அவற்றைத் தடுப்பதற்கான தீர்வுகளும்.
சமீப காலமாக பாலியல் வன்முறை நிகழ்ச்சிகள் செய்தித் தாள்களில் அதிகம் வெளியாகின்றன. இந்த குற்றத்தைப் புரிகின்றவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டுமென்று பலரும் பலவித கருத்துக்களைக் கூறி வருகின்றனர். மரண தண்டனை, ஆண்மை நீக்குதல், ஆயுள் தண்டனை இப்படிப் பலவிதம். திருவள்ளுவர் கூறுகிறார்: --
"நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
நோய் என்ன என்பதை அறிந்து கொண்டு, அது வந்ததற்கான காரணத்தை நன்கு ஆராய்ந்து பார்த்து, அதனை தீர்க்கும் வழிமுறைகளைத் தெளிவாக அறிந்து கொண்டு குணப்படுத்துதல் வேண்டும் என்பது இதன் கருத்து. அதை விடுத்து உணர்ச்சிகளினால் உந்தப்பட்டு, நடந்துவிட்ட கொடுமையான செயலுக்குப் பழி வாங்கும் உணர்வுக்கு இடமளித்து விட்டால், நோயின் மூலத்தைக் காணமுடியாமல் போய்விடும்.
கடுமையான தண்டனை வேண்டுமென முழக்கமிடுவோர் அனைவருமே, நோயின் மூலத்தை நாடி அதன் காரணத்தை அறிந்து, எப்படி, எதனால் குணப்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை. எல்லா ஊடகங்களிலும், மக்கள் வெளியிடும் கருத்துக்களிலும் பழிவாங்கும், தண்டிக்கும் வேகம் மட்டும் காணப்படுகிறது. விவேகத்துடன் இந்த விஷயத்தை ஆய்ந்து, ஆழமாகச் சிந்தித்து, தான் வெளியிடும் கருத்துக்களுக்கு எதிர்ப்பு இருக்கும் என்பதையும் உணர்ந்து, சமுதாயப் பொறுப்புணர்ச்சி மிக்க தன் அனுபவத்தின் வழிகாட்டுதலோடு உயர்திரு MJF.Lion.Agri கே.முத்தையன் (ஆசிரியர், 'கோமுகிக் கல்வி" மாதப்பத்திரிகை ஆசிரியர்) தன் பத்திரிகை தலையங்கத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். Saner Voice என்று குறிப்பிடக்கூடிய அவரது கருத்தினை உணர்ச்சிகளால் உந்தப்படாமல் நிதானமாக நடுநிலைமையோடு ஆராய்ந்து பார்த்தால் அவரது ஆதங்கம் நமக்குப் புரியும். வயதில் மூத்தவர், அரசுத் துறையில் நீண்ட கால அனுபவம் மிக்கவர், எழுத்தாளர், பத்திரிகையாளர், இளைஞர்களுக்கு நல்வழிகாட்டிட "எதைக் கற்கலாம், எங்கு கற்கலாம்" என்பதை வழிகாட்டும் நெறியாகக் கொண்டவர், அத்தகைய நல்லவர் சொல்லும் கருத்துக்களைப் படியுங்கள். சுற்றிலும் கேட்டுக் கொண்டிருக்கும் காட்டுக் கூச்சலுக்கிடையில், ஒரு அமைதியான அறிவுரையை அவர் இங்கு வழங்கியிருக்கிறார். இனி அவரது கட்டுரையைப் படியுங்கள்.
நன்றி:-- "கோமுகிக் கல்வி" தமிழ் மாத இதழ், ஏப்ரல் 2013 இதழ்.
"பாலியல் அறிவு"
அன்பானவர்களே!
"கண்ணிரண்டும் இமையாமல் செந்நிறத்து
மெல்லிதழ்ப் பூங்கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்
கோவிந்தா பேணினோர்க்கு
நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா நாளும்
எண்ணிரண்டு கோடியிலும் மிகப்பலவாம்
வீண்கவலை எளியனேற்கே"
இன்றைய நாளேடுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எதைப் படித்தாலும், பார்த்தாலும் 'எங்கெங்கும் காணினும் பாலியல் வன்முறையடா" என்று பாரதி பாடும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பாலியல் வன்முறையால் பல மாணவிகள், குறிப்பாக கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகள் பாதிக்கப்பட்டு உயிர் துறந்து விட்டதை இந்த உலகம் ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்து வருகிறது. அதன் வெளிப்பாடாக பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆண்களுக்குத் தங்குந்த தண்டனை தரவேண்டும் என்றும் அதில் முக்கியமானது மரண தண்டனை, ஆண்களை மலடாக்குவது, ஆண்மை நீக்குவது என்று பல்வேறு குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. நீதித்துறையில் ஒரு கமிஷன் அமைத்து அதற்கான தீர்ப்புகள் என்றும், அவற்றை சட்டமன்ற, பாராளுமன்ற அவைகளில் விவாதிக்கப்பட்டு சட்டமியற்றி தகுந்த தண்டனை வழங்கிட வேண்டும் என்றும் ஒருமித்த குரலில் இந்தியாவில் வாழும் 120 கோடி மக்களில் சரிபாதியாக வாழும் பெண்கள் வீரக்குரல் எழுப்பி வருகின்றனர்.
நிச்சயமாக குற்றம்செய்தவன் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில் எந்தவிதக் கருத்து வேறுபாடுகளும் கிடையாது. ஆனால் இத்தகையக் குற்றங்கள் சமீபத்திய இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் அதிலும் மிகக் குறிப்பாக 2012இல்தான் மிக அதிகமாக நடைபெற்றுள்ளது என்பதை புள்ளி விவரங்களைப் பார்த்தால் தெரியும். அப்படியானால் எப்படி? ஏன்? எதற்காக? இத்தகைய குற்றங்கள் இந்த ஆண்டுகளில் நடைபெற்றன? இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? குற்றம் நடைபெற யார் காரணம்? இதைப் பற்றி இந்திய நாட்டில் எவருமே சிந்தித்ததாகத் தெரியவில்லை.
ஒரு குற்றம் நடைபெறுகிறது என்றால் அதில் இரண்டு பேர் சம்பந்தப்பட்டுள்ளார்கள். ஒருவர் குற்றம் செய்தவர். இரண்டாமவர் குற்றம் செய்திடத் தூண்டியவர். இதில் யார் பங்கு அதிகம்? என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு திருடன் திருடுகிறான் என்றால் எல்லா வீடுகளிலும் அவன் திருடுவதில்லை என்பதை முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தன்னிடமுள்ள செல்வச் செருக்கை அதீத பெருமையோடு தனது செல்வாக்கையும், செல்வத்தையும் பிறர் அறிந்து தன்னிடம் மரியாதையுடன், பணிவுடன் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனப்பான்மையுடன் வெளிக்காட்டிடும்போது திருட எண்ணுபவனுக்குத் தெளிவாகப் புரிகிறது. இந்த வீட்டில் திருடினால் தனக்குப் பெரும் பொருள் கிடைக்கும் என்பதாலேயே அந்தப் பணக்காரத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய வீட்டில் மட்டுமே திருடுகிறான். எனவே திருட வேண்டிய சூழ்நிலையை அந்த வீட்டாரே ஏற்படுத்தித் தருகின்றனர்.
பாலியல் வன்முறை என்பதும் ஒரு திருட்டுதான். இது ஏன் நடக்கிறது? நமது வாழ்வியல் முறைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் இது தெளிவாக விளங்கும். அதை பிறப்பிலிருந்து ஆரம்பிப்போம். மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்ட பிறகு பிரசவத்துக்காக அவளை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடிவிடுவார்கள். வெளியே கணவன், கணவனின் தாய், தந்தை, மனைவியின் தாய், தந்தை, இன்னும் சில உறவினர்கள் காத்து நிற்கின்றனர். மருத்துவம் பார்க்கும் செவிலியர்கள் அறையைத் திறந்து கொண்டு வெளியே அவசரமாகச் சென்று சில மருந்துகளும், உபகரணங்களும் எடுத்துக் கொண்டு ஓடுவார்கள். வெளியே நிற்கும் உறவினர்கள், "என்ன நர்சம்மா? எப்படி இருக்கிறது?" என்று ஆதங்கத்தோடு கேட்டால், "சும்மா இருங்க, அவசரம்" என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள். அப்போது காத்திருக்கும் உறவினர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
அரைமணி நேரம், ஒருமணி நேரம் கழித்து சிரித்த முகத்துடன் ஒரு செவிலியர் வந்து சுகப் பிரசவம் நடந்து விட்டது. தாயும் சேயும் நன்றாக இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு உள்ளே சென்று விடுவார்கள். பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து குழந்தையை மட்டும் எடுத்துவந்து காட்டுவார்கள். எல்லோரும் ஆனந்தமடைவார்கள்.
எப்படி பிறந்த குழந்தையைக் காட்டுவார்கள்? ஆண் குழந்தையாக இருந்தால் உடம்பில் ஒரு பொட்டு துணிகூட இல்லாமல் கையில் எடுத்து வந்து உங்கள் மகனை, பேரனைப் பாருங்கள் என்று காட்டுவார்கள். அதுவே பெண் குழந்தையாக இருந்தால் உடம்பு முழுவதும் மூடி முகத்தை மட்டும் காட்டி உங்கள் மகள், பேத்தி என்று காட்டுவார்கள். பிறந்து ஒரு மணி நேரமே ஆன ஒரு பெண் குழந்தையை அவனது தகப்பன், தாத்தா என்ற ஆண்கள்கூட வெறும் முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு ஆண் குழந்தையை நிர்வாணமாக எடுத்து வந்து காட்டுகிறார்கள். இந்த உண்மையை எவராவது மறுக்க முடியுமா?
பிறந்தது ஆண் குழந்தை என்றால் வம்ச விருத்திக்கு வாரிசு பிறந்துள்ளது என்பர். பெண் குழந்தை என்றால் நம்ம வீட்டுக்கு மகாலட்சுமி வந்துவிட்டாள் என்று கூறுவர். பிறந்தது ஆண் குழந்தை என்றால், அத்தை பாட்டி என்ற உறவுகள் குழந்தையைப் பார்த்து, "பார், அப்பன் மாதிரியே திருட்டு முழி முழிக்கிறான்" என்று பாசத்துடன் பரிகசிப்பர். அதுவே பெண் குழந்தை என்றால், "ஆகா, எத்தனை லட்சணம். அந்த மகாலட்சுமியேதான்" என்பர். பிறந்தது ஆண் குழந்தையென்றால் பெற்ற தகப்பன் அந்தக் குழந்தையை "டேய், படவா, குறும்பா செய்கிறாய்" என்பான். பெண் குழந்தையை "அம்மா, கண்ணு, என் செல்வம்" என்பான். இதுபோன்ற ஏராளமான நமது பண்டைய கால கிராம மக்களிடம் இருந்த பண்புகள் இன்றும் நடக்கின்றன.
ஒரு ஆண் குழந்தை ஆறு வயதானாலும் சரி அவன் தெருவில் நிர்வாணமாக ஓடினால், மக்கள் அதனை பொருட்படுத்த மாட்டார்கள். அவனே வளர்ந்த பிறகு ஒழுக்கக் கேட்டினால் மது அருந்தி அல்லது வேறு காரணங்களால் தெருவில் ஆடையின்றி வீழ்ந்து கிடந்தாலும்கூட யாரும் கவலைப் படமாட்டார்கள். ஆனால் அதுவே பெண் குழந்தையாக இருந்தாலோ, குமரியாக இருந்தாலோ, கிழவியாக இருந்தாலும் கூட ஆடை சற்று விலகிவிட்டால், இந்த சமூகமே திடுக்கிட்டுப் போகும். இது ஏன்? (என் குறிப்பு: முன்பெல்லாம் பெண் குழந்தைகள் ஒருவயது வரை, அரைஞாண் கயிற்றில் ஆலையிலை எனும் வெள்ளியினால் ஆன தகட்டைத் தொங்கவிட்டு மறைத்து வைப்பார்கள்).
பெண் என்பவள் ஒரு புதிர். தெய்வீகத் திருவுரு. இறைவனால் படைக்கப்பட்ட ரகசியங்கள் நிறைந்த ஒரு உருவம். ஒரு பெண்ணின் உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை யார் அறிவார்? ஒரு பெண்ணை உடையில்லாமல் பார்க்கக்கூடிய உரிமை அவளது தாய், தாய்க்குப் பிரசவம் பார்த்த செவிலியர், அதன்பின் திருமணம் ஆனபின் அவளது கணவன். இவைகூட மூன்றாமவர் பார்க்க முடியாத நிலையில் ரகசியமாகத்தான் முடியும். அத்தகைய கட்டுப் பாட்டுடன் நமது முன்னோர்கள் நம்மை வளர்த்தார்கள். கட்டுப்பாடு என்ற அன்புப் போர்வைக்குள் குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். அதனால் பாலியல் குற்றங்கள் 1960க்கு முன்பாக இல்லவே இல்லை என்றுகூட சொல்லலாம்.
1960, 70 ஏன் 1980 வரை என்றுகூட சொல்லலாம். பெண்கள் உடலை முழுமையாக மூடி வெளியே வந்தார்கள். பள்ளி செல்லும் மாணவி தலையைப் பின்னி சடை போட்டுக் கொண்டு பாவாடை, தாவணி, ஜாக்கெட் என்று உடலை மறைத்துக் கொண்டு செல்வார்கள். வீட்டுப் பெண்கள், வேலைக்குப் போகும் பெண்கள், புடவை, ஜாக்கெட் என்று உடலைப் போர்த்தி மூடி வைத்துக் கொண்டு போனார்கள். ஆண்களுடன் சரிசமமாகப் பேசினார்கள், பழகினார்கள், விளையாடினார்கள், பணிபுரிந்தார்கள். அப்போதெல்லாம் பாலியல் குற்றங்கள் நடைபெறவே இல்லையே ஏன்?
ஆனால் இன்று, முக்கால் பாகம் உடலை மூடியபடி ஒரு பெண் அலுவலகம் சென்றால் அவளுக்கு மற்றவர்கள் தரும் பெயர் 'பட்டிக்காடு'. முக்கால் பாகம் உடலை மூடி ஒரு பெண் பள்ளிக்கு, கல்லூரிக்குச் சென்றால் சக மாணவியர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் அளவே கிடையாது என்பதால் இன்று திறந்து காட்டுவதைப் பெண்கள் பெருமையாகவே எண்ண ஆரம்பித்து விட்டார்கள். எவ்வளவு அதிகமாகத் திறந்து காட்டுகிறோமோ அவ்வளவும் பணமாகிறது. திறந்து காட்டிய உடையோடு சென்றால்தான் ஸ்டார் ஓட்டல்களில், விமான நிலையங்களில், மென்பொருள் அலுவலகங்களில், வேலை என்ற நிலையை பெண்களாக முன்வந்து பணத்துக்காக மாறிய பின்பு ஆண்களின் நிர்ப்பந்தம் என்று குறைகூற ஆரம்பித்து விட்டார்கள்.
1940லிருந்து 70 வரை என்றுகூட சொல்லலாம், திரைப்படங்களைப் பாருங்கள். கதாநாயகி உடலை முழுமையாக மறைத்தபடியேதான் கதாநாயகனுடன் ஆடினார்கள், பாடினார்கள். இன்றோ ரிப்பன் கட்டிக் கொண்டு (அதுவே அதிகம் என்று ஒரு நடிகை கூறியுள்ளார்) ஒட்டி உரசி உருண்டு புரண்டு ஆடுகிறார்கள். அன்றைய நடிகைகள் நடிப்புக்காக உழைத்தார்கள். அதையும் புனிதமாகக் கருதினார்கள். இன்றோ பணம், பணத்துக்காக எவ்வளவு அதிகமாக பணம் தருகிறார்களோ அவ்வளவு அதிகமாக ஆடையைக் குறைப்பது என்ற கொள்கையோடு சம்பாதிக்கிறார்கள்.
அன்று பெண்களைப் பருவ வாரியாகக் குறிப்பிடும்போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்பார்கள். ஆனால் இன்று திரைப்படப் பெண், சின்னத்திரைப் பெண், தொலைக்காட்சியைத் தொகுத்து வழங்கும் பெண், விளம்பர மாடல் பெண், அலுவலகப் பெண், ஆசிரியப் பெண், கல்லூரிப் பெண், பள்ளிப் பெண், கடைசியாகக் குடும்பப் பெண், இவர்கள் எலோருமே பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள். அதனால் இவர்கள் எதையும் எங்கும் மறைப்பதில்லை என்ற பெருநோக்குக் கொள்கையுடன் வாழ்ந்து வருபவர்கள்.
அன்று முதலிரவு அறைக்குள் செல்லும்போது அங்கே இராமன், கிருஷ்ணர், முருகன், சிவன், பிள்ளையார், இலட்சுமி, சரஸ்வதி என்று தெய்வங்களின் படங்களை மாட்டி வைத்திருப்பார்கள். காரணம் முதன்முதலில் இரு உடல்கள் உறவில் சங்கமிக்கும்போது கவனச்சிதறல் ஏற்படக்கூடாது. பெண் தன் உடலை கணவனுக்குத் தியாகம் செய்யவும், ஆண் தன் உடலை மனைவிக்குத் தியாகம் செய்யவும் வேண்டும். இருவர் மனமும் தெய்வீகமாக இருத்தல் வேண்டும். அந்த சமயத்தில் உடலுறவு ஏற்பட்டால் உருவாகும் குழந்தை ராமகிருஷ்ணராக, விவேகானந்தராக, காந்திஜியாக, நேதாஜியாக, ஜான்சிராணியாக, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியாகப் பிறக்கும் என்று கருதினார்கள். அவ்வாறே செயல்பட்டும் வந்தார்கள்.
ஆனால் இன்று படுக்கை அறையிலே நடிகர்கள், அரை நிர்வாண நடிகைகளின் படங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அந்தச் சூழலில் இருவரும் இணையும் போது என் கணவன் இந்த நடிகனைப் போல நடந்து கொள்ள வேண்டும், அந்த நடிகனைப் போல நடந்து கொள்ள வேண்டும் என்று புருஷனோடு படுத்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு ஆணையே தன் எண்ணங்களில் பதியவைத்துக் கொள்கிறார்கள்.
திரை உலகம் என்பது மிகப் பெரிய ஊடகம். இன்று மக்களை மயக்கி வைத்திருக்கும் மாபெரும் ஊடகம். அதில் 65 வயதுள்ள நடிகன், 16 வயது பெண்ணின் தொப்புளைத் தொடுகிறார். 60க்கும் மேற்பட்ட வயதுடைய நடிகன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் தருவதையே தன் சிறப்புக் கலையாகக் கொண்டுள்ளார். ஒரு இயக்குனர் பெண்ணின் தொப்புளைக் காட்டினால் என்ன தவறு என்று தெளிவாகப் பேசுகிறார். ........ இவர்கள் எல்லாம் இன்றைய சமூகத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள். இவர்களுக்கெல்லாம் பணம் என்பதைத் தவிர வேறு குறிக்கோள் கிடையாது. ஆனால் இவர்கள் கூறுவது மக்கள் விரும்புகிறார்கள் கொடுக்கிறோம் என்பதுதான். இதனை யாரும் கண்டிப்பதில்லை.
ஒரு ஆண் ஆதிகாலம் தொட்டே கண்களால் நேரில் பார்த்தறியாத பரமரகசியமான ஒரு பெண்ணின் மேடு பள்ளங்களைத் தெளிவாகத் தெருவில் பார்க்கும்போது உணர்ச்சிக் கொந்தளிக்கத்தானே செய்யும். இதைச் சொன்னால் ஆணாதிக்கம் என்பார்கள் சில ஆதிக்கப் புத்தி கொண்ட பெண்கள். இவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். பெண்களின் கர்ப்பத்திலிருந்துதான் ஆண் பிறக்கிறானே தவிர ஆணிடமிருந்து பெண்கள் பிறக்கவில்லை. தன் கர்ப்பத்தில் உருவான ஒரு உயிரை அவள் எப்படி வளர்க்க வேண்டும் என்பது தெரியாத பெண்கள் எல்லாம் படை திரள்கிறார்கள் இன்று.
கணவனோடு ஒத்துவாழத் தெரியாமல் வெளியே வந்தவர்கள், கணவனை விரட்டியடித்தவர்கள், ஆண்களை வெறுத்து வாழ்பவர்கள் (!) தாய்மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், இவர்கள் கூறுகிறார்கள் பாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை தரவேண்டும் என்று. உங்களைப் பெண்ணாக முதலில் வெளிக்காட்டிக் கொள்ளுங்கள். உங்கள் பெண்களை பெண்ணாக வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பெண்களுக்குப் பெண்மையைப் புரிய வையுங்கள்.
தாய்மை என்பது புனிதமானது. அதை எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று உணர ஆரம்பித்து விட்டீர்களானால் போதும். நான் ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மாதவிலக்கு என்பது பெண்ணுக்கு ஏற்படும் இயல்பான நிகழ்வுதான். மாதவிலக்கு என்றால் என்ன? நமது முன்னோர்கள் அந்த மூன்று நாட்களுக்கும் மாதவிலக்குப் பெண்ணை ஏன் தனிமைப் படுத்தி வைத்தார்கள்? உடற்கூறு சாத்திரம் படியுங்கள் புரியும். இன்று மாதவிலக்கான பெண் விஸ்பர் கட்டிக்கொண்டு சுவர் ஏறி குதிக்கிறாள். டென்னிஸ் விளையாடுகிறாள். உயரம் தாண்டுகிறாள். இது வேண்டுமானால் அறிவியல் வளர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இவைகளெல்லாம் பெண்ணின் உடலை, பெண்மையைக் காப்பாற்றாது. இன்றும்கூட சில ஆச்சாரமான குடும்பங்களில் அந்த மூன்று நாட்கள் பெண்கள் வீட்டுக்குள் வருவதில்லை. ஏன்? பெண்மை புரிந்து விட்டால் உலகில் போர்க்களமே இல்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்களும் ஒரு பெண்தானே. உங்களது பெண்மையை முதலில் போற்றுங்கள். அதனை காப்பாற்றுங்கள். பிறகு கடைபிடித்து ஒழுகுங்கள். அடுத்து உங்கள் பெண்ணை பெண்ணாக வளர்க்க முயலுங்கள். அவளுக்குப் பெண்மையை புரிய வையுங்கள். ஒரு தாயாக, தோழியாக, குருவாக நின்று சொல்லிக் கொடுங்கள். காமம் என்பது இரு பாலருக்கும் பொதுவானது. அதில் ஆண்களை மட்டுமே குறை சொல்ல முயலாதீர்கள். ஆண்களைத் தவறு செய்திட தூண்டாதீர்கள். ஒரு பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும்? பெண்ணாக இருக்க வேண்டும்.
"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்" -- குறள் 56.
பெண் முதலில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும், தன்னைக் காத்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்துவிட்டால்
"சிறை காக்குங் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை" -- குறள் 57
உங்களைக் காப்பாற்ற எவருமே தேவையில்லை. ஒரு பெண், தாயாக, சகோதரியாக, மகாலட்சுமியாக, சரஸ்வதியாக, பார்வதியாக, சீதையாக வாழ்ந்து விட்டால் இந்த நாட்டில் பலியல் குற்றங்களே நடக்காது. சட்டத்தால் எதையுமே சாதித்துவிட முடியாது என்பதுதான் மேற்கண்ட குறள் கூறும் அறிவுரை. இன்றைய பெண்கள் (பெரும்பாலும்) தலையை சீவி முடிந்திருக்க மாட்டார்கள். தலைவிரிகோலமாக தலையை விரித்துப் போட்டுக் கொண்டுதான் காட்சி தருவார்கள். இவர்களெல்லாம் என்ன பாஞ்சாலிகளா? ஆண்கள் எல்லாம் என்ன துச்சாதனன்களா?
ஒரு தொலைக்காட்சி நடத்தும் தொடர் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குபவர்கள் ஒரு பையனும் ஒரு பெண்ணும். அந்தப் பையன், பேண்ட், முழுக்கை ஷர்ட் அணிந்தவன். அந்தப் பெண் ஜாக்கெட் போட்டுக் கொண்டு வரும் நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை. வெறும் பிராவுடன் தோன்றி விமர்சனம் செய்கிறார். இதைவிட உலகமகா கொடுமை ஒரு அயல்நாட்டு அதிபரை நேர்காணல் காணும் பெண் அணிந்திருந்த நடுத் தொடை வரையிலான ஆடை. ஏன் இவ்வளவு கதறுகிறேன் என்றால் இந்தப் பெண்கள் இப்படி வளராவிட்டால் நாளைய சமூகம் என்னவாகும் எனும் அச்சம்.
திரைப்படங்கள், சின்னத்திரை விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவைகளில் பெண்கள் தொடையும், தொப்புளும் தெரிய குலுங்க குலுங்கி ஆடுவதைப் பார்க்கும் இளம் சிறார்கள் மனம் எத்தகைய உணர்வுகளுக்கு ஆளாகும். சிறார்கள் மட்டுமா, எல்லா வயது ஆண்களிடமும் எத்தனை வக்கிர உணர்வுகள் உருவாகும். இதனைப் பெண்கள் உணர்வார்களா? பெண்களின் ஒத்துழைப்பு இல்லாமலா இந்த் வக்கிரங்கள் நடைபெறுகின்றன.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெண்களின் வக்கிர எண்ணங்களால்தான் நடக்கின்றன. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பையன்கள் கைபேசியில் உடலுறுவுக் காட்சிகளை திருட்டுத் தனமாகப் பார்க்கிறான். நிலைமை இப்படி இருக்கும்போது நாளேடுகளில் பாலியல் வன்முறைச் செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கும்.
பாலியல் வன்முறை செய்யும் ஆண்களை ஆண்மை இழக்கச் செய்துவிட வேண்டும் என்று கூச்சலிடும் பெண்களைக் கேட்கிறேன். பாலியல் வன்முறைகளைச் செய்திட பாலக வயதிலேயே தூண்டிவிடும் பெண்களைத் தண்டிப்பது எப்படி?
எனதருமை சகோதரிகளே! மகள்களே! பேத்திகளே! உங்களை ஆண்களாகிய நாங்கள் போகப் பொருளாகப் பார்க்கவில்லை. தாயாக, தெய்வமாகத்தான் போற்றுகிறோம். ஆண் கடவுளாகிய சிவனைப் பாருங்கள், பார்வதிக்குத் தன் இடப்பாகத்தைக் கொடுத்திருக்கிறான். திருமால் தன் இதயத்தைத் தந்திருக்கிறான்; பிரம்மா சரஸ்வதியைத் தன் நாவில் வைத்திருக்கிறான், முருகன் தன் மனைவியரைத் தன்னிரு பக்கத்திலும் வைத்திருக்கிறான், இதெல்லாம் ஆண்கள் பெண்களை எத்தனை உயர்வாகப் போற்றுகிறார்கள் என்பதைக் காட்டவில்லையா?
பெண்களே! நீங்கள் தாயாக, சகோதரியாக வாழும்வரை உங்களுக்கு எல்லா போற்றுதலும் புகழும் கிடைக்கும். அதை விடுத்து பணத்துக்காக விலை போக ஆரம்பித்து விட்டால் நாளைய சமுதாயத்தில் சகோதரியும் மனைவியாகி விடுவாள். மகளும் மனைவியாகி விடுவாள். பாலியல் அறிவு ஆண்களுக்குத் தேவையில்லை. அது பெண்களுக்குத்தான் வேண்டும்.
Women measure their achievements not in the wealth they have gathered but measured in the love they have gathered around there. -- Linda Mac farlane
நாங்கள், ஆண்கள் உங்கள் வயிற்றிலிருந்துதான் பிறந்தோம். நீங்கள் எங்கள் வயிற்றிலிருந்து வரவில்லை. கர்ப்பத்தில் இருக்கும்போதே நாங்கள் உலகைக் கற்றுக் கொள்கிறோம். இப்போது சொல்லுங்கள் குற்றங்களைச் செய்யத் தூண்டுவது ஆண்களா, பெண்களா? உங்களிடம் ஏற்படும் குற்ற உணர்வுகள்தான் கருவில் வளரும் குழந்தைகளிடமும் வளர்கிறது. பிறக்கும் ஆண் குழந்தைகளை ஒழுக்க ரீதியாக நீங்கள் வளர்த்தால், வளர்க்க முற்பட்டால் நாட்டில் 95 சதவீத குற்றங்கள் குறையும். அதற்காக பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு நான் பரிந்து பேசவரவில்லை. அவர்களுக்குத் தரும் கடும் தண்டனை பகிரங்கமாகப் பலர் முன்னிலையில் தரப்பட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கும் பாலியல் குற்றம் செய்ய துணிவு வராமல் இருக்கும்.
தாய்மை ஒரு வரப்பிரசாதம். இது கடவுள் படைத்த எல்லா உயிரினங்களிடமும் வெளிப்படும். ஆனால் பணமே பிரதானம் என எண்ணும் மனித இனத்தில்தான் இந்த தாய்மையின் புனிதம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்கிறது. "தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை" என உங்களைக் கைகூப்பி வணங்குகிறோம். வீட்டில் வெளியில், அலுவலகங்களில், பொது இடங்களில் நீங்கள் பெண்ணாக நடக்க முயற்சி செய்யுங்கள். ஆண்கள் தானாகவே திருந்திவிடுவார்கள்.
"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா"
ஆசிரியர்.
3 comments:
//// பிறக்கும் ஆண் குழந்தைகளை ஒழுக்க ரீதியாக நீங்கள் வளர்த்தால், வளர்க்க முற்பட்டால் நாட்டில் 95 சதவீத குற்றங்கள் குறையும்.////
எங்கே இந்த ஒரு வரியை காணாமலே போய் விடுவேனோ! என்று கூட நினைக்கத் தோன்றியது.
ஆசிரியர் அவர்கள் மிகவும் வெளிப்படையாக தனது உள்ளக் குமுறலை கொட்டி இருக்கிறார். உண்மை தான் பெண் தன்னைப் பற்றிய உயர்வும் தனக்கு இந்த பூமியில் இருக்கும் கடையும் அறியாதவளாக ஆக்கப் பட்ட இருக்கிறாள்.
பெண் அடிமைத் தனத்தில் இருந்து வெளிப்பட வேண்டும் என்று யாவரும் வேண்டும் நேரத்தில் அவளின் வாழ்வை பணம் இருந்தால் தான் பத்திரப் படுத்த முடியும் என்ற ஒரு தவறான சூழல் அவளை இப்படியும் திசை திருப்பியும் இருக்கிறது.
ஆணும், பெண்ணும் சமமே, இருந்தும் இவர்களை வளர்க்கும் விதமும் சமமாக இருக்க வேண்டும்.
"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும்
தீயவன் ஆவது அன்னையின் வளர்ப்பிலே"
என்றான் கண்ணதாசன்.
அதனாலே எங்கே இந்தப் பெண் தடம் புரண்டாள், யாரின் வளர்ப்பிலே இவள் இப்படி ஆகிப் போனாள் , நாகரிகம் என்றப் பெயரில் கலாச்சாரங்கள் குழிதோண்டிப் புதைக்கப் படுகின்றது என்னமோ உண்மை தான்.
தன்னைக் காட்சிப் பொருளாக்கி தனது அங்கங்களை விளம்பரப் படுத்தி அதனால் நாம் பணம் சம்பாதிப்பது எத்தனைக் கேவலம் என்பதை சம்பந்தப் பட்டப் பெண் உணராமல் போவது ஓரு பக்கம் இருக்க, அது தவறு என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்ல அது போன்ற மன நோயாளிகளின் அறியாத் தனத்திற்கு பாடம் கற்பித்து அவர்களை தெளிவுப் படுத்த இந்த சமூகத்தில் கற்ற உலகம் அறிந்த கலாச்சார சூழலில் வளர்ந்தப் பெண்கள் கூட முன் வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.
இன்றைய அறிவியல் இதற்கு ஒரு காரணம் என்பதும் உண்மை தான், ஆசிரியர் கூறியது போன்று. பெண் தனக்கு தானே எதிரியாகிறாள்.
தீதுன் நன்றும் பிறர் தர வாரா! அவள் அவளைப் பாது காத்துக் கொள்ள வேண்டும். வளரும் இளம் பெண்களை அவளின் பெற்றோர்கள் சரியானவற்றை கூறி கவனமுடன் வளர்க்க வேண்டும்.
எதுவானாலும் சீதைகளை மாத்திரம் தேடித்திரியாமல்.... சூர்ப்பனகையை ச்சீ தூரப் போ என்று எச்சரித்த இரகு ராமன்களாக இந்த ஆண் சமூகம் இருக்கவும் வேண்டும்.
இப்படி மன நோயாளிகளாக திரியும் இந்த ஆண், பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் தான் முதலில் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
தங்களது குழந்தைகளை சரியாக வளர்க்காமல் போனது அவர்களே... எங்களைப் போன்று வேறு பல கலாச்சார நீட்டில் வசிப்போரும் கூட இது போன்ற நடை உடை பாவனை விசயத்தில் குழந்தைகளை கட்டுப் படுத்துவதோடு, கற்பு, ஒழுக்கம், தெய்வீகம், என்பதோடு கடமை, மனிதப் பண்பு, இந்தய, தமிழ் கலாச்சாரத்தை அதன் உயரிய கூறுகளை எங்களது பெண் பிள்ளைகளுக்கு மாத்திரம் அல்ல ஆன் பிள்ளைகளுக்கும் சொல்லியே வளர்த்தும் வருகிறோம்.
இது ஒவ்வொரு பெற்றோரின் கடமையும் கூட.
கட்டுரை, ஆசிரியரின் ஆதங்கம் நியாயமானதே. இருந்தும் இன்றைய சூழலில் பெற்றோரின் பங்கே அதிகமானது என்பது எனது அபிப்ராயமும் கூட. பெண் தன்னை காத்துக் கொள்ள கவனமாக இருக்க வேண்டும். பெண் என்பவள் காக்கப் படவேண்டிய தெய்வம் என்பதை நம் வீட்டில் இருக்கும் ஒவோவ்று ஆண் மகனும் நன்றாக அறிந்தும் கொள்ள வேண்டும். அது மாறும் நிலைக்கு வித்திடும் யாவரும் குற்றவாளிகளே, அப்பேர்ப் பட்ட மனநோயாளிகள் தகுந்த சிகிச்சையையும் பெற வேண்டும்.
விஞ்ஞானம் பாதிப்பு தரலாம் பகுத்தறியும் பண்பு குழந்தை வளர்ப்பிலே இருந்தால் பயமில்லை.
பெண் சுதந்திரம் வேண்டும், அது தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்டு.. அவள் காட்சிப் பொருளாய் ஆக்கி கடையில் விக்கப் படுவதை அவளே உணராத போது அதனால் பயனும் இல்லை.
தமிழும் தமிழிலக்கிய இதிகாசப் புராணங்கள் இங்கே மறக்கப் பட்டு விட்டன... ஆங்கிலக் கல்வியின் மோகம், அலைக் களிக்கச் செய்கின்றன...
இதில் பெற்றோரே தண்டிக்கப் பட வேண்டியவர்களாக நான் உணர்கிறேன். நல்லப் படியாக வளர்க்க வேண்டியது அவர்களின் தலையாயக் கடமை... குழந்தைகள் அருகே இருந்து அவர்களை செதுக்கி வார்க்க வேண்டும்.. அது ஒரு நாளில் வருவதும் இல்லை.
சட்டதிட்டங்கள் அல்ல, நடை உடை பாவனையே இவைகளை மாற்றும்..... இவைகள் யாவும் ஒரு நாள் மாறும் என்று நம்புவோம். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் தங்களது கடமைகளை செய்ய வேண்டும்.
நன்றி!
Good!
Thank you Sir,
Very pertinent.
And, useful for a young parent, like me and my wife.
Nandri.
Anbudan,
Srinivasan. V.
srinaren17@gmail.com
Post a Comment