பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 3.1680இல் புதுக்கோட்டை சமஸ்தானம் உருவானது. பிறகு அருகில் அமைந்திருந்த தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பிரதேசங்களிலிருந்து சில பகுதிகளைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். தொடக்க காலத்தில் இருந்தே புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கும் மைசூர் ஹைதர், திப்பு ஆகியோருடனான போரில் ஆங்கிலேயர் பக்கம் இருந்து போரிட்டனர். இப்படி ஆங்கிலேயர்களுக்குச் செய்த சேவைகளின் காரணமாக புதுக்கோட்டை சமஸ்தானம் 1800இல் தொடங்கி கிழக்கிந்திய கம்பெனியாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து வந்தது.

அப்போது கிழக்கிந்திய கம்பெனியார் வசம் இருந்த சென்னை மாகாணத்தின் அதிகார எல்லைக்குள் புதுக்கோட்டை சமஸ்தானமும் இருந்தது. இந்த நிலைமை 1800ஆம் ஆண்டு தொடங்கி 1923 வரை நீடித்தது. அப்போது அரசியல் நிர்வாக மாற்றம் நிகழ்ந்த போது இது இந்திய மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்து அதுவும் 1948 வரை நீடித்திருந்தது.
அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் க்கட்தொகை 1941 கணக்கெடுப்பின்படி 4,38,648. இப்போதைய புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லா பகுதிகளும், அறந்தாங்கி தாலுகா தவிர மற்ற பகுதிகள் சமஸ்தானத்துக்குட்பட்டு இருந்தது. புதுக்கோட்டை நகரமே இந்த சமஸ்தானத்தின் தலைநகரம். அரசாங்க வழக்கப்படி புதுக்கோட்டை மன்னருக்கு 17 பீரங்கி குண்டுகள் வெடித்து மரியாதை செய்யும் வழக்கம் இருந்து வந்தது.

18ஆம் நூற்றாண்டு வரையிலும், இந்த சமஸ்தான பகுதிகள் தொண்டைமான் நாடு என்றும், தொண்டைமான் காடுகள் என்றும்தான் அழைக்கப்பட்டு வந்தன. 19ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகள் சர்வே செய்யப்பட்டு எல்லைகள் வகுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டன. 1974இல் புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது தஞ்சை மாவட்டத்தில் இருந்த அறந்தாங்கி பிரிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

சமஸ்தானத்துக்கு மன்னரே தலைவர். இவருடைய ஒப்புதலின்றி அங்கு எதுவும் சட்டமாகாது. மன்னருக்கு முதன்மை அமைச்சர் ஒருவர் உதவியாக இருப்பார். 1885 ஜூலை 1 வரை இந்த அமைச்சர் “சர்க்கேல்” என்று அழைக்கப்பட்டார். அதன் பின்னர் 1931 நவம்பர் 17 வரை அவர் “திவான்” என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு சமஸ்தானம் இந்திய யூனியனில் இணைக்கப்படும் வரை அவர் நிர்வாகி (Administrator) என்றழைக்கப்பட்டார். இந்த திவானுக்கு கவுன்சிலர் எனும் அதிகாரி உதவி புரிவார்.

1902ஆம் ஆண்டில் முப்பது பேர் கொண்ட சமஸ்தான பிரதிநிதிகள் சபையொன்று அமைக்கப்பட்டது. இந்த முப்பது பேரும் ஏதாவதொரு பிரிவிலிருந்து முன்மொழியப்பட்டவர்கள். ஆனால் 1907க்குப் பிறகு இவர்களில் 18 பேர் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1913இல் இப்படி தேர்வாகி வருவோரின் எண்ணிக்கை 13ஆகக் குறைக்கப்பட்டது. மறுபடியும் 1916இல் இது 25ஆக அதிகரிக்கப்பட்டது. ஆக, இந்தப் பிரதிநிதி சபையின் உறுப்பினர்கள் தேர்வு அல்லது நியமனம் மாறுதலுக்கு உட்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது.

1924ஆம் ஆண்டில் இந்த பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக புதுக்கோட்டை சட்டமன்றமொன்று உருவாக்கப்பட்டது. இந்த சட்டமன்றம் அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த சி.டபிள்யு.இ. காட்டன் என்பவரால் 1924 செப்டம்பர் 29இல் தொடங்கி வைக்கப்பட்டது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் சுதேச சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைந்தன. அதன்படி முதன் முதலில் இணைந்த சமஸ்தானம் புதுக்கோட்டை. அப்படி இணைகின்ற காலகட்டத்தில் இங்கிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐம்பதாக இருந்தது. இந்த ஐம்பதில் முப்பத்தைந்து தேர்வாகி வந்தவர்கள், ஏனையோர் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள். புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு இப்படியொரு சட்டமன்றம் செயல்பட்டாலும், இந்த மன்றம் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின்படி, இந்த மன்றம் மன்னர்களுக்கு சட்டமியற்றும் உரிமையில் எந்த விதத்திலும் தடையாக இருக்காது, மன்னர் பிறப்பிக்கும் சட்டத்தைப் பற்றி இந்த மன்றம் விவாதிக்கவும் முடியாது. மன்னரைப் பற்றியோ, மன்னர் குடும்பத்தைப் பற்றியோ இந்த மன்றம் விவாதிக்க முடியாது.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசியல் நிர்வாகம் பற்றி உடனிருந்து அறிந்து கொண்டு சென்னையில் இருக்கும் கவர்னருக்குத் தகவல் கொடுக்க வென்று இங்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பதவி 1800ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1840வரை தஞ்சாவூர் கலெக்டரே இந்தப் பணியையும் கவனிக்கும்படி நியமிக்கப்பட்டார். 1840 முதல் 1865 வரை மதுரை கலெக்டர் இந்தப் பணியைச் செய்து வந்தார். 1865 முதல் 1947 வரை திருச்சினாப்பள்ளி கலெக்டருக்கு இந்தப் பணி ஒதுக்கப்பட்டது. திவான் எடுக்கும் முடிவுகள் அவ்வப்போது சென்னை மாகாண அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் சட்டமாக அறிமுகமானது.

1936 ஏப்ரல் முதல் தேதியன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் முத்தம் 27 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவைகள்

1.   தி செட்டிநாடு கார்ப்பொரேஷன் & வங்கி லிமிடெட்.
2.   M.C.T.M. பாங்கிங் கார்ப்பொரேஷன் லிமிடெட்.
3.   தி புடுக்கொட்டை டிரேடிங் & பாங்கிங் கார்ப்பொரேஷன்.
4.   தெ ஹிந்து கரூர் வங்கி, புதுக்கோட்டை கிளை
5.   திவான் பகதூர் சுப்பையா செட்டியார் டிரேடிங் & பாங்கிங் கம்பெனி
6.   மேனா செனா மேனா மேனா வங்கி.
7.   ஜனோபகார மோட்டார் சர்வீஸ் கம்பெனி, பொன்னமராவதி
8.   தி சன் பேங்க் லிமிடெட்.
9.   தி மாடர்ன் பேங்க் லிமிடெட்.
10.  இந்தோ கமர்ஷியல் வங்கி, புதுக்கோட்டை கிளை
11.  திருவாங்கூர் தேசிய வங்கி, புதுக்கோட்டை கிளை
பதிவு செய்யப்பட்ட கம்பெனிகள்.
1.   புதுக்கோட்டை செங்கல் ஓடு உற்பத்தி சாலை.
2.   ஸ்ரீ முருகன் கம்பெனி
3.   தி புதுக்கோட்டை டிரேடிங் & பாங்கிங் கம்பெனி
4.   சம்பந்தம் & கம்பெனி
5.   திவான் பகதூர் சுப்பையா செட்டியார் வர்த்தக வங்கி
6.   டி.வி.சுந்தரம் ஐயங்கார் கம்பெனி
7.   சவுத் இந்தியா கார்ப்பொரேஷன்.
ஆகிய கம்பெனிகளும் வங்கிக் கிளைகளும் புதுக்கோட்டையில் இயங்கி வந்தன.

      இனி புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி புரிந்த ஒன்பது சமஸ்தானாதிபதிகளைப் பற்றிய சுருக்கமான விவரங்களைப் பார்க்கலாம்.

1.ரகுநாத ராய தொண்டைமான் (1641 – 1730)

இராமநாதபுரம் சமஸ்தானாதிபதி ரகுநாத கிழவன் சேதுபதியின் மைத்துனரான இவர் திருமெய்யம் பகுதிகளுக்கு பொறுப்பாளராக இருந்தார். இவருடைய தங்கை காதலி நாச்சியாரைத்தான் கிழவன் சேதுபதி திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர் சேதுபதிக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் இவரை 1686 இல் புதுக்கோட்டை மன்னராக நியமனம் செய்தார் கிழவன் சேதுபதி. 

ரகுநாத ராய தொண்டைமான் 1641ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தந்தை ஆவடை ரகுநாத தொண்டைமான். கள்ளர் இனத்துத் தலைவராக இருந்த இவர் விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த மூன்றாம் ஸ்ரீரங்காவிடம் தளபதியாக இருந்தார். விஜயநகர மன்னராக ஆவதற்காகக் காத்திருந்தவர்களில் இவரும் ஒருவர். அவரிடம் பணிபுரிந்த இந்த ஆவடை ரகுநாத தொண்டைமானின் வீரத்தைப் பாராட்டி இவருக்கு “ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா” எனும் விருதை 1639இல் வழங்கி அவருக்கு நிலங்களையும் மான்யமாகக் கொடுத்துப் பாராட்டினார்.

ரகுநாத ராய தொண்டைமான் தனியாக ஆசிரியர் வைத்துக் கல்வி கற்றவர். இவரது தந்தையார் 1661இல் காலமான பின்னர் இவரே புதுக்கோட்டையின் மன்னராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1675இல் இவரது ஆட்சியை ராமநாதபுரம் சேதுபதி ஏற்றுக் கொண்டார். சேதுபதிக்கு உதவியாக இவர் போர்களில் கலந்து கொண்டார் என்பதற்காக சேதுபதி இவருக்கு திருமயம் கோட்டையை அன்பளிப்பாகக் கொடுத்தார். 1686இல் தொடங்கி இவர் “புதுக்கோட்டை மன்னர்” எனும் விருதினை ஏற்றுக் கொள்ள அனுமதி வழங்கினார்.

புதுக்கோட்டையின் சுதந்திர மன்னராக ரகுநாத ராய தொண்டைமான் 1686 தொடங்கி 1730 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை உயர்ந்த நிலைக்கு மாற்றினார். எப்போதும் இவர் சேதுபதி மன்னருக்கு உற்ற துணையாகவே இருந்து வந்தார். 1720இல் கிழவன் சேதுபதி காலமான பின்னர் இவர் ராமநாதபுரம் ஆட்சிக்கு தாண்ட தேவனை ஆதரித்தார். இவரை எதிர்த்து பவானி சங்கர் என்பார் தஞ்சாவூர் சரபோஜி மன்னர் ஆதரவுடன் போட்டியில் இருந்தார். முதலில் சரபோஜி மன்னரின் ஆதரவுடன் பவானி சங்கர் தாண்ட தேவனைத் தோற்கடித்துவிட்டுப் ராமநாதபுரம் சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்ட போதிலும், பின்னர் சரபோஜி மன்னர் ராமநாதபுரம் மீது 1723இல் படையெடுத்து வந்து வென்றார். புதுக்கோட்டை ரகுநாத ராய தொண்டைமான் தாண்ட தேவனை ஆதரித்தார். அவர் ஆதரித்தபடி பின்னர் அவரே ராமநாதபுரம் அரியணை யேறினார். 1730இல் சரபோஜி மன்னர் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு கீழாநிலை எனும் ஊரைத் தருவதாகச் சொன்னாலும், பின்னர் அவர் அப்படிச் செய்யவில்லை. ரகுநாத ராய தொண்டைமான் 1730 ஏப்ரலில் இறந்தார். அவருக்குப் பிறகு அவருடைய பேரன் முதலாம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் புதுக்கோட்டை ஆட்சிக் கட்டிலில் ஏறினார்.

ரகுநாத ராய தொண்டைமானுக்கு மொத்தம் ஆறு மனைவிகள். அவருடைய சில பிள்ளைகளின் பெயர்கள் பெரிய ராய தொண்டைமான், சின்ன ராய தொண்டைமான், திருமலை ராய தொண்டைமான், முத்து விஜய தொண்டைமான், விஜய தொண்டைமான், ராஜகுமாரி பெரியநாயகி அம்மாள் பாயி சாஹேப். 

No comments:

Post a Comment

You can give your comments here