும் இருப்பு
கொள்ளவில்லை. இன்று ஏதோவொரு பெரிய இரகசியம் உடையப் போகிறது. பெரியவர் வேஷம் போட்டு
ஏமாத்திக்கிட்டு இருக்கிற இந்த ஆளோடு யோக்கியதை காத்துல பறக்கப் போகுது என்று மனம்
குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
இவ்விருவரும் எதிர்பார்த்ததைப்
போல பெரியவரின் உறவுக்காரப் பெண் ஒரு பெரிய பையைச் சுமந்து கொண்டு பெரியவரின் வீட்டுக்குள்
நுழைவதை இருவரும் பார்த்துவிட்டனர். உடனே இருவருக்கும் உடல் பரபரத்தது. உண்மை தெரிஞ்சாகணும்
என்று அவர்கள் மனங்கள் எக்காளமிட்டுக் கொண்டிருந்தன.
உமா சொன்னாள்,
“சமயம் பார்த்து நான் சத்தமில்லாம அவங்க வீட்டுக்குள்ளே போய் பார்க்கிறேன். என்னன்னு
கேட்டா ஏதாவது சந்தேகம் கேட்டுத் தெரிஞ்சுக்க வந்தது போல கேட்டு வைக்கிறேன். வந்து
சொல்றேன், அங்க என்ன நடக்குதுன்னு” என்று சொல்லிவிட்டு, கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தைக்
கண்டுபிடிக்க ஆர்வத்தோடு போனதைப் போல ஓடினாள் உமா.
பெரியவரின் வீடு
திறந்திருந்தது. கண்ணெதிரில் அவ்விருவரையும் காணவில்லை. ஒருக்கால் ஏதாவதொரு அறையில்
இருப்பார்கள். உமா மெதுவாக வாசல் கேட்டைத் திறந்து கொண்டு ஓசைப்படாமல் உள்ளே சொன்றாள்.
வாயில் கதவும் தாழிடப்படாமல் பரக்கத் திறந்து கிடந்தது. மெதுவே உள்ளேயும் புகுந்தாள்.
வாயில் தாழ்வாரம் தாண்டியதும் பெரிய ஹால். அங்கும் ஒருவரையும் காணவில்லை. ஹாலின் இடது
புறம் இருந்த ஒரு அறையில் பகலாயிருந்தாலும் வெளிச்சம் வேண்டுமென்பதற்காக மின் விளக்கு
பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. மெல்ல அடிமேல் அடிவைத்து அந்த அறை வாயிலுக்குச்
சென்று உள்ளே பார்த்தாள். அங்கு இருந்த கம்ப்யூட்டரின் முன்பு பெரியவர் உட்கார்ந்து
கொண்டிருந்தார். அவள் ஏதோ புத்தகத்தைப் பார்த்து வரிவரியாகப் படித்துச் சொல்ல, இவர்
கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருந்தார்.
அவ்விருவருக்குமிடையே
நிறைய இடைவெளியும் இருந்தது. அவர் வேலையில் கவனமாக இருந்தார். அந்தப் பெண்ணோ புத்தகத்தில்
ஆழ்ந்து புதைந்திருந்தாள். ஆகவே இருவருமே ஓசையின்றி வந்த உமாவை கவனிக்கவில்லை. அவர்கள்
கவனிக்காதபோதே திரும்பிவிடலாமா என்று திரும்ப எத்தனித்த சமயம் அந்தப் பெண் தலை நிமிர்ந்து
உமாவைக் கவனித்து விட்டாள்.
“வாங்க! என்ன விஷயம்?
இவரைப் பார்க்கணுமா?” என்று எதார்த்தமாகக் கேட்டாள்.
பெரியவரும் அப்போதுதான்
கம்ப்யூட்டரிலிருந்து தலை நிமிர்ந்து வந்திருக்கும் விருந்தாளி யார் என்பதைப் பார்த்தார்.
அவர் தெருவிலேயே அருகில் இருக்கும் ஒரு பெண்தான். இவளுக்கு என்ன வேண்டும் என்பது போல
தலையை ஆட்டி சைகையிலேயே கேட்டார்.
மென்று விழுங்கிய
உமா மெதுவாகச் சொன்னாள், “சார்! எனக்கு ஒரு ஹோமம் பண்ணனும். ராத்திரிலே படுத்தா தூக்கத்தில்
கெட்ட கனவுகள் வருது. கருப்பா பேய் ஒண்ணு வந்து பயமுறுத்துது. எனக்கு அடிக்கடி வேலையும்
கிடைக்கறதில்ல, அதனால வருமானமும் குறைஞ்சு போச்சு. யாரோ சொன்னாங்க ‘மகாலக்ஷ்மி ஹோமம்’
செஞ்சா சரியாயிடும்னு. உங்களுக்கு தெரிஞ்ச யாரையாவது சொல்லி அந்த ஹோமத்தைச் செய்யணும்,
அதுக்குத்தான் கேட்க வந்தேன்” என்று ஒருவாறு சமாளித்தாள்.
பெரியவர் அவள்
சொல்வதை சீரியசாக எடுத்துக் கொண்டு, “அப்படியா? அதுக்கு ஏதாவது ஹோமம் செஞ்சுடலாம்.
ஆனா எனக்குத் தெரிஞ்ச வரை ‘மஹாலக்ஷ்மி ஹோமம்’னு எதுவும் இது மாதிரியான விஷயங்களுக்குச்
செய்யறதில்ல. இதுக்கெல்லாம் ‘சுதர்சன ஹோமம்’ செய்வாங்க” என்று சொல்லிக் கொண்டே தன்
கம்ப்யூட்டரில் ஒரு வலைத்தளத்தைக் காட்டி அதில் சுதர்சன ஹோமம் பற்றி எழுதியிருந்ததைக்
காட்டினார்.
உமாவும் அருகில்
சென்று அதைப் படித்தாள். அதில் இவள் சொல்லும் பாதிப்புகள் எல்லாம் பட்டியலிட்டு இதுபோன்றவற்றுக்கு
‘சுதர்சன ஹோமம்’ செய்யவேண்டும் என்று இருந்தது.
உமா உடனே, “ஆமாம்
சார், இதுதான், இதுதான், எனக்கு சுதர்சன ஹோமம் செய்யணும். யாரையாவது கேட்டு என்ன செலவாகும்
எப்போது வச்சுக்கலாம் என்பதைக் கேட்டுச் சொல்லுங்களேன்” என்றாள்.
உடனே பெரியவர்
யாருக்கோ போன் செய்து கேட்டுவிட்டு பத்தாயிரம் ஆகுமாம், தேதியை முடிவு செய்யுங்க,
தேவையான சாமான்கள் லிஸ்ட் கொண்டு வந்து தரேன் என்று சொல்லி விட்டார் எனும் விஷயத்தை
அவளிடம் சொன்னார் பெரியவர்.
“சரி சார், நான்
பணத்தை உங்களிடம் தந்து விடுகிறேன், தேதியையும் பார்த்துச் சொல்கிறேன், பண்ணிவிடலாம்”
என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
நாட்கள் ஓடின.
ஹோமம் செய்ய வேண்டுமென்று சொன்ன பெண்ணைக் காணோமே என்று நினைத்தார் பெரியவர். ஆனால்
உமாவும் ரமாவும் அவர்கள் வீட்டருகே நின்றுகொண்டு கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“கிழம் நான் சொன்னதை
அப்படியே நம்பிவிட்டது. ஹோமத்துக்கு நாள் சொல்லப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கு.
நான் போன விஷயம் அதுக்கு எப்படித் தெரியும். ஆனால் போன காரியம் தான் பழம் இல்லே.
அதுங்க ரெண்டும் ஏதோ படிச்சுண்டு, டைப் பண்ணிண்டு இருந்துதுங்க. நான் எதிர்பார்த்துப்
போனது போல எதுவுமே நடக்கல. ஒருக்கால் டைப் பண்ணி முடிஞ்சப்புறம் ஏதாவது நடக்குமோ
என்னவோ, சமயம் பார்த்துப் போயிருக்கணும், பார்க்கலாம் அடுத்த தடவை எப்படியும் இதுங்களோடு
இரகசியத்தைக் கண்டுபிடிக்காம விடப் போறதில்லை” என்று பேசிக் கொண்டார்கள்.
பாவம்! அவர்களுக்குத்தான்
வேறு என்ன வேலை இருக்கிறது?
No comments:
Post a Comment