பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, December 13, 2016

புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு. Part 1.

                                       பகுதி 1.
தென்னாட்டின் புகழ்மிக்க மறவர் ராஜ்யமான இராமநாதபுரம் சமஸ்தானத்தை கி.பி. 1673 தொடங்கி 1708 வரையிலான முப்பத்தைந்து ஆண்டு காலம் ஆண்டு, வரலாற்றில் புகழ்மிக்க மறவர்குல மன்னனாக அறியப்பட்டவர் ரகுநாத கிழவன் சேதுபதி. அவருடைய இரண்டாவது மனைவியான காதலி நாச்சியாரின் சகோதரர் ரகுநாத தொண்டைமான். கிழவன் சேதுபதி தனது மைத்துனரான ரகுநாத தொண்டைமானை புதுக்கோட்டை பகுதிகளை சுயேச்சையாக ஆண்டு கொள்ள அனுமதி கொடுத்தார். இதற்கு முன்பு ரகுநாத தொண்டைமான் திருமெய்யம் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தார். இவர் இராமநாதபுரம் கிழவன் சேதுபதிக்கு உண்மை விஸ்வாசத்துடன் பணியாற்றி உதவியமைக்காக அவரது அர்ப்பணிப்பு சேவையைப் பாராட்டி பரிசாக புதுக்கோட்டையை ஆளும் உரிமையைக் கொடுத்தார். இப்படி உருவானதுதான் புதுக்கோட்டை சமஸ்தானம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுதேச சமஸ்தானங்களுக்கு இந்திய குடியரசுடன் இணைய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இருந்த புதுக்கோட்டை சமஸ்தானம் தான் முதன் முதலில் 1948 மார்ச் மாதம் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இணைந்தது. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலை நேரில் சந்தித்து இந்த இணைப்பைச் செய்துவிட்டுத் திரும்பியவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னர் பிரஹதாம்பாள்தாஸ் ராஜகோபால தொண்டைமான் அவர்கள்.
இராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசராக இருந்த புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் பிற்காலத்தில் சுயேச்சையாக தாங்களே ஆளத் தொடங்கினார்கள். கிழவன் சேதுபதி காலமானவுடன் புதுக்கோட்டை ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையின் சுயேச்சையான மன்னராக அறிவித்துக் கொண்டார். அவருடைய சகோதரி காதலி நாச்சியார் கிழவன் சேதுபதி காலமானவுடன் அவருடன் உடன்கட்டை ஏறி உயிர்நீத்தார் என்கிறது வரலாறு.
                          
                New Palace built in 1938
புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்களின் முன்னோர்கள் வடக்கே தொண்டை மண்டலம் திருப்பதி பகுதியிலிருந்து வந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் சார்பில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். அந்த போர்களில் உதவியாக ஈடுபட்டமைக்காக பரிசாக அளிக்கப்பட்ட ஊர்களாக கறம்பக்குடியும், அம்புக்கோயிலும் இருக்க வேண்டும். அதனால் அங்கு வந்து குடியேறினார்கள் இவர்கள். தாங்கள் குடியேறிய பகுதியில் வீரர்களாக இருந்தமையால் அப்பகுதிகளுக்குத் தலைமை தாங்கும் பணியை ஏற்றிருக்க வேண்டும், அதன் மூலம் புதுக்கோட்டைப் பகுதியில் இவர்கள் செல்வாக்குடையவர்களாக ஆகியிருக்க முடியும். தெலுங்கில் “தொண்டைமான் வம்சாவளி” எனும் ஒரு நூல் உண்டு. அதில் இவர்கள் இந்திரவம்சத்தினர் என்றும் முதலாம் தலைமை பச்சை தொண்டைமான் என்பவரிடம் இருந்தது என்கிறது. இவருடைய மகன்தான் ரகுநாத ராய தொண்டைமான். இவர் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரிடமும் திருச்சியை ஆண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரிடமும் நெருக்கமாக இருந்ததாகத் தெரிகிறது. திருச்சிராப்பள்ளியில் இவர் அரசாங்கக் காவல் பணியிலும் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் இவருடைய தங்கையான காதலி நாச்சியாரை ராமநாதபுரம் மன்னரான ரகுநாத கிழவன் சேதுபதி (1673 – 1710) என்பார் திருமணம் செய்து கொள்கிறார். இந்தத் திருமணம் மூலம் இவ்விருவர் நட்பும், உறவும் வலுப்படுகிறது.
இந்த உறவு ஏற்பட்ட பின்னர் கிழவன் சேதுபதி தன் மைத்துனருக்கு அங்கு ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளாற்றுக்குத் தென்புறமுள்ள தன் ராஜ்யத்தின் சில பகுதிகளை தொண்டைமானுக்கு அளிக்கிறார். தாங்கள் இருந்த கறம்பக்குடி பகுதியோடு சேதுபதி கொடுத்த பகுதிகளையும் சேர்த்து இவர்களுக்கு உரிமையான இடம் பெரிதாகிவிடுகிறது. இப்படித்தான் கிழவன் சேதுபதியின் உதவியினால் இங்கு தொண்டைமான் ஆட்சி துவங்குகிறது.
இப்படி ரகுநாத ராய தொண்டைமான் புதுக்கோட்டை பகுதிக்கு உரியவராக ஆன சமயத்தில், இவருடைய சகோதரர் நமன தொண்டைமான் குளத்தூர்பாளையும் எனும் பகுதிக்கு உரியவராகிறார். இவருக்கு திருச்சி முத்துவீரப்ப நாயக்கரின் ஆசியும் கிடைக்கிறது. எனவே ரகுநாத ராய தொண்டைமானை புதுக்கோட்டை தொண்டைமான் என்றும், நமன தொண்டைமானை குளத்தூர் தொண்டைமான் என்றும் அழைத்தனர். இந்த நிலைமை 1750ஆம் ஆண்டில் இவ்விரு பகுதிகளும் இணைக்கப்படும் வரை இதே பெயர்களில் இருந்தன. மேலும் சில போர்கள் மூலமும் ரகுநாத ராய தொண்டைமான் வேறு சில பகுதிகளையும் தன் ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். அவை இப்போது குளத்தூர், ஆலங்குடி, திருமெய்யம் தாலுகாக்கள் என வழங்கப்படுகின்றன. இவை அத்தனையும் ஒருங்கிணைந்த பகுதிதான் புதுக்கோட்டை சமஸ்தானம்.

ரகுநாதன், நமனன் ஆகியோர் ராமநாதபுரம் சேதுபதிக்குப் போரில் உதவி செய்ததோடு, போரில் மதம் கொண்டு ஓடுகின்ற யானைகளை அடக்கியும் உதவி புரிந்தனராம். அந்த வீரச் செயலுக்காக இராமநாத புரம் சேதுபதி இவர்களுக்கு பல நிலப்பகுதிகளை பரிசாக அளித்து பாராட்டினராம்.அதையொட்டியே ரகுநாதத் தொண்டைமான் புதுக்கோட்டையின் முதல் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என்கிறது வரலாறு.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தெரிந்துகொள்ளவேண்டிய வரலாற்றினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்கிறோம்.