பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 7


8.ராஜா ஸ்ரீ பிரஹதாம்பா தாஸ்   மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

          முந்தைய ராமச்சந்திர தொண்டைமானின் மகள் வயிற்றுப் பேரனான இந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் 1875 நவம்பர் 26இல் பிறந்தார். தாயார் பிரஹதாம்பாள் ராஜாமனி சாஹேப். இவருடைய கணவர் கொழந்தைசாமி பல்லவராயர் சாஹேப் அவர்கள். ராமச்சந்திர தொண்டைமானின் மூத்த மகளான இந்த பிரஹதாம்பாள் பாயி சாஹேபின் மூன்றாவது மகன் இப்போது அரச பதவிக்கு வந்திருக்கும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான். ராமச்சந்திர தொண்டைமான் தனக்கு ஆண் வாரிசு இல்லாமையால், இந்த மார்த்தாண்ட பைரவரை இளம் வயதாக இருக்கும்போதே சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இவர் பதவிக்கு வந்தபோது இவருடைய வயது 11.                  
                       
            மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் கேம்பிரிட்ஜ் கல்வியாளரான ப்ரெடரிக் ஃபீல்டன் கிராஸ்லி என்பவரிடம் அரண்மனையிலேயே கல்வி கற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய மார்த்தாண்ட பைரவர் விளையாட்டுத் துறையிலும் தலை சிறந்த வீரராகத் திகழ்ந்தார். தமிழகத்தின் இதயத்தானத்திலுள்ள புதுக்கோட்டை மண்ணின் மைந்தர் என்றாலும், இவருக்கு மேல்நாட்டு கலாச்சாரம் பழக்க வழக்கம் இவைகளில் அதிகம் நாட்டம் இருந்தது.

            இவரது பாட்டனாரும் முந்தைய மன்னருமான இராமச்சந்திர தொண்டைமான் 1886 ஏப்ரல் 15இல் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின் இறந்து போனார். அப்போது பதினோரு வயதே ஆன மார்த்தாண்ட பைரவருக்கு மன்னராகப் பட்டம் சூட்டி, அவர் சார்பில் ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள திவான் ஏ.சேஷயா சாஸ்திரி தலைமையிலான ஒரு நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு மார்த்தாண்ட பைரவர் மேஜர் ஆகும் வரை ஆட்சியை கவனித்து வந்து அவருக்கு வயது வந்தவுடன் ஆட்சிப் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தது. அப்படி மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தினம் 1894 நவம்பர் 27ஆம் தேதி. அவருக்கு ஆங்கிலேயர்கள் சார்பில் சென்னை கவர்னராக இருந்த லார்டு வென்லாக் என்பவர் முழு அதிகாரத்தையும் அளித்தார்.

            மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பதவிக்கு வந்தவுடன் மனோவர்த்தி நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று மனுச்செய்தார். மனோவர்த்தி நிலங்கம் என்பது நான்கு கிராமங்களை உள்ளடக்கியது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் இந்த நிலங்களைத் தன்னுடைய ராணிகளில் மூவரின் தனிப்பட்ட சொத்தாக அறிவித்திருந்தார். மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை, ஆகையால் மனைவிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த மனோவர்த்தி நிலங்கள் எனப்படும் நான்கு கிராமங்களும் அவருக்கு மனைவிகள் இருந்திருந்தால் அவர்களுக்குப் போயிருக்கும், ஆனால் அவர் திருமணமாகாதவராயிருந்த படியால் அந்த கிராமங்கள் தன் பெயருக்கு வந்து விடவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரது கோரிக்கையை ஆங்கில கம்பெனி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.     
                 
            இவருடைய ஆட்சி காலத்தில் டெல்லி மா நகரில் 1903ஆம் வருஷத்தில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கும், பின்னர் 1911இல் லண்டன் மாநகர் வெஸ்ட்மினிஸ்டர் அப்பே எனும் அரண்மனை மாளிகையில் நடந்த அவரது முடிசூட்டுதலுக்கும் மார்த்தாண்ட பைரவ ராஜா சென்று வந்தார். மைசூர் சமஸ்தானத்தில் இருப்பது போன்ற முப்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டமன்றத்தை அவர் உருவாக்கினார். இந்த அவையின் உறுப்பினர்களை அரசாங்க இலகாக்களின் தலைவர்களும், பொதுத் துறை நிறுவனங்களும் தேர்ந்தெடுத்து அனுப்பினர். திவானுக்கு உதவியாக கவுன்சிலர் எனும் பதவி உருவாக்கப்பட்டது. அந்த கவுன்சிலரின் உதவியுடன் செயல்படுகின்ற திவானுக்கு “திவான் இன் கவுன்சில்” என்று நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது.

            பிரிட்டிஷ் அரசு ஒவ்வோராண்டும் புத்தாண்டு தினத்தில் அவர்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து சேவை செய்தவர்களுக்குப் பற்பல விருதுகளை அளித்து கவுரவிக்கும். அப்படி 1913ஆம் ஆண்டு புத்தாண்டு விருது பட்டியலில் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் அந்த விருது “Knight Grand Commander of the Order of the Indian Empire” என்பதாகும்.

            எல்லா சாதாரண மக்களுக்கும் திருமணம் வரை மனம்போல வாழ்க்கையும், திருமணம் எனும் கால்கட்டு ஏற்பட்டபின் வாழ்க்கையில் மாற்றங்களும் ஏற்படுவது சகஜம் தானே. அப்படிப்பட்ட மாற்றம் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கும் ஏற்பட்டது.
                                                                      
1915ஆம் ஆண்டு மார்ச் மாதம் மார்த்தாண்ட பைரவர் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு அந்த நாட்டின் ஒரு பெரிய இடத்துப் பெண்ணான மோலி ஃபிங்க் என்பாரை மெல்போர்னில் உள்ள மெஜஸ்டிக் மேன்ஷன் எனும் ஓட்டலில் சந்தித்தார். கண்டவுடன் காதல் மலர்ந்தது. மோலியை மார்த்தாண்ட பைரவர் உயிருக்குயிராகக் காதலிக்கத் தொடங்கினார். அந்த மாதைத் தொடர்ந்து அவரும் சிட்னி நகருக்குச் சென்றார். அங்கு 1915 ஆகஸ்டில் மோலியிடம் மன்னர் தன் காதலை வெளிப்படுத்தினார். இந்திய சுதேச மன்னரான மார்த்தாண்ட பைரவரின் காதலை அந்த ஆஸ்திரேலிய நாட்டுப் பெண் ஏற்றுக் கொண்டு தன் சம்மதத்தையும் தெரிவித்தார். ரிஷி கர்ப்பம் இராத் தங்காது என்பர். இவர்களுடைய காதல் இனியும் காத்திருக்க விரும்பவில்லை. 1915 ஆகஸ்ட் மாதம் 10ஆம் நாள் இவ்விருவருக்கும் மெல்போர்ன் பதிவுத்துறை அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டது. இந்த தம்பதியருக்கு ஆஸ்திரேலியாவிலேயே 1916ஆம் ஆண்டு ஜுலை 22இல் ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுடைய பெயர் மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் என்பது. இதில் இன்னொரு ரகசியம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் மோலி எனும் ஆஸ்திரேலிய மாதைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக ஒரு அமெரிக்க மாதைக் காதலித்ததாகத் தெரிகிறது.
                        
     இவர் காலத்தில்  குறிப்பாக சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள்
  இந்த திருமணம்த்துக்கு ஆதரவாக இருக்கவில்லை. ஆகவே அவர்கள் மோலி ஃபிங்கை ராணிக்கு உரிய மரியாதை தருவதையோ அல்லது அவர் நாடு திரும்பிய போது “மகாராணி” என்று அங்கீகரிக்கவோ இல்லை. இந்த நிலையில் 1915 அக்டோபரில் இந்தியா வந்து புதுக்கோட்டையை அடைந்த மோலி வெறும் ஐந்து மாதங்களே தாக்குப்பிடிக்க முடிந்தது, அத்தனை எதிர்ப்பு அவருக்கு அங்கே. சொந்த ஊரில் தான் விரும்பி மணம் புரிந்து வந்த மங்கைக்கு உரிய மரியாதை இல்லை என்பதை உணர்ந்த ராஜா மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பிச் சென்றார். அங்கே அவர் 1916 முதல் 1919வரையிலும் இருந்து விட்டுப் பிறகு லண்டன் சென்றார். பிறகு கேன்ஸ் எனும் ஊருக்குச் சென்று அங்கு ஒரு வீட்டை வாங்கி வசிக்கத் தொடங்கினர். 1921இல் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் புதுக்கோட்டை மன்னர் எனும் உரிமையைக் கைவிட்டார். தன்னுடைய சகோதரரான ரகுநாத பல்லவராயர் என்பவரை தனக்குப் பதிலாக ராஜாவாக இருப்பார் என்று அறிவித்தார். மார்த்தாண்டர் பிரான்ஸ் நாட்டில் தன் மனைவி மோலியுடனும் மகன் சிட்னி தொண்டைமானுடனும் தங்கிவிட்டார். இவர் 1928ஆம் வருஷம் மே மாதம் 28ஆம் தேதி தனது ஐம்பத்தி இரண்டாம் வயதில் காலமானார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல மோலி அனுமதி கேட்டதற்கு இந்தியா சம்மதிக்கவில்லை. ஆகவே அவர் உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டு, சாம்பல் லண்டனில் உள்ள கோல்டர்ஸ் கிரீன் இடுகாட்டில் வைக்கப்பட்டது.
                                                                   
            மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்குப் புதுக்கோட்டை மன்னர் எனும் தகுதி மறுக்கப்பட்ட காரணத்தால் அவருடைய உறவினர் ஆறே வயதான ராஜகோபால தொண்டைமான் ராஜகுமாரனாகவும், அவருக்கு ரெஜண்ட் எனும் அமைச்சர் பதவியில் ரகுநாத பல்லவராயரும் இருந்து நிர்வாகம் செய்தனர்.


No comments:

Post a Comment

You can give your comments here