பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 18, 2013

சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்? பகுதி 2.

சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்? பகுதி 2.

"சென்னை நகரம் யாருக்குச் சொந்தம்" எனும் தலைப்பிலான இதற்கு முந்தைய பதிவில் கல்கி இதழில் அதன் ஆசிரியர், ஆந்திரத்துத் தெலுங்கு பேசும் மக்கள் தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை முன்வைத்து, அதன் தலைநகராக சென்னைக்கு உரிமை கொண்டாடியதைப் பார்த்தோம். அப்போது தெலுங்கு பேசுவோரின் குரல் உரக்க ஒலித்ததால் டில்லி தலைமையும் அதற்குத் தலை ஆட்டிவிடுமோ என்கிற கவலை சில உண்மையான தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உண்டாகியது. ராஜாஜியின் இது குறித்து கவலை தெரிவித்து இருந்தார். அவருடைய மனச்சாட்சியாக விளங்கிய திரு கல்கி அவர்கள் தன் கட்டுரையில் தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்க ஒரு படை தேவை என்று எழுதினார். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

1952 பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை. கம்யூனிஸ்டுகள் அதிகம் கொண்ட எதிர்கட்சி பலம் வாய்ந்ததாக இருந்தது. அந்த சூழ்நிலையில் சென்னை மாகாண அரசு அமைக்க யார் முன்வருவது என்பதில் சிக்கல். காங்கிரஸ் தனிப்பட்ட பெரும்பான்மைக் கட்சி என்றாலும் அதற்கு போதுமான பெரும்பான்மை இல்லை. இதனை விவாதித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஒருமித்த கருத்து ஒன்றுக்கு வந்தார்கள். அது வங்காள கவர்னராகவும், டில்லியில் கவர்னர் ஜெனரலாகவும் இருந்த ராஜாஜி இப்போது ஓய்வில் இருக்கிறார். அவரை அழைத்து சென்னை அரசுக்கு தலைமை தாங்கச் செய்வதுதான் ஒரே வழி என்ற எண்ணம் தமிழ்நாட்டு காங்கிரசாருக்கு ஏற்பட்டது. இந்த முடிவை பண்டித ஜவஹர்லால் நேருவிடம் சொல்லி அவரது சம்மதத்தை வாங்க திரு சி.சுப்பிரமணியம் அவர்களையும் பொள்ளாச்சி திரு மகாலிங்கம் அவர்களையும் நேருவிடம் அனுப்பினார்கள். அவர்கள் சென்று நேருவிடம் இந்தத் தகவலைச் சொன்னபோது காமராஜ் என்ன சொன்னார் என்றார். அதற்கு அவருடைய சம்மதத்துடன் தான் இங்கு வந்திருக்கிறோம் என்றதும் அப்படியானால் சரி ராஜாஜியைச் சந்தித்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.

1952இல் ராஜாஜி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர் போன்றவர்களுடைய கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு ராஜாஜி அமைச்சரவை அமைத்தார். சுயேச்சையாக இருந்த பி.பக்தவத்சலு நாயுடு போன்றவர்களும் துணை சபாநாயகர் பதவி பெற்று அரசுக்கு ஆதரவு தந்தார். இந்த நிலையில் தனி ஆந்திர கோரிக்கை வலுப்பெற்றது. ராஜாஜி மனதுக்குள் ஆந்திரம் பிரிந்து போவதில் சம்மதமுள்ளவராக இருந்தார். நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து, தமிழ்நாடு தனி மாநிலமாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. வெளியிட்டார். ராஜாஜியின் ஆதரவாளராக இருந்தும் அவர் இந்த கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

அப்போது சிலம்புச் செல்வரின் தமிழரசுக் கழகம் எனும் அமைப்பு காங்கிரசுக்குள் ஒரு அங்கமாகத்தான் செயல்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் தமிழ் மொழி, சுயாட்சி, தமிழ்நாடு பெயர் வைத்தல் போன்ற கோரிக்கைகளை வைத்து தமிழரசுக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வந்தது. காங்கிரசில் பல தமிழார்வம் கொண்ட தலைவர்களும் தமிழரசுக் கழகத்துக்கு ஆதரவாக இருந்து வந்த நிலை. ம.பொ.சி. ராஜாஜியின் ஆதரவாளர் என்ற வகையில் அவர் மீது சிலருக்குக் கோபமும் எதிர்ப்பும்கூட இருந்து வந்த நிலை.

ஆந்திரத்துத் தலைவர்கள் ஒற்றுமையாக ஒரே குரலில் தனி ஆந்திரத்துக்குக் குரல் கொடுத்து வந்த நிலையில் தமிழகத்தில் தமிழ்நாடு தனி மாநிலமாக பிரியவும், ஆந்திரர்கள் சென்னைக்கு உரிமை கொண்டாடுவதை எந்த விதத்திலும் அனுமதிக்கமுடியாது என்றும் ம.பொ.சி.யும் தமிழரசுக் கழகமும் மட்டும்தான் குரல் கொடுத்து வந்தது. டில்லியில் ஆந்திரத்துக் குரல் ஒலித்ததே தமிர தமிழன் குரல் ஒலிக்கவே இல்லை. இந்த நிலையில் ஆந்திரர்கள் சென்னையைத் தங்களுக்கு வேண்டுமென்று கோரிக்கை வைத்ததை டில்லி ஏற்றுக் கொண்டுவிடுமோ என்கிற நிலையில் ராஜாஜியின் ஆசியோடு ம.பொ.சி. சென்னையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற உறுதியான நிலையை எடுத்தார்.

ஆந்திரரின் தனி மாநில கோரிக்கையை அடுத்து ம.பொ.சி. தமிழனின் குரலை ஓங்கி இவ்வாறு ஒலித்தார்:

"மொழிவாரி மாகாணப் பிரிவினை சம்பந்தமாகத் தமிழர்களின் உணர்ச்சி ஆந்திரர்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. எனது தலைமையிலுள்ள தமிழரசுக் கழகம் பொதுத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தது என்றால், தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சி மொழிவாரி மாகாண பிரிவினையை அமல் நடத்துமென்று நம்பியதுதான் காரணம். இதில் ராஜாஜி அரசு தயங்கினால், ஒரு போராட்டத்தில் ஈடுபடவும் தமிழரசுக் கழகம் தயங்காது" (தினத்தந்தி 16-4-1952)

இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு காங்கிரசார் மனங்களில் இருந்ததெல்லாம் ஆந்திரம் பிரிந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பதுதான். ஆந்திராவில் கம்யூனிஸ்டுகள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கு வந்துவிட்டபடியால், ஆந்திரம் பிரிந்து போனால் கம்யூனிஸ்டுகளின் தொல்லை குறையும் என்பது ராஜாஜியின் கணக்கு. மேலும் ஓரளவுக்கு காங்கிரசில் கோஷ்டிகள் குறையும் என்றும் அவர் கணக்குப் போட்டார். திரு காமராஜ் இந்த விஷயத்தில் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் மதில் மேல் பூனையாக இருந்தார் என்கிறார் ம.பொ.சி.

இப்படி ஆந்திரப் பிரிவினை இழுபறியாக இருந்து கொண்டிருந்த நேரத்தில் பொட்டி ஸ்ரீராமுலு எனும் ஆந்திரத்து தெலுங்கு பேசும் காங்கிரஸ்காரர் தனி மாநிலம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். இவரை ஆந்திரத்தின் பெரும் தலைவர்களான டி.பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்றவர்கள் உடனிருந்து தூண்டிவிட்டனர். பல நாட்கள் உண்ணா விரதமிருந்த பொட்டி ஸ்ரீராமுலு ஒரு நாள் இறந்து போனார். காலாகாலத்தில் தனி ஆந்திர மாநிலம் பிரித்துக் கொடுத்திருந்தால் இது நேர்ந்திருக்காது. மொழிவழி மாநிலப் பிரிவுக்கு நேரு எந்த காலத்திலும் ஆதரவு தரவில்லை. பொட்டி ஸ்ரீராமுலு இறந்த செய்தி கேட்டு ஆந்திரம் வன்முறை பேயாட்டத்துக்கு ஆட்பட்டது. எங்கு பார்த்தாலும் வன்முறை, தீயிடல். பொதுசொத்துக்கள் நாசம். சில நாட்கள் வரை எந்தவித சட்ட ஒழுங்கும் இல்லாத பகுதியாக ஆந்திரம் விளங்கியது.

இதற்கு மாறாக பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தினால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை. சென்னையில் மட்டும் சிற்சில இடங்களில் போராட்டங்கள் நடந்தன, அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நிலைமை கட்டுகடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு 2-10-1953இல் தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் 1912-1952இல் அறிவித்தார். அதில் தெலுங்கு பேசும் மக்கள் வாழும் மாவட்டங்கள், சித்தூர் மாவட்டம் உட்பட ஒன்று சேர்த்து ஆந்திர மாநிலம் அமைக்கப்படும். சென்னை அதில் சேராது என்று பிரதமரின் அறிவிப்பு கூறியது.

இந்த அறிக்கையை பிரதமர் வெளியிட்ட பிறகு மீண்டும் சென்னை பிரச்சனை எழுப்பப்பட்டது. புதிதாக அமையும் ஆந்திர மாநிலத்தில் சென்னை நகரம் இருக்காது என்று நேருஜி உறுதியாகக் கூறியிருந்தாலும், ஆந்திரத்தின் தலைநகர் எது என்பது பிறகு முடிவாகும் என்றும் சொன்னதால், ஆந்திரர்களுக்கு சென்னையை எப்படியாவது தங்களுக்குக் கொண்டுவந்துவிட வேண்டுமென்கிற ஆசை வலுப்பெற்றது. "மதறாஸ் மனதே!" எனும் கூச்சலை இப்போது அவர்கள் மாற்றி கோஷமிட்டார்கள். எப்படி?

ஆந்திர காங்கிரஸ் தலைவர் டி.பிரகாசம் சொன்னார், சென்னை நகரத்தை முழுமையாக ஆந்திரத்துக்குக் கொடுக்காவிட்டாலும் கூவம் ஆற்றை மையமாக வைத்து தென் சென்னையைத் தமிழ்நாட்டுக்கும், வட சென்னையை ஆந்திரத்துக்கும் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றார்.

அப்படி செய்ய முடியவில்லை என்றால் சென்னை நகரை ஆந்திரம் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொதுநகரமாகச் செய்ய வேண்டும் பஞ்சாபுக்கும், ஹரியானாவுக்கும் சண்டிகர் இருப்பது போல என்றார்.

அதுவும் முடியாதென்றால் சென்னை நகரத்தைப் பிரதம கமிஷணரின் நேரடி கவனிப்பில் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்றார் டி.பிரகாசம்.

இந்த விஷயத்தைக் குறித்தும் ஆந்திரத்துக்கு எது தலைநகர் என்பதை தீர்மானிக்கவும் ராஜஸ்தான் மாநில நீதிபதி திரு வாஞ்சு என்பவர் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். வாஞ்சு ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வந்து பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். அவர் ஆந்திரம் போனபோது அங்கிருந்த அனைவரும் ஒருமுகமாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வாஞ்சுவிடம் அறிக்கை அளித்தனர். ஆனால் தமிழகத்தில் அந்தோ பரிதாபம் நம் கட்சியை எடுத்து வைக்க பலமான கூட்டணி அமையவில்லை. ம.பொ.சி. ஒருவர் மட்டும்தான் தனிக்குரல் எழுப்பினார். தி.க. தலைவர் பெரியார் சொல்லிவிட்டார் "சென்னை ஆந்திரத்தில் இருந்தால் என்ன, தமிழகத்தில் இருந்தால் என்ன, எங்கிருந்தாலும் திராவிடத்தில்தானே இருக்கப் போகிறது" என்று. தி.மு.க. அந்த நாளில் பெரிய அளவில் வளரவில்லை என்றாலும் பெரியாரைப் போல் கருத்துச் சொல்லவும் இல்லை, தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராடவும் முன்வரவில்லை, மெளனமாக இருந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அப்போது இருந்த திரு காமராஜர் ஆந்திரம் பிரிவதைப் பற்றியோ, சென்னை நகரம் யாருக்கு என்பதைப் பற்றியோ அப்போது எதுவும் சொல்லாமல் இருந்தார். அவருடைய மெளனத்தைப் பாராட்டி நீலம் சஞ்சீவ ரெட்டிகாரு சொன்னார், "திரு காமராஜரின் மெளனம் புத்திசாலித்தனமானது, பொருள் நிறைந்தது. மற்ற தமிழ்த் தலைவர்களும் அவரைப் பின்பற்ற வேண்டும்" என்றார். ஆந்திரத்துத் தலைவர்கள் சென்னை நகரில் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் போட்டுத் தங்கள் கட்சியை எடுத்துரைத்தனர். சென்னையில் ஆந்திர காங்கிரசாரின் மகாநாடும் நடைபெற்றது. ஆனால் தமிழர்களின் பக்கம் அசாத்திய மெளனம், அதன் இடையில் ம.பொ.சி. மட்டும் உரத்த குரல் எடுத்து தமிழ் நாட்டின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.

ம.பொ.சி. சொல்கிறார்:- "தமிழரிலே படித்த வகுப்பாரின் மனப்பான்மை எனக்கு வியப்பைத் தந்தது. அவர்கள் சென்னையில் ஆந்திரர் ஆதிக்கம் பெறுவதை விரும்பவில்லை. அந்த அளவு அவர்களுக்கு 'டமிலர்' உணர்வு இருந்தது. ஆனால், சென்னை நகரை கமிஷனர் பிரதேச்மாக - அதாவது மத்திய அரசின் நிர்வாகப் பிரதேசமாகச் செய்வதை மனதார விரும்பினர். இதற்குக் காரணம், வகுப்புவாரி பிரதிநிதித்துவமற்ற வகையில் உத்தியோகங்களும், மத்திய அரசு ஊதியப் படிகளும், உயர் சம்பளச் சலுகைகளும் கிடைக்கும் என்ற காரணம்தான்."

9-12-1952 அன்று சட்ட மேலவையில் ம.பொ.சி. கேட்ட கேள்வி ஒன்றுக்கு ராஜாஜி சொன்ன பதில் இது:--

"சென்னை நகரம் தமிழ்நாட்டுடன் சேர்ந்த பகுதி. சென்னை நகர மக்களும், அந்நகருக்கு வடக்கே வெகுதூரம் வரை வசிப்பவர்களும் தமிழர்களே. ஆகவே சென்னை நகரைத் தமிழ்நாட்டிலிருந்து பிரித்துத் தனி நிர்வாகத்தின் கீழ் வைக்க முடியாது. சென்னையைத் தனி ஆந்திர ராஜ்யத்தின் தலைநகராகவும் செய்ய முடியாது. சென்னை நகர நிர்வாகம் பற்றிப் பேசவும் நிபந்தனைகள் விதிக்கவும் ஆந்திரர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. சென்னை நகரத்தின் ஜனத் தொகையில் நூற்றுக்கு அறுபத்தியெட்டு பேர் தமிழர். பதினான்கு சதவீதம் பேர் தெலுங்கர். சென்னை நகரம் பற்றிய கோரிக்கையையும் அதன் எதிர்காலம் பற்றி எழுப்பப்பட்டுள்ள நிபந்தனைகளையும் கைவிடும் பக்ஷத்தில் தனி ஆந்திர அரசி நிறுவ ஆந்திர நண்பர்களுடன் சேர்ந்து நானும் பாடுபடத் தயார்"

இப்படிப் பேசி தன்னுடை கருத்தை வெட்டவெளிச்சமாக்கினார் ராஜாஜி. சென்னை தமிழருக்குத்தான், ஆந்திரருக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது என்பதை ராஜாஜி சட்டசபையில் அறிவித்தார்.

சென்னை நகருக்கு அப்போது மேயராக இருந்தவர் டி.செங்கல்வராயன். ஆல்டர்மேன் எனும் பதவியில் இருந்தவர் ம.பொ.சி. இவ்விருவரும் சென்னை நகரை ஆந்திரத்துக்குக் கொடுக்க கடுமையான போராட்டங்களை நடத்தினர். தெருத்தெருவாக டி.செங்கல்வராயனும், தமிழரசுக் கழகத் தொண்டர்களும் போர் முழக்கம் செய்து "தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினர். இந்த முழக்கத்தை முதலில் ம.பொ.சி. சென்னை மாநகராட்சி மன்றத்தில் உணர்ச்சிகரமாகப் பேசும்போது முழங்க, அப்போது வெளியில் நின்ற ஆயிரக்கணக்கான தமிழர்களும் முழக்கம் செய்தபின் இந்த கோஷம் பிரபலமாகியது.

மேயர் டி.செங்கல்வராயன் அவர்கள் சென்னை கடற்கரையில் 16-3-1953 அன்று கட்சி சார்பற்ற ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அந்த கூட்டத்தில் பேச பெரியார் ஈ.வே.ராவை அழைக்கும்படி ராஜாஜி கூறினார். அவர்தான் சென்னை எங்கு இருந்தால் என்ன திராவிடத்தில்தானே இருக்கிறது என்கிறாரே என்று ம.பொ.சி. சொன்னதன் பிறகு ராஜாஜி நான் அழைத்ததாகக் கூப்பிடுங்கள் இந்தக் கூட்டத்தில் அவர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று சொல்லுங்கள் வருவார் என்றார்; அதன்படியே அவரும் அந்தக் கூட்டத்துக் வந்து பேசினார். அந்தக் கூட்டத்தில் பெரியார் தவிர, ம.பொ.சி.. சட்டநாத கரையாளர், மீனாம்பாள் சிவராஜ், எஸ்.முத்தையா முதலியார், எம்.பக்தவத்சலம் ஆகியோர் பேசினர். அன்றைய தினம் திரு காமராஜ் சென்னையில் இல்லை, மதுரையில் இருந்தபடி ஒரு அறிக்கையில், "சென்னை நகரிலே ஆந்திரருக்கு எந்தவிதமான பங்கு தந்தாலும் சரி, இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரும் கிளர்ச்சி மூண்டெழும்" என்று அறிக்கை வெளியிட்டார்.

சென்னை நகரைக் காப்பதற்காக நடைபெறும் இவ்வகை போராட்டங்கள் மட்டும் போதாது என்று ம.பொ.சி. தம் தமிழரசுக் கழகத்தின் இரண்டாவது மாநில மகாநாட்டைத் திருவல்லிக்கேணியில் 1953 ஜனவரி 24, 25 தேதிகளில் நடத்தினார். ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.போ.மீனாட்சிசுந்தரனார், எம்.ஏ.முத்தையா செட்டியார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் உடல்நலம் கெட்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பேசினார். அவர் சொன்னார்:- "சென்னை, தமிழகத்தின் உட்பகுதி. தமிழருக்குச் சொந்தமானது. சிவஞானம் சென்னையைக் காப்பார், தமிழக எல்லைகளையும் மீட்பார் -- நம்புங்கள்" என்று சொல்லிவிட்டு ம.பொ.சி.யை அணைத்துக் கொண்டு வாழ்த்தினார். பின்னர் ஒருசில நாட்களில் அவர் காலமாகிவிட்டார்.

அரசியல் மகாநாடு ஒரு நாளும், மாணவர் மாநில மகாநாடு ஒரு நாளும் நடந்தது. மாணவர் மகாநாட்டை முன்னின்று ஏற்பாடு செய்தவர் திரு ஜி.சுவாமிநாதன், தஞ்சையில் பார்ம் ப்ராடக்ட்ஸ் நிருவன அதிபர் அவர். மாநிலங்கள் அவை துணைத் தலைவராகவும் இருந்தவர். சுதந்திரா கட்சி, அதிமுக ஆகிய கட்சிகளிலும் இருந்தவர் இவர்.

தமிழரசுக் கழக மகாநாட்டில் சென்னை நகரை ஆந்திரத்துக்குக் கொடுப்பதோ, நகரைப் பிளந்து இருவருக்கும் கொடுப்பதோ, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்துக்குப் போவதோ கூடாது, மீறி நடவடிக்கை எடுத்தால் தமிழரசுக் கழம் போராட்டத்தில் ஈடுபடும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த மகாநாட்டுத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் அனைத்தும் வரவேற்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "ஜனசக்தி" எழுதியதன் ஒரு பகுதி இது:

"தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" கடைசி தமிழன் உயிருள்ளவரை எமது உரிமைகளை விடோம். வீரப் பரம்பரையை மறவோம். வீறுகொண்டு எழுவோம். தமிழ்த்தாயைப் பாதுகாப்போம் என்ற வீரமிக்க கோஷங்கள் தமிழரசுக் கழக மகாநாட்டில் விண்ணைப் பிளந்தன. தமிழ் ஆர்வமும், ஆவேசமும் கரை புரண்டு ஓடின. உரிமைக்காக தலைநிமிர்ந்து, மார்பு காட்டி நிற்கும் தமிழனைக் கண்டு பூரிப்படையாதவர் யார் இருக்க முடியும்?"

இப்படி ஜனசக்தியில் எழுதியவர் அமரர் ஜீவா.

இந்த நிலையில் நீதிபதி வாஞ்சு டில்லியில் தனது அறிக்கையைக் கொடுத்தார். அதில் ஆந்திராவின் இடைக்கால தலைநகர் சென்னையில் இருக்கும் என்றும், தமிழ்நாடு ஆந்திரம் இரண்டுக்கும் ஒரே கவர்னர் இருப்பார் என்றும், இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே நிதிமன்றம் இருக்குமென்றும் அதில் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

இந்த செய்தியைக் கேள்விப் பட்டவுடன் ராஜாஜி கிளம்பி டில்லி சென்றார். நேருவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம் ராஜாஜி சொன்னார்:-

"சென்னை நகரத்தில் ஆந்திரருக்கு இடம் தருவதென்று மத்திய அரசு முடிவு எடுப்பதானால் அதனை அமல் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கு இல்லை. அந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் பிரதமரிடம் கூறிவிட்டேன்" என்றார். இதற்கிடையே எம்.ஏ.முத்தையா செட்டியாரைச் சந்தித்து ம.பொ.சி. தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான தந்திகளை இந்திய அரசின் உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். தனி நபர்கள் தவிர, அமைப்புக்கள், கட்சிகள் என்று பல தரப்பாரும் இந்த தந்திகளை அனுப்பினர். ஒரு கட்டத்தில் லால் பகதூர் சாஸ்திரி தலைவர் காமராஜிடம் சொன்னார், "உங்கள் தமிழ் நாட்டுக் காரர்கள் என்னைத் தந்திகளாலேயே மூழ்கடித்துவிட்டனர். இத்தனை எதிர்ப்பு இருப்பதால் யோசனையை மறுபரிசீலனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை".

இதெல்லாம் நடைபெற்று சில நாட்கள் கழிந்தபின் பிரதமர் நேரு மத்திய அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரிடம் "சென்னை மாநகராட்சியே ஒரு கண்டிப்பான தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறபோது, அதற்கு மாறாக நாம் எதுவும் செய்ய முடியாது" என்று சொல்லியிருக்கிறர். இறுதியாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு அதிகாரபூர்வமான ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில்

1-10-1953 அன்று தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும்.

ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர மாநிலத்தின் எல்லைக்குள் இருக்கும்.

ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி எந்த ஊரில் தலைநகர் வரும் என்பதை முடிவு செய்து கொள்ளட்டும்.

அப்போது ஐதராபாத் ஆந்திரத்துடன் இல்லையென்பதால், ஐதராபாத் நகர் இவர்கள் ஆலோசனையில் இல்லை. ஆனால், தெலுங்கானா பகுதிகள் இணைந்தவுடன் நாங்கள் ஐதராபாத் போய்விடுகிறோம், அது வரையில் சென்னையில் இருக்க அனுமதிக்க வேண்டுமென்று டி.பிரகாசம் ம.பொ.சியிடம் வேண்டுகோள் ஆரம்பத்திலேயே விடுத்தார், எனினும் ம.பொ.சி. அதற்குச் சம்மதிக்கவில்லை.

(இதன் பின் என்ன நடந்தது என்பதை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்க்கலாம்)
1 comment:

  1. எல்லாவிதமான உள்குத்து வேலைகளையும் அந்த நாளிலேயே செய்திருக்கின்றனர். எனினும் சிலம்புச்செல்வர் அவர்களின் உழைப்பு பெருமதிப்புக்குரியது.

    ReplyDelete

You can give your comments here