“ஹரிதாஸ்” படத்தில் எம்.கே.தியாகராஜ
பாகவதரின் ‘உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ’, ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ” ஆகிய பாடல்களையோ,
அந்த பாடல்களில் நடித்த அந்த அழகிய நடிகையான டி.ஆர்.ராஜகுமாரியையோ பழைய கிழவர்கள் யாரும்
அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கனவுக்
கன்னி அந்தக் காலத்தில் டி.ஆர்.ராஜகுமாரி.
“மனோகரா”வில் வில்லியாக வந்து
மனோகரனை ஆட்டிப் படைத்துக் கொண்டு தன் இரண்டும் கெட்டான் மகனையும் சமாளித்துக் கொண்டு
வில்லன் நடராஜனுடன் ஆடிய ஆட்டத்தை யார்தான் மறக்க முடியும். மயக்கும் கண்கள், சுழிக்கும்
உதடுகள், ஒரு அசையில் அத்தனை மனங்களையும் சொக்க வைத்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. (அடடா!
அந்தக் கால நினைப்பு)
தஞ்சாவூர் கலைகளின் பிறப்பிடம்.
இங்குதான் பிறந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. இவருடைய இயற்பெயர் ராஜாயி, பிறந்தது 1922. தஞ்சாவூர்
ராஜகோபாலசாமி கோயில் தெரு என்பது ஐயன் கடைத்தெருவுக்கு அருகில் உள்ளது. அங்குதான் இவர்
பிறந்தது. தாயார் பெயர் குஜலாம்பாள். இவர் அன்றைய நாளில் சங்கீதத்தில் தலை சிறந்த கலைஞர்.
இவருடைய சகோதரர் டி.ஆர்.ராமண்ணா. ஆமாம்! திரைப்பட இயக்குனர் ராமண்ணாதான். தந்தையார்
இவருடைய இளம் வயதிலேயே காலமாகிவிட்டார்.

அன்றைய நாயகர்கள் எல்லாம் நன்கு
பாடக்கூடியவர்கள் அல்லவா? பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் நல்ல பாடகர்கள். சின்னப்பாவுடன்
“மனோன்மணி” என்ற படம். ஜெமினி நிறுவனம், அவர்கள் படத்தில் நடித்தால் ஒரு முத்திரை பெற்ற
நடிக நடிகைகளாக ஆகிவிடுவர். அவர்கள் எடுத்த பிரம்மாண்டமான படம் “சந்திரலேகா”. அதில்
இவர்தான் கதாநாயகி. அந்த கண்களில் ஒரு கிரக்கம், உடல் அசைவில் ஒரு மோக போதை இவற்றை
அள்ளி அள்ளி கொடுக்கும் நடிப்பு ராஜகுமாரியினுடையது. ஜெமினியின் சந்திரலேகாவில் கதாநாயகன்
எம்.கே.ராதா, வில்லன் ரஞ்சன். அந்த படத்தில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில்
டிரம் டான்ஸ் ஆடி மகிழ்வித்தார் டி.ஆர்.ராஜகுமாரி. அந்தப் படத்தில் மக்களைக் கவர்ந்த
அந்தக் காட்சியில் அமைதியான அண்ணன் எம்.கே.ராதா தன் தம்பியான ரஞ்சனிடம் “நான் சொல்வதைக்
கேட்டுக் கொள்” என்பார். அதற்கு ரஞ்சன், திரும்ப “நான் கொடுப்பதை வாங்கிக் கொள்” என்று
தன் குறுவாளை அவர் மீது வீசுவார். மயிரிழையில் அவர் உயிர் தப்புவார். இதுபோன்ற அற்புதமான
காட்சிகள் அதில்.
“மனோகரா” ஒரு வெற்றிப் படம்.
அதில் வில்லி ராஜகுமாரி. பெயர் வசந்தசேனை. இவர் 1999 செப்டம்பர் 20இல் காலமானார்.
1 comment:
பழையவர்கள் வரிசையில் இன்று ராஜகுமாரி பற்றி அறிந்தேன். நன்றி.
Post a Comment