பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, April 25, 2013

இந்தியாவின் பெருமைமிகு நடன வகைகள்.

                                   
 
இயமம் முதல் குமரி வரையிலான பரந்து விரிந்த பாரதவர்ஷம் எனும் இத்திருநாட்டில் கங்கையும், காவிரியும் வேறுபல நீர்நிலைகளும், புனிதத் தலங்களும், தீர்த்தங்களும் புகழ்பெற்று விளங்குவதைப் போல் இந்த பூமியில் உருவான கலைகளும் அற்புதமானவை. அவற்றில் நடனக் கலை சிவபெருமானால் ஆடப்பட்டது.

Cosmic Dance என்று அறிஞர்களால் விவரிக்கப்படும் நடராஜப் பெருமானின் ஆடல் இந்த பூமியில் ஆடப்பட்ட முதல் நடனம். இதில் ஆனந்த நடனமும், ருத்ர தாண்டவமும் அந்த இறைவனின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. தமிழகத்தில் பொன்னம்பலம் தொடங்கி, வெள்ளி, தாமிரம் என பல சபைகள் உண்டு, அவைகளில் எல்லாம் ஆடல்வல்லான் ஆடிய அற்புத நடனங்களை உலகமே வியந்து போற்றி பாராட்டுகிறது. அதன் அடிப்படையில் இந்த பரந்து விரிந்த பாரத தேசத்தில் நிலவுகின்ற ஆடல் பலவகைப்படுகின்றது.

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் நிலவுகின்ற கலாச்சாரம் அடிப்படையில் ஒரே உயிரூட்டமுள்ள இந்து கலாச்சாரம் என்பதில் ஐயமில்லை. இவை உருவில், அமைப்பில் மாறுபட்டாலும் அனைத்துமே ஒரே நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு கலைகள் அனைத்துமே இறைவனை மையமாகக் கொண்டு, இறைவனுக்கு அர்ப்பணிப்புச் செய்யப்படுகின்றன. இதைப் போல் கலைகளை தெய்வத்துக்கு ஒதுக்கி வைத்த கலாச்சாரம் வேறு எங்கும் உண்டா தெரியவில்லை. குறிப்பாக இங்கு இசையும் நடனமும் இறைவனுக்கு அர்ப்பணிக்கவே பயன்பட்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்து கடவுளர்களில் சிவபெருமான், காளி, கிருஷ்ண பரமாத்மா தவிர, நடன விநாயகர் என்றெல்லாம் இறைவனையும் ஆடற்கலையையும் இணைத்தே வழிபட்டு வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

நாட்டியக் கலையின் பெருமையைச் சொல்லப் புகுந்தால் அது முடிவே இல்லாதது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நாட்டியம் நிலவி வந்திருக்கிறது. அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புறம், பழக்க வழக்கங்கள், மொழி, கலாச்சாரம், தெய்வ வழிபாட்டு முறை இவற்றையொட்டி அவரவர்க்கு ஏற்ற நாட்டிய வகைகளைக் கையாண்டு வந்திருக்கின்றனர். சில இடங்களில் பிற பகுதிகளின் தாக்கங்கள் கூட இவர்களது கலை நயத்தை செம்மைப் படுத்தியிருக்கிறது. இந்திய அரசின் அங்கமான சங்கீத நாடக அகாதமி இந்திய நடன வகைகளை எட்டு பிரிவாக அறிவித்துள்ளது. அவை இந்திய சாஸ்திரிய நாட்டிய வகைகள் என அறியப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வகை நடனமும் அந்தந்தப் பகுதிகளின் சமய வழிபாட்டு முறைகளுக்கேற்ப வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

சாஸ்திரிய நடன வகைகளைத் தவிர அந்தந்த பகுதிகளில் நிலவிய, நிலவுகின்ற நாட்டுப்புற கலைகளின் வடிவங்கள் பற்பல உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. நமது பாரத தேசத்தில் தொன்றுதொட்டு இசை நாட்டியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பண்டைய நாட்களில் மன்னர்களின் ஆதரவையும் பெற்றிருந்ததால், கலைஞர்கள் ஏராளமாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் கலையை தெய்வமாகப் போற்றி பாதுகாத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் சென்ற இடங்களுக் கெல்லாம் இந்தக் கலையைக் கொண்டு சென்று அந்த இடங்களிலுள்ள கலைகளின் அம்சங்களையும் ஏற்றுக் கொண்டும், பொதுவாக நமது நடங்களின் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் குடிபெயர்ந்த பல இடங்களிலும், குறிப்பாக கிழக்காசிய நாடுகளில் இந்திய பாரம்பரியக் கலைகள் இன்னமும் உயிர்ப்போடு வளர்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா போன்ற இடங்களில் தமிழகக் கலைகள் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் திரைப்படங்கள் நடனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, சாஸ்திரிய, பாரம்பரிய நாட்டிய வகைகளை அப்படியே நடத்திக் காட்டியும், காலத்திற்கேற்ப அதில் சில புதுமைகளையும், மக்கள் மனங்களைக் கவர்வதற்கான புதிய யுத்திகளையும் கையாண்டு ஒருவகை நாட்டியத்தைக் கொடுத்ததனால், சாஸ்திரியம் என்று சொல்ல முடியாவிட்டாலும், புதிய வகை நடனங்களாக திரைப்பட நடனங்களும் மக்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டன. தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் முன்பெல்லாம் நடனங்கள் இல்லாத படங்களே இல்லையெனலாம். நடனம் தெரிந்தவர்கள்தான் திரைப்பட நட்சத்திரங்கள் ஆனார்கள். அவர்களில் டி.ஆர்.ராஜகுமாரி, குமாரி கமலா, லலிதா, பத்மினி, ராகினி, குசலகுமாரி, சாயி சுப்புலட்சுமி, எல்.விஜயலட்சுமி என்று பல புகழ்பெற்ற நட்சத்திரங்கள் திரைகளில் மின்னினார்கள். அவர்களுக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள்.

பாரதத் திருநாட்டில் நடன சாஸ்திரத்தை பரதமுனிவர் உருவாக்கியதாக நம்புகிறார்கள். நடனக் கலையின் இலக்கணத்தை வகுத்தவராக பரதமுனிவர் நம்பப்படுகிறார். அதன் அடிப்படையில்தான் நடனமும், நடனத்திலிருந்து நடிப்பும், நடிப்பிலிருந்து கூத்து, நாடகம், சினிமா என்று பரிணாம வளர்ச்சி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. சாஸ்திரிய நடனத்தில் இசை, தாளம், பாவம், முத்திரைகள் என பல கூறுகள் உண்டு. இவைகளுக்கு அடிப்படையானவை வேதங்கள். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்களிலிருந்து இந்த நாட்டிய சாஸ்திரத்துக்குத் தேவையான பல கூறுகள் உருவாக்கம் செய்யப்பட்டதாக பெரியோர்கள் கூறுவார்கள்.

இந்தக் காலம் போல சபாக்கள், அரங்குகள், சபைகள் ஆகியவை முறையாக இல்லாத காரணத்தால் இதுபோன்ற கலைகள் எல்லாம் ஆலயங்களில் பல்லாயிரம் மக்கள் கூடும் இடங்களில் நடைபெற்றிருக்கின்றன. ஆலயங்களில் பூஜை வேளைகளில் நடனமும் இசையும் இடம்பெற்றிருப்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆலயங்களில் திருவிழா நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளாக நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்போது போல இல்லாமல் மக்கள் புராணங்களையும், இதிகாசங்களையும், அவைகளில் உள்ள கிளைக் கதைகளையும் கதையாகக் கேட்பது ஒருபுறம் இருந்தாலும், அவற்றை நாட்டியம் மூலமும், நாட்டிய நாடகங்கள் மூலமும் நடித்துக் காட்டுவதைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. ஆலயங்களில் நடனமிடுபவர்களுக்கு மன்னர்கள் மானியங்களைக் கொடுத்து பாதுகாத்து வந்தார்கள். அந்தந்த ஆலயங்களுக்கென்று நடனக் கைங்கங்கர்யத்தை செய்துவர சில குடும்பத்தார் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். மன்னர்களுக்குள் யுத்தங்கள் வந்தாலும், மக்கள் பாதிக்காத வகையில் போர்கள் நடத்தப் பட்டன. குறிப்பாக கலைஞர்கள் பாதுகாக்கப் பட்டார்கள். கல்கியின் "சிவகாமியின் சபதம்" புதினத்தில் சிவகாமி நடன அரசி என்பதால் புலிகேசி அவளை தங்கள் நாட்டுக்கு செல்வங்களோடு செல்வமாக கடத்திச் சென்றிருக்கிறான் என்பதைப் பார்க்கிறோம்.

சங்கீத நாட்டிய அகாதமி நடன வகைகளை நம் நாட்டில் எட்டு வகைகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவை:--

1. பரதநாட்டியம் (தமிழ்நாட்டைச் சார்ந்தது)
2. கதக்களி (கேரளம்) ஆண்கள் மட்டும் ஆடுவது
3. குச்சிபுடி (ஆந்திர பிரதேசம்)
4. மோஹினி ஆட்டம் (கேரளம்) பெண்களுக்காக
5. ஒடிசி (ஒடிஷா மாநிலம்)
6. மணிபுரி (மணிப்பூர்)
7. கதக் (பொதுவாக வட இந்தியா) முகலாயர் காலத்தில் உருவானது
8. சத்ரியா (அசாம்)

பொதுவாக நாட்டியங்களுக்கென்ற வழிமுறைகள் நாட்டிய சாஸ்திரம் என்று புனிதமாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் ஆடப்படும் நாட்டுப்புற கலைகளுக்கு பொதுவான நடைமுறைகள் உண்டே தவிர சாஸ்திரிய நடனங்களைப் போல உறுதியான வழிமுறைகள், இலக்கணங்கள், சட்ட திட்டங்கள் இவை இல்லாததால் அவ்வப்போது அது இடத்திற்கேற்றவாறு ஆடப்படுகின்றன.

சாஸ்திரிய நடன வகைகள் மேற்கண்ட எட்டுக்கும் தனித்தனி பாணி, முறைகள் அனைத்தும் உண்டு. அவைகளை தெரிந்து கொள்ள மேலும் விரிவான பல செய்திகளைப் பார்க்கவேண்டும். அதையும் காலம் கைகொடுக்குமானால் பார்க்கலாம்.




1 comment:

thanusu said...

தாங்கள் கடைசி பாராவில் சொன்னது தான் எனது வேண்டுகோள்.அவைகளை தெரிந்து கொள்ள மேலும் விரிவான பல செய்திகளைப் பார்க்க ஆசைப்படுகிறேன்.