பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 27, 2017

கைலைக் காட்சி

திருநாவுக்கரசர் திருவையாற்றில் கைலைக் காட்சி கண்டபின்                                                                                           பாடிய தேவாரம்.\
-------------------------------------------------------------------------------------------------------
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்.    1.

கங்கையையும், பிறையும் அணிந்த பெம்மான் மலைமகளாம் பார்வதி அம்மையோடு          இருக்குமிடம் தேடி மலர்களும் மங்கல நீராட குடங்களில் நீரும் சுமந்து செல்வார்              பின்னால் அடியேனும் காலடி மண்ணில் எங்கும் படாமல் ஐயாற்றுத் தலத்தை யான்         அடைகின்ற பொதில் ஆண் யானை தன் பெண் துணையுடன் வரும் காட்சியைக்              கண்டேன். இந்தக் காட்சியில் ஐயன் திருப்பாதம் தரிசனம் செய்தேன், இதுநாள்  வரை ண்டறியாதவற்றைக் கண்டேன்.


போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
வாழியம்போற்றிஎன்று ஏத்திவட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்!  2.

ஐயனையும் அம்மையையும் பாடிப் பரவிக்கொண்டும் ஆடிக்கொண்டும் நான் உலக              நாயகன் உறையும் ஐயாற்றை அடைகின்றபோது கோழி தன் துணையோடு  கூடிக்    களித்து வருவதைக் கண்டேன், அங்கே ஐயனின் திருப்பாதம் கண்டேன்.


எரிப்பிறைக்கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி,
முரித்த இலயங்கள் இட்டுமுகம் மலர்ந்து ஆடா வருவேன்,
அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது,
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்!  3.

முகம் மலர பாடிப் பரவி ஏந்திழையாளொடும் எரிப்பிறைக் கண்ணியினானைத்                   தரிசித்து மகிழ்ந்து தெளிந்த நீரோடையோடு கூடிய ஐயாற்றை அடைகின்றபோது                   வரிக்குயில் தன் பேடையோடு ஆடி வருவதைக் கண்டேன். அங்கே ஐயனின்                      திருப்பாதம் கண்டேன், இதுநாள் வரை கண்டு அறியாதன கண்டேன்.


பிறை இளங்கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடி,
துறை இளம் பல்மலர் தூவிதோளைக் குளிரத் தொழுவேன்,
அறை இளம் பூங் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது,
சிறை இளம் பேடையொடு ஆடிச் சேவல் வருவன கண்டேன்;-
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டுஅறியாதன கண்டேன்!     4.

பிறையணிந்த பெம்மானும் இறைவியுமாய் காட்சியளிக்கும்போது பல்மலர்                         தூவி மனம் குளிர தொழுவேன், பூத்துக் குலுங்கும் ஐயாற்றின் சோலைகளூடே                    நான் செல்லும்போது சேவல் தன் இளம் பேடையோடு ஆடி வருவதைக்                               கண்டேன், ஈசனின் திருவடிகளைக் கண்டேன், அங்கு கண்டறியாதன வெல்லாம்                      கண்டேன். 
  

ஏடுமதிக்கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடி,
காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன்,
ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்;-
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்!    5.

ஏடுமதிக் கண்ணியானை ஏந்திழையாளொடும் கூடியிருக்கும் காட்சியக் காண                       காடு மலைகளைத் தாண்டு கைகளைத் தொழுதுகொண்டு ஆடிக்கொண்டு நான்                       ஆடலரசன் ஆளும் திருவையாற்றை அடைகின்றபோது மயில் தன் பேடையுடன்                  கூடிப் பிணைந்து அசைந்து வருவது கண்டேன். ஆங்கே இறைவனது திருப்பாதம்                       கண்டேன், கண்டறியாதன கண்டேன்.
  

தண்மதிக்கண்ணியினானைத் தையல் நல்லாளொடும் பாடி,
உள் மெலி சிந்தையன் ஆகிஉணராஉருகாவருவேன்,
அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது,
வண்ணப் பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன்;-
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்!  6.

குளிர்ந்த பார்வை கொண்ட ஈசன் தையல் நல்லாளுடன் இருக்கும் காட்சியைப்                         பார்த்து மனம் உருகி பாடிக் கொண்டு அண்ணல் உறைகின்ற ஐயாற்றை                           அடைகின்றபோது வண்ணப் பறவையாம அன்றில் தன் இணையோடு சேர்ந்து                          வருவதைக் கண்டேன், ஈசனின் இணையடி தரிசனம் கண்டேன், கண்டறியாதன      கண்டேன்.
  

கடிமதிக்கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி,
வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்,
அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது,
இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்;-
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்!    7.

பரமேஸ்வரனை மலைமகளோடும் இணைந்து பாடி மகிழ்ந்து வாய் நிறைய                    புகழ்பாடிக்கொண்டு கழலணிந்த ஈசன் உறையும் ஐயாற்றினை நான் அடைகின்றபோது             இடிகுரலில் உறுமிக் கொண்டு வரும் காட்டுப் பன்றி தன் இணையுடன் இணைந்து                    வருவதைக் கண்டேன். கண்டறியாதனவைகள் எல்லாம் கண்டேன்.
  

விரும்பு மதிக் கண்ணி யானை மெல்லியலாளொடும் பாடி,
பெரும் புலர்காலை எழுந்துபெறு மலர் கொய்யா வருவேன்.
அருங் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது,
கருங் கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்;-
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்!     8.

ஐயனையும் அம்மையையும் பாடிப் பரவுதற்கு பொழுது புலருமுன்  எழுந்து                       மலர்களைக் கொய்துகொண்டு பொன்னும் மணியும் நிறைந்து கிடைக்கும்                            ஐயாற்றை அடைகின்றபோது கருங்குரங்கு தன் பேடையோடு ஆடிக்கொண்டு         இணைந்து வருவதைக் கண்டேன், ஈசன் திருப்பாதம் கண்டேன்கண்டறியாதன                 கண்டேன்.
  

முற் பிறைக் கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி,
பற்றிக் கயிறு அறுக்கில்லேன்பாடியும் ஆடா வருவேன்,
அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது,
நல்-துணைப் பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன்;-
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்!    9.

முற்பிறைக் கண்ணியினானும் மொய்குழலாளொடும் இருக்கும் காட்சி                                          காண பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் நான் ஐயாற்றை அடைகின்றபோது                         நாரை தன் துணையோடு இணந்து வருவது கண்டேன், கண்டறியாதன                               கண்டேன்.
  

திங்கள்-மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி,
எங்கு அருள் நல்கும் கொல்எந்தை எனக்கு இனிஎன்னா வருவேன்,
அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது,
பைங்கிளி பேடையொடு ஆடிப் பறந்து வருவன கண்டேன்;
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்!     10.

குளிர்ந்த கண்களுடைய ஈசன் தன் தேவி தேமொழியாளொடும் இருக்கும்                           காட்சியைப் பாடிக்கொண்டு என்று நினது திருவருள் கிட்டும் என்று நான்                           திருவையாற்றை அடைகின்றபோது பைங்கிளி தன் பேடையோடு ஆடிப்                                 பறந்து வருவது கண்டேன், கண்டேன், கண்டறியாதன கண்டேன்.
  

வளர்மதிக் கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி,
களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக் கண் நிற்கின்றேன்,
அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்ற போது,
இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்;-
கண்டேன்அவர் திருப்பாதம்கண்டு அறியாதன கண்டேன்!     11.

வளர்மதிக் கண்ணான் தன் வார்குழலாளொடும் இருக்கும் காட்சியை                                           என் கடைக் கண்களால் பார்க்க முடியாதா என்று ஏங்கி அளவற்ற அன்போடு                             நான் திருவையாற்றை அடையும்போது காளை தன் இணையோடு மகிழ்ந்து                       வருவது கண்டேன், கண்டறியாதன வெல்லாம் கண்டேன்.
  

No comments: