பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 7, 2013

தமிழ் ஆண்டுகளின் பெயரை உள்ளடக்கி பாடல்

"சரபேந்திர பூபாலக் குறவஞ்சி"

இந்தப் பெயரில் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்பார் கி.பி.1830இல் மாமன்னன் சரபோஜி மேல் ஒரு குறவஞ்சி இலக்கியம் படைத்திருக்கிறார். பாட்டுடைத் தலைவன் சரபோஜி மன்னன். தமிழ்ப் பாடல் வகைகளில் பலவற்றைக் கொண்டு இதனை வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர். இசையோடு பாடி, நடித்துக் காண்பிக்கும் வகையில் இசை நாடகமாக இது உருவாகியிருக்கிறது. இந்த ஆண்டு இந்த நாடகத்தை தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் அரங்கேற அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்ட இந்த குறவஞ்சி இலக்கியத்தில் இங்கு நாம் பார்க்கப்போவது ஒரே ஒரு சிறப்பு மட்டும்தான். மற்றவற்றைத் தெரிந்து கொள்ள அந்த இலக்கியத்தைப் படித்துப் பாருங்கள். இங்கு நாம் சொல்லப்போகும் செய்தி மன்மதனை பிரஜா உற்பத்தி செய்பவன் என அழைத்து வரும் பகுதியில் தொடங்கி, தமிழ் ஆண்டுகள் 19 ஆண்டுகளின் பெயரை உள்ளடக்கி பாடல் இயற்றப்பட்டிருப்பதுதான். அந்தப் பகுதி இதோ.

"பிரபவனாகிப் பிரஜோற்பத்தி செய்கின்ற மன்மதா - இன்று
பேதையேன் றன்னைப் பரிதாபி யாக்கலென் மன்மதா
பரவுங் கடலினைத் துந்துபியாக் கொண்ட மன்மதா - நீயும்
பாவை மார்களுக்கு விரோதியா யினதென்ன மன்மதா
வானின் மேற் கொடுந் துன்மதியைக் குடையாக்கி மன்மதா - காற்றாம்
வடக்கோடுந் தேர்கொண்டா யிதுவென்ன காலயுத்தி - மன்மதா
மீனகே தனத்தினால் விஜயம் பெறலாமோ மன்மதா - யார்க்கும்
விக்ருதியா காதிருந்தான் மிகவும் ஜயமாமே மன்மதா
தேனார் மலரம்பால் ஆனந்த மடைகின்றாய் மன்மதா - சீறும்
திரவம் பொன்றுளதாயிற் பிரமாதி யாவையே மன்மதா
மானோர் கரமுற்ற ஈஸ்வரன் முன்னாளின் மன்மதா - உன்னை
வாட்டிய காலையிற் காட்டுங் குரோதியல்லை மன்மதா
தெரியுமிவ் வுலகத்திலெவர் கீலகத்தினால் மன்மதா - என்மேல்
சித்திரபானுவைப் போன் மெத்தவுங் காய்கிறாய் மன்மதா
சரபோஜி மகராஜர் தமைநான் மருவச் செய் மன்மதா - நீ
சர்வஜித்தாகி மேல் அக்ஷய னாகுவாய் மன்மதா."

இந்தப் பாடலில் பிரபவ, பிரஜோற்பத்தி, மன்மத, பரிதாபி, துந்துபி, விரோதி, துன்மதி, காளயுக்தி, விஜய, விக்ருதி, ஜய, ஆனந்த, பிரமாதி, ஈஸ்வர, குரோதி, கீலக, சித்திரபானு, சர்வஜித், அக்ஷய ஆகிய 19 வருஷங்களின் பெயர்கள் அமைந்திருக்கின்றன.

No comments: