பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 29, 2013

இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (1163 முதல் 1178 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (1163 முதல் 1178 வரை)

இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு "ராஜகேசரி" எனும் பட்டத்துடன் அரசப் பதவிக்கு வந்தவன் இந்த இரண்டாம் ராஜாதிராஜன். இவனுடைய தலைநகரமும் கங்கைகொண்ட சோழபுரம் தான். இவனும் விக்கிரம சோழனுடைய மகன் தான். இவன் இரண்டாம் ராஜராஜனுடைய மகன் அல்ல, அவனுடைய சகோதரியின் மகன். ராஜராஜன் II இவனைத் தன் வாரிசாக நியமித்ததற்கு ஒரு காரணம் உண்டு. அது ராஜராஜன் IIக்கு மகன் கிடையாது.

இவன் பதவியேற்றுக் கொண்ட காலத்தில் பாண்டியர் தேசத்தில் வாரிசுரிமைப் போர் தொடங்கியது. இலங்கையிலும் கலகம் ஏற்பட்டதால் சோழர்களுக்கு ஒரு சோதனையான காலமாக இருந்தது. இதன் காரணமாக பாண்டியர்களின் கை ஓங்கி சோழர்கள் வலிமை இழக்கத் தொடங்கினர்.

முதலாம் குலோத்துங்கனின் பாண்டிய படையெடுப்புக்குப் பிறகு, பாண்டிய நாட்டை பாண்டியர்களே ஆளும்படியாக சோழர்கள் அனுமதித்திருந்தார்கள். சோழர்கள் மேம்போக்காக மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். சில பாண்டிய மன்னர்கள் சோழர்களுக்கு அணுக்கமாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக பராந்தக பாண்டியன் சோழர்களோடு சேர்ந்து கொண்டு கலிங்கத்தில் போர் புரிந்திருக்கிறான். முதலாம் குலோத்துங்கன் காலத்துக்குப் பிறகு பாண்டியர்கள் சோழர் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுயமாக நாட்டை ஆளமுற்பட்டனர். குலோத்துங்கன் காலத்துக்குப் பிறகு சோழர்கள் பற்றிய கல்வெட்டு எதுவும் பாண்டிய நாட்டில் இல்லை.

கி.பி.1166இல் மதுரை பாண்டியர்களான பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகரனுக்கும் வாரிசு உரிமைப் போர் உருவானது. குலசேகரன் மதுரையைத் தாக்கினான். உடனே பாண்டியன் இலங்கை அரசன் பராக்கிரமபாகுவின் உதவியை நாடினான். இலங்கையின் உதவி பாண்டியருக்குக் கிடைக்குமுன்பாகவே குலசேகரன் மதுரையைத் தாக்கி பராக்கிரம பாண்டியனையும் கொன்று, அவன் மனைவி குழந்தைகளில் சிலரையும் கொன்றுவிட்டான். இதையறிந்த இலங்கை அரசன் தன்னுடைய படைகளுக்கு மதுரையைப் பிடித்துக்கொண்டு பராக்கிரம பாண்டியனையும் அவன் குடும்பத்தாரையும் கொன்ற குலசேகரனைத் தோற்கடித்து இறந்து போன பராக்கிரம பாண்டியனுடைய ஒரு மகனை அரச பீடத்தில் அமர்த்த வேண்டுமென்று உத்தரவிட்டான்.

இலங்கை அரசனுடைய எதிர்ப்பை குலசேகரன் தீரத்துடன் எதிர் கொண்டான். பாண்டியனின் வீரமிகுந்த போராட்டத்தை சமாளிக்க பராக்கிரமபாகு இலங்கையிலிருந்து மேலும் படைகளை வரவழைத்தான். இலங்கையின் தாக்குதலை தாங்கமுடியாமல் குலசேகரன் சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜனுக்கு படைகளை அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தான். அவன் கோரிக்கையையேற்று சோழ மன்னனும் பெரும் படையொன்றை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்தான். இறுதியில் குலசேகரன் பலத்த எதிர்ப்புக்கிடையில் தோல்வியைச் சந்தித்தான்.

இலங்கைப் படைகள் பராக்கிரம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் என்பவனை அரச பதவியில் அமர்த்தினர். இருந்த போதிலும் இலங்கைப் படைகளுக்கும் சோழர் படைகளுக்கும் போர் தொடர்ந்து நடந்தது. இறுதியில் சோழர் படை வெற்றி பெற்று இலங்கை சிங்களப் படைகளை துரத்தியடித்துவிட்டது. மிகக் கடுமையாக நடந்த இந்த சிங்கள சோழர் போரில் சோழர் படைத் தளபதி அண்ணன் பல்லவராயன் என்பவன் இரண்டு சிங்கள படைத் தளபதிகளின் தலையை வெட்டி வீழ்த்தினான். அந்த சிங்களப் படைத் தளபதிகளின் பெயர்கள் லங்காபுரி தண்டநாயகன், ஜெகதிவச தண்டநாயகன் என்பது. இந்தப் போரின் இறுதியில் சோழர்கள் குலசேகரனைப் பாண்டிய மன்னனாக முடிசூட்டி வைத்தனர். அந்த சமயத்தில் சிங்கள தளபதிகள் இருவரின் தலைகளும் கோட்டையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மதுரையில் சோழர் படைகளிடம் தோற்ற சிங்களப் படைகளின் வெறி அடங்கவில்லை. இலங்கை சிங்கள அரசன் பராக்கிரமபாகு சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோழர்கள் இலங்கையில் இந்த பராக்கிரமபாகுவுக்கு எதிரியான ஸ்ரீவல்லபன் என்பவனை இலங்கை அரசுக்கு உரிமை கோரி போராடும்படி தூண்டினார்கள். அந்த ஸ்ரீவல்லபன் சோழர்களின் படை உதவியுடன் ஒரு மிகப் பெரிய கப்பற்படையோடு இலங்கை சென்றான். அங்கு சிங்களர்களின் பல இடங்களை ஸ்ரீவல்லபன் தலைமையிலான சோழர்படை தூள் தூளாக்கியது. பாண்டியர்களின் பிரச்சனையில் தலையிட்டதன் பலனாக தன் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து வருந்திய இலங்கை அரசன் பராக்கிரமபாகு பாண்டிய நாட்டுக்கு குலசேகரனை அரசனாக ஒப்புக் கொண்டான். அது மட்டுமல்லாமல் சோழர்களுக்கு எதிராக குலசேகரனோடு ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டான்.

தாங்கள் பார்த்து பாண்டிய நாட்டுக்கு அரசனாக குலசேகரனை உட்காரவைத்த நன்றியை மறந்து அந்த குலசேகரன் பராக்கிரமபாகுவுடன் தங்களுக்கு எதிராக ஒப்பந்தம் செய்து கொண்டது கண்டு சோழர்களுக்கு ஆத்திரம். இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்கிற வேகத்துடன் பாண்டியன் குலசேகரன் மீது படையெடுத்துச் சென்று அவனைத் தோற்கடித்து விட்டு முன்பு இலங்கை படையினரால் முடிசூட்டப்பட்ட வீரபாண்டியனை மீண்டும் பாண்டிய அரசனாக உட்கார வைத்தார்கள். நன்றி மறந்த குலசேகரன் காட்டுக்குள் ஒடி ஒளிந்து கொண்டான்.

சோழ நாட்டில் வலுவான தலைமை முன்பு போல இல்லாமல் இருந்ததால் அவர்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்கள் சோழ நாட்டை பலவீனப்படுத்தினர். சிற்றரசர்கள் சோழப் பேரரசனுக்கு நெருக்கடி கொடுத்த வண்ணமிருந்தனர். தங்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் சோழ மன்னன் நிர்வாகத்தை நடத்த திணரவேண்டியிருந்தது. இப்படி இந்த சிற்றரசர்களின் துரோகத்தின் பயனாக சோழப் பேரரசு தனது கம்பீரத்தை இழந்து கொண்டிருந்தது. நிர்வாகம் சீர்கேடடையத் தொடங்கியது. சோழப் பேரரசர் மீது நெருக்கடியைக் கொடுத்து சிற்றரசர்கள் தங்கள் கோரிக்கைகளை நிலைநாட்டத் தொடங்கி மொத்த சோழ சாம்ராஜ்யத்தையும் பலவீனப்படுத்தி விட்டனர்.

இந்த சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜன் தன் காலத்திலேயே தனது மகனான மூன்றாம் குலோத்துங்கனை ராஜாங்க காரியங்களைக் கவனிக்க வைத்தான். தந்தை காலத்திலேயே ஆட்சியைப் பற்றி இந்த மூன்றாம் குலோத்துங்கன் கற்றுக் கொள்ள முடிந்தது. மகனிடம் பொறுப்பை ஒப்படைத்து ஓய்வில் இருந்த மன்னன் ராஜாதிராஜன் தோட்டக்கலையில் ஆர்வமுடையவனாக இருந்தான். தனது அரண்மனையில் அழகிய பூந்தோட்டங்களை அமைத்து அழகு பார்த்தான். 1182இல் அவன் காலமான பிறகு மூன்றாம் குலோத்துங்கன் அரச பதவியைத் தனித்து வகிக்கத் தொடங்கினான்.

Thursday, July 25, 2013

இரண்டாம் ராஜராஜன் (1146 முதல் 1173 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)


21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


இரண்டாம் ராஜராஜன் (1146 முதல் 1173 வரை)

இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் என்பான். இவனது தலைநகரமும் கங்கைகொண்ட சோழபுரம்தான். இவனுடைய ராணிகள் அவனிமுழுதுடையாள், புவனமுழுதுடையாள், உலகுடை முக்கோகிலம். இவன் இறந்த ஆண்டு 1173.

இரண்டாம் ராஜராஜன் தன்னுடைய தந்தையார் இரண்டாம் குலோத்துங்கனின் மறைவுக்குப் பிறகு அரச பதவிக்கு வந்தான். அப்படி வந்த ஆண்டு 1150. ஆனால் 1146லேயே இவனை இளவரசாக ஆக்கி ஆட்சி பொறுப்புகளை இரண்டாம் குலோத்துங்கன் வழங்கியிருந்தான். ராஜராஜனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும், விக்கிரம சோழனும் ஓஹோவென்று ஆண்ட அகண்டு விரிந்த சாம்ராஜ்யம் குறையத் தொடங்கியது இவன் காலத்தில்தான். இவன் பதவியேற்ற நேரத்தில் இருந்த சோழ நாட்டுப் பகுதிகள் வேங்கி உட்பட இவன் காலத்தில் இவன் ஆட்சிக்குட்பட்டுதான் இருந்தது.

ஆனால் இவன் காலத்தில் சோழப் பேரரசின் ஆட்சி சாம்ராஜ்யம் முழுவதும் இவனுடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தது போல ஒரு கட்டுப்பாடான மத்திய ஆட்சியின் கீழ் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் சோழப் பேரரசுக்கின் கீழ்தான் வேங்கி, பாண்டிய, சேர நாடுகள் இருந்து வந்தன. இலங்கை மீதும் இவன் படையெடுத்த செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. இவனும் சரி இவனுடைய மகனான மூன்றாம் குலோத்துங்கனும் சரி "திரிபுவன சக்கரவர்த்தி" எனும் விருதினைப் பெற்றிருந்ததிலிருந்து இவர்கள் தங்கள் முன்னோர்களின் வழக்கப்படி ஒரு பேரரசனாகத்தான் இருந்திருக்கிறான் என்பது தெரிகிறது.

பாண்டிய நாட்டு நிர்வாகம் சோழர் கையில்தான் இருந்ததென்றாலும், அங்கே பாண்டிய நாட்டின் உரிமை யாருக்கு என்பதில் அங்குள்ள பாண்டியர்களுக்குள் போட்டி இருந்து வந்தது. அதன் பலனாக சோழர்களின் பிடி பாண்டிய நாட்டின் மீது இவன் காலத்தில் சற்று பலவீனமடைந்து போயிற்று. விஜயாலயன் பரம்பரையில் முதலாம் ஆதித்தன் காலத்தில் தோற்கடிக்கப்பட்ட பாண்டியர்கள் அதுமுதல் வீரராஜேந்திரன் காலம் வரையில் சோழர்களுக்கு அடிமைப்பட்ட நாடாகத்தான் இருந்து வந்தது. ஆனாலும் அவர்கள் தங்களை சோழர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள எல்லா காலங்களிலும் முயன்று வந்திருக்கிறார்கள். அதற்காக ரகசியமான நடவடிக்கைகளிலும், சதியிலும்கூட ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாண்டியர்களின் இந்த விடுதலை உணர்வு மாறவர்மன் எனும் மாறவரம்பன் சுந்தர பாண்டியன், ஜடாவர்மன் வீர பாண்டியன், ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோர் காலத்தில் அதிகமாகிவிட்டது. பாண்டியர்கள் சோழர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை விரும்பவில்லை. தங்களைச் சுயேச்சையான மன்னர்களாக அறிவித்துக் கொள்ள காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான முயற்சிகளில் 13ஆம் நூற்றாண்டு முழுவதும் இவர்கள் பாடுபட்டு வந்தார்கள் என்பதை மறந்துவிட முடியாது.

2ஆம் ராஜராஜன் 1163இல் தன்னுடைய மகனான இரண்டாம் ராஜாதிராஜனை இளவரசனாக முடிசூட்டி ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்திருந்தான். அதன் பிறகு பத்து ஆண்டுகள் 2ஆம் ராஜராஜன் வாழ்ந்தான். 2ஆம் ராஜராஜன் மிகச் சிறிய வயதிலேயே இறந்து விட்டான், ஆகவே அவன் மகனும் மிக இளம் வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது. ஆகவே பல்லவராயரின் ஆதரவையும் பாதுகாப்பையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். பல்லவராயர் ஒரு வயதும், இரண்டு வயதும் ஆகியிருந்த இளம் சோழ ராஜகுமாரர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர்களில் 3ஆம் குலோத்துங்கன் தான் சோழ மன்னர்களில் கடைசி மன்னனாகக் கருதப்படுகிறான். இவன் 2ஆம் ராஜராஜனின் மகன்.

2ஆம் ராஜராஜ மன்னனின் காலம் அமைதியான காலம். இந்த அமைதியான காலத்தில்தான் இவன் தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலைக் கட்டினான். இந்த தாராசுரம் கோயில் சோழர்களின் மற்ற இரு கோயில்களான தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் இவற்றுக்கு இணையாகப் பெருமை மிக்கதாக விளங்குகிறது என்பது தெரியும். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் கருங்கல் வேலைகள் மிகவும் சிறப்பானவை. இவனது மகன் 3ஆம் குலோத்துங்கன் கட்டிய திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலும் அதற்கு இணையான அற்புத கலைப் படைப்புகளைக் கொண்ட கோயில்.
இந்த ஆலயத்தில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணக் கதைகளின் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

2ஆம் ராஜராஜன் தஞ்சாவூர், சிதம்பரம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆகிய கோயில்களுக்கு ஏராளமான நிவந்தங்களை வழங்கியிருக்கிறான். மதுரை ஆலயத்துக்கும் இவன் இவன் ஏராளமான செல்வங்களைத் தந்தான். சேர நாட்டுக் கோயில்களுக்கும் இவன் அடிக்கடி சென்று வந்ததும், அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிதியளித்ததும் கூட வரலாற்றில் காணப்படுகிறது. மேலைக் கடற்கரையிலிருந்து கீழைக் கடல் வரையிலுமுள்ள பிரதேசங்களில் சோழர்களின் ஆதிக்கம் இவன் காலத்தில் உறுதியாக இருந்திருக்கிறது.

இவன் இறந்த பிறகு 2ஆம் ராஜாதிராஜன் எனும் இவனது மகன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் வரலாற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம். 

Monday, July 22, 2013

இரண்டாம் குலோத்துங்கன் (1133 முதல் 1150 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


இரண்டாம் குலோத்துங்கன் (1133 முதல் 1150 வரை)

விக்கிரம சோழனின் மகனான இந்த இரண்டாம் குலோத்துங்கனுக்கு "ராஜகேசரி" எனும் விருது உண்டு. கங்கைகொண்ட சோழபுரம் இவன் தலைநகரம். இவனது ராணிமார்கள் தியாகவல்லி, முக்கோகிலம். இந்த இரண்டாம் குலோத்துங்கன் காலம் சோழ நாட்டின் பொற்காலம் என்று தெரிகிறது. இவன் காலத்தில்தான் மக்கள் சுகபோகத்தில் இருந்து கொண்டு வீண் பொழுது போக்கிக்கொண்டு ஜீவகசிந்தாமணியைப் புலவர்களைக் கொண்டு படிக்க வைத்துப் பொற்காசுகளைக் கொடுத்து வாழ்க்கையை அனுபவித்தனர். இதனைக் கண்டு வருந்திய மன்னன் மக்களை நல்வழிப்படுத்த நல்லதொரு நூலை இயற்றித்தரவேண்டுமென்று தன் அமைச்சர் சேக்கிழார் பெருமானை வேண்ட, அவரும் பெரியபுராணம் செய்தார்.

இவனுடைய தந்தை இருந்த காலத்திலேயே இந்த இரண்டாம் குலோத்துங்கன் இளவரசாகப் பட்டம் சூட்டிக் கொண்டு ஆட்சியில் பங்குகொண்டான். 1135இல் விக்கிரமன் காலமானதும் இவன் முழுமையான மன்னனாக ஆனான். இவனுடைய ஆட்சிக் காலம் பொற்காலம் எனலாம். நாட்டில் அங்கும் அமைதி நிலவியது. இவனும் நல்லாட்சி வழங்கினான். கடவுள் பக்தி நிரம்பியவன் ஆதலாம் எங்கும், எவரிடமும் அன்போடு நடந்து கொண்டான். மக்கள் மதித்த நல்லதொரு ஆட்சியாளனாகத் திகழ்ந்தான் இரண்டாம் குலோத்துங்கன்.

இவன் காலத்தில் போர்கள் எதுவும் இல்லை. ஆனால் வேங்கியைக் காக்க இவன் சில போர்களை நடத்த வேண்டியிருந்தது. பெரிய புராணம் எனும் சேக்கிழார் சுவாமிகள் இயற்றிய இலக்கியம் இந்த பெருமகனாரின் புகழுக்கு ஒரு சாட்சி. இந்த குலோத்துங்கனுக்கு சிதம்பரம் என்றால் உயிர். இந்த சோழ மன்னர்கள் சிதம்பரத்திலும் ஒரு முறை முடிசூட்டிக் கொள்வது வழக்கம். அதுபோலவே இவனும் இங்கு முடிசூட்டிக் கொண்டான்.

சிதம்பரம் நடராஜப் பெருமான் மீது அளவிலா பக்தி கொண்டவன். இவன் காலத்தில் சிதம்பரம் ஆலயம் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. விக்கிரம சோழன் தொடங்கிய திருப்பணி இவன் காலத்தில் முடிந்து குடமுழுக்கு நடந்திருக்கலாம். இந்த இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சைவ வைணவ பூசல் தமிழகத்தில் நடந்திருக்கிறது. சிதம்பரம் நடராசப் பெருமான் ஆலயத்தில் இருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலை இவன் காலத்தில் அகற்றப்பட்டது என்றொரு செய்தியும் இருக்கிறது. சிவாலயத்தில் எதற்காக பெருமாள் சிலை என்பது இவன் கருத்தாக இருந்திருக்கலாம்.*

(*இது குறித்து ஒரு புராண செய்தி உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அவர் பள்ளிகொண்டிருந்த ஆதிசேஷன் போய் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைத் தான் பார்க்க விரும்புவதாகச் சொல்ல பெருமாள் அவரை அனுமதிக்கிறார். உடனே ஆதிசேஷன் பதஞ்சலி முனிவர் வடிவத்துடன் வியாக்கிரபாத முனிவரையும் அழைத்துக் கொண்டு சிதம்பரம் சென்று ஐயனின் ஆடலைக் காண்கிறார். அங்கு பாற்கடலில் மகாலக்ஷ்மி விஷ்ணுவிடம் ஆதிசேஷனும் போய்விட்டார் நாமும் போய் பார்த்தால் என்ன என்று சிதம்பரம் போய் கூட்டத்தோடு கூட்டமாய் நடராசரின் (சிவனின்) ஆட்டத்தைப் பார்த்தார்களாம். ஒருக்கால் இந்த நிகழ்ச்சியைக் காட்டும் விதத்தில் அங்கு ஒரு பெருமால் சந்நிதி இருந்ததோ என்னவோ?)

எது எப்படியோ? இரண்டாம் குலோத்துங்கனுக்கு அவன் காலத்தில் வாழ்ந்து வைணவத்தைப் பரப்பிய இராமானுஜரைப் பிடிக்கவில்லை. இராமானுஜரின் பல சீடர்களை இவன் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. ஒரு வைணவரைக் குருடாக்கிவிட்டதாகவும் செய்தி இருக்கிறது. இராமானுஜருக்குச் செய்ய வேண்டிய இந்த கொடுமையை அவருக்கு நேராமல் தடுக்க நினைத்த கூரத்தாழ்வான் என்பவருக்கு நடந்துவிட்டது இது.

ராஜாவாக கங்கைகொண்ட சோழபுரத்தில் வசிக்காமல் சிதம்பரத்திலேயே அதிகம் வாழ்ந்தான் இந்த இரண்டாம் குலோத்துங்கன். இவன் ராணி தியாகவில்லி. இன்னொரு மனைவி மலயமான் வம்சத்து ராணி. இந்த குலோத்துங்கனைத்தான் "அனபாய சோழன்" என்று அழைத்தனர். இந்தப் பெயர்தான் பல கல்வெட்டுகளிலும் புத்தகங்களிலும் குறிப்பிடப்படுகிறது.

இந்த இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பிறகு இவனது மகன் இரண்டாம் ராஜராஜன் என்பவன் 1150இல் ஆட்சிக்கு வந்தான்.


விக்கிரம சோழன் (1118 முதல் 1135 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


விக்கிரம சோழன் (1118 முதல் 1135 வரை)

முதலாம் குலோத்துங்கன் காலத்திலேயே அரசு அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கியவன் அவனுடைய நான்காம் குமாரனாகிய விக்கிரம சோழன். இவனுக்குப் "பரகேசரி" எனும் பட்டம் உண்டு. குலோத்துங்கன் முதலில் விக்கிரமாதித்தன் வந்து போரிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தைப் பிடித்துக் கொண்டபோது திருவாரூர் போய் தங்கியிருந்து, பின்னர் விக்கிரமாதித்தன் சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பிய பின் மீண்டும் கங்கை கொண்ட சோழபுரம் போய்விடுகிறான். அதன் பின் சோழர்களின் தலைநகரமாக இந்த கங்கைகொண்ட சோழபுரமே இருந்து வந்தது.

விக்கிரம சோழனுக்கு இரு மனைவியர்கள் முக்கோகிலனடிகள், தியாகபாதா என்பவர்கள். இவனுக்குப் பின் இவன் மகனான இரண்டாம் குலோத்துங்கன் பதவிக்கு வருகிறான். விக்கிரம சோழன் 1135இல் காலமானான். கோப்பரகேசரிவர்மன் விக்கிரம சோழன் எனும் பெயரோடு விளங்கிய இந்த மன்னன் 12ஆம் நூற்றாண்டில் சோழ தேசத்தை ஆண்ட மன்னர்களில் முதலாமவனும் சிறந்தவனுமாக இருந்தான்.

விக்கிரம சோழன் முன்பே குறிப்பிட்டபடி குலோத்துங்கனின் நான்காவது மகன். வீரசோழன் என்பவன் மூன்றாவது மகன். விக்கிரமன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொள்வதற்கு முன்பாகவே வேங்கி நாட்டை ஆளும் பொறுப்பு 1089இல் கொடுக்கப்பட்டு அங்கு சென்றுவிட்டான். 1118இல் குலோத்துங்கன் தனக்கு வயது முதிர்ந்து விட்டது என்பதால் வேங்கியிலிருந்த விக்கிரமனை அழைத்து சோழ நாட்டில் பதவியில் அமர்ந்தினான். ராஜகேசரி என்றும் பரகேசரி என்றும் இவனுக்கு விருதுகள். 1118 முதல் 1122 வரை இவன் தன் தந்தை குலோத்துங்கணுடன் இணைந்து ஆண்டுவந்தான். விக்கிரமன் வேங்கியைவிட்டு சோழ தேசத்துக்குத் தன் தந்தைக்குத் துணையாக வந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மேலைச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் வேங்கியைத் தாக்கிப் பிடித்துக் கொண்டான்.

விக்கிரமன் ஆட்சிக்கு வருவதற்கு 12 வருஷங்கள் முன்பாகவே சோழ சக்கரவர்த்தி குலோத்துங்கன் சார்பில் கலிங்கத்தின் மீது 1110இல் படையெடுத்தான். இந்த படையெடுப்பு பற்றிய இலக்கியமொன்று இருக்கிறது விக்கிரம சோழன் உலா என்று.

மேலைச் சாளுக்கியன் விக்கிரமாதித்தன் 1118இல் கிழக்கு சாளுக்கிய நாடான வேங்கியைப் பிடித்துக் கொண்டான் என்பதைப் பார்த்தோம். 1126இல் விக்கிரமாதித்தன் இறந்தவுடன் விக்கிரம சோழன் வேங்கியை மீண்டும் பிடித்துக் கொண்டான். இந்தப் போர் குறித்த அதிகப்படியான தகவல்கள் கிடைக்கவில்லை. நீண்ட காலம் சோழர்கள் ஆட்சியை நடத்தி வந்ததால் வேங்கி நாட்டவர் சோழர்களை சாளுக்கியர்களைக் காட்டிலும் அதிகம் விரும்பியிருக்கிறார்கள். அது போலவே அரச குடும்பத்தார் மீதும் மக்கள் அன்பு வைத்திருந்தனர். வேங்கி மக்களின் விருப்பத்துக்கிணங்க விக்கிரம சோழன் தன் குமாரன் இரண்டாம் குலோத்துங்கனை வேங்கி நாட்டிற்கு அனுப்பி வைத்தான்.

வேங்கியை முழுவதுமாக மீண்டும் தன்வசப் படுத்திக் கொண்ட பிறகு சோழர்கள் கலிங்கத்தின் மீதும் படையெடுத்துச் சென்றனர். சோழர்களிடமிருந்து ஹொய்சாளர்கள் கைப்பற்றிக் கொண்ட பிரதேசங்களை மீட்க விக்கிரமன் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. விக்கிரமன் கலம் அவன் தந்தையின் காலம்போல அதிகமான போர்களைக் கொண்டதல்ல.

விக்கிரமன் சிறந்த சிவபக்தனாக விளங்கினான். பல சிவாலயங்களை இவன் பல ஊர்களிலும் கட்டி வைத்தது இன்றும் அவன் பெயரைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன. சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரம். அந்த சிதம்பரத்துக்கு நிறைய கைங்கர்யங்களைச் செய்தான் விக்கிரம சோழன். 1128இல் சோழ சாம்ராஜ்யத்தின் வருமானம் முழுவதையும் சிதம்பரம் கோயில் கைங்கர்யத்துக்கும் விரிவாக்கத்துக்கும் கொடுத்து விட்டான். ஆலயத்தின் முக்கிய விமானம் மற்றும் நடைபாதை கூரைகளுக்குப் பொன் வேய்ந்தான். இவன் காலத்தில் மக்கள் ஆலயங்களின் அபிவிருத்திக்கு அதிக நன்கொடைகளைக் கொடுத்தனர்.

விக்கிரம சோழனை "தியாகசமுத்திரன்" என அன்போடு விருது கொடுத்து அழைத்தனர். இவனுக்குப் பிறகு இரண்டாம் குலோத்துங்கன் பதவிக்கு வந்தான்.



முதலாம் குலோத்துங்கன் (1070 முதல் 1120 வரை)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)




முதலாம் குலோத்துங்கன் (1070 முதல் 1120 வரை)

கடந்த சில பதிவுகளில் ராஜேந்திர சோழன் தொடங்கி அதிராஜேந்திரன் வரையிலான சோழ மன்னர்களின் வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்த்தீர்கள். கடைச் சோழர்கள் எனப் பெயரிடப்பட்டுள்ள விஜயாலயன் பரம்பரை இந்த அதிராஜேந்திரனின் மரணத்தோடு முடிவடைந்து விடுகிறது. பின்னர் பதவிக்கு வந்த முதலாம் குலோத்துங்கன் சோழர்களின் பெண்வழி வாரிசாக வேங்கிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இனி இந்த முதலாம் குலோத்துங்கன் பற்றி பார்ப்போம். சென்ற பதிவில் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்து ஒருசில மாதங்களுக்குள் கொல்லப்படுகிறான் என்பதையும், அவனைத் தொடர்ந்து வேங்கிநாட்டுச் சாளுக்கிய இளவரசனும், சோழர்களின் பெண்வழி வாரிசுமான குலோத்துங்கன் பதவிக்கு வந்ததையும் பார்த்தோம். இறந்துபோன அதிராஜேந்திரனுக்கு ஆதரவாக மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் படையெடுத்து காஞ்சிபுரத்துக்கும், கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அதிராஜேந்திரனுக்குத் துணை புரிந்த வரலாற்றையும் பார்த்தொம். இனி முதலாம் குலோத்துங்கன்.

இவனை "ராஜகேசரி" எனும் பட்டப்பெயரோடு அழைக்கிறார்கள். இந்த மன்னன் தன்னுடைய தலைநகரை திருவாரூருக்கு மாற்றிக் கொள்கிறான். கங்கைகொண்ட சோழபுரத்து சோழர்கள் அனைவரும் விஜயாலய பரம்பரையினர். கடைசி விஜயாலயன் பரம்பரை மன்னன் அதிராஜேந்திரனுக்கு ஆதரவாக வந்த விக்கிரமாதித்தன் குலோத்துங்கனோடு போரிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தை விட்டு விரட்டிவிட்ட பின்னர் இவன் திருவாரூரில் தன் தலைநகரை அமைத்துக் கொண்டிருக்கலாம்.

குலோத்துங்கனுடைய மனைவிமார்கள் மதுராந்தகி, தியாகவல்லி, ஏழிசைவல்லபி, சோழக்குலவல்லியார் ஆகியோராவர். மிக அற்புதமான பெயர்கள். இவனுடைய பிள்ளைகள் ராஜராஜ மும்முடிச் சோழன், ராஜராஜ சோடகங்கன், விக்கிரம சோழன், மேலும் நான்கு பேர்.

ராஜகேசரிவர்மன் அபய குலோத்துங்க சோழன் என்பது இவனது முழுப் பெயர். சோழ அரசர்களில் மிகவும் பிரபலமான அரசன் இந்த குலோத்துங்கன். குலத்தை முன்னிலைப் படுத்தியவன் எனும் பொருளில் இந்த குலோத்துங்கன் எனும் பெயர் அமைந்திருக்கிறது. இந்த குலோத்துங்க மன்னன் பற்றிய விவரங்கள் வரலாற்றில் சற்று குழப்பமாகவே கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் பல ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படும் விவரங்களின்படி இந்த குலோத்துங்கன் பட்டத்துக்கு வந்தபோது சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதிராஜேந்திரன் வரலாற்றை எழுதும்போதுகூட அவன் மரணத்துக்குப் பின் நடந்த சில குழப்பங்கள் பற்றி கூறப்பட்டிருக்கிறது. அதிராஜேந்திரன் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே கொல்லப்பட்டிருக்கிறான். அதையடுத்து இந்த குலோத்துங்கன் பதவிக்கு வருகிறான். இடையில் நடந்தவை என்ன? இந்த குலோத்துங்கன் யார்? எங்கிருந்து வந்தான் போன்ற கேள்விகள் எழத்தானே செய்கிறது. இவனைப் பற்றிய கல்வெட்டுக்களில் இவனை 'பரிதிகுலம்' அதாவது சூரிய வம்சம் என்கிறது. தமிழிலக்கியங்களிலும் இவனைப் பற்றி குறிப்பிடுகையில் அனபாயன் என்றும் முதலாம் குலோத்துங்கன் என்றும் கூறுகிறார்கள்.

சில கல்வெட்டுக்கள் கூறும் தகவல்களின்படி இந்த குலோத்துங்கனுக்கு பட்டம் சூட்டப்பட்டது தில்லை சிதம்பரத்தில் என்பது தெரிகிறது. எது எப்படியோ விஜயாலய வம்சத்து அதிராஜேந்திரனது மரணத்துக்குப் பிறகு இந்த குலோத்துங்கன் சோழ மன்னனாக முடிசூட்டிக் கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கிறான். வரலாற்றின் இந்தப் பகுதி குறித்து சரியான உண்மைகளை வெளிக் கொண்டு வரும்போது இவனுடைய பூர்வோத்திரம் பற்றி பார்க்கலாம். யூகங்களும் ஹேஷ்யங்களும் இந்த கேள்விகளுக்கு விடை தராது.

குலோத்துங்கன் பதவிக்கு வந்த சூழ்நிலை குழப்பமான சூழ்நிலை. நாட்டில் கலவரம் நடந்து முடிந்திருந்தது. அவன் குழப்பத்தை அடக்கி தன் ராஜ்யாதிகாரத்தை உறுதி செய்து கொள்வதற்காக சில யுத்தங்களை செய்ய வேண்டியிருந்தது. உள்நாட்டில் அதிராஜேந்திரனின் மரணமும், அதையடுத்து நிகழ்ந்த கிளர்ச்சிகளும், அதே நேரத்தில் இலங்கையில் பிரச்சனை ஏற்பட்டு அதை அடக்க நேர்ந்த விதமும் அவனது முதல் சில ஆண்டுகள் போர்க்களமாகவே இருந்திருக்கிறது.

சோழர்கள் ராஜராஜ சோழன் காலம் முதல் கீழைச் சாளுக்கியர்களுடன் திருமண உறவு வைத்துக் கொண்டு ராஜராஜனின் மகள் குந்தவையை விமலாதித்தனுக்கும், பின்னர் விமலாதித்தன் மகனான ராஜராஜ நரேந்திரனுக்கு ராஜேந்திர சோழன் தன் மகளான அம்மங்காதேவியை மணமுடித்தும் உறவினை பலப் படுத்திக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் மேலைச் சாளுக்கியர்களுடன் சோழர்கள் போரில் ஈடுபட்டனர். வேங்கியின் தாயதிப் போட்டியில் தம்பிக்கு சோழர்களும், அண்ணனுக்கு சாளுக்கியர்களும் உதவி செய்து போரைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மேலைச் சாளுக்கியர்களுடன் சுமுக உறவு கொள்வதற்காக வீரராஜேந்திரன் தன் மகளை சாளுக்கியன் விக்கிரமாதித்தனுக்குத் திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர்களுடன் சோழர்களுக்கு நல்ல உறவு அமைந்தது. அதிராஜேந்திரன் இறந்தான் என்றதும் சாளுக்கிய விக்கிரமாதித்தன் படையெடுத்து வந்து காஞ்சியில் கலகத்தை அடக்கிவிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்து தங்கினான். அப்போது அங்கு வந்து சோழனாக முடிசூட்டிக் கொண்டிருந்த குலோத்துங்கனைப் போரிட்டு விரட்டிவிட அவன் தன் தலைநகரை திருவாரூருக்கு மாற்றிக் கொண்டான். அப்போதும் மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தனுக்கும் கீழைச் சாளுக்கிய வேங்கி இளவரசன் குலோத்துங்கனுக்கும் மோதல் இருந்து கொண்டுதான் இருந்தது.

சாளுக்கிய (4ஆம்) விக்கிரமாதித்தனுடன் போர்.

மேலைச் சாளுக்கியர்களும் சோழ மன்னர்களும் ராஜராஜன், ராஜேந்திரன் காலத்திலிருந்து போரிட்டுக் கொண்டு இருந்திருக்கின்றனர். சாளுக்கிய மன்னர்கள் தைலபன், சத்தியாஸ்ரயன், ஜெயசிம்மா, சோமேஸ்வரா என்று அடுத்தடுத்து எல்லா சாளுக்கியர்களும் சோழர்களிடம் போரில் தோற்றுப் போயிருக்கின்றனர். வீரராஜேந்திர சோழன் காலத்தில் இந்தச் சாளுக்கியர்கள் பலமுறை தோற்று ஓடியிருக்கின்றனர். இவற்றில் பெரும்பாலான போர்களில் தோற்றதுமில்லாமல் சாளுக்கியர்கள் போர்க்களத்திலிருந்து விரைந்து ஓடவும், சோழர்கள் விரட்டிக் கொண்டு ஓடவுமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சோழர்கள் சாளுக்கிய தலைநகரைப் பிடித்து கொள்வதும், அவர்களைக் கப்பம் கட்ட வைப்பதும் வழக்கமாக இருந்து கொண்டிருந்தது.

மேலைச் சாளுக்கியர்களான முதலாம் சோமேஸ்வரன் அவனுடைய பிள்ளைகள் ஆறாம் விக்கிரமாதித்தன் இரண்டாம் சோமேஸ்வரன் ஆகியோர் சாளுக்கியப் படைகளுக்குத் தலைமை தாங்கி குலோத்துங்கனுடன் போரிட்டனர். அந்தப் போரில் வென்ற குலோத்துங்கன் "விருதுராஜ பயங்கர" எனும் பட்டத்தைப் பெற்றான். இதன் பொருள் விருதுராஜன் எனப்படும் விக்கிரமாதித்தனை போரில் அச்சம்கொள்ளச் செய்தவன் என்பது. குலோத்துங்கன் காலத்தில் எல்லா போர்களிலுமே சோழர்கள் சாளுக்கியர்களை வென்றிருக்கிறார்கள். ஆனால் ஒரேயொரு முறை 1118இல் குலோத்துங்கன் உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில் வேங்கியை விக்கிரமாதித்தனிடம் தோற்றிருக்கிறான். உடல்நலம் சரியில்லாத குலோத்துங்கன் தன்னுடைய அபிமான மகனான விக்கிரம சோழனை அழைத்து சோழ சாம்ராஜ்யத்து மன்னனாக முடிசூட்டினான். தன்னுடைய முடிசூட்டு விழாவுக்காக விக்கிரம சோழன் தாய்நாடு திரும்பிய நேரத்தில் சாளுக்கியர்கள் வேங்கியைத் தாக்கிப் பிடித்துக் கொண்டனர். இப்படி இவர்கள் வேங்கியைத் தங்கள் வசம் நான்கு ஆண்டுகள் வைத்திருந்தனர். தன்னுடைய நிலைமையை வலுப்படுத்திக் கொண்ட விக்கிரம சோழன் 1125-26இல் அப்போது வயது முதிர்ந்திருந்த விக்கிரமாதித்தனைத் தோற்கடித்துவிட்டு மீண்டும் வேங்கியைப் பிடித்துக் கொண்டான்.

ஆக, குலோத்துங்கன் சோழநாட்டையும் வேங்கியையும் ஒருங்கிணைக்க செய்த முயற்சிகளுக்கு சாளுக்கியன் விக்கிரமாதித்தன் முட்டுக்கட்டையாக இருந்தான். குலோத்துங்கன் ராஜேந்திரன் வம்சத்தாரின் பெண்வழி வாரிசுகள் என்பதாலும், சோழநாட்டை இவர் அதிராஜேந்திரனுக்குப் பிறகு ஆளத் துவங்கியதாலும் இவ்விரு நாடுகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் குலோத்துங்கன். 1075இல் இதனை எதிர்த்து விக்கிரமாதித்தன் வேங்கியின் மீது படையெடுத்து வந்தான்.

சாளுக்கியப் படைகள் சோழ நாட்டினுள் புகுந்து அதன் படைகளை கோலாரில் எதிர்கொண்டது. அங்கு சாளுக்கியர்களை எதிர்த்துப் போர் புரிந்து சோழப் படைகள் அவர்களை துங்கபத்திரைக் கரைவரை ஓடஓட விரட்டியடித்து வெற்றி பெற்றது.

ஈழத்தில் யுத்தம்.

குலோத்துங்கன் விக்கிரமாதித்தனுடன் போர் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் விஜயபாகு என்பவன் இலங்கை முழுவதுக்கும் தன்னை அரசனாகப் பிரகடனப் படுத்திக் கொண்டான். 1070இல் இலங்கையில் இருந்த சோழர் படைகளை இவன் ரோஹண எனுமிடத்தில் தாக்கி வெற்றி பெற்றான். இந்த வெற்றியை யடுத்து தைரியம் கொண்டு விஜயபாகு அனுராதபுரத்துக்கு அருகிலிருந்த பகுதிகளையும் பறித்துக் கொண்டான். குலோத்துங்கன் ஒரு பெரும் படையை இலங்கைக்கு அனுப்பு அங்கு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த விஜயபாகுவை ஒரு கடுமையான போரில் தோற்கடித்தான்.

இந்த இலங்கைப் போரின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். சோழர்களின் எதிரிகளான சாளுக்கியர்களுக்கு உதவி செய்வதற்காக இலங்கையின் சிங்களப் படையொன்று ரகசியமாக சாளுக்கிய நாட்டுக்குச் சென்றது. அதை வழிமறித்த சோழப்படையினர் அவர்களைப் பிடித்து மொட்டையடித்து பெண்களுக்கான உடைகளை அணிவித்து அவமானப்படுத்தி ஊருக்குத் திரும்ப அனுப்பினர். சோழர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்றால் அந்த சிங்கள ராணுவம் தமிழ் வணிகர்களின் கப்பலை வழிமறித்து கொள்ளையடித்ததற்கு பதிலாக இப்படிச் செய்தனுப்பினர். சிங்களர்கள் தமிழ்ப் பிரதேசங்களிலும் புகுந்து கொள்ளையடித்து சோழர்களுக்குச் சவால் விடுத்தனர்.

பாண்டியர்களுடனான யுத்தம்.

சாளுக்கிய விக்கிரமாதித்தனை போரில் தோற்கடித்த பின் குலோத்துங்கன் பாண்டியர்களின் பக்கம் திரும்பினான். சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் காலம் காலமாய் மோதல் இருந்து கொண்டிருந்தது. சோழ நாட்டில் அதிராஜேந்திரன் கொலையுண்ட பின்னர் குலோத்துங்கன் வேங்கியிலிருந்து இங்கு வந்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டபோது சிறிது காலம் சோழநாடு குழப்பத்தில் இருந்தது. அந்த நேரம் பார்த்து பாண்டியர்கள் சோழர்களுக்கு எதிராகக் கலகம் செய்து தங்களது சுய உரிமையை மீட்டுக்கொள்ள போராடினர்.

இதனை குலோத்துங்கன் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. பாண்டிய நாட்டை இழப்பது தனக்கு நல்லதல்ல என்றுணர்ந்த குலோத்துங்கன் கலகம் செய்யும் பாண்டியர்களையும், அதனையடுத்த சேரநாட்டு (கேரள) பிரதேசங்கள் மீதும் படையெடுத்துச் சென்று அவர்களை அடக்கினான். இது குறித்த செய்தியொன்று சொல்வதாவது: குலோத்துங்க மன்னன் தன்னுடைய வலுவான படைகளைக் கொண்டு சேரர்களையும் பாண்டியர்களையும் போரில் வென்று கொற்கை துறைமுகத்தையும் எரித்தான். இந்த வெற்றியைக் குறிக்க சஹாயகிரி எனுமிடத்தில் ஒரு வெற்றித்தூண் எழுப்பினான்.

வேங்கி நாடு.

இப்படி குலோத்துங்கன் இலங்கையிலும், பாண்டிய சேர நாடுகளிலும் போரிட்டுக் கொண்டிருக்கும்போது யட்சகன்னரதேவன் எனும் திரிபுரா ராஜன் வேங்கியின் மீது படையெடுத்து வந்தான். இதை படையெடுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் கொள்ளையடிக்க வந்ததாகச் சொல்லலாம். விஜயதேவன் இந்த படையெடுப்பை முறியடித்தான். இப்படி வேங்கி நாடு சோழர்களின் நேரடி ஆதிக்கத்தில் விஜயதேவனால் நடத்தப்பட்டது. அவன் இறந்த பின்னர் குலோத்துங்கனின் மகன் ராஜராஜ மும்முடிச் சோழனே 1076இல் வேங்கியின் சோழப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான். ஆனால் அவன் ஓராண்டுக்கு மேல் அங்கு தாக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அவன் தம்பியான வீரசோழன் என்பான் ராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு அந்தப் பதவியில் 1084 வரை இருந்து வந்தான். இந்த வீரசோழனுக்குப் பிறகு அவனுடைய இன்னொரு தம்பி ராஜராஜ சோடகங்கா என்பவன் ஐந்தாண்டுகள் பதவி வகித்தான். அவனுக்குப் பின் விக்கிரம சோழனுக்கு இந்தப் பதவி கிடைத்தது.

வெளிநாட்டுத் தொடர்புகள்.

குலோத்துங்க சோழன் சீன நாட்டுக்கு ஒரு தூதரை 1077இல் அனுப்பி வைத்தான். சீனாவுடனான இந்த அரசியல் உறவு சோழர்களுக்கு ஆதாயம் அளித்தது. சீன உறவு ஏராளமான செல்வத்தை சோழர்களுக்குக் கிடைக்கச் செய்தது.

1063இல் குலோத்துங்கனின் இளமைப் பருவத்தில் இப்போதைய மலேயா தீபகர்ப்பத்தை ஸ்ரீவிஜய நாடு என்றிருந்த இடத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். சோழர் படைகள் ஸ்ரீவிஜயத்திலும் காம்போஜிலும் தங்க வைக்கப்பட்டிருந்தது. குலோத்துங்கன் காலத்தில் சோழர்கள் காம்போஜம் என்கிற இப்போதைய கம்போடியாவோடு தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். பர்மிய மன்னர்களும் சோழர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தனர்.

குலோத்துங்கனின் சோழ சாம்ராஜ்யம்.

குலோத்துங்கன் காலத்தில் சோழசாம்ராஜ்யம் கடல்கடந்தும், உள்நாட்டில் வடக்கே வேங்கி, கலிங்கம் உட்பட வெகு தூரமும் தெற்கே சேர, பாண்டிய நாடுகளை உள்ளடக்கியும் பெரிதாக விளங்கியது. சில வரலாற்று ஏடுகளின்படி குலோத்துங்கன் தன் இறுதிக் காலத்தில் கங்கவாடி நாட்டை ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனனிடம் இழந்தான் எனத் தெரிகிறது. கால வெள்ளத்தில் வேங்கி நாட்டின் பல பகுதிகளையும் சிறுகச் சிறுக மேலைச் சாளுக்கியர்களிடம் இழந்தான். ஹொய்சாளர்கள் சோழர்களை வெற்றி கொண்டதால் தைரியமடைந்த விக்கிரமாதித்தன் வேங்கியின் மீது 1118இல் படையெடுத்தான். தனக்கு வயதாகி விட்ட காரணத்தால் குலோத்துங்கன் தனது மகனான விக்கிரம சோழனிடம் பொறுப்பைக் கொடுத்தான். அப்படியிருந்தும் வேங்கி விக்கிரமாதித்தன் வசம் போய்விட்டது. அதன் ஆட்சியும் அவன் இறக்கும் வரை அதாவது 1126 வரை அவன் வசம்தான் இருந்தது. சோழர்களின் இந்தப் பின்னடைவு தற்காலிகமானதுதான். விக்கிரமாதித்தனுடைய இறப்புக்குப் பிறகு மீண்டும் வேங்கியை விக்கிரம சோழன் பிடித்துக் கொண்டான். 1124-25இல் சாளுக்கியர்களுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வேங்கியை மீட்டபின் அது மூன்றாம் குலோத்துங்கன் காலமாகிய 1176-1218 வரை சோழர் வசம் இருந்திருக்கிறது.

ஆக, குலோத்துங்கனின் சாம்ராஜ்யத்தின் எல்லை அவன் பதவியேற்ற காலத்தைவிட அவன் இறக்கும் சமயம் சற்று குறைந்துதான் போயிருந்தது.

குலோத்துங்கனைப் பற்றி....

மாமன்னன் ராஜேந்திர சோழனின் மகளான மதுராந்தகி எனும் பெண்ணைத்தான் குலோத்துங்கன் திருமணம் செய்து கொண்டான். இந்த தம்பதியருக்கு ஏழு பிள்ளைகள், அவர்களில் விக்கிரம சோழன் என்பாந்தான் குலோத்துங்கனுக்குப் பிறகு அரசுரிமை பெற்றான். அவன் குலோத்துங்கனின் மூத்த மகன் அல்ல, நான்காவது மகன் என்பது கவனிக்கத் தக்கது. மதுராந்தகி 1110இல் இறந்து போனாள். பின்னர் தியாகவல்லி என்பவரைத் திருமணம் செய்து கொள்கிறான். கலிங்கத்துப்பரணி எனும் காப்பியம் இந்த தியாகவல்லியை ஏழிசைவல்லபி என குறிப்பிடுகிறது. அவளை "ஏழுலகுடையாள்" என்றும் சொல்கிறார்கள். இந்த தியாகவல்லி மன்னருக்கு இணையாக அதிகாரம் கொண்டவராக இருந்திருக்கிறார்.

இவர்களைத் தவிர சோழகுலவல்லி என ஒரு ராணியும் இருந்ததாகத் தெரிகிறது. இலங்கை மன்னனாகிய விக்கிரமபாகுவின் மகள் ஒருத்தியையும் குலோத்துங்கன் 1088இல் திருமணம் செய்து கொண்டார். இவைகள் எல்லாம் இரு நாட்டுக்குமிடையே ஒற்றுமையை நிலவச் செய்வதற்காகச் செய்து கொண்ட திருமணங்களாக இருத்தல் வேண்டும். இந்தத் திருமணத்தின் மூலம் சிங்கள அரசன் பாண்டியர்களுடன் சேர்ந்து கொண்டு சோழர்களை எதிர்ப்பது நின்று போனது. இலங்கை சிங்கள அரசனுக்கும் அச்சமின்றி அதிக அதிகாரத்தோடு ஆட்சி புரியவும் முடிந்தது.

மத்திய இந்தியாவில் ஆண்ட மன்னர்களோடு குலோத்துங்கன் நல்ல உறவு வைத்திருந்தான். அவர்கள் அங்கு சூரியபகவானுக்கு எழுப்பியிருந்த கலைநயம் மிக்கப் பல கோயில்களைக் கண்ட குலோத்துங்கன் அதுபோல சோழ நாட்டிலும் பல ஆலயங்களை எழுப்பினான். சூரியனுக்கென்று தமிழகத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் இவன் காலத்தில் கட்டப்பட்டவை. 1113இல் மேலக்கடம்பூரில் தன்னுடைய பட்டமேற்ற 43ஆம் ஆண்டில் அரிய பல சிற்ப வேலைகள் அமைந்த கோயிலை அமைத்தான். இந்தக் கோயிலின் மூலத்தானம் ஒரு தேரைப் போல அமைப்பில் கட்டப்பட்டது. இவை தவிர சோழ நாட்டில் பற்பல ஆலயங்களை எழுப்பி தன் பெயர் நிலைக்கும்படி செய்துவைத்தான் முதலாம் குலோத்துங்கன். விஜயாலயன் சோழ வம்சத்தில் தந்தை வழியில் அல்லாமல் பெண் வழியில் வந்த முதலாம் அரசன் குலோத்துங்கன். அதிராஜேந்திரனின் மரணத்துக்குப் பிறகு பதவியேற்ற குலோத்துங்கன் 1121 வரை சோழநாட்டை ஆண்டான். இவனைத் தொடர்ந்து இவனது நான்காவது மகன் விக்கிரம சோழன் பதவிக்கு வந்தான்.













Sunday, July 21, 2013

உத்தவ கீதை

                     பரத நாட்டியத்தில் உத்தவ கீதை 

         (அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்திலிருந்து வந்திருக்கும் திருமதி பாலா தேவி சந்திரசேகர்        
                                                     அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி.)

தஞ்சை பாரம்பரியக் கலைகள் மற்றும் கலாச்சார அகாதமியின் சார்பில் திருமதி பாலாதேவி சந்திரசேகர் தஞ்சை நவநீதகிருஷ்ணன் ஆலயத்தின் பகவத் கீதா மண்டபத்தில் கடந்த 19-7-2013 வெள்ளிக்கிழமை மாலை "உத்தவ கீதை" எனும் தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார். 

உத்தவ கீதை என்றால் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவருடைய பக்தரும், ஒரு வகையில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சகோதருமான உத்தவருக்கு போதித்த "கீதை" இந்த "உத்தவ கீதை". உத்தவ கீதை உபதேசிக்கப்பட்ட காலம் இந்த பூவுலகில் ஸ்ரீ கிருஷ்ணனின் அவதார நோக்கம் முடிந்து வைகுந்தம் திரும்புகின்ற காலகட்டம். ரிஷிகளின் சாபத்தின் பலனாக பூவுலகில் யாதவ இனம் அழிகின்ற நிலையை எட்டுகிறது. அப்போதுதான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதீத பக்தி கொண்டவரான உத்தவர் வரப்போகும் ஆபத்தை உணர்ந்து சில உபதேசங்களைச் செய்யுமாறு வேண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அருளிச் செய்த உபதேசங்களே இந்த உத்தவ கீதையாகும்.

இந்த கீதை ஸ்ரீமத் பாகவதத்தில் 11ஆவது ஸ்காந்தமாக இருக்கிறது. இதை ஹம்ச கீதா என்றும் சொல்வார்கள். பகவத் கீதையை "Song of the God" என்பார்கள். வேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியது. 

இந்த உத்தவ கீதையில் ஆன்மீக சிந்தனைகள், மதக்கோட்பாடுகள், பல தரப்பினருக்கும் உரிய நடத்தை விதிமுறைகள், வாழ்வின் நோக்கம், பக்தி ஈடுபாட்டின் அவசியம், உண்மைகளை உணரும் வழிமுறைகள், நமக்கு ஏற்படும் தீமைகளுக்கான காரணங்கள் இவை பற்றியெல்லாம் சிந்திக்கச் செய்யும் விவாதங்கள் இதில் உண்டு. பிறப்பால் க்ஷத்திரியனான ஸ்ரீ கிருஷ்ணன் யாதவ குலத்தில் வளர்ந்து யாதவனாக உணரப்பட்டு அந்த இனம் அழியும் தருணத்தில் சொல்லப்பட்ட தத்துவ விசாரங்களைக் கொண்டது இது.

                                  நடன நிகழ்ச்சி பற்றிய விவரங்கள்.
முதல் காட்சி. ஐந்து குருமார்கள்.
யதுகுலம் கரைகடந்து கட்டுக்கடங்காத பலம் கொண்டு வளர்ந்துவிட்டது. தன் அவதார நோக்கம் முடிந்துவிட்ட நிலையில் ஸ்ரீ கிருஷ்ணன் பூபாரத்தைக் குறைக்க முடிவு செய்துவிட்டான். தன் மாய விளையாட்டை நிறுத்திக் கொண்டு ராக்ஷஸ பலம் பெற்றுவிட்ட யதுகுலத்தை அழித்திட முடிவு செய்து விட்டான்.

துவாரகைக்கு அருகில் ஒரு மாபெரும் யாகமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு (கெளசிகர், பிருகு, வாமதேவர் முதலியோர்) ரிஷிகள் அழைக்கப்பட்டனர். புனிதமான ரிஷிகள் அந்த யாகத்துக்கு வரும்பொழுதில் யாதவ இளைஞர்கள் சம்பா என்பவனை (இவன் கிருஷ்ணனுடைய ஜம்பாவதி எனும் ஒரு ராணியின் மகன்) நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணைப் போல வயிற்றைப் பெரிதாகக் காட்டிக் கொண்டு அந்த ரிஷிகளை நெருங்கி, இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும் ஆணா? பெண்ணா? என்று வினவினர். உண்மையை உணர்ந்த ரிஷிகள் கோபம் கொண்டு இவள் ஒரு உலக்கையைப் பெற்றெடுப்பாள், அது உங்கள் யாதவ இனத்தை பூண்டோடு அழிக்கும் என்று யாதவர்களைச் சபித்தனர். 

அந்த நேரம் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த பூவுலகத்தை நீங்கிப் போவதை அறிந்த உத்தவர் கிருஷ்ணரிடம் தன்னையும் அழைத்துப் போக வேண்டினார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னர், "உத்தவா, நீ என்னை எப்போதும் மனத்தில் நிறுத்தி இவ்வுலகத்தையும் என்னையும் ஒன்றாக நினை. உனக்கு எந்த தீங்கும் நேராது" என்றார். பிறகு சில அரிய உபதேசங்களை பகவான் உத்தவருக்குச் அருளிச்செய்கிறார். ஒருமுறை யது மன்னன் அவதூதரிடம் (Avaduta is a person roam free like a child upon the face of the Earth - a mystic or saint) தங்களுக்கு எப்படி இத்தனை ஞானம் கிடைக்கப் பெற்றது என வினவினான். அதற்கு அவர் சொன்னார், "ஓ ராஜாவே! எல்லா ஞானங்களையும் அறிவையும் ஒரு ஞானியிடமிருந்து மட்டும் பெற்றுவிட முடியாது. நான் இருபத்தி நான்கு ஞானியரிடம் இந்த ஞானத்தைப் பெற்றேன். அந்த பரிபூரண ஞானத்தைப் பெற்றதால் நான் இவ்வுலகில் பரிபூரணனை மட்டும் மனதில் எண்ணித் திரிகிறேன்" என்றார்.

அவர் சொன்ன அந்த இருபத்திநான்கு குருமார்களில் ஐந்து குருமார்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஞானம் எவை என்பதுதான் இந்த நாட்டிய நிகழ்ச்சியின் மையக் கரு. அந்த ஐந்து ஞானியர் எவர்? ஒரு சிலந்தி, ஒரு புறா, ஒரு தாசி, இளம் கன்னிப்பெண், ஒரு குளவியும் அதன் கூட்டுப் புழுவும்.

1. சிலந்தி: சிலந்திப் பூச்சி தன் உடலினுள்ளிருந்து வாய் வழியாக பின்னி பின்னர் அதனை விழுங்கிவிடுவதைப் போல பரம்பொருளான கடவுள் இப்பூவுலகை உருவாக்கி, காத்து பின்னர் அதனை அழித்தும் விடுகிறான். பரம்பொருள் ஒன்றே நிஜம். அவனே ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறான்.

2. புறாவின் குடும்பம்: ஓரிடத்தில் ஆணும் பெண்ணுமாய் இரு புறாக்கள் வசித்தன. தங்கள் குஞ்சுகளை அவை அன்போடு பாதுகாத்து மகிழ்ச்சியடைந்தன. ஒருநாள் அவ்விரு புறாக்களும் இறைதேட சென்றிருந்த சமயம் ஒரு வேடன் அந்த குஞ்சுகளை வலைவிரித்துப் பிடித்துவிட்டான். திரும்பிவந்த பெரிய புறாக்கள் தங்கள் குஞ்சுகள் வலையில் சிக்கியதைக் கண்டு தாங்களும் அதனுள் வீழ்ந்துவிட்டன. பந்த பாசத்தின் பலனாக ஏற்பட்ட அழிவை இந்தப் பறவைகள் உணர்த்துகின்றன. 

3. பிங்களா என்றொரு தாசி. அவளுக்கு ஒரு பேராசை. பெரும் செல்வந்தன் எவனாவது வந்து தனக்குப் பெரும் பொருளையும் செல்வத்தையும் தந்துவிடுவான் என்று கதவைத் திறந்து வைத்துக் கொண்டு இரவு முழுவதும் காத்திருந்தாள். எவனும் வருவதாகத் தெரியவில்லை. பொழுது விடியும் சமயம் அவளுக்கு ஞானம் தோன்றியது. கேவலம் இந்த அழியும் உடலைக் கொண்டு அழியும் செல்வத்துக்கு ஆசைப்படுவதைக் காட்டிலும் அழியாத ஞானவஸ்துவான பரம்பொருளை எண்ணி தவம் செய்வதே சிறப்பு என்பதை உணர்ந்தாள்.

4. வளை அணிந்த ஒரு அழகிய இளம் பெண். அவள் கையில் வளையல்கள் இருந்தன. அந்த வளையல்கள் அவள் அசையும்பொழுதெல்லாம் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. அவற்றைக் கழற்றிவிட்டு ஒரேயொரு வளையை மட்டும் அணிந்தாள். அப்போது ஓசையில்லை, தொல்லையில்லை. ஓசையின் காரணமாய் மனம் ஒருநிலைப் படாமல் இருப்பதினும் அமைதியாய் மனத்தை ஒருநிலைப் படுத்தி இறைவனை தியானித்தல் நலம்.

5. குளவியும் கூட்டுப் புழுவும். ஒரு குளவி தன்னுடைய புழுவை கூட்டில் அடைத்துவிட்டு அதை எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொண்டும் இருந்தது. தன் கூட்டையோ புழு உடம்பையோ தூக்கி எறிந்துவிடாமல் அது குளவியாக சிறிது சிறிதாக மாறியது. ஒருவன் தன் மனத்தை ஒருநிலைப் படுத்தி ஈடுபட்டு எதுவாக ஆக விரும்புகிறானோ அதுவாக ஆகிவிட முடியும் என்பதை விளக்குகிறது.
இந்த கருத்துக்கள் முதல் பகுதி நாட்டியத்தில் பாடல் வரிகளோடும், ஸ்லோகங்களோடும் இடைப்படும் ஸ்வரகதிகளோடும், ஜதிகளோடும் வழங்கப்பட்டது.

இரண்டாம் பகுதி:
முன்னொரு காலத்தில் ஹிரண்யகர்பரின் மக்களான சனகர்கள் தந்தையிடம் இறைவனைச் சென்றடையும் யோக மார்க்கம் எது என்று கேட்டார்கள். இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்து கொள்வதற்காக பிரம்மா கிருஷ்ணனை நோக்கித் தவம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ண பகவான் தன்னை ஒரு அன்னப்பறவையாக ஆக்கிக் கொண்டு சொன்னார். நான் ஒரு அன்னப் பறவை. அழியாத அழிக்க முடியாத ஞானத்தின் வடிவம். இதற்கு வேறு ஸ்தூல வடிவம் இல்லை. எனக்கு குணங்கள் இல்லை, அறிவினால் என்னை அளக்க முடியாது, பேச்சு மனம் சிந்தனை இவற்றுக்கு அப்பாற்பட்டவன். ஜீவன்முக்தராக வாழ்தல் வேண்டும். உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே முக்திப் பேற்றைப் பெறுதல் வேண்டும். இப்படி ஸ்ரீ கிருஷ்ணர் முக்தி பற்றி குறிப்பிட்டு, லோகாயதமான வாழ்க்கையும் பொருள்களின் மீது ஆசையும் விட்டு விடுதலை பெறுதல் வேண்டும் என்பதை விளக்கினார். 
மூன்றாம் பகுதி
ஸ்ரீ கிருஷ்ணரும் உத்தவரும் அன்போடு உரையாடிக் கொண்டிருந்த போது தன்னுடைய லீலைகளை உத்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்த கிருஷ்ணன் அவரை கோகுலத்துக்குப் போய் தன்னுடைய பிரிவால் வாடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களையும், கோபியர்களையும் பார்த்து வரச் சொன்னார். உத்தவரும் அப்படியே போய் பார்க்கையில் அங்கு தயிர் கடையும் கோபியர் கிருஷ்ணன் நினைவில் மூழ்கிக் கிடப்பதைக் காண்கிறார். அவன் நினைவு வருத்த கோபியர் வருந்துகின்றனர். அவர்களிடம் போய் உத்தவர் சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணன் உங்களை விட்டுப் பிரியவில்லை. நீங்கள் அவனையே நினைத்துக் கொண்டிருங்கள், அவன் உங்களோடு இருப்பான் என்றார். கோபியர்கள் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணன் நினைவில் திளைக்கும்போது பக்தி யோகம் என்பது என்ன என்பதை உத்தவர் உணர்கிறார். 

பரம்பொருளை அடைவது என்பது ஒரு குரு அல்லது சத்சங்கம் இல்லாமல் இயலாது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார், "ஓ என் குழந்தாய்! கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு பக்தி மார்க்கமும், இறை சிந்தனையுமே சிறந்தது. உத்தவா! பிரஹலாதனை எண்ணிப்பார்! ஹனுமான், கோபியர்கள், ராதா இவர்களெல்லாம் தங்கள் மனங்களை இறைவனின் தாமரைப் பாதங்களில் சதா ஈடுபடுத்திக் கொண்டவர்கள் அல்லவா? அவர்களைப் போல பக்தி செய்ய கற்றுக்கொள் என்றார். இதைக் கேட்ட உத்தவர் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதமலரை மனத்தில் ஏந்தி, கிருஷ்ணா என்னை எப்போது அனுக்கிரகிப்பாய் என்றார். கிருஷ்ணர் உத்தவரை பத்ரிகாஸ்ரமம் செல்லும்படி சொல்கிறார். 
உத்தவர் மன அமைதியடைந்து ஸ்ரீ கிருஷ்ணரின் நரநாராயண பீடமான பத்ரிகாஸ்ரமத்தை அடைகிறார். கிருஷ்ணனைப் பிரியும் வருத்தம் நீங்க அவன் பாதுகைகளைத் தன் தலைமீது தாங்கி எடுத்துச் செல்கிறார். ஸ்ரீ கிருஷ்ணா, முகுந்தா, முராரி, யதுகுல திலகா, பரிபூரணனே என்று பக்தி பூர்வமாகப் பாடிக் கொண்டே செல்கிறார். இந்தக் கருத்துக்களை சிறப்பாக அமைக்கப்பட்ட தில்லானாவில் ஆடிக்காட்டி பார்ப்போரை மனம் மகிழ வைத்தார் திருமதி பாலாதேவி சந்திரசேகர்.

இந்த நடன நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி திரு சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நடனக் கலைஞர் திருமதி பாலாதேவி சந்திரசேகரனுக்கு "நாட்டிய கலா பாரதி" எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. தமிழ்ப்பல்கலைக் கழக நாடகத்துறை பேரா. திரு ராமானுஜம், பாபநாசம் தணிக்கையாளர் திரு ஹரிஹரன், மெலட்டூர் பாகவத மேளா திரு மாலி எனும் மகாலிங்கம், திருவையாறு நாட்டியாஞ்சலிக் குழுத் தலைவர் வி.கோபாலன், தஞ்சை பிரஹன் நாட்டியாஞ்சலி செயலர் திரு முத்துக்குமார், நடனக் கலைஞர் ஆசிரியர் திருமதி அருணா சுப்பிரமணியன், நடனக் கலைஞர் திரு சுப்பிரமனியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாடு கலைமாமணி திரு B.ஹேரம்பநாதன், தஞ்சை ஹெரிடேஜ் ஆர்ட்ஸ் அண்ட் கல்சுரல் 
அகாதமி, தஞ்சை.








Wednesday, July 17, 2013

அதிராஜேந்திர சோழன் (1070)

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


வீரராஜேந்திரன் கால வரலாற்றைச் சென்ற பதிவில் பார்த்தோமல்லவா? இனி அவனுடைய புதல்வன் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்ததையும், அதே ஆண்டு மாண்டுபோனதையும் இந்தப் பதிவில் பார்ப்போம். இவன் தந்தை வீரராஜேந்திரன் காலமானதும் இவன் பட்டத்துக்கு வந்தான். அதற்கு முன்பே இவனுக்கு ஆட்சிப் பொறுப்பில் அனுபவம் இருந்தது, காரணம் வீரராஜேந்திரன் காலத்திலேயே அவன் தன் மக்களுக்கு தொண்டைமண்டலத்தையும், பாண்டிய மண்டலத்தையும் கவனித்துக் கொள்ள தன் மகன்களையே நியமித்திருந்தான் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த அதிராஜேந்திரனுக்கு "பரகேசரி" எனும் பட்டப்பெயரும் உண்டு. ஒவ்வொரு சோழனுக்கும் இதுபோன்ற பட்டப்பெயர்கள் இருப்பதை கவனித்திருக்கலாம்.

இவனும் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டுதான் ஆட்சிபுரிந்தான். இவன் திருமணமானவனா இல்லையா பிள்ளை குட்டிகள் இருந்தனரா இல்லையா என்பது ஒன்றும் தெரியவில்லை. இவன் தந்தை காலமான பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இவன் ஒருசில மாதங்களே ஆட்சி புரிந்தான். இவன் காலத்தில் நாட்டில் நடந்த குழப்பத்தினாலோ என்னவோ கிளர்ச்சியும் கலகமும் ஏற்பட்டது. இந்தப் பூசலில் இளம் மன்னனான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டான் என்கிறது வரலாறு. இவனை யடுத்து சோழர்களுடன் திருமண உறவு கொண்டிருந்த வேங்கிநாட்டைச் சேர்ந்த சோழ இளவரசன் ராஜிகா எனும் பெயருடையவன் முதலாம் குலோத்துங்கன் எனும் பெயருடன் சோழ மண்டல சக்கரவர்த்தியாக அமர்த்தப்பட்டான்.

சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கிய மன்னர்களான வேங்கி நாட்டவர்க்கும் நீண்ட நெடுங்காலமாகத் திருமண பந்தம் இருந்து வந்தது. ராஜராஜனின் மகள் குந்தவையை வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்ததையும், அவர்களது மகனான ராஜராஜ நரேந்திரன் என்பானுக்கு முதலாம் ராஜேந்திரன் தன் மகளான அம்மங்காதேவியை மணம் முடித்துக் கொடுத்ததும், இப்படி அடுத்தடுத்து சோழர்களும் வேங்கி நாட்டாரும் திருமண பந்தம் கொண்டிருந்தனர். இதனால் வேங்கி நாட்டையாண்ட கீழைச் சாளுக்கியர்கள் பாதி சோழரும் பாதி சாளுக்கியருமாக இருந்திருக்கின்றனர். அந்த வழியில் வந்தவந்தான் முதலாம் குலோத்துங்கன்.

சாளுக்கிய வம்சம் சோழர்களுக்குப் பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கின்றனர். மேலைச் சாளுக்கியர்கள் சத்யாஸ்ரயன் காலத்திலிருந்து கீழைச் சாளுக்கியர்களோடும் சோழர்களோடும் போரிட்டு வந்திருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியர்களான வேங்கி நாட்டாரும் தங்களுக்குள் தாயாதி சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டும், அதில் ஒரு பக்கம் மேலைச் சாளுக்கியரிடம் உதவி பெறுவதும், மற்ற பகுதியினருக்கு சோழர்கள் உதவி செய்வதும் தொடர் கதையாக இருந்திருக்கிறது.

அதிராஜேந்திரனின் தந்தையான வீரராஜேந்திரன் வேங்கி விஷயத்தில் தலையிட்டு சோழர்களின் மாப்பிள்ளையான ராஜராஜ நரேந்திரன் சார்பில் போரிட்டிருக்கிறான். குந்தவையின் மகனான இந்த ராஜராஜ நரேந்திரன் 1061இல் இறந்து போகிறான். அதனால் அவனுக்குப் பின் வேங்கி நாட்டை 2ஆம் சக்திவர்மன் என்பவன் கிளர்ச்சி செய்து வேங்கியின் ஆட்சி சிம்மாசனத்தை அபகரித்துக் கொண்டான். இப்படி புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தது சோழர்களுக்குப் பிடிக்கவில்லை. சோழ ரத்தம் ஓடும் வேங்கி ராஜவம்சத்தானை பதவியில் அமரவைக்க அவர்கள் பெரிதும் முயன்றார்கள். அந்தப் போராட்டத்தில் புரட்சியால் ஆட்சியைப் பிடித்த 2ஆம் சக்திவர்மன் என்பவன் கொல்லப்பட்டான். அப்படி அவன் இறந்ததும் அவனுடைய தந்தையான விஜயாதித்தன் என்பான் பதவியில் உட்கார்ந்து கொண்டு சோழர்களை எதிர்த்துப் போரிட்டான். எனினும் சோழர்களின் வல்லமையின் முன்னால் தனித்து நிற்கமுடியாது என்பதை உணர்ந்தோ என்னவோ அந்த விஜயாதித்தன் சோழர்களுக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் அரசனாக வேங்கியில் இருக்க ஒப்புக் கொண்டான்.

இப்படி சாளுக்கியர்களுள் இரு பக்கத்திலும் முழுமையாக சோழர்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த காலத்தில் அதிராஜேந்திரனின் தந்தையும் இவனுக்கு முன்பு அரசனாக இருந்த சோழனுமான வீரராஜேந்திரன் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். பெரும்பாலும் அந்தக் கால அரசர்கள் ராஜதந்திரத்துடன் எதிரி நாட்டிலும் திருமண உறவு வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பல மன்னர்களுக்கு பலதாரம் இருப்பதன் காரணம் இதுதானோ என்னவோ?

வரலாறு இவ்வாறு போய்க்கொண்டிருந்த நிலைமையில் குந்தவையின் பேரனும், ராஜராஜ நரேந்திரனின் மகனுமான ராஜேந்திர சாளுக்கியன் (பின்னாளில் முதலாம் குலோத்துங்கன்) வேங்கி தனக்குத்தான் உரிமை ஆனால் விஜயாதித்தன் எப்படியோ ஆட்சியைப் பிடித்து வைத்துக் கொண்டுவிட்டான் என்பதை உணர்ந்து வேங்கியைத் தன்னதாக ஆக்கிக் கொள்ள முனைந்தான். என்ன இருந்தாலும் விஜயாதித்தன் சோழர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தாலும், சோழ பரம்பரை வாரிசு அல்லவா ராஜேந்திர சாளுக்கியன் எனும் முதலாம் குலோத்துங்கன்? சோழர்கள் அவனைத்தான் ஆதரித்தார்கள். விஜயாதித்தான் வேறு யாரும் இல்லை. குலோத்துங்கனின் பெரியப்பாதான், அதாவது காலம் சென்ற ராஜராஜ நரேந்திரனின் அண்ணன். இதெல்லாம் தாயாதிச் சண்டைகள்.

விஜயாதித்தனுக்கும் வேங்கியின் மீது உரிமை இருக்கிறது அல்லவா ஆகையால் ராஜேந்திர சாளுக்கியன் (முதலாம் குலோத்துங்கன்) வேங்கிக்கு வடக்கே உள்ள இப்போதைய சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தர் எனும் மலைப்பகுதியில் ஒரு ராஜாங்கத்தை அமைத்துக் கொண்டான். வீரராஜேந்திரன் காலமான பிறகு அதிராஜேந்திரனின் ஒருசில மாத ஆட்சிக்குப் பிறகு அவன் இறந்ததும் ராஜேந்திர சாளுக்கியன் சோழ அரசனாக முதலாம் குலோத்துங்கன் எனும் பெயரில் பதவியில் அமர்ந்தான்.

வீரராஜேந்திரனின் மகன் அதிராஜேந்திரனின் மரணம்.

சாளுக்கியர்கால பில்ஹணன் எனும் வரலாற்றாசிரியர் இந்த அதிராஜேந்திரனின் மரணம் பற்றிய குறிப்புகளைத் தருகிறார். வீரராஜேந்திரன் தன்னுடைய மகளை சாளுக்கியன் 4ஆம் விக்கிரமாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்த சில காலத்திற்குள் இறந்து விடுகிறான். தன் மாமனார் இறந்து போன செய்தியும் மைத்துனன் அதிராஜேந்திரன் பதவிக்கு வந்தபின் உள்நாட்டுப் போர் மூண்டுவிட்ட செய்தியையும் கேட்ட 4ஆம் விக்கிரமாதித்தன் தன் படைகளுடன் கலகத்தை அடக்க காஞ்சிபுரம் வருகிறான். அங்கிருந்து சாளுக்கிய விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வருகிறான். அங்கு கலகக்காரர்களை அடக்கிவிட்டு மைத்துனன் அதிராஜேந்திரனை அரியணையில் ஏற்றுகிறான். நாட்டில் அமைதி ஏற்பட்டு உரியவன் பட்டத்துக்கும் வந்தபின் சுமார் ஒரு மாதகாலம் விக்கிரமாதித்தன் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்துவிட்டு இனி எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்து தன் நாடு திரும்புகிறான்.

அவன் சாளுக்கிய நாட்டுக்குத் திரும்பிய ஒரு சில நாட்களுக்குள் விக்கிரமாதித்தனுக்குத் தன் மைத்துனனும் சோழ அரசனுமான அதிராஜேந்திரன் கொல்லப்பட்டுவிட்டான் என்கிற செய்தி கிடைக்கிறது. அந்த செய்தி மேலும் சொல்கிறது ராஜேந்திர சாளுக்கியன் தன் படைகளுடன் வந்து சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டுவிட்டான் என்றும் அவனது இப்போதைய பெயர் முதலாம் குலோத்துங்கன் என்றும் கேள்விப்பட்டான். இதனால் ஆத்திரமடைந்த 4ஆம் விக்கிரமாதித்தன் குலோத்துங்கனை எதிர்க்கத் தன் படைகளுடன் புறப்பட்டான். அவனுக்கு உதவியாக மேலைச் சாளுக்கிய அரசன் 2ஆம் சோமேஸ்வரனும் சேர்ந்து கொண்டான்.

வீரராஜேந்திரனுக்குப் பிறகு அவன் மகன் அதிராஜேந்திரன் வரையிலும் கடைச் சோழர்கள் வம்சம் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது, அதிராஜேந்திரனின் மறைவோடு அந்தப் பரம்பரை முடிவுக்கு வந்துவிட்டது குலோத்துங்கன் சோழர்களின் பெண்வழியில் வரும் வேங்கி வம்சத்துக்குப் போய்விட்டது.

குலோத்துங்கனின் பங்களிப்பு.

அதிராஜேந்திரனின் மரணத்துக்கு குலோத்துங்கன் காரணமா எனும் இந்த மில்லியன் டாலர் கேள்வி இன்னமும் தொக்கி நின்று கொண்டிருக்கிறது. அதிராஜேந்திரன் காலத்தில் காஞ்சிபுரத்துக் கலவரத்துக்கு யார் காரணம்? அந்த கலவரத்தை அடக்கத்தான் மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் காஞ்சிக்கு வந்து பிறகு கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அமைதி நிலைநாட்டிவிட்டதாக நினைத்து ஊர் திரும்பினான். அப்படி விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்துக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் வந்து அதிராஜேந்திரனுக்கு எதிரானவர்களை அடக்கினானே, அந்த எதிரிகள் யார்? அது குறித்து அங்கு கலவரம் அல்லது கலகம் ஏற்பட்டது? போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

அதிராஜேந்திரன் காலத்திய நிகழ்ச்சிகளை விவரிக்கக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் குலோத்துங்கன் சோழ மன்னனாக முடிசூட்டிக்கொண்ட பிறகு விக்கிரமாதித்தன் தன் பெரும் படையோடு வந்து குலோத்துங்கனைத் தோற்கடித்து சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிட்ட செய்தி கிடைக்கிறது. இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு கவனிக்கும்போது வேங்கி நாட்டானான குலோத்துங்கன் சோழ அரசுக்கு ஆசைப்பட்டு இங்கே வந்து வீரராஜேந்திரனின் மகனான அதிராஜேந்திரனுக்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டுமென நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால் அவன் காலத்தில் தோன்றிய கலவரம் முன்பு சொன்னது போல உள்நாட்டு கலவரமாக இருக்க வாய்ப்பில்லை, வேங்கி நாட்டுப் படையெடுப்பே.

சோழ தேசத்தில் நடந்த அந்த கலவரத்துக்கு மதச்சாயமும் பூசப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜர் சோழ மன்னரால் துரத்தப்படுகிறார். இந்த காரணத்தினாலும் சோழ சாம்ராஜ்யத்தில் கலவரம் ஏற்பட்டிருக்கலாமோ எனும் எண்ணமும் சொல்லப்படுகிறது. ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இவை எதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் கூற்றுப்படி ராமானுஜர் வாழ்ந்தது 2ஆம் குலோத்துங்கன் காலத்தில். அவன் தான் ராமானுஜரை சோழநாட்டிலிருந்து விரட்டியனுப்புகிறார், அவரும் கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டையில் சென்று தஞ்சம் அடைகிறார். ஆகையால் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளோடு அதிராஜேந்திரனின் மரணத்தை முடிச்சுப் போட முடியாது. இந்த காலகட்டத்தில் இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை சோழ மன்னர்கள் அனைவருமே தீவிர சைவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையே.

வீரராஜேந்திரனுக்குப் பிறகு சில மாதங்கள் அரசனாக இருந்த அதிராஜேந்திரன் மரணமடைந்த பின் முதலாம் குலோத்துங்கன் வேங்கிநாட்டு சோழன் பதவிக்கு வருகிறான் என்கிறது வரலாறு.














வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063 முதல் 1070 வரை)


கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.

1. விஜயாலய சோழன்                                 (கி.பி. 848 முதல் 871 வரை)
2. முதலாம் ஆதித்த சோழன்                     (கி.பி. 871 முதல் 907 வரை)
3. முதலாம் பராந்தக சோழன்                   (கி.பி. 907 முதல் 950 வரை)
4. கண்டராதித்த சோழன்                            (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன்                                     (கி.பி. 956 முதல் 957 வரை)
6. சுந்தர சோழன்                                             (கி.பி. 957 முதல் 970 வரை)
7. உத்தம சோழன்                                          (கி.பி. 970 முதல் 985 வரை)
8. மாமன்னன் ராஜராஜன்                          (கி.பி. 985 முதல் 1014 வரை)
9. முதலாம் ராஜேந்திர சோழன்             (கி.பி. 1012 முதல் 1044 வரை)
10. ராஜாதிராஜ சோழன்                             (கி.பி. 1018 முதல் 1054 வரை)
11. இரண்டாம் ராஜேந்திர சோழன்        (கி.பி. 1051 முதல் 1063 வரை)
12. வீரராஜேந்திர சோழன்                         (கி.பி. 1063 முதல் 1070 வரை)
13. அதிராஜேந்திர சோழன்                       (கி.பி. 1067 முதல் 1070 வரை)

பிற்கால சோழ மன்னர்கள்
14. முதலாம் குலோத்துங்க சோழன்   (கி.பி. 1070 முதல் 1120 வரை)
15. விக்கிரம சோழன்                                  (கி.பி. 1118 முதல் 1135 வரை)
16. 2ஆம் குலோத்துங்க சோழன்           (கி.பி. 1133 முதல் 1150 வரை)
17. 2ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1146 முதல் 1173 வரை)
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன்               (கி.பி. 1166 முதல் 1178 வரை)
19. 3ஆம் குலோத்துங்க சோழன்          (கி.பி. 1178 முதல் 1218 வரை)
20. 3ஆம் ராஜராஜ சோழன்                      (கி.பி. 1216 முதல் 1256 வரை)
21. 3ஆம் ராஜேந்திர சோழன்                  (கி.பி. 1246 முதல் 1279 வரை)


2ஆம் ராஜேந்திர சோழனைப் பற்றியும் அவனுடைய வெற்றிகளைப் பற்றியும் சென்ற பதிவில் பார்த்தோம். இனி அவனுடைய தம்பியும், அவனுக்கு அடுத்ததாக அரியணை ஏறியவனுமான இந்த வீரராஜேந்திர சோழனைப் பற்றி சிறிது பார்ப்போம். இவனுக்கு "ராஜகேசரி" என்ற பட்டப்பெயர் உண்டு. கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் இவன். இவனது ராணியார் பெயர் அருள்மொழிமங்கை என்பதாகும். முதலாம் ராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன் இவன். மூத்தவன் பெயர் ராஜாதிராஜன், இரண்டாமவன் 2ஆம் ராஜேந்திரன், இந்த வீரராஜேந்திரன் மூன்றாவது மகன். இவனுடைய பிள்ளைகள் மதுராந்தகன், கங்கைகொண்ட சோழன், மகள் ராஜசுந்தரி. இவன் இறந்த ஆண்டு 1070.

வரலாற்றில் அதிகம் இடம்பிடிக்காத ஒரு மன்னன் இந்த வீரராஜேந்திரன். காரணம் இவன் வாழ்க்கை முழுவதும் இவனுடைய அண்ணன்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன் ஆகிய முந்தைய சோழ அரசர்களுக்கு உதவுவதிலேயே போய்விட்டதால் அதிகமாக இவன் சாதித்தவை எவை என்று கூறமுடியாத நிலை உள்ளது. இருந்தபோதிலும் தந்தை ராஜேந்திர சோழனுக்கோ, தன்னுடைய மற்ற சகோதரர்களுக்கோ எந்தவிதத்திலும் குறைவில்லாத வீரனாகவே இந்த வீரராஜேந்திர சோழன் இருந்திருக்கிறான்.

சோழமன்னர்கள் தங்களது மூத்த குமாரன் தான் பதவிக்கு வரவேண்டுமென்ற கண்டிப்பான வழக்கத்தைக் கடைப்பிடிக்காமல், பிள்ளைகளில் வீரமும், விவேகமும், நிர்வாகத் திறமையும் அனுபவமும் உள்ளவனையே தனக்குப் பின் மன்னனாக அங்கீகரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களில் யாரும் யாருக்கும் சோடை போகவில்லையாதலின் ராஜேந்திரனின் மூத்த மகன் ராஜாதிராஜன் பதவிக்கு வந்தான். அவனையடுத்து, அவனது அடுத்த தம்பி, அவனுக்குப் பின் அவன் தம்பி என்று வரிசைப்படி ஆட்சிக்கு வந்தனர்.

வீரராஜேந்திரன் தன் தந்தையார் காலத்திலும் சரி, தன்னுடைய அண்ணன்மார்கள் காலத்திலும் சரி பல்வேறு பணிகளில் இருந்து தன்னுடைய திறமையை வெளிக்கொணர்ந்திருக்கிறான். தொண்டைநாட்டிலும், பாண்டிய நாட்டிலும், வேங்கி நாட்டிலும் இவன் ராஜப்பிரதிநிதியாக இருந்து சோழர் ஆட்சிக்குத் துணை புரிந்திருக்கிறான். சோழர்களின் கடற்படை ராஜேந்திர சோழன் காலத்தில் மிகவும் வலிமை பொருந்தியாதாக இருந்திருக்கிறது. இந்தக் கடற்படைக்குத் தலைமையேற்று வீரராஜேந்திரன் இலங்கைத் தீவுக்கும், ஸ்ரீவிஜயம், கடாரம், காடகம், பர்மா, சம்பா என பல நாடுகளுக்குச் சென்று போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறான்.

விஜயாலயன் ஸ்தாபித்த கடைச்சோழ வம்சத்தில் வீரம் செறிந்த மன்னர்களாகத் திகழ்ந்த ஆதித்தன், பராந்தகன், சுந்தரசோழன், ராஜராஜன், ராஜேந்திரன் இவர்கள் வரிசையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டிய வீரனாகத்தான் வீரராஜேந்திரன் தன் பெயருக்கு ஏற்ப இருந்திருக்கிறான்.

ராஜேந்திரனின் மகன் ராஜமகேந்திரன் தன் தந்தைக்கு முன்னதாகவே காலமாகிவிட்டபடியால் இரண்டாம் ராஜேந்திரனுக்குப் பிறகு அவனது தம்பி வீரராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தான். இவனுடைய காலம் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கடல்கடந்தும் பரவிக் கிடந்தமையால் அதனைக் காப்பாற்றும் பொறுப்பு இவனுக்கு இருந்தது. ராஜேந்திர சோழனின் புதல்வர்களான ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகியோர் மொத்தமாக 16 முதல் 20 ஆண்டுகள் வரை ஒருவர் பின் ஒருவராக ஆட்சி புரிந்திருக்கின்றனர். இப்படி இவர்களது ஆட்சி இடைவெளி அதிகமில்லாமல் ஒருவர் பின் ஒருவராக பதவி வகித்ததால் ராஜராஜன் போலவோ, ராஜேந்திரன் போலவோ ஒரு ஸ்திரத்தன்மையோ, அல்லது எதிர்கள் பய்ந்து ஒடுங்கிப் போயிருந்ததைப் போலவோ இல்லாமல், எதிரிகளுக்குக் குளிர் விட்டுப் போய், நேரம் வாய்த்தால் சோழர்கள் மீது போர்தொடுக்க ஆயத்தமாயிருந்தனர், குறிப்பாக சிங்களர்களும், சாளுக்கியர்களும், பாண்டியர்களும் ஓரளவுக்கு சேர மன்னர்களும் பரம்பரை எதிரிகளாகவே இருந்திருக்கின்றனர்.

வீரராஜேந்திரனின் போர்க்கள சாகசங்கள் மிக இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. இலங்கை படையெடுப்பில் இவனுடைய பங்களிப்பு இருந்தது. இலங்கையின் வெற்றிக்குப் பிறகு அந்த நாட்டை ஆளும் ராஜப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டான் வீரராஜேந்திரன். தொடர்ந்து உறையூரிலும் தனித்து இருந்து சோழ சாம்ராஜ்யப் பிரதிநிதியாகச் செயல்பட்டான்.

சாளுக்கியர்களுக்கு எதிராகத்தான் இவன் அதிகம் போரில் ஈடுபட்டான். காரணம் வேங்கி அரசர்கள் சோழர்கள் பெண் கொடுத்த சம்பந்திகள். அவர்களை மேலைச் சாளுக்கியர்களிடமிருந்து காக்கும் பொறுப்பு தஞ்சை சோழர்களுக்கு இருந்தது. தற்போது ஆந்திராவிலுள்ள விஜயவாடாவுக்கு அருகில் கிருஷ்ண நதிக்கரையில் சாளுக்கியர்களுடன் நடந்த யுத்தம் மிகப் பெரிய யுத்தம். அதில் வீரராஜேந்திரன் மாபெரும் வெற்றி பெற்றான்.

தொடக்கத்தில் இவன் சேரநாட்டில் போரிட்டு வெற்றிகளைப் பெற்றன், தொடர்ந்து பாண்டிய நாட்டையும் போரிட்டுப் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படி இவன் சேர நாடு, பாண்டிய நாடு என்று போர் புரிந்து கொண்டிருந்த காரணத்தால் இவனைத் தோற்கடிக்க இதுவே சமயமென்று தனது முந்தைய தோல்விகளை மறந்து சாளுக்கியன் சோமேஸ்வரன் சோழ தேசத்தின் மீது படையெடுத்து வந்தான். வீரராஜேந்திரனின் அண்ணன்மார்களான 2ஆம் ராஜேந்திரன் அவன் அண்ணன் ராஜாதிராஜன் ஆகியோரிடம் இவன் அடைந்த தோல்விகளை மறந்தவனாக வீரராஜேந்திரன் மீது துணிச்சலுடன் படையெடுத்தான்.

சோமேஸ்வரனுடைய புதல்வனான விக்கலன் எனும் விக்கிரமாதித்தன் (VI) கங்கைகொண்ட சோழபுரத்தைத் தாக்கினான். அப்போதுதான் வீரராஜேந்திரன் பாண்டியனையும், இலங்கை மன்னனையும் தோற்கடித்துவிட்டு சோழ நாடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போதுதான் போர் செய்துவிட்டுத் திரும்பிய சூட்டோடு இங்கு இந்த சாளுக்கியன் சோழர் தலைநகரத்தையே தாக்கியதால் ஆத்திரமடைந்த வீரராஜேந்திரன் அந்த விக்கிரமாதித்தனை ஓடஓட விரட்டியடித்தான். அவர்களைப் பின் தொடர்ந்து தாக்கி கங்கபாடி நாட்டைப் பிடித்துக் கொண்டு சாளுக்கிய நாட்டிற்குள்ளும் நுழைந்தான்.

வீரராஜேந்திரன் காலத்திய பல கல்வெட்டுக்கள் அவனது வெற்றியைப் பற்றி குறிப்பிடுகின்றன. ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே மேலைச் சாளுக்கியர்கள் போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடிப்பதில் வல்லவர்களாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றனர். சோழர்களின் வீரத்துக்கு முன்பாக அவர்களுடைய ஆட்டங்கள் எதுவும் செல்லுபடியாவதில்லை. ராஜராஜன் காலத்தில் களத்திலிருந்து ஓட்டம் பிடித்தவன் சத்யாஸ்ரயன். ராஜேந்திர சோழன் காலத்திலும் இதே சத்யாஸ்ரயன் ஓட்டம் பிடித்தவன் தான். அவனோடு இரண்டாம் ஜெயசிம்மாவும் ஓட்டம்பிடித்த சாளுக்கியன். 2ஆம் ராஜேந்திரன் காலத்தில் தோற்றோடிய சாளுக்கியன் த்ரைலோக்கியமல்லன் முதலாம் சோமேஸ்வரன். வீரராஜேந்திரனிடமும் தோற்றோடிய பெருமை இந்த த்ரைலோக்கியமல்லனுக்கு உண்டு.

சாளுக்கியர்களுக்கு எதிரான சோழர்களின் போர் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. மிகக் கடுமையான போர். சோழர்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி சாளுக்கியர்களை ஒழித்துவிட முயன்று போரிட்டும் அவர்கள் மிக சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் போர்க்களத்தைவிட்டு ஓடிப்போய் பிழைத்துக் கொண்டு வந்தார்கள். வீரராஜேந்திரன் தன் அண்ணன்மார்கள் காலத்திலேயே இந்த களம்விட்டு ஓடிடும் மாவீரர்களான சாளுக்கியர்களோடு போர் புரிந்திருக்கிறான். 2ஆம் சோமேஸ்வரன் தன்னுடைய தோல்விக்கு பழிவாங்கவும், களத்தை விட்டு ஓடிவிடாமலும் வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று தலைகீழாக முயன்றும் அவன் சாமர்த்தியம் எதுவும் வீரராஜேந்திரனின் முன் எடுபடவில்லை. சோமேஸ்வரனுடைய படைத் தளபதிகள் எல்லாம் பொலபொலவென்று சோழப் படைகளின் முன் வீழ்ந்தனர். சோழப் படைகளின் வீரத்துக்குத் தாக்குபிடிக்கமுடியாமல் சோமேஸ்வரன் மட்டுமல்லாமல் அவன் மகன் விக்கலன் எனும் 6ஆம் விக்கிரமாதித்தன் சிங்கணன் எனும் 3ஆம் ஜெயசிம்மா ஆகியோர் ஒட்டம்பிடித்த சாளுக்கியர்கள்.

தங்களது தொடர் தோல்விகளுக்கு ஒரு முடிவு கட்ட சாளுக்கியர்கள் ஒரு குறிப்பிட்ட நாளையும், இடத்தையும் சொல்லி அங்கு போருக்கு வரும்படி சோழர்களை அழைத்தனர். அதன்படி சோழர்படை 1067 செப்டம்பர் 10எல் அந்த இடத்துக்குச் சென்று சாளுக்கியர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர் என்கிறது மணிமங்கலம் கல்வெட்டுக்கள்.

சோழர்கள் ஒரு மாதகாலம் அங்கு காத்திருந்தும் சாளுக்கியப் படைகள் வந்து சேரவில்லை. கோபம் கொண்ட சோழர்கள் அந்தப் பகுதியில் சுற்றுவட்டாரங்களையெல்லாம் நாசம் செய்து ஆத்திரத்தைக் காட்டினர். பயந்து ஓடிய சாளுக்கியர்களின் கோழைத்தனத்தையும், தங்கள் வெற்றியையும் பறைசாற்றும் விதத்தில் சோழர்கள் துங்கபத்திரா நதிக்கரையில் ஒரு வெற்றித்தூணை நிறுவினர்.

இலங்கைப் போர்.

இலங்கையில் அப்போது அரசனாக இருந்தவன் விஜயபாகு என்பவன். இலங்கையின் தெற்குப் பகுதியில் ரோஹணா எனுமிடத்தையடுத்த சிறுபகுதியை இவன் ஆண்டுவந்தான். இவனுக்கு வட இலங்கையில் ஆக்கிரமித்திருந்த சோழர்களை விரட்டிவிடவேண்டுமென்கிற வேகம் இருந்தது. புத்த இலக்கியமான மஹாவம்சம் சொல்ல்கிறபடி சோழர் படைகள் ரோஹணா பகுதின் மீது படையெடுத்து விஜயபாகுவை அடக்கிவைக்க எண்ணியது. அச்சமடைந்த விஜயபாகு பர்மாவின் அரசனுக்கு உதவிகேட்டு ஆள் அனுப்பினான். அவனும் தன்னுடைய படைகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இந்த அன்னியப் படையின் உதவியோடு விஜயபாகு தமிழர் ஆக்கிரமித்திருந்த வடபகுதியில் கலகத்தை உருவாக்கினான். சோழர் படைகள் இந்த கலகத்தை அடக்கிவிட்டது. இருந்தாலும் விஜயபாகு தொடர்ந்து சில ஆண்டுகள் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.

கடாரத்தின் மீது படையெடுப்பு.

வீரராஜேந்திரனின் ஆட்சிப் பொறுப்பேற்ற ஏழாம் ஆண்டில் கடாரத்து அரசன் உதவி கேட்டு அனுப்ப அவனுக்கு உதவியாகச் சோழர் படையை அங்கு அனுப்பி வைத்தான். அங்கு புரட்சியாளர்களை அடக்கிவிட்டு மீண்டும் ராஜ்யத்தை அந்த அரசனிடமே கொடுத்துவிட்டான் வீரராஜேந்திரன். இதெல்லாம் 1068இல் நடந்ததாக வரலாறு கூறுகிறது. சோழக்ர்ள் இப்போதைய இந்தோனேஷியா மலேசியா ஆகிய பகுதிகளை சுமார் 20 ஆண்டுகள் வரை ஆட்சி புரிந்திருக்கின்றனர். இவன் காலத்தில் தூரக்கிழக்கு நாடுகளை வென்று அங்கெல்லாம் வாணிபம் செய்யச் சென்ற உறவு 1215 வரை தொடர்ந்து வந்திருக்கிறது.

சாளுக்கிய விக்கிரமாதித்தனுடன் உறவு.

சாளுக்கியன் சோமேஸ்வரன் (I) காலத்துக்குப் பிறகு அவனுடைய மகன் 2ஆம் சோமேஸ்வரன் 1068இல் ஆட்சிக்கு வந்தான். அவனுக்கும் அவனுடைய தம்பியான விக்கிரமாதித்தனுக்குமிடையே பூசல் எழுந்தது. இந்த 6ஆம் விக்கிரமாதித்தன் தன்னுடைய முன்னோர்கள் சோழர்களிடம் அடிவாங்கியதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களோடு மோதுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தான். ஆகையால் அப்போது சாளுக்கியப் பிரதேசத்தில் எழுந்த தாயாதிச் சண்டையில் தன்னை ஆதரிக்க சோழன் வீரராஜேந்திரனிடம் வேண்டுகோள் விடுத்தான். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு மனம் இரங்கிய வீரராஜேந்திரன் அவன் பக்கம் நின்று சாளுக்கிய நாட்டுக்கு அவனை அரசனாக்கியதோடு அவனுக்குத் தன் மகளையும் திருமணம் செய்து கொடுத்தான்.

வீரராஜேந்திரன் வாழ்க்கை.

இவன் ராஜாதிராஜனுக்கும், 2ஆம் ராஜேந்திரனுக்கும் தம்பி என்பதை முன்பே பார்த்தோம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தியிலிருந்து இவனது மனைவியின் பெயர் அருள்மொழிநங்கை என்பது தெரிகிறது. இவனுடைய மகள் ராஜசுந்தரி என்பாளைத்தான் கீழைச் சாளுக்கிய மன்னருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அந்த ராஜசுந்தரியின் மகன் அனந்தவர்மன் சோடகங்கதேவன் என்பான் கீழைச் சாளுக்கிய மன்னனாக இருந்தான்.

வீரராஜேந்திர சோழனுக்கு "சகலபுவனஸ்ரயா", ஸ்ரீமேதினிவல்லபா", "மகாராஜாதிராஜ சோழகுலசுந்தரா", "பாண்டியகுலாந்தகா", "ஆகவமல்லகுல கலா", "ஆகவமல்லனை மும்மாடி வெண் கண்ட ராஜ்ஸ்ரயா", "வீர சோழ" எனும் விருதுகள் இருந்தன. இவன் 1070இல் இறந்ததாகத் தெரிகிறது. இந்த அண்ணன் தம்பிகள் ஒருவருக்கொருவர் அதிகம் வயதி வித்தியாசமில்லாமல் இருந்திருக்கிறார்கள். வீரராஜேந்திரன் காலத்திலேயே தன்னுடைய மகனான மதுராந்தகனை காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலாதிபதியாக நியமித்திருந்தான். அப்போது அவனுக்கு "சோழேந்திரன்" எனும் பட்டப்பெயரும் இருந்தது. இவனுடைய இன்னொரு மகனான கங்கைகொண்டசோழன் என்பவன் பாண்டிய நாட்டியத்தின் அதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தான். இவ்விருவரில் ஒருவர்தான் இவனுக்குப் பிறகு அதிராஜேந்திரன் எனும் பட்டப்பெயருடன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான், ஆனால் அது இவ்விருவரில் யார் என்பது தெரியவில்லை. வீரராஜேந்திரன் தில்லையம்பலத்தான் நடராஜப் பெருமானுக்குத் தொண்டு புரிந்தவன். அந்த ஆடல்வல்லானுக்கு கழுத்துக்கு மிகுந்த விலை உயர்ந்த சிவப்புக் கற்கள் பதித்த மாலையொன்றை இவன் அளித்திருந்தான். இவன் சைவனாயினும் வைணவ ஆலயங்களையும் போற்றி வழிபட்டு பாதுகாத்து வந்தான்.
கி.பி. 1063 முதல் 1070 வரை ஆட்சிபுரிந்த வீரராஜேந்திரன் காலமான பின்னர் அவனது மகன் அதிராஜேந்திரன் என்பான் அரசு கட்டிலில் வீற்றிருந்தான் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.