பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 7, 2013

தஞ்சை சரபோஜி மன்னரின் மரணம்

"தஞ்சையை ஆண்ட‌ மராத்திய மன்னர்கள் வரலாறு" எனும் தலைப்பிலான எனது புத்தகம் தஞ்சை அனன்யா பதிப்பகம் விரைவில் வெளியிடவிருக்கிறது. அந்த நூலைப் படிப்பதற்கு முன்பு ஒரு சிறு முன்னோட்டமாக இந்தக் கட்டுரை. மாமன்னன் சரபோஜி மீது மக்கள் வைத்திருந்த அன்பை, மரியாதையை ஒரு வெள்ளைக்கார அதிகாரி நேரில் பார்த்து உணர்ந்த வகையில் படித்து அறிந்து கொள்ளலாம்.


தஞ்சை சரபோஜி மன்னரின் மரணம்


தஞ்சை மராத்திய மன்னர்கள் வரிசையில் கலை, இலக்கியம், இசை, மருத்துவம் ஆகிய சகல துறைகளிலும் ஆர்வம் காட்டி செயற்கரிய சாதனைகளைப் படைத்தவரும், பன்மொழி பயின்ற நாகரிகம் நன்கு தெரிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டு அதிசயிக்கத்தக்க பண்பாடு படைத்த மன்னர் சரபோஜி 1832ஆம் வருஷம் மார்ச் மாதம் 8ஆம் தேதி தஞ்சாவூரில் காலமானார்.

இவர் இறப்பதற்கு முன்னதாக சில நாட்கள் உடல்நலம் கெட்டு படுத்த படுக்கையாக இருந்தார். இவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த போதுகூட இவருடைய கம்பீரமும், மரணத்தைக் கண்டு அஞ்சாத தைரியமும், மனோதிடமும் வெளிப்பட்டதாக ஆங்கில ரெசிடெண்ட் குறிப்பிடுகிறார்.

மன்னர் சரபோஜி காலமானபோது தஞ்சைக்கு ஆங்கிலேயர்களின் சார்பில் தற்காலிக ரெசிடெண்டாக இருந்தவர் ஜே.பிளாக் பர்ன் என்பவர். மன்னர் காலமான செய்தியை சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த ஆங்கிலேய முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடும் செய்திகள் படிக்க சுவாரசியமானவை.

ரெசிடெண்ட் பிளாக் பர்ன் எழுதிய கடிதத்தில் மன்னர் 8-3-1832 அன்று விடியற்காலை 4 மணிக்குக் காலமானார் என்கிற செய்தியை அறிவித்துவிட்டு மரணத்துக்கு முன்பு 18 மணி நேரம் அவர் மரணத்தோடு போராடினார் என்றும் குறிப்பிடுகிறார். அந்நாளைய வழக்கப்படி மன்னர் இறந்து போனதும், அவருடைய மனைவிமார்களும் அவர் சிதையில் வீழ்ந்து தங்களையும் மாய்த்துக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அதன்படி மன்னர் சரபோஜியின் மனைவி தானும் மன்னன் உடலுடன் உடன்கட்டை ஏறப்போவதாக முடிவு செய்திருந்தார். இந்த செய்தி ரெசிடெண்ட் பிளாக் பர்னுக்குக் கிடைத்தவுடன், இந்த நிகழ்வை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டுமென்று படாத பாடு பட்டிருக்கிறார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராணி கேட்பதாக இல்லை என்கிற நிலையில் அவர் ராணியிடம் சொன்னார்: மன்னர் தனக்குப் பின்னும் தன் மகன் சிவாஜிக்கு ரெசிடெண்டாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அப்படி தான் இங்கு இந்தப் பணியில் தொடரவேண்டுமானால் தங்கள் உடன்கட்டை ஏற அனுமதிக்க முடியாது. அப்படி நீங்கள் பிடிவாதமாக செய்வதாக இருந்தால் இந்தக் கணமே நான் ரெசிடெண்ட் பதவியை நீத்து ஊரைவிட்டு வெளியேறிவிடுவேன் என்றெல்லாம் சொல்லி ஒருவழியாக ராணியின் மனதை மாற்றி உடன்கட்டை ஏறும் முடிவை கைவிடும்படி செய்துவிட்டார்.

ரெசிடெண்ட் தவிர இளவரசன் சிவாஜி, சர்க்கில் பதவி வகிப்பவர், உற்றார், ஊரார் அனைவரும் ஒருசேர ராணி உடன்கட்டை ஏறுவதை தடுக்க படாதபட்டு கண்ணீர் சிந்தி அழுது வேண்ட இறுதியில் ராணியும் அனைவரின் விருப்பத்துக்கேற்ப உடன்கட்டை ஏறும் முடிவை கைவிட்டார். அப்போது ஊர் மக்களும், மந்திரி பிரதானிகள், உறவினர்கள் அனைவரும் மன்னரிடம் காட்டிய உண்மையான ஆத்மார்த்தமான அன்பையும் பரிவையும் கண்டு ரெசிடெண்ட் இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து போயிருக்கிறார்.

தஞ்சாவூர் ராணி, மன்னர் சரபோஜியின் பத்தினி உடன்கட்டை ஏறாமல் தடுக்கப்பட்டார் என்பது இனி எங்கும் யாரும் இப்படிப்பட்ட காரியத்துக்கு முயற்சி செய்ய மாட்டார்கள் என்பது கிழக்கிந்திய கம்பெனியர் இந்தக் கொடிய பழக்கத்தை நிறுத்த மிகுந்த பிரயத்தனப் பட்டு வருகிற நேரத்தில் தஞ்சாவூர் ராணியின் முடிவு ஏனைய ராணிகளுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்குமென வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள்.

ராஜாவின் இறுதி சவ ஊர்வலம் அரண்மனையை விட்டுப் புறப்படும் முன்பாக பல ஆங்கிலேயர்கள் புடைசூழ ரெசிடெண்ட் பிளாக் பர்ன் அரண்மனைக்கு வருகிறார். இறுதி யாத்திரையின் போது சவ ஊர்வலத்துடன் மயானபூமிக்குச் செல்ல தயாராக வந்திருக்கிறார்கள். அப்போது ரெசிடெண்டிடம் ஒரு செய்தி சொல்லப்பட்டது. மூத்த ராணி உடன்கட்டை ஏறுவதில்லை என்று ஒப்புக்கொண்டுவிட்ட போதும், மன்னரின் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்களில் ஆறு பேர் உடன்கட்டை ஏறுவது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. அப்படி அவர்கள் செய்வதற்கு முன் ரெசிடெண்டின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். அந்த பெண்கள் ராஜாவிடம் தாங்கள் அவர் இறந்தால் உடன்கட்டை ஏறப்போவதாக முன்கூட்டியே உறுதியளித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். அரண்மனை அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ஆங்கில அதிகாரி ரெசிடெண்ட் பெரிய ராணியையே தடுத்து நிறுத்திவிட்டதாகவும் சொல்லிய பிறகும் அவர்கள் நம்ப மறுத்துவிட்டனர். வேறு வழியில்லாமல் ரெசிடெண்ட் பிளாக் பர்ன் அந்தப் பெண்கள் வதியும் அந்தப்புறத்தின் வாயிற்படியருகில் தன்னை அவர்கள் பார்க்கும் வகையில் சென்று நின்றுகொண்டு, பலசொல்லி அவர்களை கஷ்டப்பட்டு தங்கள் முடிவிலிருந்து பின்வாங்க வைக்க முயன்று பார்த்தார். விடாப்பிடியாக நின்ற அவர்களை அரண்மனை அதிகாரியான சிரஸ்ததாரைக் கொண்டு அச்சுறுத்தவும் செய்து கடைசியில் ஒரு வழியாக வழிக்கு வந்தனர், பெரிய ராணியைப் போல தாங்களும் உடன்கட்டை ஏறுவதில்லை என்று.

ராஜா என்கிற பதவிக்காகவோ, ஒரு சம்பிரதாயத்துக்காகவோ அல்லாமல் தஞ்சை மக்கள் கூட்டம் கூட்டமாக கண்ணீரும் கம்பலையுமாக வரிசையில் வந்து மன்னரின் உடலைப் பார்த்து கதறி அழுத காட்சியைக் கண்டு அந்த வெள்ளைக்காரர் வியந்து போய் நின்றார். எத்தனையோ ஐரோப்பிய மன்னர்களின் இறுதி யாத்திரைகளைக் கண்ட அவருக்கு இப்படிப்பட்ட உறவு இந்த அரசனையும் மக்களையும் பின்னிப் பிணைத்திருப்பதைக் கண்டு அதிசயப் பட்டிருக்கிறார்.

மாலை 6 மணிக்கு சவ ஊர்வலம் புறப்பட்டு ராஜாகோரிக்குச் சென்றது. கிட்டத்தட்ட 90,000க்கும் சற்று குறைவாக இருக்கலாம், மக்கட் கூட்டம் திரண்டு வந்திருந்தது, தங்கள் மன்னனை வழியனுப்ப. எரிதழல் மன்னனின் உடலை எரித்துக் கொண்டிருந்தது. அத்தனை மக்கள் கண்களிலும் கண்ணீர். என்ன உறவு இது அதிசயப்படுகிறார் வெள்ளைக்காரர்.

தஞ்சாவூர் கோட்டைக்குள் சுமார் 25,000 பேர் குடியிருந்திருப்பார்கள். அன்று அவர்கள் அத்தனை பேருமே ஒரு பருக்கைகூட உணவை உட்கொள்ளவில்லை. சுத்த பட்டினி, மன்னனுக்கு இரங்கள் தெரிவித்து. இப்படியும் ஒரு மன்னன் மக்கள் உறவா? மறுநாள் சஞ்சயனம், மன்னனின் சாம்பலைக் கரைக்க இளவரசர் சிவாஜி தலைமையில் அரண்மனை வாசிகள் வடவாற்றுக் கரைக்குச் சென்றார்கள். அங்கு சுமார் 30,000 பேர் கூடியிருந்த மன்னனுக்கு இறுதி அஞ்சலி செய்து கலைந்து சென்றார்கள்.

இத்தனைக்கும் மன்னன் சரபோஜிக்கு நிர்வாக உரிமைகளை ஆங்கிலேயர்கள் கொடுக்கவில்லை. அரண்மனை விவகாரங்களை மட்டுமே கவனித்துக் கொள்ளவும், சொத்துக்களை கவனித்துக் கொள்ளவும் அதிகாரம் இருந்ததே தவிர நாட்டு நிர்வாகம் பிரிட்டிஷ் அதிகாரிகள் கையில் இருந்தது. அப்படி இருந்தும் மக்களுக்கு அரசு - பிரஜை என்கிற உறவு இல்லாமல் மக்களோடு மக்களில் ஒருவராக கலை இலக்கியம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும், தோற்றத்திலும் அவர் அத்தனை பேரையும் கவர்ந்து வைத்திருக்கிறார். இப்படியொரு மன்னன் வாழ்ந்தது இந்த தஞ்சை பூமியிலே. அவனது வாழ்க்கை, சாதனைகள், அவன் விட்டுச்சென்ற பலதுறை பணிகள் இவைகள் எல்லாம் என்றும் இந்த பூமியில் அவன் பெருமையைச் சாற்றிக் கொண்டிருக்கும்.

2 comments:

 1. மராட்டியர் வரலாறு புத்தகமாக வெளி வரப்போவது குறித்து மகிழ்ச்சி. தாங்கள்
  அதனை கையெழுத்துப்பிரதியாகவே என்னிடம் அளித்துப் படிக்கச் செய்துள்ளீர்கள்.
  சுவையான‌ மொழி நடையும், அரிய தகவல்களும் கொண்ட நூல். பலரும் படிக்கக் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி.

  உடன் கட்டை ஏறுதல் என்பது அரச குலத்தில் மட்டுமே இருந்த வழக்கம்; குறிப்பாக மராட்டியரும்,ரஜபுத்திரர்களும் மட்டுமே அதனைக் கடைப்பிடித்து இருக்கிறார்கள்.சரபோஜியாரின் பட்டத்து ராணியைப்போல தடுத்து நிறுத்தப்பட்ட ராணிகளும் இருந்துள்ளன‌ர்.ராஜ மாதா என்ற பெயருடன் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர்.இராமாயணத்திலும், மகாபாரத‌த்திலும் இந்தக்கொடிய வழக்கம் இருக்க வில்லை.தசரதனுக்குப்பின்னர் 4 மனைவிகளும் வாழ்ந்தனர்.குந்தி,மாத்ரி
  ஆகியோரும் பாரதத்தில் விதவைகளாக வாழ்ந்தனர்.இடைக்காலத்தில் அந்நிய தேச அரசர்களிடம் அடிமையாக்கப் படலாம் என்ற தோல்விச் சூழலில் இந்த வழக்கம் வந்துள்ளது.

  ReplyDelete
 2. மராட்டியர் வரலாறு புத்தகமாக வெளி வரப்போவது குறித்து மகிழ்ச்சி. தாங்கள்
  அதனை கையெழுத்துப்பிரதியாகவே என்னிடம் அளித்துப் படிக்கச் செய்துள்ளீர்கள்.
  சுவையான‌ மொழி நடையும், அரிய தகவல்களும் கொண்ட நூல். பலரும் படிக்கக் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி.

  உடன் கட்டை ஏறுதல் என்பது அரச குலத்தில் மட்டுமே இருந்த வழக்கம்; குறிப்பாக மராட்டியரும்,ரஜபுத்திரர்களும் மட்டுமே அதனைக் கடைப்பிடித்து இருக்கிறார்கள்.சரபோஜியாரின் பட்டத்து ராணியைப்போல தடுத்து நிறுத்தப்பட்ட ராணிகளும் இருந்துள்ளன‌ர்.ராஜ மாதா என்ற பெயருடன் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர்.இராமாயணத்திலும், மகாபாரத‌த்திலும் இந்தக்கொடிய வழக்கம் இருக்க வில்லை.தசரதனுக்குப்பின்னர் 4 மனைவிகளும் வாழ்ந்தனர்.குந்தி,மாத்ரி
  ஆகியோரும் பாரதத்தில் விதவைகளாக வாழ்ந்தனர்.இடைக்காலத்தில் அந்நிய தேச அரசர்களிடம் அடிமையாக்கப் படலாம் என்ற தோல்விச் சூழலில் இந்த வழக்கம் வந்துள்ளது.

  ReplyDelete

You can give your comments here