தனக்கென்று ஒரு தனி வகையான பேச்சு வழக்கு.
இவர் வில்லனா, காமெடியனா, குணசித்திர நடிகனா எந்தவொரு தனிப் பிரிவிலும் சேர்க்க முடியாத
தனித்திறமை கொண்ட நவரச நாயகன் டி.எஸ்.பாலையா. இவர் எந்த வயதில் நடிக்க வந்திருப்பார்?
இன்றைய முதுபெரும் கிழவர்கள்கூட இவருடைய ஆரம்ப கால படங்களைப் பார்த்திருப்பதாகச் சொல்லுகிறார்கள்
என்றால் திரைப்பட உலகில் இவர் எத்தனை ஆண்டுகள் சாதித்தார்? உண்மையில் அனைவரையும் திகைப்பில்
ஆழ்த்தக்கூடிய சாதனை இந்த அபூர்வமான நடிகரின் சாதனை.
இவருடைய பல பங்களிப்புகளை மக்கள் அத்தனை
எளிதில் மறந்துவிட முடியாது. குறிப்பாக “தில்லானா மோகனாம்பாள்” படத்தில் தவில் வித்வானாக
இவரும் கே.சாரங்கபாணியும் அசல் தவில் வித்வான்களைக் கூட தோற்கடிக்கும் வகையில் அந்த
உடலசைவுகள், வாசிக்கும் விதம் இவற்றால் மனம் கவர்ந்தவர்கள்.
தொடக்க காலம் இவரை வில்லனாக
அறிமுகம் செய்தது. இடையில் காமெடியனாகவும், குணசித்திர நாயகனாகவும் காட்டியது. பாகப்பிரிவினையில்
பாசக்கார பெரியப்பா, மனைவிக்கு பயந்துகிடக்கும் இவர் கடைசியில் புலிபோலப் பாய்ந்த குணசித்திரம்
மணமகளில் தன்னிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் பெண்ணிடம், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’
என்ற வரிகள் சொல்லிக் கொடுக்கும் போது காட்டிய சரசம், காதலிக்க நேரமில்லை படத்தில்
நாகேஷ் கதை சொல்ல இவர் பயந்து போய் அரற்றும் காட்சிகள், பாமா விஜயத்தில் “வரவு எட்டணா,
செலவு பத்தணா” என்று குடும்பத்தில் ஆடம்பரம் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டிய காட்சிகள்
இவைகள் மறக்கக்கூடியவைகளா அந்தக் காட்சிகள்?
கல்கியின் படைப்புகளில் வரலாற்று நாவலில்
முதலில் வந்தது “பார்த்திபன் கனவு”. அதில் பார்த்திபனின் சேநாபதியாக இருந்து இளவரசனுக்கு
இன்னல் விளைவிக்கும் வில்லன் இவர். படகோட்டியின் மனைவி வள்ளியிடம் வழிவதும், நரசிம்ம
பல்லவரிடம் நெளிவதும், சோழ இளவரசனுக்கு வில்லத்தனம் செய்வதும் இன்றும் நினைவில் நிற்கும்
காட்சிகள்.
இந்த பாலையா பற்றி ஒருசில விவரங்களைத்
தெரிந்து கொள்வோமே. திருநெல்வேலியைச் சேர்ந்தவர் இவர். 1914இல் பிறந்தவர். வீட்டைவிட்டு
ஓடிப்போய் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து, அங்கு சில காலம் இருந்துவிட்டு, ஜெகநாத
ஐயர் என்பவரின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார். அந்த நிலையில் தான் இவருக்குத்
திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.
1936இல் தனது 22ஆம் வயதில் திரைத் துறையினுள் புகுந்தார்.
அந்த ஆண்டு வெளியான ‘சதி லீலாவதி’ எனும் படம்தான் இவருடைய முதல் படம். அதே படத்தில்
அறிமுகமானவர் தான் எம்.ஜி.ஆரும். என்.எஸ்.கிருஷ்ணன், நாடக உலகில் சிறந்து விளங்கிய
கந்தசாமி குடும்பத்து எம்.கே.ராதா ஆகியோரும் அறிமுகமானார்கள். அந்த நாட்களில் இவரது
வில்லன் நடிப்பு மக்களுக்கு ஒரு புதுமை. நிஜவாழ்க்கையில் இவர் போன்ற வில்லன்கள் இருந்திருப்பார்களோ
என்னவோ, இவர் அப்படியொரு கொடுமைக்கார வில்லனாக நடித்திருக்கிறார்.
‘அம்பிகாபதி’ படத்திலும், ‘மதுரை வீரன்’,
‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ ஆகிய படங்களில் இவர்தான் வில்லன். ஏ.பி.நாகராஜன் எடுத்த திருவிளையாடலில்
ஹேமநாத பாகவதராக வந்து இவர் பண்ணிய அலம்பலில் பாண்டிய நாடே திமிலோகப்பட்ட நேரத்தில்
சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலா, இவரது ஆணவம் அடக்கப்பட்ட வரலாற்றை, படத்தில் மிக
அழகாகக் காட்டிய திறமையாளர். ராகங்களின் பெயர்களைக் கொண்ட அவருடைய கோமாளித்தனமான சீடர்களையும்
இவருடைய தற்பெருமையையும் படம் அழகாக எடுத்துக் காட்டி இவரது திறமைக்கு வெளிச்சம் போட்டுக்
காட்டியது. பாலையா தமிழ்த் திரையுலகில் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையில்லை.
திரையுலகின் ஒரு மறக்கமுடியாத சகாப்தமாக
விளங்கிய இந்த அற்புத நடிகரின் வாழ்வு தனது 57ஆம் வயதில் (ஆம்! அது இளம் வயதுதான் அவருக்கு)
1972இல் மறைந்தார். வாழ்க டி.எஸ்.பாலையா புகழ்.