பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 5

3.ராஜா ஸ்ரீ ராய ரகுநாத தொண்டைமான் (1738 மே – 1789 டிசம்பர் 30)

            தொண்டைமான் அரசர்களில் புதுக்கோட்டையை ஆண்ட மூன்றாவது மன்னரான ராஜா ஸ்ரீராய ரகுநாத தொண்டைமான் 1769 டிசம்பர் 28 முதல் 1789 டிசம்பர் 30 வரை இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். இவர் 1738ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். தந்தையார் முதலாம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் மன்னராவார். தாயார் ராணி நல்லகட்டி ஆயி சாஹிப். இந்த தம்பதியினருக்கு இவர் மட்டுமே ஒரே புதல்வர். இவரும் அவர்கள் குடும்ப வழக்கப்படி வீட்டிலேயே தனி ஆசிரியரை அமர்த்திக் கல்வி கற்றவர்.

            ராஜா விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1769 டிசம்பர் 28இல் காலமான போது இவர் ஆட்சிக்கு வந்தார். இவருடைய காலத்தில் இவர் தந்தையார் காலம் போல போர்களும், குழப்பங்களும் இல்லாத சாராரண நிலைமையே நிலவி வந்தது. இவர் தெலுங்கில் “பார்வதி பரிணயமு” எனும் நூலை இயற்றியிருக்கிறார்.

            முன்பே சொன்னது போல இவருடைய ஆட்சிக் காலத்தில் சொல்லும்படியான பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. நாடு எப்போதும் போல அமைதியாகவே இருந்து வந்தது. இருபது ஆண்டுகள் இவர் ஆட்சி முடிந்த நிலையில் இவர் 1789 டிசம்பர் 30 இல் காலமானார். இவர் இறந்த போது இவருக்கு ஆண் மக்கள் எவரும் இல்லாத நிலையில் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் உறவினரான “விஜய ரகுநாத தொண்டைமான்” அரச பதவியைப் பெற்றார்.

            ராய ரகுநாத தொண்டைமானுக்கு பதினொரு ராணிகள். இவருக்கு ஒரேயொரு மகள் மட்டும் இருந்தார். அவர் பெயர் ராஜகுமாரி பெருந்தேவி அம்மாள் ஆயி சாஹேப்.

4.ராஜா ஸ்ரீ விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் (மே 1759 – 1807 பிப்ரவரி 1.)

          ராய ரகுநாத தொண்டைமான் மன்னருக்கு ஒரேயொரு பெண் வாரிசு மட்டுமே இருந்ததால், அவர் காலமான பின்பு அவருடைய சகோதரர் முறையிலான இந்த ஸ்ரீவிஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் என்பார் ஆட்சிக்கு வந்தார். 1789 டிசம்பர் 30இல் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட இவர் 1807 பிப்ரவரி 1 வரை ஆட்சியில் இருந்தார். இவருடைய காலத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனியார் மிக விரைவாக தென்னகத்தைத் தங்கள் வசப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு, தெற்கே இருந்த பல பாளையக்காரர்களை போரில் வீழ்த்தித் தங்கள் ஆட்சியை இங்கே காலூன்றச் செய்து கொண்டனர். இவர் ஆங்கில கம்பெனியாருக்கும், ஆற்காட்டு நவாபுக்கும் மிக உதவிகரமாக இருந்தார்.

            தெற்கில் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மு நாயக்கர் ஆங்கில கம்பெனியாருக்கு கப்பம் கட்ட மறுத்தார். ஆற்காடு நவாப் தான் கம்பெனியாரிடம் வாங்கிய கடனை வசூல் செய்து கொள்ள பாளையக்காரர்களிடம் வரிவசூலைச் செய்து கொள்ளும்படி அனுமதி கொடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொள்ளாத கட்டபொம்மு நாயக்கர், உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் உனக்கு எதற்காக கப்பம் செலுத்த வேண்டும் என்று எதிர்த்து நின்றார். அப்போது ராணுவ பலம் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியார் தங்களுக்கு இந்த உரிமையை ஆற்காடு நவாப் கொடுத்திருப்பதாகவும், ஆகவே பாளையக்காரர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று வாதிட்டனர். இதனால் இவ்விருவருக்குள்ளும் தகராறு மூண்டது. கம்பெனியார் படை கட்டபொம்மு நாயக்கரின் பாளையத்தை வலிய அபகரித்துக் கொண்டனர். இவ்விரு படைகளுக்கும் நடந்த சண்டையில் தப்பிப் பிழைத்த கட்டபொம்மு தப்பி சிவகங்கை காடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அது தொண்டைமான் ராஜ்யத்திற்குட்பட்ட பகுதி. ஆங்கில கம்பெனியார் புதுக்கோட்டை தொண்டைமான் அரசருக்கு செய்தி அனுப்பி தங்கள் எதிரியான பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் புதுக்கோட்டை எல்லைக்குட்பட்ட காட்டில் ஒளிந்திருப்பதாகவும், அவரைப் பிடித்துக் கொடுக்கவும் வேண்டிக் கொண்டனர். அதன்படி கம்பெனியாரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விஜயரகுநாத தொண்டைமான் தனது படையை அனுப்பி காட்டில் தங்கியிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்துக் கொண்டு போய் மதுரையில் கம்பெனியார் வசம் ஒப்படைத்தனர். அதன் பிறகு அவரைக் கொண்டு போய் விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி கயத்தாறு எனும் ஊரில் ஒரு புளிய மரத்தில் கட்டபொம்மு நாயக்கர் தூக்கிலிடப்பட்டார். காலப்போக்கில் வரலாறு தெரிந்து மக்கள் கட்டபொம்மனின் வீரத்தைப் பாராட்டத் தொடங்கினர். காலப்போக்கில் கட்டபொம்மன் வரலாற்றில் வீரம் செறிந்த பகுதி மக்களை மிகவும் கவர்ந்த அதே நேரம் புதுக்கோட்டை தொண்டைமான் அவருக்கிழைத்த அநீதி குறித்து மனவருத்தமும் தொண்டைமான் மீது அதிருப்தியும் கொண்டனர்.  தொண்டைமானின் இந்த நடவடிக்கை துரோகம் என்று மக்கள் கருதினர். எனினும் இப்படியொரு கருத்து இருந்த போதும் வேறொரு கருத்தும் நிலவுகிறது. அப்போது இருந்த சூழ்நிலையில் கம்பெனியாருக்கும் பாளையக்காரர் கட்டபொம்முவுக்கும் கப்பம் செலுத்துவதில் தகராறு ஏற்பட்டு யுத்தம் நடந்து கட்டபொம்மன் தப்பி வந்து புதுக்கோட்டை காட்டுக்குள் பதுங்கிக் கொண்ட சூழ்நிலையில் அவர் தொண்டைமானிடம் அடைக்கலம் என்று கேட்கவும் இல்லை, அவர் வந்தது மன்னருக்குத் தெரியவும் இல்லை. அப்படியிருக்க தன் நாட்டிற்குள் வந்து புகுந்து கொண்டவரை, தங்களிடம் நட்பு பாராட்டும் கம்பெனியார் பிடித்துக் கொடுக்கும்படி கேட்டதிலோ, அவர்களுக்கு உடன்பட்டு நடந்து கொள்வதற்காக அவரைப் பிடித்துக் கொடுத்ததிலோ தார்மீக தவறு எதுவும் இல்லை என்றும் சிலர் எண்ணினார்கள். எது எப்படியாயினும் நம்மை அடிமைப்படுத்தி வந்த ஆங்கிலேயருடன் நட்பு பூண்டு, சொந்த நாட்டானையே பிடித்துக் கொடுத்தது துரோகம் தான் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்றவர்கள் வரலாற்றில் எழுதுகிறார்கள்.

            அந்த காலகட்டம் ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக இருந்த காலம். தெற்கில் பாளையக்காரர்களையெல்லாம் அடக்கி ஒடுக்கி தங்கள் ஆளுமையை அங்கே நிலை நாட்டிய பிறகு மீதமிருந்த ஒருசிலர் அடங்கிப் போய் விட்டதாலும், மீதமிருந்த எதிரிகள் மிகச் சிலரே. அவர்களை அடக்கி ஒடுக்குவது ஒன்றும் ஆங்கில கம்பெனியாருக்கு அரிதான காரியமாக இருக்கவில்லை. ஆகவே தென் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட பிரிட்டிஷாரின் கைக்குப் போய்விட்டதாகவே சொல்லலாம். 1800ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் இந்தியாவின் தென் பகுதியைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

            முன்பே குறிப்பிட்டபடி தஞ்சை ராஜ்யம் கபளீகரம் செய்யப்பட்டு விட்டது. தெற்கே ராமநாதபுரம் ஜமீன்தாரியாக தரம் குறைக்கப்பட்டது. ஆனால், புதுக்கோட்டை மட்டும் சம்ஸ்தானமாகவே அங்கீகரிக்கபப்ட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சுயேச்சையான சமஸ்தானமாக விளங்கியது புதுக்கோட்டை சமஸ்தானம்.  
       
1759 மே மாதத்தில் திருமலை ராய தொண்டைமான் சாஹேபுக்கு மகனாகப் பிறந்தவர் விஜயரகுநாத தொண்டைமான். இவரும் தனி ஆசிரியரை வைத்துக் கொண்டு கல்வி பயின்றவர்.

            இவருக்கு முன்பு இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த ராய ரகுநாத தொண்டைமான் காலம் அமைதியாக கடந்தது போலின்றி, இந்த விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் காலம் தென்னகம் போர்க்களமாகி இருந்தது. வழக்கம் போல புதுக்கோட்டை தொண்டைமான்கள் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு நெருக்கமாக, நட்புடன் இருந்தது போலவே இவரும் அவர்களுடன் தோளோடு தோள் நின்று உதவி புரிந்தார். கம்பெனியார் நடத்திய போர்களில் இவர் படையும் பிரிட்டிஷாருக்கு மிகவும் உதவியாக இருந்து வந்திருக்கிறது. அதன் நன்றிக் கடனாக இவருக்கு “ராஜா பகதூர்” எனும் விருதை கர்நாடக நவாப் முகமது அலிகான் வாலாஜா (ஆற்காடு நவாப்) அளித்து கெளரவித்தார். 1796 அக்டோபர் 17ஆம் நாள் இவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.

            தெற்கே திருநெல்வேலிக்கு அருகிலுள்ள பாஞ்சாலங்குறிஞ்சி பாளையக் காரரான கட்டபொம்மு நாயக்கர் பிரிட்டிஷ் கம்பெனியாருடன் போரில் ஈடுபட்டார். அந்தப் போரில் விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பாளையக்காரர் கட்டபொம்முவுக்கு எதிராகப் போராடினார். அதுமட்டுமல்லாமல் கட்டபொம்மு நாயக்கர் போரில் தோற்று புதுக்கோட்டை சமஸ்தான காடுகளில் வந்து ஒளிந்து கொண்ட போது அவரையும், அவருடைய தம்பியான ஊமைத்துரையையும் 1800இல் பிரிட்டிஷாரிடம் பிடித்துக் கொடுத்தவர் இந்த விஜயரகுநாத தொண்டைமான். இந்த சாதனைக்காக அவரைப் பாராட்டி பிரிட்டிஷ் கம்பெனியார் இவருக்கு 1803இல் கீழாநிலை எனும் ஊரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும்  பரிசாக அளித்தனர்.

            மராத்திய மன்னர்களால் ஆண்டு வரப்பட்ட தஞ்சாவூர் ராஜ்யத்தை 1799இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அங்கு ஒரு ஆங்கில ரெசிடெண்டை பணியமர்த்தி மராத்தியர்களின் செயல்பாட்டை மேற்பார்வை பார்த்து வந்தனர். அப்போது அங்கு ஆண்டு வந்த 2ஆம் சரபோஜி மன்னரை தலைநகருக்கு மட்டும் ஆட்சி புரிய விட்டு, மற்ற பகுதிகளின் நிர்வாகத்தை கம்பெனியே மேற்கொண்டது. 1836 முதல் 1855 வரை ஆட்சி புரிந்த இரண்டாம் சிவாஜி இறந்த பின்னர் தஞ்சை முழுவதையும் பிரிட்டிஷார் நேரடியாகவே எடுத்துக் கொண்டனர்.

            தஞ்சாவூர் தவிர ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளும் கிழக்கிந்திய கம்பெனியார் வசம் போய்விட்டது. அரசர் என்ற நிலை மாறி அவர்கள் “ஜமீன்தார்கள்” என்ற அளவில் தகுதி குறைக்கப்பட்டது. இப்படி தென்னகம் முழுவதையும் கபளீகரம் செய்த கிழக்கிந்திய கம்பெனி தென்னாட்டின் ஒரே ஆட்சியாளராக ஆகிவிட்டனர். ஆனால் புதுக்கோட்டை மட்டும் சுதந்திர ராஜ்யமாக இருக்க அனுமதிக்கப்பட்டனர்; காரணம் அவர்கள் கம்பெனிக்குச் சாதகமாகச் செய்த சேவைகளே காரணம்.

            விஜய ரகுநாத தொண்டைமான் ராணி பிரஹன்நாயகி ஆயி சாஹேபை மணந்து கொண்டார். பிறகு ராணி ஆயி அம்மணி ஆயி சாஹேபையும் திருமணம் புரிந்தார். மன்னருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள், இவர்களில் இருவர் மட்டும் மன்னர் இறக்கும் போது உயிரோடிருந்தனர். அவர்கள் 2ஆம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் (1797-1825)  2ஆம் ரகுநாத தொண்டைமான் (1798 – 1839).

            ராஜா விஜயரகுநாத தொண்டைமான் 1807 பிப்ரவரி 1ஆம் தேதி மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 47. இவருடன் இவரது இளைய ராணியான ஆயி அம்மணி ஆயி சாஹேப் (சதி எனும்) உடன்கட்டை ஏறி உயிர்த்தியாகம் செய்தார்.


No comments: