பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 20, 2015

பி.யு.சின்னப்பா


        அந்தக் காலத்தில் சினிமாவில் நடிக்க வேண்டுமானால் நல்ல இசை ஞானம் இருக்க வேண்டும், நல்ல குரல் வளத்தோடு பாடல்களை பாடுபவர்களாக இருத்தல் அவசியமாக இருந்தது. அப்படிப்பட்ட தொரு தமிழ் நடிகர், நல்ல பாடகராகவும், சண்டைக் காட்சிகளில் நடிப்பவராகவும் விளங்கியவர் பி.யு.சின்னப்பா. இவரது இயற்பெயர் சின்னச்சாமி, பின்னாளில் இவரே தன் பெயரை சின்னப்பா என்று மாற்றிக் கொண்டார். இவர் பல பிரபலமான கர்நாடக இசைப் பாடல்களில் அதே மெட்டில் சினிமாவுக்காகப் பாடல்களைப் பாடியவர். குறிப்பாக ‘நாத தனுமனுசம்’ என்ற பாட்டை “காதல் கனி ரசமே” என்று பாடியதைப் போல பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

        புதுக்கோட்டை தமிழ் நாட்டில் இருந்த ஒருசில சமஸ்தானங்களில் ஒன்று. இங்கு ஆண்ட ராஜாக்கள் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டனர். சுதந்திரப் போராட்ட காலத்தில்கூட சுதேச சமஸ்தானங்களில் போராட்டங்கள் அவ்வளவாக நடைபெறவில்லை. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள். அங்கு திவானாக இருந்தவர் சேஷையா சாஸ்திரி என்பார், ஒரு முறை அங்கு பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கிராமத்து விவசாயிகளைக் கொண்டு ஒரு பெரிய குளத்தை வெட்டச் செய்து அங்கு எடுத்த மண்ணைக் கொண்டு அரசாங்க கட்டடங்களைக் கட்டி புதுக்கோட்டையை வளங்கொழிக்கச் செய்தார் என்பர். அந்தக் குளம் தான் ‘புதுக் குளம்’ என வழங்கும் குடிநீர் குளம். இதன் மேல் கரையில் உள்ள பூங்காவுக்கு ‘பி.யு.சின்னப்பா பார்க்’ என்று பெயர்.

        அந்த புதுக்கோட்டையில் பிறந்தவர்தான் பி.யு.சின்னப்பா. தன்தையார் உலகநாதப் பிள்ளை தாயார் மீனாட்சி அம்மாள். இவருக்கு இரண்டு இளைய சகோதரிகள் உண்டு. இவர் பிறந்த ஆண்டு 1916.

        தந்தை உலகநாதரும் ஒரு நாடக நடிகர் என்பதால், இளம் வயதிலேயே இவருக்கு நாடகத்தின் மீது காதல் ஏற்பட்டு தனது ஐந்து வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நாடகத்தில் நடிப்பு என்பதனால் இவருக்கு பாடல்கள் மிக சுலபமாக பாட முடிந்தது. படிப்பைப் பொறுத்தவரை இவர் தொடக்கப் பள்ளிக் கல்வியைத் தாண்டவில்லை. இவருக்கு நாடகம் தவிர உடற்பயிற்சிகளில் மிக ஆர்வம் உண்டு. அதனால் அப்போதைய வழக்கப்படி குஸ்தி, சிலம்பாட்டம் போன்ற வீர விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்தார்.

        நாடகத்தில் நடிப்பதற்காக இவர் சேர்ந்த குழு தத்துவ மீனலோசனி வித்வ பால சபா என்பது. இவருடைய இந்தக் குழுவில்தான் டி.கே.சண்முகம் சகோதரர்களும் நடித்து வந்தனர். அதிலிருந்து அவர்கள் மதுரை ஒரினினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடகக் குழுவுக்கு மாறினார். அது அப்போது புதுக்கோட்டையில் நாடகங்கள் நடத்தி வந்தது.
புதிய நாடகக் கம்பெனியில் இவருடைய இசைத் திறமையைக் கண்டறிந்து இவருக்கு நல்ல வேடங்களைக் கொடுத்து ஊதியத்தையும் அதிகப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி அவர் நடித்து வந்த நேரத்தில் அந்தக் கம்பெனியில் இருந்த மற்ற நடிகர்களில் எம்.ஜி.ஆர்., காளி என்.ரத்தினம், எம்.ஜி.சக்கரபாணி போன்றவர்களும் இருந்தனர். அப்போதெல்லாம் நாடகங்களில் பாடுகின்ற நடிகர்கள் நன்றாகப் பாடினால் கூட்டத்தினர் ‘ஒன்ஸ்மோர்’ என்று மீண்டும் பாடச்சொல்லிக் கேட்பார்கள். அப்படி இவருடைய பாடல்களை பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள் அன்றைய ரசிகர்கள்.

        இவருக்கு இயல்பாகவே பாட முடிந்தது என்றாலும், முறையாக இவர் சங்கீதம் கற்றுக் கொள்ளமலே இருந்தார். எதிர்கால நன்மையைக் கருதி இவர் சில குருநாதர்களிடம் சேர்ந்து இசையை முறையாகக் கற்கத் தொடங்கினார். ஓரளவு இவர் ஒரு கர்நாடக சங்கீத வித்வானைப் போலவே பாடத் தொடங்கிவிட்டார்.

        இப்படி இவர் பல துறைகளிலும் கவனம் செலுத்திக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்த காலத்தில் ஜூபிடர் பிக்சர்ஸ் கம்பெனியார் இவரைத் தங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டனர்.  அந்தப் படம் “சந்திரகாந்தா” எனும் பெயருள்ள படம்.

        அப்போதுதான் சின்னசாமி என்ற தன் பெயரை ‘சின்னப்பா’ என்று மாற்றி வைத்துக் கொண்டார். தொடர்ந்து இவர் நடித்து வெளியான திரைப்படங்களின் பெயர்களாவன: பஞ்சாப் கேசரி, ராஜ்மோகன், அநாதைப்பெண், யயாதி, மாத்ருபூமி. அந்த காலகட்டத்தில்தான் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் இவரைப் பற்றி அறிந்துகொண்டு இவரைத் தன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்தப் படம் “உத்தம புத்திரன்”. இந்தப் படம் வெளியான வருஷம் 1940. இரட்டை வேடத்தில் இவர் நடித்த இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இவர் மேலும் சில படங்களில் நடித்தார். அதில் ஒன்றுதான் “மனோன்மணி”. இது மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய நூலின் கதை. இதில் பி.யு.சின்னப்பாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இந்தப் படம் சின்னப்பாவின் திரையுலகில் ஒரு வெற்றி முனையாக அமைந்தது.

        ஒவ்வொரு கால கட்டத்திலும் இருவேறு நடிகர்களுக்குள் போட்டி, ரசிகர்களுக்குள் மோதல். அதன்படி இவருடைய ரசிகர்களுக்கும் எம்.கே.தியாகராஜ பாகவதர் ரசிகர்களுக்குமிடையே தகராறு இருந்துகொண்டிருந்தது. திரைப்படத்தில் இவரோடு நடித்துக் கொண்டிருந்த ஏ.சகுந்தலா எனும் நடிகையை இவர் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பிருத்விராஜன், ஆர்யமாலா, கண்ணகி, குபேரகுசேலா, ஹரிச்சந்திரா, ஜகதலப்பிரதாபன், மகாமாயா போன்ற பல படங்கள் தொடர்ந்து வெளிவந்தன.

        கிருஷ்ணபக்தி என்றொரு படம். அதில் இவர் ஒரு போலி ஹரிகதா பண்டிதர். ஒரு தாசியைத் தன் வசப்படுத்துவதற்கென்று இவரது பக்தி வேஷத்தைப் பயன் படுத்திக் கொண்ட காட்சிகள் மக்களைக் கவர்ந்தன. டி.ஆர்.ராஜகுமாரி அதில் கதாநாயகி. மங்கையர்க்கரசி என்றொரு படம். அதில் இவருக்கு மூன்று வேடங்கள். அதில் பி.கண்ணாம்பா கதாநாயகி. அவர் தேவாம்ருதம் அருந்தி இளமை குன்றாமல் இருப்பார். அவர் கணவராகவும், மகனாகவும் பி.யு.சின்னப்பா. அவரை தாய் என்றறியாமல் இளமையான கண்ணாம்பாவிடம் காம நோக்கில் மகன் சின்னப்பா செல்வார். அப்போது பசு ஒன்று இவர் முகத்தில் தன் மடியிலிருந்து பாலை பீய்ச்சியடிக்கும். இதுபோன்ற பல அரிய காட்சிகள் அதில் உண்டு.

       புகழின் உச்சத்தைத் தொட்டுவிட்ட சின்னப்பா 1951இல் காலமானார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து.




1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கடந்த பதிவு வைஜயந்திமாலா, இப்பதிவு சின்னப்பா. இரண்டையும் படித்தேன். அதிகமான, நான் அறிந்திராத செய்திகள். அழகான புகைப்படங்கள். நன்றி.