தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் எழுதியுள்ள நூலில் காணப்படும் செய்தி இது. முன்பே உங்களில் பலர் இதைப் படித்திருக்கலாம். இப்போது எதற்காகப் மறுபடியும் படிக்க வேண்டுமென்றால், அந்த நாட்களில் தமிழர்களும், தமிழ்நாடும் எப்படி மற்ற மொழிபேசும் மக்கள் மத்தியில் மதிப்போடும், கெளரவத்தோடும் இருந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளத்தான். மேலும் மன்னர் சரபோஜி அன்ன சத்திரங்கள் உருவாக்கி, இன்றும்கூட 'சத்திரம் இலாகா' என்று ஒரு பிரிவு தமிழக அரசால் தஞ்சையில் நடத்தப்படுகிறது என்றால் அதற்கு மூலகாரணம் யார்? "மூப்பனார்" என்றால் வியப்பாக இருக்கிறதா? படித்துப் பாருங்கள் தெரியும். நன்றி: "நல்லுரைக் கோவை" திரு உ.வே.சா. மறு வெளியீடு: மாமன்னர் சரபோஜி ஆய்வுக் கோவை, சரஸ்வதி மஹால் நூலகம்.
மூப்பனார் தேசத்து ராஜா.
தஞ்சையில் இருந்து அரசாண்ட சரபோஜி அரசர் ஒருமுறை வடதேச யாத்திரை செய்தார். தமக்குரிய பரிவாரங்களுடன் அவர் சென்றபோது ஆங்காங்கே உள்ள அரசர்களாலும் பிரபுக்களாலும் உபசரிக்கப் பெற்றார். அவர் போய்க்கொண்டிருக்கையில் ஆங்காங்கே உள்ள ஜனங்கள் கூட்டங் கூட்டமாகத் திரண்டு வந்து அவரையும் அவருடைய யானை முதலியவற்றையும் பார்த்துச் சென்றார்கள். அங்ஙனம் வந்து கூடிய கூட்டத்திற் பல பைராகிகளும் இருந்தார்கள்.
பைராகிகள் எப்பொழுதும் யாத்திரை செய்து கொண்டிருப்பவர்கள். ஆதலின் அவர்கள் எல்லா நாடுகளையும் அறிந்தவர்கள். அவர்கள் மற்ற ஜனங்களிடம் சரபோஜி அரசரைச் சுட்டிக்காட்டி, "இவர் மூப்பனார் தேசத்து ராஜா" என்று சொல்லிவிட்டு, மேலே தஞ்சாவூரின் பெருமையை வருணிக்கத் தொடங்கினார்கள். இங்ஙனமே பலர் சரபோஜி அரசரைச் சுட்டினமையின் வட தேசத்தினரிற் பெரும்பாலோர் அவரை 'மூப்பனார் தேசத்து ராஜா' என்றே வழங்கலாயினர்.
இது சரபோஜி அரசருடைய காதிற் பட்டது. நாம் ஓர் அரசராக இருக்கும்போது, நம்மை நேரே அறிந்து கொள்ளாமல், நம் குடிகளுள் ஒருவராகிய மூப்பனார் மூலமாக அறிந்த இந்த ஜனங்களுக்கும் அந்த மூப்பனாருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தார். தம்முடன் வந்தவர்களை விசாரித்தார். அவர்கள் அந்தப் பைராகிகளையே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
இவர் ஜி.கே.மூப்பனார், இவருடைய முன்னோர்தான் இராமபத்ர மூப்பனார்
"மூப்பனார் தேசமாவது! இவர் தஞ்சாவூர் ராஜாவல்லவா?" என்று சில பைராகிகளை அவர்கள் கேட்டனர்.
"ஆமாம், மூப்பனாரும் அதற்குப் பக்கத்தில்தானே இருக்கிறார்?"
"எந்த மூப்பனார்?"
"கபிஸ்தலம் மூப்பனார்".
"அவர் பெயர் என்ன?"
"அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? பல தேசங்களையும் கடந்து அவருடைய புகழ் வீசும் பொழுது அருகிலுள்ள உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? ராமபத்ர மூப்பனார் என்று அவர் பெயரைச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்."
விசாரித்த அதிகாரிகளுக்கு மூப்பனாரைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனாலும் பைராகிகளின் கருத்தை விளக்கமாகத் தெரிந்து கொள்ள எண்ணிக் கேட்டார்கள்.
"அவர் என்ன செய்து விட்டார்?"
"என்ன செய்யவில்லை? இப்படி நீங்கள் கேட்கிறீர்களே; நீங்கள் அவருடைய விரோதிகளோ? என்ன அன்னதானம்! என்ன உபசாரம்! அங்கே சாப்பிட்ட சாப்பாடு இன்னும் மணக்கிறது. மூப்பனார் தேசத்துக் காய்கறிகளுக்கு எத்தனை ருசி?"
பைராகிகள் மேலும் மேலும் வருணிக்கத் தொடங்கினார்கள். அதிகாரிகளுக்குக் காது கொப்பளித்து விட்டது.
"சாப்பாடு மட்டுமா? சனி, புதன் கிழமைகளில் எண்ணெய் கூட கொடுக்கிறார். எந்த மஹாராஜன் அப்படி அன்னம் போடப் போகிறான்? அந்தத் தேசத்தை விட்டுவர எங்கள் மனம் இடம் தருவதில்லை. ராமேஸ்வரத்துக்குப் போகும்போதும், திரும்பி வரும்போதும் மூப்பனார் ஊருக்குப் போகாமல் இருக்க மாட்டோம். எங்களுக்குத் தமிழ் தெரியாது; அவர் பிரியமாகப் பேசுவதை அறியமுடிவதில்லை. ஆனாலும் அவருடைய முகவிலாசம் எங்களை அவரிடம் இழுக்கும். எங்கள் பாஷையிற் பேசி உபசாரம் செய்வதற்குச் சிலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டதில்லையோ?"
அதிகாரிகள் பல்லைக் கடித்துக் கொண்டார்கள்; நம்மையும் பரதேசிப் பயல்களாக எண்ணிப் பேசுகிறார்கள் என்ற கோபத்தினால் அவர்களுக்கு மீசை துடித்தது.
சரபோஜியரசர் இந்த விஷயங்களை யெல்லாம் அறிந்தார். அவர் நல்ல அறிவாளியாதலின் மூப்பனார்பாற் பொறாமை கொள்ளவில்லை. அவர் குணங்களையே நாடுபவர். 'சரபோஜி தேசத்து மூப்பனார்' என்று யாவரும் சொல்ல வேண்டியிருப்ப, 'மூப்பனார் தேசத்து ராஜா' என்று மாற்றி சொல்லவைத்தது அம் மூப்பனாருடைய அன்னதானமே என்பதை ஆராய்ந்தறிந்தார். தாம் அங்ஙனம் செய்யாதது பெருங்குறை யென்பதையும் உணர்ந்தார்; வடதேசத்து யாத்திரையால் உண்டான பெரும் பயன்களில் இந்த உணர்வு வந்ததும் ஒன்றென்றே கருதினார்.
அரசர் மனம் வைத்தால் பின்பு சொல்ல வேண்டுமா? அவர் ஊருக்கு மீண்ட பின்பு பல அன்ன சத்திரங்களை ஏற்படுத்தினார்; எல்லாச் சாதியினருடைய பசியையும் போக்கினார், ஆயினும் அவர் வடதேசத்துப் பைராகிகளுக்கு மூப்பனார் தேசத்து ராஜாவாகவே இருந்து வந்தார்.
No comments:
Post a Comment