பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 8


9.ராஜா ஸ்ரீ பிரஹதாம்பா தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் 

          புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னராக ராஜகோபால தொண்டைமான் பதவியேற்றார். இவரே புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி தொண்டைமான் மன்னராக விளங்கினார்.            

          இவர் ராமசந்திர தொண்டைமானுக்கும் அவருடைய இரண்டாவது மனைவி மாதுஸ்ரீ ராஜா ஸ்ரீமதி ராணி ஜானகி ஆயி சாஹேபுக்கும் 1922 ஜூன் 23இல் பிறந்தவர்.

            1928 நவம்பர் 19இல் ஆறே வயதான ராஜகோபால தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னராக நியமனம் பெற்றார். இவருக்கு ரகுநாத பல்லவராயர் ரெஜண்டாக1929 பிப்ரவரி வரை பணிபுரிந்தார். 1929 பிப்ரவரி முதல் 1944 ஜனவரி 17 வரை புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாகத்தை ஆங்கிலேய அதிகாரி அலெக்சாண்டர் தோடென்ஹாம் என்பார் கவனித்துக் கொண்டார்.

            பிரிட்டிஷ் அரசு நியமித்த ஒரு குழுவால் நிர்வாகம் செய்யப்பட்டது. ராஜகோபால தொண்டைமான் 1944 ஜனவரி 17இல் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவருடைய காலத்து சாதனையாக சமஸ்தானத்துக்கு ஒரு புதிய அரண்மனை கட்டப்பட்டது. 1930இல் கட்டப்பட்ட இந்த அரண்மனை கட்டடக் கலையில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த அழகிய ஆடம்பர அரண்மனையில் தான் இப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. மத்திய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல், எல்லா சுதேச சமஸ்தானங்களையும் இந்திய அரசுடன் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, புதுக்கோட்டை சமஸ்தானத்தை முதல் சமஸ்தானமாக இந்திய அரசுடன் 1948 மார்ச் 3இல் ராஜகோபால தொண்டைமான் இணைத்துவிட்டு திருச்சியில் தங்கிவிட்டார். இந்த சமஸ்தானம் அப்போதிருந்த திருச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.
                        
            ராஜகோபால தொண்டைமான் விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் புதுக்கோட்டை மனமகிழ் மன்றத்தின் தலைவராகவும், கொடைக்கானல் போட் சவாரி கிளப்புக்குத் தலைவரகவும் இருந்தார். பிரிட்டிஷ் அரசு இவருக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் விருதை 1935லும் ஆறாம் ஜார்ஜ் மன்னர் பட்டமளிப்பு விழா மெடலை 1937ஆம் ஆண்டிலும், இந்திய சுதந்திர தின மெடலை 1948லும் பெற்றார்.

            புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுக்குப் பல்வேறு காலகட்டங்களில் அமைச்சர்களாக, திவான்களாக இப்படி வேறு சில பதவிப் பெயர்களோடு பலர் இருந்திருக்கின்றனர். இவர்களுடைய பங்கு ஆட்சியின் முதுகெலும்பாக இருந்திருக்கிறது. திவான் அல்லது அமைச்சரின் திறமைதான் சமஸ்தானங்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அப்படி மிகத் திறமையாக பதவி வகித்த சில திவான்களைப் பற்றி  பார்க்கலாம்.


No comments:

Post a Comment

You can give your comments here