பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, October 21, 2015

டி.ஆர்.மகாலிங்கம்

                      
                சென்ற நூற்றாண்டில் சினிமாவின் ஆதிக்கம் வருவதற்கு முன்பாக நாடகங்களே அதிகம் நடிக்கப்பட்டும், மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. இப்போது சினிமா நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது போல அந்தக் கால நாடக நடிகர்கள் புகழ் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். நாடக நடிகர்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, செல்லப்பா இவர்களெல்லாம் அந்தக் கால ஹீரோக்கள். இதில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் இசை மிக பிரபலமானது. ஒரு பாடலை எடுத்துப் பாடத் தொடங்கினால் அதுவே பல மணி நேரம் நீடிக்குமாம், அதைப் பாடி முடித்ததும் ‘ஒன்ஸ் மோர்’ என்று கேட்டு மறுபடியும் பாட வைப்பார்களாம். வள்ளித் திருமணம் நாடகத்தில் “காயாத கானகத்தே நின்றுலாவும்” என்ற பாடலை அவர் பாடத் தொடங்கினால் அன்றைய இரவு முடிந்து பொழுதும் விடிந்துவிடுமாம். நம் காலத்தில் நாம் அறிந்த கே.பி.சுந்தராம்பாள் (‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ போன்ற பல அற்புதமான பாடல்களைப் பாடியவர்) அவர்கள் இந்த கிட்டப்பாவைத்தான் மணந்து கொண்டார், அவர் இளம் வயதில் இறந்த பின் விதவைக் கோலம் பூண்டு கடைசி வரை அப்படியே இருந்தார். பிறகு ஜெமினியின் “ஒளவையார்” படத்திலும் பிறகு ஏ.பி.நாகராஜனின் ‘திருவிளையாடல்’ படத்திலும் தொடர்ந்து வேறு சில படங்களிலும் சுந்தராம்பாள் நடித்ததனால் நம் தலைமுறையினருக்கு அவரைத் தெரியும். போகட்டும், அந்த எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களைப் போலவே அந்தக் காலத்தில் ஒரு இளைஞன் பாடி வந்தார். அவர்தான் டி.ஆர்.மகாலிங்கம்.

               மதுரை ஜில்லா சோழவந்தான் இவரது ஊர். டி.ஆர். என்பதற்கு தென்கரை ராமகிருஷ்ணன் என்றும் இவரது பெயரான மகாலிங்கத்துடன் இணைத்து இவர் அழைக்கப்பட்டார். இந்த தென்கரை என்பது சோழவந்தான் அருகிலுள்ள இடம். அங்கு இவர் 1924ஆம் ஆண்டில் பிறந்தார். இறைவனது படைப்பில் சில அதிசயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. சில குழந்தைகள் பேசத் தொடங்குமுன்னரே பாடத் தொடங்கி விடுகின்றன. அவர்களுக்கு அந்த சிறிய வயதில் எப்படித்தான் இசை ஞானம் வந்ததோ தெரியாது; அது இறைவன் கொடுத்த வரம். நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் வரலாற்றில் சொல்லப்படும் ஒரு செய்தி இந்த இடத்தில் சிந்திக்கத் தோன்றுகிறது. காலஞ்சென்ற சில மேதைகளின் ஆன்மா அத்தனை சீக்கிரத்தில் அடுத்த பிறவி எடுத்துவிடுவதில்லையாம். அவை தங்களுக்கு ஏற்ற கருவினை எதிர்பார்த்துக் காத்திருக்குமாம். ஒரு பெண் கருத்தரித்து ஏழு மாதம் ஆகும்போதுதான் அந்த மேன்மை பொருந்திய ஆன்மா தனக்கு அந்த பெண்ணின் கருப்பை ஏற்ற இடம் என்று முடிவுசெய்து அதில் குடியேறுமாம். அதனால்தான் ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் ஏழாம் மாதம் “காப்பு’ செய்ய வளைகாப்பு, பும்சவன ஸ்ரீமந்தம் ஆகியவைகளை செய்கிறார்களாம். இது சதாசிவ பிரம்மேந்திரர் பிறப்பு பற்றி சொல்லும் வரலாற்றில் இருக்கிறது. அப்படியொரு இசை மேதைதான் வந்து பிறந்தாரோ என்னவோ இந்த டி.ஆர்.மகாலிங்கம் இளம் வயதிலேயே பாடத் தொடங்கிவிட்டார். அடடா! அது என்ன சாரீரம் (சாரீரம், சரீரமல்ல). இனி வரலாற்றுக்கு வருவோம்.

                டி.ஆர்.மகாலிங்கம் ஐந்து வயதிலேயே மேடையில் ஏறி நாடகங்களில் நடித்தும் பாடியும் வரத் தொடங்கினாராம். இவருக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்தவர் செல்லூர் சேஷ ஐயங்கார் என்பார். அவரிடம் மிருதங்கம், பாட்டு இரண்டையும் இவர் கற்றார். சோழவந்தான் அக்ரகாரத்தின் நடுவில் இப்போதும் ஒரு பஜனை மடம் உண்டு. அதுபோன்ற பஜனை மடங்களிலும், கோயில்களிலும் மகாலிங்கம் பாடுவது வழக்கம்.

               பாய்ஸ் கம்பெனியில் நடிக்கத் துவங்கிய மகாலிங்கத்தை எல்லோரும் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு என்றுதான் சொன்னார்கள். இவருக்கு 12 வயது ஆனபோது இவர் நடித்த ஒரு நாடகத்தை ஏ.வி.எம். நிறுவனத் தலைவர் மெய்யப்ப செட்டியார் பார்த்திருக்கிறார். உடனே அவர் தான் எடுத்த நந்தகுமார் எனும் திரைப் படத்தில் இவரை கிருஷ்ணன் பாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்தார். அந்தப் படத்தில் பால கிருஷ்ணன் தான் கதாநாயகன், அவன் தான் பிருந்தாவனத்தின் நந்தகுமாரன். இப்போது பிரபலமாயிருக்கிற நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தையான எஸ்.வி.வெங்கட்ராமன் அப்போது ஒரு பெரிய இசை டைரக்டர். இதில் அவருடைய இசையில் மகாலிங்கம் பாடி நடித்தார்.

            தொடர்ந்து மேலும் சில படங்கள், அவை பெயர் சொல்லும்படியாக வெற்றி பெறவில்லை. இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்த போதிலும், இவரது கவனம் முழுவதும் நாடக மேடையில்தான். வள்ளித் திருமணம், பவளக்கொடி என்று அந்த நாளைய புராண நாடகங்கள் அப்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. அதிலெல்லாம் இவர்தான் கதாநாயகன். எந்தவொரு கம்பெனியிலும் சம்பளத்துக்கு நடிக்காமல், இவர் ஸ்பெஷல் நாடக நடிகர் என்று அவ்வப்போது கூப்பிடும் இடத்துக்குச் சென்று நடிப்பார். ஸ்பெஷல் நாடகம் என்றால் நடிகர்கள் இதற்கென்று வந்து நடித்துக் கொடுப்பார்கள், இதுவே தொடர்ந்து தினசரி வேலையாக இல்லை.

             அப்போது ஏ.வி.எம். செட்டியார் அவர்கள் காரைக்குடியில் தனது திரைப்பட ஸ்டுடியோவை வைத்திருந்தார். அப்போது 1945இல் ஸ்ரீவள்ளி என்றொரு படம் எடுத்தார். அதில் மகாலிங்கம் தான் முருகன். கதாநாயகியாக நடித்தவர் யார் தெரியுமா, இப்போது சீனியர் நடிகையாக விளங்கும் லக்ஷ்மியின் தாயார் தான் அப்போது கதாநாயகி. ஸ்ரீவள்ளி ஒரு ஹிட், வெற்றிப் படம். அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படம்.

             டி.ஆர்.மகாலிங்கம் நடித்த படங்களின் பட்டியல் மிக நீளமானது. அத்தனையும் இங்கு சொன்னால் அது இடத்தை அடைக்கும். குறிப்பாக ஒருசில படங்களின் பெயரைச் சொன்னால் போதும். பவளக்கொடி, இதயகீதம், விளையாட்டு பொம்மை, மோகனசுந்தரம், மச்சரேகை, நாம் இருவர், ஸ்ரீவள்ளி, ஆதித்தன் கனவு, ஆட வந்த தெய்வம், அபலை அஞ்சுகம், ஏ.பி.என்.இன் திருவிளையாடல், ராஜராஜசோழன், அகத்தியர், மாலையிட்ட மங்கை, போன்ற பல படங்கள்.

             இவருடைய வாழ்க்கையில் மிக செல்வத்தின் உச்சத்தையும், அதன் அடிமட்டத்தையும் தொட்டுப் பார்த்தவர் இவர். காலத்தின் கோலம் இவர் திரைத் துறை வாழ்க்கையை விட்டு மீண்டும் தன் சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமை வந்தது. பிறகு ஏ.பி.நாகராஜன் திருவிளையாடலில் கொடுத்த வாய்ப்பைத் தொடர்ந்து மீண்டும் திரையில் இவர் இசை ஒலிக்கத் தொடங்கியது.

              ஏ.வி.எம். எடுத்த “நாம் இருவர்” படத்தில் பி.ஆர்.பந்துலுவின் தம்பியாக வருவார் டி.ஆர்.மகாலிங்கம். குமாரி கமலா என அப்போது அறியப்பட்ட கமலா லக்ஷ்மண் அதில் பாரதியார் பாடல்களுக்கு மிகவும் அழகாக நடனம் புரிந்திருப்பார். அப்போது பாரதியார் பாடல்களின் உரிமை ஏ.வி.எம். செட்டியார் வசம் இருந்து வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு பெருந்தலைவர் காமராஜர் கேட்டுக்கொண்டதற்கிணங்க செட்டியார் பாரதியார் பாடல்களின் உரிமைகளை சென்னை அரசாங்கத்துக்குக் கொடுத்து விட்டார்.

1978இல் இவர் காலமானார்.

No comments: