பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 13, 2015

இசையரசிக்கு நூற்றாண்டு விழா

                                    
இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஏறத்தாழ அறுபது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் முடிசூடா அரசியாகவே திகழ்ந்தார். அவர் நடத்தித் தந்த நன்கொடைக்கான இசை கச்சேரிகள் எண்ணில் அடங்கா. பாரத ரத்னா விருதினைப் பெற்ற இந்த இசைக்குயில் பிறந்து நூறு ஆண்டுகள் ஆனதை தமிழகம் மட்டுமல்லாமல் இசை ரசிகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பிறந்தவராயினும், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்கம், குஜராத்தி, சம்ஸ்கிருதம் ஆகிய பல்வேறு மொழிகளிலும் பாடி இசையுலகில் கோலோச்சி வந்தவர் இவர். ஐக்கிய நாடுகள் சபையில் இவருடைய இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இவரை உலகுக்கு அடையாளம் காட்டியவர் திரு சி.வி.நரசிம்மன். அந்த இசை நிகழ்ச்சிக்காகவென்றே ராஜாஜி இயற்றிக் கொடுத்த பாடல்தான் “குறையொன்றுமில்லை” எனும் பாடல் இன்று இசை அறிந்தவர் அனைவராலும் பாடப்படுகிறது.

செல்வச் சீமான் குடும்பத்தில் அவதரிக்காவிட்டாலும், தன்னுடைய இசையால் செல்வர்களுக்கெல்லாம் செல்வராக வாழ்ந்தவர் இசையரசி. மதுரை சண்முகவடிவு எனும் இசைக் கலைஞரின் மகளாக 1916ஆம் ஆண்டு புரட்டாசி 16இல் பிறந்தவர் எம்.எஸ். தந்தையார் பெயர் சுப்பிரமணிய அய்யர். தாய் ஒரு வீணை இசைக் கலைஞர்.
இளம் வயதிலேயே தன் தாயின் இசைப் பணியில் இவரும் கலந்து கொண்டதால் அப்போதைய இசை மேதைகளான செம்மங்குடி, முசிரி, செம்பை, திருவாவடுதுறை, கும்பகோணம், பாலக்காடு போன்றவர்களுடன் அறிமுகம் ஆனது. இது என்ன ஊர் பெயர்களாக இருக்கிறதே என்ற ஐயப்பாடு ஏற்படலாம். ஆம்! இந்த ஊர்களுக்கெல்லாம் பெருமையைச் சேர்த்தவர்கள் இசைக் கலைஞர்கள்; அவர்கள் சீனிவாச ஐயர், சுப்பிரமணிய ஐயர், வைத்தியநாத பாகவதர், ராஜரத்தினம் பிள்ளை, ராஜமாணிக்கம் பிள்ளை, மிருதங்கம் மணி ஐயர், ஆகியோர். இவர்கள் தவிர அந்தக் காலத்தில் இசையுலகில் இளைஞர்களின் ஆதர்ச இசைக் கலைஞராகத் திகழ்ந்தவரும் எம்.எஸ். அவர்களுடன் “சகுந்தலை” படத்தில் நாயகனாக நடித்தவருமான ஜி.என்.பாலசுப்பிரமணியம் ஆகியோரையும் இவர் பின்பற்றினார்.

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை என்பார் அப்போது அந்த சமஸ்தானத்தில் இசை உலகில் தனி ராஜாவாகத் திகழ்ந்தவர். எம்.எஸ். அவர்களின் புகழுக்கு அவரும் காரணமாக இருந்தார். 1935ஆம் ஆண்டிலேயே இவர் மைசூர் மகாராஜா அரசவையில் கச்சேரி செய்து புகழ் பெறத் தொடங்கினார்.

அழகும், இசை வளமும் நிரம்பியிருந்த காரணத்தால், அந்தக் கால வழக்கப்படி பாடத் தெரிந்தவர்கள்தான் திரைப்படங்களில் நடிக்க முடியும் என்றிருந்ததால், அவரும் திரைத் துறையினுள் காலடி எடுத்து வைத்தார். “சேவாசதனம்” என்றொரு படம்; திரைப்படத் துறையின் பிதாமகரான டைரக்டர் கே.சுப்பிரமணியம் தயாரித்த படம். அதுதான் அவரது முதல் திரைப்படம். இதில் இவர் பாடிய பாடல்கள் அன்றைய இசை ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தன.

அந்தக் காலத்தில் வடமொழியும் தமிழுக்கு நிகராகத் தமிழகத்தில் கற்பிக்கப்பட்டது. அதன் விளைவாக வடமொழி இலக்கியங்கள் பலவும் இங்கு புகழ்பெற்று விளங்கின. குறிப்பாக மகாகவி காளிதாசனின் சாகுந்தலம் கதை பரவலாக மக்களுக்குத் தெரிந்திருந்தது. அதைத் திரைப்படமாக எடுத்தார்கள். அதில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. கல்கியும் சதாசிவமும் நெருங்கிய நண்பர்கள்; ராஜாஜி இவர்களுக்கு குரு. இந்த நிலையில் எம்.எஸ். அவர்களை 1940இல் சதாசிவம் திருமணம் செய்து கொண்டார். ‘சகுந்தலை’ படத்தின் நாயகன் ஜி.என்.பாலசுப்பிரமணியம். இவரும் ஒரு இசைக் கலைஞர் என்பதால் இந்தப் படம் கர்நாடக இசைப் பிரியர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக அமைந்தது.
இவர் திரையில் பாடிய கர்நாடக இசைப் பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து இசையை மையமாகக் கொண்ட “பக்த மீரா” படம் எடுக்கப்பட்டது. அதில் எம்.எஸ். தான் மீரா, கேட்க வேண்டுமா, இசை பொழிவதற்கு. அந்தப் படம் இசையால் ஆனது. இன்றும் மக்கள் மனங்களை வெட்ட வெளியில் ஆடவும், தாளமிடவும் தூண்டுகின்ற அற்புதமான இசையை யாரால் மறக்க முடியும்? ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த’, ‘கிரிதர கோபாலா’, ‘எனது உள்ளமே” இவைகள் எல்லாம் அந்த மீரா பாடிய அற்புதமான பாடல்கள். இன்றைய இளைய சமுதாயமும் இவற்றைப் பாடி புளகாங்கிதம் அடைவதை யாரால் மறுக்க முடியும்?

“பக்த மீரா” இந்தி மொழியிலும் தயாரித்து வெளியிடப்பட்டது. அதைப் பார்த்து, அதிலுள்ள பாடல்களைக் கேட்டு மனம் மயங்கியவர்களில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், கவிக்குயில் சரோஜினி நாயுடுவும் அடங்குவர். இதன் விளைவு பிரதமர் ஜவஹர் எம்.எஸ்.சிடம் சொன்னார் “நீங்கள் இசைக்கு அரசி” நானோ சாதாரன பிரதம மந்திரிதானே என்று. அப்படி அவர் சொல்ல வேண்டுமானால், அவருடைய இசை இந்த பெரியவர்களை எத்தனை தூரம் கவர்ந்திருக்க வேண்டும்.

அப்போதைய நாட்களில் “கல்கி” இதழ்களில் எம்.எஸ். அவர்களின் கச்சேரி விவரங்கள் வரும். அது ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு அறப்பணிக்கான நன்கொடைக்காக என்பது விளங்கும். இது போல தன் திறமையை, இசைப் புலமையை மக்கள் பணிக்காக அர்ப்பணித்தவர் எத்தனை பேர் தெரியாது. ஆனால் அந்த இசை மேதை சோர்வில்லாமல் கடைசி வரை அறக்கட்டளைக்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தி உதவி வந்தது விளம்பரத்துக்காக அல்ல, ஆத்மார்த்தமான தர்ம சிந்தனையினால் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இவர் போன்ற திறமை மிக்கக் கலைஞர்கள் விருதுகள் பல பெறுவதில் அதிசயம் இல்லை. இவருக்கு அளவற்ற விருதுகள், பெருமைகள் வந்து சேர்ந்தன. அவைகளில் சில: “பத்ம பூஷன்”, “சங்கீத நாடக அகாதமி விருது”, மியூசிக் அகாதமி வழங்கும் “சங்கீத கலாநிதி”, “இசைப்பேரறிஞர்”, பிலிப்பைன்ஸ் நாட்டின் “மக்சசே விருது”, “பத்ம விபூஷன்”, “கவி காளிதாஸ் சம்மேளன் விருது”, அனைத்துக்கும் சிகரம் வைத்தது போன்ற “பாரத ரத்னா” விருது. இவைகள் எம்.எஸ். அவர்களுக்குக் கிடைத்து பெருமை சேர்த்துக் கொண்டன.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் இசையில் வல்லவர்கள் எத்தனையோ கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் எம்.எஸ். போல குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் மனம் கவர்ந்த இசைக் கலைஞர் வேறு எவரேனும் உண்டா என்பது தெரியவில்லை. காலத்தால் மறக்க முடியாத ஒரு இசை மேதை இந்த நாட்டில் நம் காலத்தில் நம் கண் முன்னே வாழ்ந்து சாதனைகளைப் படைத்து மறைந்தார் என்பதை இப்போதும் நம்புவது சிரமமான காரியமாகத்தான் இருக்கிறது. வாழ்க எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையாரின் புகழ்!

No comments: