பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 6


5. விஜய ரகுநாத ராய தொண்டைமான் (1797 – 4 ஜூன் 1825).

          ராஜா விஜயரகுநாத தொண்டைமானின் இறப்பை யடுத்து அவருடைய மகனான விஜய ரகுநாத ராய தொண்டைமான் புதுக்கோட்டை அரசராக வந்தார். விஜயரகுநாத ராய தொண்டைமான் 1797இல் பிறந்தவர். முந்தைய மன்னரின் இரண்டாவது மனைவியும், மன்னருடன் உடன்கட்டை ஏறியவருமான ராணி ஆயி அம்மணி ஆயி சாஹேப் அவர்களுடைய மகன். தனி ஆசிரியரை நியமித்து இவர் அரண்மனையிலேயே கல்வி கற்றவர். இவர் தந்தை காலமானபோது இவரும், இவருக்கு இளையவர் ஒருவரும் மட்டுமே உயிரோடு இருந்தனர்.

            இவருடைய தந்தையார் காலமான 1807 பிப்ரவரி 1ஆம் தேதி இவர் பதவிக்கு வந்தார். அப்போது இவருக்கு பதினெட்டு வயது ஆகவில்லை. இவர் மேஜர் ஆகும் வரையில் ஆட்சிப் பொறுப்பு அப்போது தஞ்சாவூரில் ரெசிடெண்ட் பதவியில் இருந்த ஆங்கிலேயர் மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் என்பவர் தலைமையில் இயங்கிய ஒரு மேலாண்மை அவையிடம் இருந்தது.

            மன்னர் பதவிக்கு வந்து பதினெட்டு வயது ஆகும் வரை பொறுப்பு வகித்த வில்லியம் பிளாக்பர்ன் காலத்தில் புதுக்கோட்டை புதுப்பொலிவு கண்டது. பழமைக் கோலம் பூண்டிருந்த புதுக்கோட்டை புதுத் தோற்றத்தைக் கொடுத்தார் இவர். சாலைகள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டு போக்கு வரத்துக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. வீடுகள் அனைத்தும் ஓட்டு வீடுகளாக மாறியது. பொது அலுவலகங்களுக்கென்று புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. 1825ஆம் ஆண்டில் புது அரண்மனையொன்று திருக்கோகர்ணத்தில் கட்டப்பட்டது. பிளாக் பர்ன் தஞ்சையில் ரெசிடெண்டாக இருந்ததால் அங்கு ஆண்டு வந்த மராத்திய மன்னர்கள் ஆட்சி மராத்தி மொழியில் இருந்தது. அதே மராத்திய மொழியையும் இங்கு அவர் அறிமுகப் படுத்தினார். அரசின் நிர்வாக மொழியாக மராத்தி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிலைமை அடுத்த எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது. உள்ளாட்சித் துறையும், நீதித் துறையும் ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்து பிற இடங்களில் நடப்பதைப் போல புதுக்கோட்டையிலும் அறிமுகம் செய்தார் இவர். நகரின் மையப் பகுதியில் அழகு மிளிரும் வகையில் ஒரு கோட்டையையும் அதனைச் சுற்றிலும் அகழியும் அமைத்து புதிதாக உருவாக்கினார். நகரமைப்பில் புதுமை செய்து ஒவ்வொரு திசையிலும் ஒரு முக்கிய வீதி, அதன் பின்னால் ஒவ்வொரு வீதியும் 1,2,3 என்று பெயரிடப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டது. புதிய புதுக்கோட்டைக்கு மேஜர் பிளாக் பர்ன் அஸ்திவாரமிட்டார். அப்போது எழுப்பப்பட்ட அந்த அரண்மனை காலவோட்டத்தில் இப்போது அழிந்து ஆங்காங்கே ஒருசில சுவர்கள் மாத்திரமே மிஞ்சியிருக்கிறது. அவைகளை இப்போதும் மேல ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி பகுதிகளில் காணலாம்.

            இந்த விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1825 ஜூன் 4இல் மர்மமான வியாதியால் இறந்து போனார். இவருக்குப் பிறகு இவரது இளைய சகோதரரான 2ஆம் ரகுநாத தொண்டைமான் பதவிக்கு வந்தார்.

            காலம் சென்ற விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1812ஆம் வருஷம் புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த சிங்கப்புலி ஐயர் என்பவரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு திருமலை பன்றிகொன்றான் என்பவரின் மகளையும் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டார். விஜய ரகுநாத ராய தொண்டைமானுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகன் பெயர் விஜய ரகுநாத ராய தொண்டைமான், இவர் 1823 டிசம்பரில் இறந்து போனார். மகள் ராஜகுமாரி ராஜாமணி பாயி சாஹேப்.

6.ராஜா ஸ்ரீ ரகுநாத தொண்டைமான் பகதூர் (1798 – 1839 ஜூலை 13)

          முந்தைய மன்னர் காலமான பிறகு 1825 ஜூன் 4இல் பதவிக்கு வந்தவர் இந்த ராஜா ஸ்ரீ ரகுநாத தொண்டைமான் பகதூர். இவருடைய ஆட்சி 1839 ஜூலை 13 வரை நீடித்திருந்தது.

            ராஜா ஸ்ரீ ரகுநாத தொண்டைமான் பகதூர் 1798இல் பிறந்தவர். இவருடைய தந்தையார் விஜய ரகுநாத தொண்டைமான். தாயார் ராணி ஆயி அம்மனி ஆயி சாஹேப் அவர்கள். விஜயரகுநாத தொண்டைமானின் இரு மகன்களில் இவர் இளையவர். இவர் அண்ணன் 2ஆம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1825இல் மர்மமான முறையில் காலமானதையொட்டி இவர் பதவிக்கு வந்தார் என்பதை முன்னர் பார்த்தோம்.

            ரகுநாத தொண்டைமான் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருடைய மகுடாபிஷேகம் 1825 ஜூலை 20இல் நடந்தது. இவரது ஆட்சி காலம் பெரும்பாலும் எந்தவிதமான குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகள் இன்றியே நடந்து முடிந்தது. 1837ஆம் ஆண்டில் ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்குவதற்கென்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். திருச்சிக்கு அருகிலிருந்து காவிரி நீரை புதுக்கோட்டைக்குக் கொண்டு வரும் திட்டம் அது. ஆனால் அப்போதைய சமஸ்தானத்தின் நிதி நிலைமை அதற்கு இடம் கொடுக்காத காரணத்தால் அந்தத் திட்டம் நிறைவேற்றப் படவில்லை. ரகுநாத தொண்டைமான் மன்னரை அழைக்கவோ, பெயரைக் குறிப்பிடவோ அவர் பெயருக்கு முன்னால் “ஹிஸ் எக்செலன்சி” என்று குறிப்பிட வேண்டும் எனும் உத்தரவையும், இவருக்கு 17 பீரங்கி குண்டு வெடித்து மரியாதை செய்ய வேண்டுமென்றும் 1830ஆம் வருஷம் உத்தரவு பிறப்பித்தார்.

            இவர் இரு மனைவியரைத் திருமணம் செய்து கொண்டார். முதலில் 1812ஆம் வருஷம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சூரியமூர்த்தி பன்றிகொன்றான் என்பவருடைய மகளையும், பிறகு ராணி கமலாம்பா ஆயி சாஹேப் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு மகன்கள் இரு மகள்கள் பிறந்தனர்.

            இவர்களில் ராஜகுமாரி பெரிய ராஜாமணி பாயி சாஹேப் 1836இல் காலமாகி விட்டார். ராஜகுமாரி சின்ன ராஜாமணி பாயி சஹேப் 1840இல் காலமானார். மகன்கள் ராமச்சந்திர தொண்டைமான் (1829 – 1886), திருமலை தொண்டைமான் (1831 – 1871).
                       
8.ராஜா ஸ்ரீ பிரஹதாம்பா தாஸ் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர்     (1829 அக்டோபர் 20 – 1886 ஏப்ரல் 15).

          அடுத்ததாக புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு அரசராக வந்தவர் இந்த ராஜா ஸ்ரீ பிரஹதாம்பா தாசர் ராமச்சந்திர தொண்டைமான் பகதூர். புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் தங்களைத் தங்கள் குலதெய்வமான பிரஹதாம்பாள் அம்பாள் பெயரால் அவருடைய தாசர்கள் என்று அழைக்கும்படி உத்தரவிட்டிருந்தார்கள். அதன்படி இவர் பெயரோடு பிரஹதாம்பாள் தாஸ் என்று சேர்க்கப்பட்டிருக்கிறது.
         
          முந்தைய அரசரான ரகுநாத தொண்டைமானுக்கு இந்த ராமச்சந்திர தொண்டைமான் 1829 அக்டோபர் 20இல் பிறந்தார். இவர் தாயார் ராணி கமலாம்பாள் ஆயி சாஹேப். அரண்மனையிலேயே தனி ஆசிரியர்களிடம் கல்வி பயின்ற இவர் தன்னுடைய ஒன்பதாவது வயதில் தன் தந்தை இறந்தவுடன் பிரிட்டிஷ் ரெசிடெண்டின் ஆதரவோடும் வழிகாட்டுதலோடும் அரசாட்சியை ஏற்றுக் கொண்டார்.

            ராஜா ராமச்சந்திர தொண்டைமான் மேஜராகும் வரை இவர் சார்பில் புதுக்கோட்டையில் இருந்த ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் ரெசிடெண்ட் ஆட்சியைக் கவனித்து வந்தார். இவருக்கு பதினெட்டு வயது அடைந்த பின் இவரை அரசராக அறிவித்து, “ஹிஸ் எக்செலன்சி” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட வேண்டுமென்று பிரிட்டிஷார் அறிவிப்பு செய்தனர். 1844ஆம் வருஷம் இந்த ராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டை அரசாட்சியை நேரடியாக ஏற்று நிர்வகிக்கத் தொடங்கினார்.

            ராமச்சந்திர தொண்டைமான் ஆட்சியில் சமஸ்தானத்தின் நிதிநிலை நன்றாக இல்லை. மேலும் நிர்வாகத்தில் பல ஊதாரிச் செலவுகளும், நிர்வாக சீர்கேடுகளும் நடப்பதாகவும் கண்டறியப்பட்டது. இப்படிப்பட்ட நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இவருக்கு பிரிட்டிஷ் கம்பெனியார் ரெசிடெண்ட் மூலம் இவருடைய விருதான “ஹிஸ் எக்செலன்சி”யை பயன்படுத்த 1859ஆம் ஆண்டில் ஒரு முறையும்,1873இல் ஒரு முறையும் தடை விதித்தது. 1878ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை நிர்வகிக்க “திவான்” எனும் முதல் அமைச்சர் போன்ற பதவிக்கு திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த திவான் ஏ.சேஷையா சாஸ்திரி என்பாரை சென்னை சர்க்கார் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.

            புதுக்கோட்டை வரலாற்றில் இந்த சேஷையா சாஸ்திரி என்பார் தன் திறமையாலும், சாதனைகளாலும் போற்றப் படுகிறார். இவர் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் புதுக்கோட்டை நிர்வாகத்தில் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். புதுக்கோட்டை நகரை சீரமைத்து புதுப்பொலிவூட்டினார். இன்றைய நவீன காலகட்டத்தில் நகரமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்கிற பாதையில் அன்றைக்கே புதுக்கோட்டையை ஒரு மாதிரி நகரமாக உருவாக்கினார் சேஷையா சாஸ்திரி. புதுக்கோட்டைக்குச் சிறப்பு செய்கின்ற புதுக்குளத்தையும், நகரத்தின் மத்தியில் சாந்தாரம்மன் கோயிலையொட்டி அமைந்திருக்கும் பல்லவன் குளத்தையும் சீர்படுத்தி புதுப்பித்தார். 1884இல் புதுக்கோட்டைக்கு தபால், தந்தி அலுவலகம் கொண்டு வரப்பட்டது. பழமையிலிருந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் புதுமைக்குக் கொண்டு வரும் பணிகள் அனைத்தையும் சேஷையா சாஸ்திரி செய்தார்.

            புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குட்பட்ட பல ஊர்களில், சின்னஞ்சிறு கிராமங்களில் அமைந்துள்ள பல ஹிந்து ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. இவர் காலத்தில் தான் புதுக்கோட்டை மன்னர்களுக்கேயுரிய “பிரஹதாம்பாள் தாஸ்’ எனும் விருதினை ராமச்சந்திர தொண்டைமான் சேஷையா சாஸ்திரியின் சம்மதத்தோடு, தன் பெயரோடு இணைத்துக் கொண்டார்.

            ராமச்சந்திர தொண்டைமானுக்கு “ஹிஸ் எக்செலன்சி” விருதும் 11 பீரங்கி குண்டு மரியாதையும் 1885இல் வழங்கப்பட்டது. 1875இல் இவருக்கு இங்கிலாந்தின் இளவரசரான “பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்” பெயரால் வழங்கப்பட்ட விருது கிடைத்தது.  1877இல் இவருக்கு “எம்பரஸ் ஆஃப் இந்தியா” எனும் தங்க மெடல் வழங்கப்பட்டது.

            ராமச்சந்திர தொண்டைமான் ராணி பிரஹாதாம்பாள் ராஜாமணி பாயி சாஹேப் என்பவரை 1845 ஜூன் 13இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் 1. கமலாம்பாள் ராஜாமனி பாயி சாஹேப் (இறப்பு: 1903 ஜனவரி 24). மங்களாம்பாள் ராஜாமணி பாயி சாஹேப் (இறப்பு. 1873).

            ராமச்சந்திர தொண்டைமான் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொண்டார். அவர் ஜானகி சுப்பம்மாள் என்பவர். இவர் நெடுவாசல் ஜமீன்தாரின் மூத்த மகள். இந்தத் திருமணம் 1848 ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்தது. இந்த திருமணத்தின் மூலம் இவருக்கு இரு குழந்தைகள் ஒரு பையன் ஒரு மகள் பிறந்தனர். அவர்கள் சிவராம ரகுநாத தொண்டைமான் (இறப்பு 1867), பிரஹதாம்பாள் ராஜாமணி பாயி சாஹேப் (1852 – 1903).

            ராமச்சந்திர தொண்டைமான் காலத்திலேயே அவருடைய மகனான சிவராம ரகுநாத தொண்டைமான் காலமாகிவிட்டார். அதனால் மகனை இழந்த மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் என்பவரை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இவர் மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் பேரன். அதாவது மகள் பிரஹதாம்பாள் ராஜாமணி பாயி சாஹேபின் மகன். அவரை அடுத்த மன்னராகத் தேர்வு செய்தனர்.

            ராமச்சந்திர தொண்டைமானுக்கு இசையில் ஆர்வம் அதிகம். கர்நாடக சங்கீதத்துக்கு அதிக ஆதரவு கொடுத்தார். அரண்மனையில் அடிக்கடி கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடைபெறலாயின. ராமச்சந்திர தொண்டைமானே ஒரு சிறந்த பாடலாசிரியர், கவிஞர். இவர் இயற்றிய குறவஞ்சி நாடகத்துக்கு இவரே இசை அமைத்து அரங்கேற்றினார். அந்த குறவஞ்சி அரங்கேறிய இடம் விராலிமலை முருகன் ஆலயம்.


No comments:

Post a Comment

You can give your comments here