பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 9, 2013

தஞ்சையில் நாயக்க மன்னர்கள் ஆட்சி

                                      தஞ்சையில் நாயக்க மன்னர்கள் ஆட்சி

கடைச்சோழர்கள் வம்சம் 1279இல் முடிவுக்கு வந்துவிட்டது. பிறகு சில காலம் பல்லவர்களின் கீழும், பின்னர் பாண்டியரிடமும் இருந்த சோழ மண்டலம் பல காலம் சரியான ஆட்சி அமையாமலே இருந்தது. பின்னர் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் கோலோச்சிய சமயம் இங்கு நாயக்கர்களின் ஆட்சி பரவி நிலைத்தது. அது குறித்த சில விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

16,17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை சோழ மண்டலம் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின்கீழ் வந்த பகுதிகளுக்கெல்லாம் ராஜப்பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் விஜயநகர மன்னர் பெயரால் ஆட்சி புரிந்தனர். அப்படி தமிழ்ப் பேசும் பகுதிகளில் குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், செஞ்சி, திருச்சினாப்பள்ளி ஆகிய பகுதிகள் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இவர்களில் மதுரை நாயக்க மன்னர்களும், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களும் சிறப்புக்குரியவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் காலத்தில் நாடு கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்புற்று விளங்கியிருக்கிறது. சில மன்னர்களும் சிறந்த கலைஞர்களாக இருந்திருக்கின்றனர். பல அற்புதமான கட்டுமான பணிகளையும், ஆலயங்களையும் கட்டுவித்திருக்கின்றனர். சோழ மண்டலத்தில் பரவிக்கிடந்த பல ஆறுகளில் பாலங்களையும், படித்துறைகளையும், பல மண்டபங்களையும் கட்டி வைத்தவர்கள் இவர்கள். நாயக்கர் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் செய்த செயற்கரிய பணிகள் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். தற்போதைய தஞ்சை அரண்மனை நகரமைப்பு இவை அனைத்தும் நாயக்க மன்னர்களின் கொடை என்றால் மிகையல்ல. அதனைப் பின்னர் மராத்திய மன்னர்கள் விரிவு படுத்தி, புதுப்பித்து வந்திருக்கின்றனர். தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாற்றை விரிவாக ஆதாரங்களோடும், வரலாற்றுக் குறிப்புக்களோடும் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

நாயக்கர் வகுப்பில் பலிஜா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தஞ்சைக்குக் குடியேறிய நாயக்க வம்சத்து மன்னர்கள். முதலில் தஞ்சைக்கு அனுப்பப்பட்ட ராஜப்பிரதிநிதி சேவப்ப நாயக்கர். விஜயநகரத்தை ஆண்ட அச்சுத தேவராயர் என்பவர் கிருஷ்ணதேவ ராயரின் தம்பி. இந்த அச்சுததேவராயரின் மைத்துனியின் கணவர் இந்த சேவப்ப நாயக்கர். இவரைத் தஞ்சாவூருக்கு ராஜப் பிரதிநிதியாக மன்னர் அனுப்பி வைத்தார் மன்னர்.

சேவப்ப நாயக்கரின் காலம் 1532 முதல் 1580 வரையிலானது. திம்மப்ப நாயக்கர் என்பவரின் மகன் இந்த சேவப்ப நாயக்கர். இவர் ஆற்காடு பிரதேசத்தின் ராஜப்பிரதிநிதியாக இருந்து வந்தவர். திம்மப்பா என்றும் திம்ம பூபதி என்றும் வழங்கப்படும் இவர் இப்போதைய வேலூர் மாவட்டம் நெடுங்குன்றம் எனும் ஊரில் இருந்து கொண்டு ராஜ்யாதிகாரியாகச் செயல்பட்டு வந்தார். இந்த நெடுங்குன்றம் எனும் இடத்திலிருந்துதான் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் பகுதிகளின் விஸ்தரிப்பு சிறுகச் சிறுக நடந்திருக்கிறது. இவருக்கு இந்தப் பதவி கிடைக்க காரணமாக இருந்தது, இவர் மாமன்னர் கிருஷ்ணதேவ ராயரிடம் வாயில் காப்போனாகப் பணியாற்றியதுதான். அந்தப் பதவி 'வாசல்' என அழைக்கப்பட்டது. இவருடைய சகோதரர் பெயர் நாகம்ம நாயக்கர். இந்த நாகம்ம நாயக்கரின் புதல்வன் விஸ்வநாத நாயக்கர்தான் மதுரையில் நாயக்கர் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் தெற்குப் பகுதியில் ஆட்சியை நிறுவியவர். ஆக, இந்த விஸ்வநாத நாயக்கரும், தஞ்சைக்கு வந்த சேவப்ப நாயக்கரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்பது தெரிகிறது.பொதுவாக ராஜ குடும்பத்துக்குச் சொந்தக்காரர்கள்தான் பல இடங்களுக்கும் ராஜப்பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

தஞ்சை கோட்டையின் மீதுள்ள பீரங்கியை தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷன் முனைவர் இராம.கெளசல்யாவும் மற்றவர்களும் பார்வையிடுகிறார்கள். விளக்கம் அளிப்பவர் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

சேவப்ப நாயக்கர் குடும்பம் பற்றி சிறிது விரிவாகப் பார்க்கப் போனால், இவரது தந்தையாரான திம்மப்ப நாயக்கருக்கு நான்கு புதல்வர்கள். பெத்தசேவா, சின்னசேவா, பெத்தமல்லா, சின்ன மல்லா என்பது அவர்களது பெயர். இதில் சின்னசேவா என்பவர்தான் நமது கதாநாயகரான சேவப்ப நாயக்கர்.

சேவப்ப நாயக்கர் தஞ்சைப் பகுதியின் ஆட்சியை மேற்கொள்வதற்கு முன்பு கிருஷ்ணதேவராயரிடம் பணிபுரிந்தார் என்பதைப் பார்த்தோம் அல்லவா? அப்போது இவர் தன்னை நல்ல நிர்வாகியாகவும், கட்டடக் கலை நிபுணராகவும் இருந்திருக்கிறார். அவருடைய காலத்தில் விஜயநகரத்தை ஆண்ட அச்சுத தேவராயர். இவருடைய மனைவி திருமலாம்பா. இந்த ராணியின் சகோதரியைத்தான் சேவப்ப நாயக்கர் திருமணம் செய்து கொண்டார். முதலில் இவர் மன்னர் அச்சுததேவராயருக்கு அடப்பக்காரனாக பணிபுரிந்திருப்பதும் தெரிகிறது. அடப்பக்காரன் என்றால் மன்னருக்கு தாம்பூலம் மடித்துக் கொடுக்கும் பணி. இந்தப் பணியை சாதாரணமாக யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க மாட்டார்கள். மன்னரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நன்கு தெரிந்த, நாணயமும், மன்னரை பாதுகாக்கும் உணர்வும் உள்ளவர்களுக்குத்தான் கொடுப்பார்கள். யாராவது தவறான ஆள்வசம் இந்த பதவி போய்விட்டால், அவன் வெற்றிலையோடு ஏதாவது விஷம் கலந்துகூட கொடுத்துவிடலாமல்லவா. அதனால் நம்பிக்கைக்குரிய சேவகன் அடப்பக்காரன் என்பது. அதோடுகூட பாதுகாவலராகவும் இருப்பார். அதாவது இன்றைய வழக்கில் Body guard.

சேவப்பருக்கு இந்த தஞ்சை ராஜ்யாதிகாரத்தைக் கொடுக்கக் காரணமாக இருந்தவர் அச்சுததேவ ராயர் என்பதைப் பார்த்தோமல்லவா. அவரை கெளரவிக்கும் விதமாக சேவப்பர் தன் மகனுக்கு அவர் பெயரையே இட்டு அச்சுதப்ப நாயக்கர் என்று அழைத்தார். சேவப்பர் தன் காலத்திலேயே தன் மகனையும் யுவராஜாவாக வைத்துக் கொண்டு ராஜ்யபாரம் நடத்தி வந்தார்.

இவருக்குப் பின் அவருடைய மகன் ரகுநாத நாயக்கர் பதவிக்கு வந்தார். தஞ்சை நாயக்கர் வம்சத்தில் மிகச் சிறந்த ராஜ்யாதிகாரியாகவும், கலைகளின்பால் நாட்டமும், இறைபக்தியும் நிறைந்தவராக இருந்திருக்கிறார் இந்த ரகுநாத நாயக்கர். கலை, இலக்கியம், ஆலயம், பக்தி என்று இருந்ததோடு, போர்க்கலையிலும் இவர் சிறந்து விளங்கியிருந்தார். இவருடைய அதிர்ஷ்டமா அல்லது சோழநாடு செய்த புண்ணியமா, இவருக்கு அரியதொரு அமைச்சர் அமைந்தார். அவர் பெயர் கோவிந்த தீக்ஷிதர். இவர் சிறந்த கல்விமான், பக்திமான், தவிர நல்ல நிர்வாகி. நீண்ட நாட்கள் இவர் ரகுநாத நாயக்கரிடம் அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் இவர் முத்திரைப் பதிக்காத துறையே இல்லை எனலாம். இவருடைய காலம் போர்கள் இல்லாமல் அமைதியாக இருந்திருக்கிறது. இவர் காலத்தில் காவிரி நதிக்கரை முழுவதும் திருவையாறு தொடங்கி மாயவரம் வரை அழகிய படித்துறைகள் கட்டப்பட்டது இன்று வரை மக்கள் உபயோகித்து வருவதை நாம் அறிவோம்.
நாயக்க மன்னர்கள் ஆட்சியில் வெளியிட்ட நாணயம்.

அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் தட்சிண சுல்தான்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தோடு போரிட்டு தோல்வி அடையச் செய்துவிட்டார்கள். தென்னாட்டில் ஹிந்து சாம்ராஜ்யமாக சிறப்புற்று விளங்கிய விஜயநகர ராஜ்யம் சுல்தான்களிடம் தோற்றது வரலாற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதன்பின் பல்வேறு பகுதிகளைக் கட்டி ஆண்ட நாயக்க மன்னர்களிடையே ஒற்றுமை குறைந்தது. ஒருவருக்கொருவர் போட்டி, பொறாமை, போர் என்றெல்லாம் தங்களை அழித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுக்கும், தஞ்சையில் இருந்த மன்னருக்குமிடையே போர் ஏற்பட்டது. வல்லத்தில் நடந்த யுத்தத்தில் மதுரை நாயக்கர்கள் தோல்வியடைந்தார்கள்.

இவர்கள் காலத்தில் இலங்கையில் குடியேறியிருந்த போர்த்துகீசியர்கள் மெல்ல நாகப்பட்டினத்திலும் வந்து குடியேறினார்கள். தென்னாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதிகள் எங்கும் போர்த்துகீசியர்கள் வந்து குடியேறத் தொடங்கினார்கள். கள்ளிக்கோட்டை, கோவா போன்ற இடங்கள் நீண்ட நெடுங்காலம் இவர்கள் வசம் இருந்தது நாமறிந்த வரலாறு.

இந்த போர்த்துகீசியர்களின் முக்கியப் பணி மதமாற்றம். எங்கு குடியேறுகிறார்களோ அந்தப் பகுதி மக்களை உடனடியாக மதமாற்றம் செய்துவிடுவது இவர்களது வழக்கம். அதுபோலவே இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் இவர்கள் இந்த அடாவடி வேலைகளில் இறங்கியதை எதிர்த்து யாழ்ப்பாண மன்னர் அவர்கள் மீது போர் தொடுத்தார். இந்த போரில் உதவி செய்ய யாழ்ப்பாண மன்னர் தஞ்சை நாயக்க மன்னரிடம் உதவி கேட்டுப் பெற்றார்.

அச்சுதப்ப நாயக்கர் பல ஆலயங்களைச் செப்பனிட்டதோடு, புதிய ஆலயங்களையும் எழுப்பினார். இவர் நல்ல பக்திமான் என்பதை முதலிலேயே கண்டோம். தஞ்சைப் பகுதி விவசாய நிலங்களைக் கொண்ட இடம் என்பதால் இவர் விவசாயத்துக்கு நீர்ப்பாசன வசதிகளை நன்கு செய்து கொடுத்தார். தர்ம காரியங்களுக்கு அறக்கட்டளைகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இவரிடமிருந்து அதிக சலுகைகளைப் பெற்று நிமிர்ந்து நின்ற ஆலயங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயம் முக்கியமானது. இன்றும் அது இந்த நாயக்க மன்னர்களின் பெயரைச் சொல்லுமளவுக்கு செய்திருக்கிறார்கள். இந்த அறக்காரியங்களுக்குப் பின்புலமாக விளங்கியவர் அவருடைய அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர்.
ராணி மங்கம்மாள் அரண்மனையின் உட்பகுதி

ஸ்ரீரங்கத்துக்கு இவர் அப்படி என்னதான் செய்துவிட்டார் என்று தெரிந்து கொள்ள ஆசையிருக்கிறது அல்லவா? சரி, திருவரங்கத்தின் வடக்கு, மேற்கு வாசல் கோபுரங்களை இவர்தான் எழுப்பினார். எட்டு சுற்றுப் பிரகாரங்களையும் இவர்தான் வடிவமைத்துக் கட்டினார். பல மண்டபங்களை கோயில் வளாகத்தினுள்இவர் எழுப்பினார். உள் விமானங்களின் மேலுள்ள தங்க முலாம் பூசியது இவர் காலத்தில்தான். கொடிக்கம்பம் தவிர விலை உயர்ந்த கற்கள் பதித்த கிரீடம் உட்பட பெருமாள் விக்கிரகத்தையும் இவர் ஆலயத்துக்கு அளித்தார்.

திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், மாயூரம் ஆகிய இடங்களில் காவிரி நதியில் பல படித்துறைகளை இவர் கட்டினார். அவை இன்றும் மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.

ரகுநாத நாயக்கர்: இவருடைய காலம் 1600 முதல் 1634 வரை. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் சிறப்பாகப் பேசப்படுவது இவருடைய ஆட்சி காலம்தான். கலை இலக்கியம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த மன்னர். சிறந்த ரசிகர். தானே பல கலைகளில் வல்லவர். இவருடைய மனைவியருள் ஒருவரான ராமபத்ராம்பா என்பவரும் சிறந்த கல்விமான், நல்ல கவிஞர். 1620இல் காவிரிப்பூம்பட்டினம் அருகிலுள்ள தரங்கம்பாடி எனும் கடற்கரைப் பட்டினத்தில்
ஒரு கோட்டை கட்டிக்கொள்ள டேனிஷ்காரர்களுக்கு உரிமை அளித்தவர் இவர். இவர்களைப் பார்த்து ஆங்கிலேயர்களும் நாயக்க மன்னர்களின் ஆதரவைத் தங்கள் வாணிபத்துக்கு வேண்டி இவரை அணுகினர்.

ரகுநாத நாயக்கர் தெலுங்கு தவிர சம்ஸ்கிருத மொழியிலும் வல்லவராக இருந்தார். நல்ல இசைக் கலைஞராக விளங்கினார். விபஞ்சி வீணையை முறைப்படுத்தி இந்த வாத்தியத்தைப் பிரபலப்படுத்தினார். தெலுங்கு மொழியில் பல நூல்களை எழுதியவர் இவர்.

இவருடைய காலத்தில் இவருடைய மனைவியும், மகாராணியுமான ராமபத்ராம்பாவும், மதுரவாணி என்பவரும் மிகச் சிறந்த பெண் கவிஞர்களாகத் திகழ்ந்திருக்கின்றனர். மத்வாச்சாரியார் உருவாக்கிய மாத்வ பிரிவைச் சேர்ந்த சுதீந்திரா என்பவரும் ராகவேந்திரர் ஆகிய இரு குருமார்கள் இந்த மன்னருக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள். யக்ஞநாராயணர் என்பவர் கோவிந்த தீக்ஷிதரின் குமாரர் ஆவார். இவர் ரகுநாத நாயக்கரின் ஆட்சி காலத்தைப் பற்றிய வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார். அந்த நூலின் பெயர் சாஹித்ய ரத்னாகர என்பதாகும். ரகுநாத நாயக்கர் கலைகளில் மட்டும் வல்லவராக இருக்கவில்லை, வாட்போரில் வல்லவர் இவர். குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றிலும் இவர் சிறந்து விளங்கியிருக்கிறார். இசையில் இவர் வல்லவர் என்பதைப் பார்த்தோமல்லவா. இவர் பல புதிய ராகங்களையும், தாளங்களையும் உருவாக்கியிருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல ஜயந்தசேனா எனும் ராகத்தைச் சொல்லலாம்.
விஜயநகர சாம்ராஜ சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர்

"சங்கீத சுதா" எனும் பெயரில் இவர் இயற்றிய இசை பற்றிய நூல் இசையின் நுணுக்கங்களை அனைவரும் கற்றுக்கொள்ளும் விதத்தில் அமைந்திருந்தது. இசைக்கு ஏற்ற பாடல்களையும் இவர் இயற்றுவதில் வல்லவர். இவர் இயற்றி நடத்திக் காட்டிய இசை நாட்டிய நாடகங்கள் மிகவும் புகழ் பெற்று விளங்கின. 'பாரிஜாத ப்ரஹரண', 'வான்மீக சரித்திர காவ்யா', 'அச்சுதேந்திரபுயதவம்', 'கஜேந்திர மோக்ஷம்', 'நள சரிதம்', 'ருக்மிணி கிருஷ்ண விவாஹ யக்ஷகான' போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ரகுநாத நாயக்க மன்னர் காலத்தில் பல அரிய நூல்கள் சேகரிக்கப்பட்டன. அவைகளை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அந்த இடத்துக்குச் சரஸ்வதி பந்தர் எனப் பெயரிட்டழைத்தார். இந்த சரஸ்வதி பந்தரில் பண்டைய அரிய பொக்கிஷங்களாக விளங்கிய நூல்களையும், இவர் காலத்துப் புலவர்கள் இயற்றி வெளியிட்ட அரிய பல நூல்களையும் சேமித்து வைத்தார். இந்த சரஸ்வதி பந்தர்தான் பின்னர் வந்த மராட்டிய மன்னர்கள் காலத்தில், மன்னர் சரபோஜி II இதை சரஸ்வதி மஹால் நூலகமாக மாற்றி அதனை இன்றுவரை மக்கள் போற்று பாதுகாத்துப் பயனடைந்து வருகிறார்கள்.

ரகுநாத நாயக்கர் தஞ்சாவூரில் திறமை மிக்க அரசாட்சியைக் கொடுத்து வந்த நேரத்தில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைமையில் வாரிசுரிமைப் போர் துவங்கியது. வேலூர், சந்திரகிரி ஆகிய இடங்களில் இந்த வாரிசுரிமைப் போர் நடைபெற்றது. தக்ஷிண சுல்தான்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தோற்கடித்து அது சின்னாபின்னமடைந்த நிலையில், விட்ட குறை தொட்ட குறையாக விஜயநகர மன்னர்கள் மேலும் தெற்கே வேலூர் சந்திரகிரி ஆகிய இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த அரசர் வரிசையில் இரண்டாம் வெங்கட ராயரின் தம்பி கொப்புரி ஜக்க ராயர் என்பவர் இருந்தார். இவருக்கு ஒரு ஆசை நாயகி, ஆடம்பரமும், பதவி மோகமும் கொண்ட ராணியாகத் திகழ்ந்தார். அவர் பெயர் ஒபவம்மா. இவருக்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான். அவனுக்குத்தான் ராஜ்யத்தை ஆளும் உரிமை என்று இந்த ஒபவம்மா தூண்டுதலினால் இரண்டாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசுரிமை பெற்றவரையும், அவருடைய முழு குடும்பத்தையும் வேலூர் சிறையில் கொன்றுவிட்டனர்.

இந்த சூதும் சதியும் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க இந்த ஒபவம்மாவின் கணவர் ஜக்க ராயரை எதிர்த்து காளஹஸ்தி பகுதியை ஆண்ட எச்சமன் என்பவர் ராம தேவர் என்பவர்தான் பட்டத்துக்கு உரியவர் என்று கலகம் விளைவிக்கத் தொடங்கினார். வேலூர் சிறையில் அடைபட்டிருந்த இந்த ராமதேவரை இந்த காளஹஸ்தி அதிபர் விடுவித்து வெளிக் கொணர்ந்து விட்டார். ஜக்கராயர் மட்டும் என்ன இளைத்தவரா? இவர் போய் செஞ்சியை ஆண்டுகொண்டிருந்த நாயக்க மன்னரையும், மதுரையில் இருந்த முத்துவீரப்பரையும் சந்தித்து காளஹஸ்தி எச்சமனையும், ராமதேவரையும் எதிர்த்து போரிடும்படி தூண்டினார்.

காளஹஸ்திக்காரர் மட்டும் என்ன இளிச்சவாயனா என்ன? அவர் பங்குக்கு தஞ்சை ரகுநாத நாயக்கரை சந்தித்து உதவி கேட்டார், ராமதேவனை பதவியில் அமர்த்த. ரகுநாத நாயக்கர் வஞ்சனையில்லாமல், தனக்கு இன்றும் என்றும் விஜயநகர சாம்ராஜ்யாதிபதிகள்தான் எஜமானர்கள் எனும் உணர்வுடையவர்.

இந்த நிலையில் பழைய விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றுவிட்ட நிலையிலும், அதன் பிரிவுகளாக ஆங்காங்கே சிதறிக் கிடந்த நாயக்க வம்சத்து சிற்றரசர்கள் தங்களுக்குள் பதவிப் போராட்டத்தில் குதித்தனர். ஜக்கராயர் ஒரு பெரும் படையுடன் திருச்சினாப்பள்ளிக்கு அருகில் வந்து சேர்ந்தார். மதுரை முத்துவீரப்பர் தனது திருச்சினாப்பள்ளி படைகளுடன், செஞ்சி, மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் படைகளை வரவழைத்துக் கொண்டார். இவர்கள் தவிர கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்ய வந்து சேர்ந்திருந்த போர்த்துகீசியர்களிடமிருந்தும் படைவீரர்களைக் கேட்டுப் பெற்று தனக்கு உதவிக்காகக் கொண்டு வந்திருந்தார்.

விஜயநகரத்து படைகளை தன்னுடைய காளஹஸ்தி படையுடன் சேர்த்து எச்சமன் தலைமை வகித்து அழைத்து வந்தான். அப்படி அந்த படைகள் வரும் வழியில் தஞ்சைக்கு வந்து ரகுநாத நாயக்கரின் படைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். போதாதற்கு கர்நாடகப் பகுதிகளிலிருந்து படைகளும், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த படைகளும், டச்சுக்காரர்களும் இந்த படையில் சேர்ந்து கொண்டனர். இப்போது இரு கட்சிகள் ஒன்றுக்கொன்று மோத தயாராக நின்றன.

ஒன்று ஜக்கராயர் தலைமையில், மதுரை, திருச்சி, செஞ்சி, போர்த்துகீசியர் ஆகிய படைகள். எதிரில் விஜயநகர சாம்ராஜ்யப் படைக்கு காளஹஸ்தி எச்சமன் தலைமையில் தஞ்சை ரகுநாத நாயக்கர் படை, கர்நாடகப் படை, யாழ்ப்பாணப் படை, டச்சுக்காரர்கள் படை ஆகியவை எதிர் வரிசையில் நின்றன.

இவ்விரு படைவீரர்களும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள தோப்பூர் எனுமிடத்தில் 1616ஆம் வருஷத்தில் ஒருவரையொருவர் எதிர்கொண்டு மோதினர். இந்த தோப்பூர் திருச்சினாப்பள்ளிக்கும் கல்லணைக்கும் இடையில் உள்ள சிறிய ஊர். இந்த இடத்தில் கூடிய இவ்விரு படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம் இருக்குமென்று சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். தென்னகத்தில் நடந்த போர்களில் மிக அதிக அளவில் வீரர்கள் கலந்துகொண்ட போர்களில் இந்த தோப்பூர் போரும் ஒன்று என்பது அவர்கள் கருத்து.

போர் உக்கிரமாக நடந்தது. விஜயநகர படைகள் எச்சமன், ரகுநாத நாயக்கர் ஆகியோர் தலைமையில் வீரமாகப் போரிட்டனர். ஜக்கராயர் தலைமையிலான படையால் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. போரின் உச்ச கட்டத்தில் ஜக்கராயர் எச்சமனால் கொல்லப்பட்டார். ஜக்கராயர் படைகள் தலைதெறிக்க ஓடத்தொடங்கினர். ஜக்கராயரின் தம்பி எதிராஜர் உயிர் பிழைக்க ஓடிவிட்டார். மதுரை முத்துவீரப்ப நாயக்கர் தப்பி ஓட முயல்கையில் எச்சமனின் தளபதியிடம் திருச்சினாப்பள்ளி அருகே மாட்டிக் கொண்டார். செஞ்சி மன்னர் செஞ்சி கோட்டை தவிர மற்ற எல்லா இடங்களையும் இழ்ந்து நின்றார். இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான ஒபவம்மாவின் வளர்ப்பு மகன் இரண்டாம் வெங்கடராயர் சிறைபட்டான். இந்த போரின் வெற்றியை தஞ்சை ரகுநாத நாயக்கரும், எச்சமனும் சிறப்பாகக் கொண்டாடினர். ராம தேவனுக்கு ராமதேவ ராயர் எனப் பெயர் சூட்டி 1617இல் மகுடம் சூட்டி, இதன் நினைவாக பல இடங்களில் வெற்றி ஸ்தூபிகளை எழுப்பி கொண்டாடினர். புதிய மன்னன் ராமதேவராயருக்கு அப்போது வயது 15. இப்படியாக சோழ மண்டலத்தில் நாயக்க மன்னர்களில் தலைசிறந்தவராகவும், கலை இலக்கியங்களில் மட்டுமல்ல, போரிலும் தான் வீரம் மிக்கவர் என்பதை நிரூபித்த ரகுநாத நாயக்கர் காலமானார்.

அவருக்குப் பிறகு அவருடைய மகன் விஜயராகவ நாயக்கர் 1634இல் பட்டத்துக்கு வந்தார். தஞ்சை நாயக்க மன்னர்களில் கடைசி மன்னர் இவர். இவருக்கு மன்னாறு தாசன் எனவும் ஒரு பெயர் உண்டு. தந்தையின் வழியில் சென்று இவரும் பல ஆலயங்களை எழுப்பவும், பழுதுபட்ட ஆலயங்களை செப்பனிடவும், இருக்கும் ஆலயங்களுக்கு பிரகாரங்கள், கோபுரங்கள், மண்டபங்கள் எழுப்பவும், பற்பல நீர்நிலைகளை உருவாக்கி, குளம், குட்டை போன்றவற்றை புதிதாக வெட்டிவைத்தார். மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி தெப்பக்குளம் இவரால் கட்டப்பட்டது. ஆலயத்தையும் விரிவுபடுத்தி கட்டியவர் இவர்தான். தஞ்சை ராஜ்யத்தை 39 வருஷங்கள் சிறப்பாக ஆண்ட மன்னர் இந்த விஜயராகவ நாயக்கர்.

தந்தை ரகுநாத நாயக்கரைப் போலவே தனயன் விஜயராகவ நாயக்கரும் கல்வியில் சிறந்தவர், கலைகளில் தேர்ந்தவர். இவற்றை கண்ணும் கருத்துமாக போற்றி வளர்த்தவர். தெலுங்கு இலக்கியகர்த்தர்களும், இசை வல்லுனர்களும் இந்த மன்னன் காலத்தில் அதிகமாக புகழ் பெற்று விளங்கினர். இவர் அரசவையில் பல கவிஞர்களும், புலவர்களும் இருந்தார்கள். மன்னன் மட்டும் தெலுங்கில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இத்தனை பெருமைகளுக்கும் உரிய இந்த மன்னனின் முடிவு வெகு விரைவில் வந்துவிட்டது. அப்படி முடிவுக்குக் கொண்டு வந்தவர் மதுரையை ஆண்டு சொக்கனாத நாயக்கர். அது எப்படி நிகழ்ந்தது என்பதைப் பார்க்கலாம்.

மதுரையை சொக்கநாத நாயக்கர் என்பார் ஆண்டு வந்தார். இந்த சொக்கநாத நாயக்கர் தஞ்சை விஜயராகவரின் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டார். அதற்கு விஜயராகவர் மறுத்துவிட்டார். அதற்கு ஒரு காரணம் இருந்தது. முன்பொருமுறை தஞ்சை நாயக்க மன்னரின் தங்கை ஒருத்தியை மதுரை திருமலை நாயக்கருக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அந்தப் பெண் ஏதோவொரு சூழ்நிலையில் மதுரையில் கொலை செய்யப்பட்டுவிட்டாள். அதிலிருந்து மதுரை குடும்பத்திற்குப் பெண் கொடுப்பதில் இவர்களுக்கு மனமில்லை. இப்போது விஜயராகவரும் சொக்கநாத நாயக்கருக்குத் தன் மகளைக் கொடுக்க விரும்பவில்லை என்பதால் சொக்கநாதர் தஞ்சை மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்தார். 1673இல் நடந்த இந்தப் போரில் மதுரை அரசர் தஞ்சை கோட்டையை பீரங்கிகள் வைத்து உடைத்தார். தஞ்சை நகரத்துக்குள் நடந்த போரில் விஜயராகவ நாயக்கர் கொல்லப்பட்டார். முன்பே முடிவு செய்திருந்தபடி அரண்மனைப் பெண்கள் யாரும் மதுரை ஆட்கள் கையில் சிக்காமல் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். மதுரை படைக்குத் தலைமை தாங்கி வந்த வெங்கடகிருஷ்ணப்ப நாயக்கர் கையால் விஜயராகவர் மாண்டுபோனார்.

தஞ்சையை வெற்றிகொண்ட மதுரை சொக்கநாத நாயக்கர் தனது தம்பி அழகிரி நாயக்கரை தஞ்சையை ஆள்வதற்காக நியமித்துவிட்டு வெற்றி வீரராக மதுரை திரும்பினார். ஆனால் பாவம், அவர் அழித்தது கலை, இலக்கியங்களைக் காத்த 39 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சிபுரிந்த விஜயராகவரை மட்டுமல்ல, யாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி இந்த போர் நடந்ததோ அந்தப் பெண்ணையும் மற்ற உறவினர்களையும் காவு கொடுத்துவிட்டு மதுரை திரும்பினார். ஒரே ஆண்டுதான் அழகிரி நாயக்கர் தஞ்சையில் ஆட்சி புரிய முடிந்தது. அதற்குள் அண்ணன் தம்பிக்குள் தகராறு. விஜயராகவரின் அரண்மனைப் பெண்கள் அனைவரும் மாய்த்துக் கொண்டார்களே தவிர, அதில் ஒரு ராணி தன்னுடைய குழந்தையொன்றை தாதியொருத்தியிடம் கொடுத்துவிட்டுப் போனாள். அந்தத் தாதி அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் நாகப்பட்டினத்தில் ஒரு வணிகரிடம் கொடுத்து வளர்த்து வந்தாள். அந்த பையன் வளர்ந்து அங்கு வளர்ந்து வந்ததை அறிந்த ஒரு அமைச்சர் அவனை அரசபதவியில் உட்கார வைக்க விரும்பி பிஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷாவிடம் சென்று உதவி கேட்டார். இது 1675இல். உடனே பிஜப்பூர் சுல்தான் அப்போது பெங்களூரில் இருந்த வெங்கோஜி என்கிற ஏகோஜியை (இவர் சத்ரபதி சிவாஜி மகராஜின் தந்தையின் மற்றொரு மனைவியின் மகன்) அழைத்து தஞ்சாவூருக்கு அனுப்புகிறார்.

ஏகோஜி தஞ்சைக்கு வந்து மதுரை அழகிரி நாயக்கரைத் தோற்கடித்துவிட்டு மக்களின் விருப்பப்படி தானே தஞ்சை ஆட்சியை ஏற்றுக் கொண்டதோடு, பிஜப்பூர் சுல்தானின் அனுமதியையும், ஆசியையும் பெற்று, தஞ்சைக்குத் தானே மன்னனாக முடிசூட்டிக் கொண்டார். அது தொடங்கி 180 ஆண்டுகள் தஞ்சையை மராத்திய மன்னர்கள் ஆண்டார்கள் எனும் வரலாற்றை "தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள்" எனும் என்னுடைய புத்தகத்தில் படியுங்கள் என அழைக்கிறேன்.



























1 comment:

kmr.krishnan said...

புத்தகத்திற்கு நல்ல அறிமுகம்தான். சிறப்பானகட்டுரைக்கு நன்றி!