பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 4.


2.முதலாம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் (25-8-1713 – 28-12 1769)

                 புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இரண்டாவது சுதந்திரமான அரசர் இந்த முதல் விஜயரகுநாத ராய தொண்டைமான். 1730இல் பதவிக்கு வந்த இவர் 1769 வரையில் ஆட்சி புரிந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் வடக்கே முகலாய வம்சத்து சக்கரவர்த்திகள் ஆண்டு கொண்டிருந்தனர். இந்த முகலாய சக்கரவர்த்திகளின் ஆளுகைக்குட்பட்டதாக தெற்கே நிஜாமும், அவருக்குக் கீழ் ஆற்காடு நவாபும், அவர் கட்டுப்பாட்டின்கீழ் நாயக்கர்கள் ஆண்ட செஞ்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய சின்னஞ்சிறு ராஜ்யங்களும் இருந்து வந்தன. இவைகள் தவிர வரிவசூல் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு பாளையக்காரர்களும் இவர்களைப் போலவே ஆற்காடு நவாப், நிஜாம், முகலாய மன்னர்கள் என்று வரிசையில் ஆட்சி புரிந்தார்கள். இந்த சின்னஞ்சிறு ராஜ்யங்கள் கர்நாடிக் நவாப் எனப்படும் ஆற்காடு நவாபுக்குக் கப்பம் கட்டி வந்தனர். இடையிடையே இவர்கள் கப்பம் கட்ட தவறும் போது, கர்நாடக நவாப் இவர்கள் மீது படையெடுப்பதும், அதற்கு ஆங்கில கம்பெனியார் உதவி செய்வதும் வழக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட படையெடுப்புகளுக்கு ஏனைய ராஜ்யங்கள் பலியான போதும் புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் இதுபோன்ற படையெடுப்புகளில் இருந்து தப்பித்து வந்தது. ஆனாலும் புதுக்கோட்டையில் தொண்டைமான்கள் ஆண்ட போது இவர்களுக்குள் நடந்த போர்களில் கலந்து கொள்ள நேர்ந்தது. இவருடன் போரிட்டவர்கள் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்களும், ஆற்காடு நாவாபுடன் மோதிக்கொண்டிருந்த சந்தா சாஹேபும் அவனுக்கு உதவியாக வந்த பிரெஞ்சுப் படைகளும் தான். புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாருக்கு ஆதரவு நிலை எடுத்திருந்ததால், தென்னகத்தில் அப்போது குடியேறியிருந்த கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அடிக்கடி மோதல் நேர்ந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி, புதுக்கோட்டை மன்னர்களும் தங்களுடன் உறவு பூண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சுக் காரர்களிடமும், சந்தா சஹேபிடமும் விரோதம் கொண்டு போராட வேண்டியிருந்தது.

            ஆற்காடு நவாப் பதவிக்கு அங்கு பங்காளிச் சண்டை நடந்து கொண்டிருந்த சமயம். நவாப் முகமது அலிக்கும் சந்தா சாஹேபுக்குமிடையில் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. முகமது அலிக்கு ஆங்கிலேயர் கிழக்கிந்திய கம்பெனியாரும், சந்தா சாஹேபுக்கு பிரெஞ்சுக்காரர்களும் ஆதரவு தந்தனர். தென் இந்தியாவில் தாங்கள் காலூன்ற வேண்டுமென்று இவ்விரு ஐரோப்பிய நாட்டவர்களும் முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இவ்விருவரும் ஆளுக்கு ஒரு சிற்றரசனைக் கையில் போட்டுக்கொண்டு அவர்களையும் மோதவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த யுத்தங்கள் ஒருநாள் இரண்டு நாட்கள் நடந்தவை அல்ல. இது ஒரு தொடர்கதையைப் போல நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்தன. அதிலும் திருச்சியை மையமாகக் கொண்டு இவர்களது போராட்டம் அமைந்திருந்தது. புதுக்கோட்டை தொண்டைமான் ஆட்சி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அசைக்கமுடியாத உறுதுணையாக இருந்து வந்தது. தஞ்சை மராத்தியர்கள் அங்கும் இங்குமாக ஊசலாடிக் கொண்டு, ஒரு முறை முகமது அலிக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தும், சந்தா சாஹேபு படையெடுத்து வந்தால் அவனுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்து சமாதனம் செய்து கொண்டும் இருந்துவிட்டு, இறுதியில் சந்தா சாஹேப் வசமாக மாட்டிக் கொண்ட சமயம் அவனைப் பிடித்து சிறைவைத்து, முகமது அலியின் விருப்பப்படி அவன் தலையை வெட்டி திருச்சிக்கு அனுப்பியும் வைத்தனர். இந்த யுத்த அரசியலின் காரணமாக தெற்கே ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் ஆதிக்கத்தை மிகவும் உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டனர்.
           
            இப்படி புதுக்கோட்டை தொண்டைமான்களும், தஞ்சை மராத்தியர்களும் ஆங்கில கம்பெனிக்குச் செய்த உதவி காரணமாக ஆற்காட்டு நவாபுக்கு இவர்கள் கப்பம் கட்டுவது தள்ளுபடி செய்யப்பட்டது. இது புதுக்கோட்டைக்கு நிரந்தரமான சலுகை என்றாலும், தஞ்சையைப் பொறுத்த மட்டில், கர்நாடக நவாப் ஆங்கிலேயர்களிடம் வாங்கிய கடனை திரும்ப அடைக்க முடியாமல் தஞ்சைக்குக் கொடுத்த சலுகையை நீக்கிக் கொண்டு, மீண்டும் கப்பம் கேட்டு தஞ்சையை துளஜேந்திர ராஜாவிடமிருந்து இரு ஆண்டுகள் பிடித்து வைத்திருந்தனர்.

            புதுக்கோட்டைக்கும் ஆங்கில கம்பெனியாருக்குமிடையே இருந்த இந்த உறவு இவருக்கு அடுத்த அரசரான ராய ரகுநாத தொண்டைமான் காலத்திலும் நீடித்தது. காரணம் மைசூரின் ஹைதர் அலியின் அச்சுறுத்தல் புதுக்கோட்டைக்கு எப்போதும் இருந்ததால், ஆங்கில கம்பெனியாரின் உதவி தேவைப்பட்டது.

            முதலாம் விஜயரகுநாத ராய தொண்டைமான் 1713ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25இல் பிறந்தவர். தந்தையார் திருமலை ராய தொண்டைமான், தாய் நல்லாயி ஆயி சாஹேப். இவரும் தனி ஆசிரியரை அமர்த்திக் கொண்டு கல்வி கற்றார். 1729இல் இவரது தந்தை காலமானதும் இவர் ஆட்சிக்கு வந்தார். இவருடைய பாட்டனாரான முதல் புதுக்கோட்டை மன்னர் ரகுநாத ராய தொண்டைமான் இவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். ஆக பாட்டனுக்குப் பிறகு பேரன் அரசு கட்டிலில் ஏறிய நிகழ்ச்சி நடைபெற்றது.

            முதல் விஜய ரகுநாத ராய தொண்டைமானுடைய முடிசூட்டு விழா குடுமியான் மலை ஆலயத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை மன்னர்களுடைய விழாக்கள் அனைத்தும் அந்த ஆலயப் பிரகாரத்தில் அமைந்துள்ள அறுகோண வடிவில் அமைந்த ஒரு பெரிய பாறையைத் தளமாகக் கொண்ட மண்டபத்தில் நடத்துவதுதான் வழக்கம். அதன்படி இவருடைய முடிசூட்டு விழா குடுமியான் மலையில் கோலாகலமாக நடைபெற்றது.  தாத்தாவுக்குப் பிறகு பதவி கிடைத்த இவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும்படியான நிலைமை தோன்றியது. அப்படி அவர் போரிட்டது வேறு எந்த எதிரிகளுடனுமல்ல, அவருடைய சொந்த சித்தப்பாக்களுடன் தான். ரகுநாத ராய தொண்டைமானுக்குப் பிறகு அவர்களுடைய புதல்வர்கள் பதவிக்குக் காத்திருக்க பேரனுக்குக் கிடைத்ததில் அவர்களுக்கு கோபம். உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. அப்போது தஞ்சாவூர் மராத்திய படைகளின் தளபதி ஆனந்த ராவ் என்பார் புதுக்கோட்டையின் மீது படையெடுத்து வந்து விஜயரகுநாத ராய தொண்டைமானைத் தோற்கடித்து அவரை திருமயம் கோட்டையில் சிறை வைத்தார். அடுத்த ஓராண்டு காலம் அவர் புதுக்கோட்டையின் பாதுகாப்பு அரண்களையெல்லாம் தகர்த்துவிட்டு தலைநகரத்தையும் சூறையாடிவிட்டுச் சென்றார். 
            இந்த சூழ்நிலையில் 1750இல் இரண்டாம் கர்நாடிக் யுத்தம் தொடங்கியது. இது ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கும், பிரெஞ்சுக் காரர்களுக்குமிடையே நடந்தது. இந்த யுத்தத்தில் சந்தா சாஹேப் பிரெஞ்சுக்காரர்கள் பக்கம் இருந்து போரிட்டார்.  கிழக்கிந்திய கம்பெனிக்கு தஞ்சை மராட்டியர்கள் ஆதரவு கொடுத்துப் போரிட்டனர். அப்போது திருச்சிராப்பள்ளி கோட்டையை பிரெஞ்சுக் காரர்கள் முற்றுகையிட்டனர். அந்த முற்றுகையின் போது பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியப் படைகளுக்கு புதுக்கோட்டை எல்லா உதவிகளையும் அனுப்பி உதவி செய்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரெஞ்சுப் படைகள் 1754 மே மாதத்தில் புதுக்கோட்டையைக் குறி வைத்துத் தாக்கி புதுக்கோட்டையை துவம்சம் செய்தது. ஆக விஜய ரகுநாத ராய தொண்டைமான் ஆட்சி போர், தோல்வி, இழப்பு என்றே போய் முடிவடைந்து விட்டது. இவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அவர் ராஜா ஸ்ரீராய ரகுநாத தொண்டைமான்.


No comments:

Post a Comment

You can give your comments here