பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை திவான்கள் தொடர்ச்சி...


திவான் ஆர்.வேதாந்தாச்சார்லு.

          இவர் 1894 தொடங்கி 1899 வரையில் புதுக்கோட்டை திவானாகச் சிறப்பாக பணியாற்றியவர். 1894இல் சேஷையா சாஸ்திரி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் அப்போது உதவி திவானாக இருந்த வேதாந்தாச்சார்லு திவானாகப் பொறுப்பேற்றார். இவரும் பதவிக்கு வந்தவுடன் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். நிலச்சீர்திருத்தங்கள், விவசாயக் கடன், இனாம் நிலங்கள் பரிவர்த்தனை ஆகியவைகளில் கவனம் செலுத்தினார். சம்ஸ்கிருத மொழிப் பயிற்சிப் பள்ளி, ஒரு பொறியியல் சார்ந்த கல்வி, பால் பண்ணை ஆகியவை புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டன. எனினும் விரைவில் புதுக்கோட்டையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. ஆகையால் மேற்சொன்ன பள்ளிகள் மூடப்பட்டன. நீதித் துறையிலும் சில சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

            சமஸ்தானத்தில் தேவஸ்தானம் இலாகா என்று ஒன்று இருந்தது. அது 1897இல் கலைக்கப்பட்டது. ஆலயங்கள் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தேவஸ்தானப் பணிகள் ரெவின்யூ இலாகாவுக்கு ஒதுக்கப்பட்டது. 1898இல் நிர்வாக வசதிக்காக ஒரு மக்கள் பிரதிநிதி சபையொன்று உருவாக்கப்பட்டது. இதில் இரண்டு பேர் உறுப்பினர், இதன் தலைவர் திவான் என்பதால் இதை “திவான்.இன்.கவுன்சில்” என்று அழைத்தனர்.

            திவான் வேங்கடாச்சார்லு 1899 பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். இவரையடுத்து எஸ்.வெங்கட்டராமதாஸ் நாயுடு என்பார் திவானாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திவான் பகதூர் எஸ்.வெங்கட்டராமதாஸ் நாயுடு.

          இவர் 1899 முதல் 1909ஆம் வரையில் புதுக்கோட்டை திவானாகப் பணி புரிந்தவர். இவரை திவானாக நியமித்தவர் ராஜா மார்த்தாண்ட பைரவ தொண்டைமான். மன்னர் இங்கிலாந்துக்குப் புறப்படும் முன்பாக நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள இவரை திவானாக நியமித்துவிட்டுப் புறப்பட்டார். நாயுடு திவானாகப் பதவி யேற்றுக் கொண்டவுடன் ராஜ்யத்தின் நிதி நிலைமையை சீர்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இலாகா தொடர்பான செலவினங்கள் கட்டுக்குள் கொண்டு வர திட்டமிடல் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்து கருவூலக் கணக்குகளைப் பார்த்துக் கொள்ள கருவூல அதிகாரியையும் நியமித்தார். 1902இல் இவர் மக்கள் பிரதிநிதி சபையொன்றை நிறுவினார்.

அடுத்த திவான் விஜய ரகுநாத பல்லவராயர் துரைராஜா.

            இவரும் இந்திய நிர்வாகயியல் அதிகாரியாக இருந்தவர். நல்ல நிர்வாகி. அதுமட்டுமல்லாமல் இவர் பெயரில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இவர் புதுக்கோட்டை ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் என்று. சமஸ்தானத்தின் முதல் அமைச்சராக இவர் 1909 தொடங்கி 1922 வரையிலான காலகட்டத்தில் மிகத் திறமையாகப் பணியாற்றியவர். பின்னர் ரெஜண்ட் எனும் பெயர் மாற்றப்பட்ட பதவியில் 1922 முதல் 1929 வரையிலும் பணி புரிந்தார்.

            இவர் 1872இல் பிறந்தவர். இவர் ராணி பிரஹதாம்பாள் ஆயி, கொளந்தைசாமி பல்லவராயர் சாஹேப் ஆகியோரின் மகன். ராமச்சந்திர தொண்டைமானின் பேரன் இவர். மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் மூத்த சகோதரன்.

            இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று, சென்னை சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்தார். சில காலம் டெபுடி கலெக்டராக பிரிட்டிஷ் இந்தியாவில் பணி புரிந்தவர்.

            புதுக்கோட்டை மாநில கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார், அதன் பின் முதன் அமைச்சராக நியமனம் ஆனார். அப்போது புதுக்கோட்டை ராஜாவாக இருந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் இவருடைய தம்பி. மார்த்தாண்டர் பதவி துறந்த சமயம் அவர் இடத்தில் ராஜாவாக இருக்க இவர் சம்மதித்தார்.

            மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் காலமான பின்னர், ராஜகோபால தொண்டைமான் எனும் ஆறுவயது சிறுவன் புதுக்கோட்டை மன்னராக தேர்வான சமயம் 1928 மே மாதம் ரகுநாத பல்லவராயரே ரெஜண்டாக இருந்து நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். 1930இல் தன்னுடைய ஐம்பத்தியேழாம் வயதில் இவர் காலமானார்.
கே.குஞ்சுன்னி மேனன்

            ரகுநாத பல்லவராயர் காலமான பின்னர் ரெஜண்டாகப் பதவிக்கு வந்தவர் இவர். இவரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

ராவ் சாஹிப் கங்காதர கணபதி சாஸ்திரியார்.

          1926 முதல் 1931 வரை திவானாக இருந்தவர் இவர். 1876இல் தஞ்சாவூர் மாவட்டம் திருவாலங்காடு எனும் ஊரில் பிறந்தவர் இவர். புதுக்கோட்டை மே.த. ராஜா கல்லூரியில் கல்வி பயின்றவர். பின்னர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்.

            அந்தக் காலத்தில் திருச்சியில் மிகவும் பிரபலமாக இருந்த எஃப்.ஜி.நடேசய்யர் என்பாரின் சொந்த அண்ணன் இவர். இந்திய தேசிய காங்கிரசிலும், நாடக நடிப்பில் சிறந்தவராகவும் விளங்கியவர் இந்த எஃப்.ஜி.நடேசய்யர். சாஸ்திரியார் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்.

            இனி புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பழமை வாய்ந்த வரலாற்று இடங்களையும், வரலாற்றுச் சின்னங்களையும் பற்றி சிறிது பார்க்கலாம். முக்கியமாக புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்கள் முடிசூட்டு விழா, குடும்பத்தின் திருமண விழாக்கள் போன்ற மங்கள காரியங்களை குடுமியான்மலை எனும் இடத்தில் இருக்கும் சிகாகிரீஸ்வரர் ஆலயத்தில் தான் கொண்டாடுவார்கள். அந்த இடத்தைப் பற்றிய சில விவரங்களை இப்போது பார்க்கலாம்.

                                                                   (Series concluded)

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திவான்களைப் பற்றி அறிந்தோம். பழமை வாய்ந்த வரலாற்று இடங்களைக் காணக் காத்திருக்கிறோம். நன்றி.