பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, October 12, 2015

நவராத்திரிஅம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும்,  அவற்றுள்  முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

 பார்க்கப்போனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு; அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.

 சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று சிறப்பாக
கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசரா கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச்சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது  நவராத்திரி விழா.

நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும்.  இந்த பூஜையை
தேவர்கள் செய்வதாக கருதி இரவில் நாவராத்திரியை கொண்டாடுவார்கள்.

வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று  போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு இராமன்,இராவணனுடன்
புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐய தசமி அன்று புதிய கல்வி
கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று எடுத்து அர்ச்சுனன் உயிர்ப்பித்துகொண்டான்.


சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம்,நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை.நவராத்திரி என்பது விரதமிருந்து கொண்டாடப்படுகிறது.சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது.

வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு
என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.

சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களை எமனது கோரப் பற்கள்
என்று சொல்வார்கள். பிணிகள் உடலை துன்புறுத்தி, நலியும்படி செய்யும். சாதாரணமாக, உயிரும் உடலும் தாங்கவே முடியாத பல துன்பங்களை இறைவன் அருள்வதில்லை. 

சக்தி வழிபாடு.


சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும்.
புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும்.இவை இரண்டில்'சாரதா நவராத்திரி என்பது புகழ் பெற்றது; எல்லோரும் கொண்டாடடுவது;தனிச் சிறப்புடையது.

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சி. கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில்
நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை.இச்சா சக்தி. ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்கள வழிபடும் தெய்வம் துர்க்கை, மகிஷன் என்றஅசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.அவனை வதைத்த பத்தாம் நாள் ' விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி][ மகிஷாசுரமர்த்தினி . வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.


இலட்சுமி : இவள் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.
இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.
பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.
முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.

அஷ்டலட்சுமி : ஆதி லட்சுமி, மக லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி , சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி , கஜலட்சுமி .
இவர்கள் லட்சுமியின் அம்சங்கள்.


சரஸ்வதி : இவள் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.கல்வியின் தெய்வம்.  ஞான சக்தி.
.இவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர்.

சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம்உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது
முறையாகும். இது தேவியின் அவதார நாள்.சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவுபெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.


விஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம்  நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள்.
பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி தரும்.


நவராத்திரியின் போது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். 

No comments:

Post a Comment

You can give your comments here