பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 16, 2013

நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா.


            நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா.

கரூர்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரம்மேதிரர் 99ஆவது ஆராதனை விழா, இலட்சார்ச்சனையுடன் நேற்று முன் தினம் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம் நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் அருகே உள்ள நெரூர் அக்ரஹாரத்தில் ஆண்டு தோறும் சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் ஆராதனை விழா நடந்து வருவது வழக்கம். நடப்பாண்டில் ஆராதனை விழா நேற்று காலை 8 மணிக்கு இலட்சார்ச்சனையுடன் விழா துவங்கியது.

நேற்று முந்தினம் காலை 11-30 மணிக்கு நெரூர் அக்ரஹாரத்திலிருந்து சதாசிவ பிரம்மேந்திரரின் உருவப் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அவருடைய ஜீவசமாதியில் வைத்து இலட்ச்சார்ச்சனை செய்யப்பட்டது.

தொடர்ந்து மகன்யாச அபிஷேகம், வேத பாராயணம் ஆகியவை நாள்தோறும் நடந்தது. வரும் 19ஆம் தேதி வரை நாள்தொறும் இலட்ச்சார்ச்சனை நடக்கும்.

வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் 99ஆவது ஆராதனையை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் சதாசிவ பிரம்மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை உத்சவமும், ஸந்தர்ப்பனையும் நடந்து வருகிறது. ஆராதனையன்று ஸ்ரீ சுவாமிகளின் திருவுருவப் படம் அக்ரஹாரத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஜீவசமாதியை அடைந்து அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறவிருக்கிறது.

அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு அக்ரஹாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அக்ரஹாரத்தின் நடுவில் காவிரியிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஓடுகிறது. இருபுறமும் வரிசையாக வீடுகள் இருக்கின்றன. வாய்க்காலின் இரு கறைகளிலும் வீடுகளுக்கு முன்னால் இரு வரிசையாக இலை போடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது. சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த இலைகளில் பக்தர்கள் அங்கப் பிரதக்ஷணம் செய்துவிட்டு வாய்க்காலில் மூழ்கி எழுவார்கள். சதாசிவ பிரம்மேந்திரரின் கீர்த்தனைகளை இசை வல்லுனர்கள் பாடிக் கொண்டிருப்பார்கள்.

ஆராதனை விழாவில் நடத்தப்படும் அன்னதானத்தின் போது, பக்தர்கள் சாப்பிடும் இலைகளில் ஏதேனுமொன்றில் யாருடைய உருவத்திலாவது ஸ்ரீ சுவாமிகள் வந்து அமர்ந்து உணவு அருந்துவதாக ஒரு நம்பிக்கை. அது எந்த இலை என்பது தெரியாததால் பக்தர்கள் ஒட்டுமொத்தமாக எல்லா இலைகளிலும் உருண்டு அங்கப் பிரதக்ஷணம் செய்து ஸ்ரீ சுவாமிகளின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறார்கள். இந்த அங்கப் பிரதக்ஷண நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. சாப்பிடுபவர்கள் தவிர அங்கு இந்த கோலாகல நிகழ்ச்சிகளைக் காண ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருப்பார்கள்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் சபா, சத்குரு சதாசிவ பிரம்மேந்திர சேவ டிரஸ்ட் ஆகியவைகள் கவனித்து வருகின்றனர்.

ஆனால், இந்த ஆண்டு அந்த வாய்க்காலில் சொட்டு நீர்கூட கிடையாது. காவிரியும், வாய்க்காலும் வறண்டு கிடப்பதால் பக்தர்களுக்கு ஏமாற்றம். ஒரு பழமொழி உண்டு, "புருஷன் அடிச்சாலும் அடித்தான், பெண்டாட்டி கண்ணிலிருந்த புளிச்சையெல்லாம் போச்சு" என்று காவிரியும் வாய்க்காலும் வரண்டாலும் வரண்டது. வாய்க்காலை தூர்வாரியா ஆற்றில் தண்ணீர் வரும்போது நீரோட்டம் சீராக அமைய அதனை சீரமைக்கும் பணியை நெரூர் தென்பாகம் பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் புலம்புவது, கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற வறர்சியைக் காவிரி இங்கு கண்டதில்லை என்பதுதான். காலம் மாறும், வறட்சி தீரும். அந்த மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அருள் மழை இருந்தால் வான்மழை பொய்யாமல் பொழியும், ஆறுகள் கரைபுரண்டு ஓடும். நாடு வளம்பெறும். இதற்காக இந்த ஆராதனை நாளில் அந்த மஹானைப் போற்றி வணங்குவோம் வாரீர்.

செய்தி: நன்றி 'காலைக்கதிர்' நாளிதழ் 17-5-2013.

2 comments:

  1. காலம் மாறும், வறட்சி தீரும். அந்த மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அருள் மழை இருந்தால் வான்மழை பொய்யாமல் பொழியும், ஆறுகள் கரைபுரண்டு ஓடும். நாடு வளம்பெறும். இதற்காக இந்த ஆராதனை நாளில் அந்த மஹானைப் போற்றி வணங்குவோம்

    ReplyDelete
  2. மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் நல்லருள் புரிவார்.வான்மழை நல்லவிதமாக பொழியும். ஆறுகள் கரை புரண்டு ஓடி - நாடு மீண்டும் வளம்பெறும்.

    ReplyDelete

You can give your comments here