பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, April 4, 2013

"அந்தத் தொடிசு"


     "அந்தத் தொடிசு"

    தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் எழுதியது இந்தக் கட்டுரை. அவருடைய கதை சொல்லும் பாணியையும், அந்தக் காலத்தில் சில பெரிய மனிதர்களிடம் இருந்த விசித்திரமான எண்ணங்கள், பழக்கங்கள் இவற்றைப் பற்றியும் இந்தக் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். படித்தால் உடம்பு கெட்டுவிடும் என்று மிகுந்த அக்கறையோடு எச்சரிக்கை விடுத்த அந்த 'பெரிசு' பற்றிய கதை இது.

    உ.வே.சா அவர்கள் எழுதிய கட்டுரை.

    கும்பகோணம் காலேஜில் நான் வேலைபார்த்து வந்தபோது, கடைசியாக 1894-ஆம் வருஷம் முதல் காவிரியாற்றின் ஓரத்தில் சகாஜி நாயகர் தெருவில் உள்ள என் சொந்த வீட்டில் வசித்து வந் தேன். அப்போது ஒருநாள் என் புத்தக ஆராய்ச்சி வேலைக்கு உதவியாக இருந்த ஒரு நண்பரும் நானும் என் ஜாகையிலிருந்து தெருவழியாக மேற்கே சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே பெரிய இரட்டை மாட்டு வண்டி யொன்று வந்தது. அவ்வண்டி எங்கள் அருகே வந்ததும், "நிறுத்து; நிறுத்து" என்று வண்டிக்காரனுக்கு உள்ளேயிருந்த வர் உத்தரவுசெய்தார். வண்டி நின்றது. அதிலிருந்து ஒரு கனவான் கீழே குதித்தார். அவர் எங்களைக் கண்டுதான் இறங்கினாரென்று தெரிந்துகொண்டு நாங்களும் நின்றோம்.

    அவர் ஒரு பெரிய தனவான். அறுபது பிராயத் திற்கு மேற்பட்டவர். நன்றாக உண்டு உடுத்து வாழ வேண்டு மென்பது அவருடைய கொள்கை. 

    அக்கனவானை நான் கண்டவுடன்,"வாருங்கள், வாருங்கள்" என்று சொன்னேன்.

    அவர் எங்களருகே வந்தார்.

    "எங்கே, உங்களை இப்பொழுது காண முடிய வில்லையே. உங்களைப் நான் பார்த்து நாலு வருஷங்களுக்கு மேலே இருக்கும்" என்றேன்.

    "ஆமாம்! அதெல்லாம் இருக்கட்டும்; இப் பொழுது அந்தத் 'தொடிசு'இருக்கிறதா? விட்டுவிட்டீர்கள?" என்று அவர் என்னைக் கேட்டார். என் பக்கத்தில் இருந்தவர் திகைத்தார்.

    நான் சிரித்துக் கொண்டே "நீங்கள் சொன் னதை நான் கேளாமல் இருப்பேனா? என்னுடைய சந்தோஷத்தையும் சௌக்கியத்தையும் கெடுத்துக் கொள்வேனா?" என்றேன்.

    "நான் சொன்னதைக் கேட்பீர்களென்றுதான் சொன்னேன். சந்தோஷம். இப்போதாவது நான் நல்லதற்காகச் சொன்னேனென்று தெரிந்து கொண்டீர்களே! அதுவே போதும். உங்கள் தேகம் இப்பொழுது கொஞ்சம் மினுமினுப்பாக இருக்கிறது. அதிலிருந்தே அந்தத் தொடிசை விட்டிருப்பீர்களென்று ஊகித்தேன். உங்கள் முகமும் தெளிவாக இருக்கிறது" என்றார் அவர்.

    'உங்களுடைய அன்பையும் அநுகூல வார்த்தையையும் நான் மற‌க்கமாட்டேன்" என்று நான் சொன்னேன்.

    உடனே அவருக்கு அதிக‌ மகிழ்ச்சி உண் டாயிற்று. தம்முடைய வார்த்தையை நான் கேட்டுப் பயனடைந்தேனென்று அவர் எண்ணிக் கொண்டார்.

    "நான் உங்களைவிட மிகவும் பெரியவன். தியாக ராச செட்டியார்கூட இப்போது இல்லை. உங்களுக் குச் சொல்லுகிறவர்களும் இல்லை.நீங்கள் இப்போது இருக்கிறபடி முன்பே இருந்தால் இன்னும் சௌக் கியமாக இருக்கலாம். அநாவசியமாக உடம்பைக் கெடுத்துக் கொண்டீர்கள்" என்று சொல்லி அவர் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்.

    அவரைக் கண்டது முதலே எனக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. அவர் போனபிறகும் சிரித் துக் கொண்டே சென்றேன். எங்கள் இருவருக்கு மிடையே நடைபெற்ற சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு என்னுடன் வந்த நண்பருக்கு விஷயம் ஒன்றும் விளங்கவில்லை. 'அந்த்த் தொடிசு' என்று அக்கனவான் குறித்த விஷயம் இன்னதென்று அவருக்குப் புலப்படவில்லை. என்னைக் கேட்கவும் அவருக்குத் துணிவில்லை. அடிக்கடி ஒரு சந்தேகக் குறிப்போடு என் முகத்தைப் பார்த்துக்கொண்டே உடன் வந்தார்.

    அவரை நான் கவனித்தேன். அவருடைய மனக்குழப்பத்தை அவருடைய முகக்குறிப்பினால் அறிந்துகொண்டேன்.

    "எங்கள் சம்பாஷணை இன்ன விஷயத்தைப் பற்றியது என்று உங்களுக்கு விளங்கவில்லையோ?" என்றேன்.

    "விளங்கவில்லை; அதைப்பற்றித்தான் யோசித் துக்கொண்டே இருக்கிறேன்" என்றார் அவர். நான் அவர் சந்தேகத்தைத் தெளிவிக்கத் தொடங் கினேன்.

    "இந்தக் கனவானை உங்களுக்குத் தெரிந்திருக் கும். இவர் தியாகராச செட்டியாருக்கு மிகவும் பழ‌க்கமானவர். நான் திருவாவடுதுறை மடத்தில் இருந்த காலமுதலே இவரை அறிவேன். தியாக ராச செட்டியாரைப் பார்க்க வரும்போதெல்லாம் இவரைப் பார்த்திருக்கிறேன். இந்த ஊர்க் காலே ஜுக்கு நான் வேலையாக வந்தபிறகு தியாகராச செட்டியார் ஜாகைக்கு ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளைகளில் நான் போய்வருவேன். அக் காலங்களிலும் பலமுறை இவரைப் பார்த்துப் பேசிப் பழகி யிருக்கிறேன்.

    "இவர் பெரிய பணக்காரர். ஆனால் பிறருக்குப் பொருளுதவி செய்வது அனாவசியமென்னும் அபிப் பிராயம் உடையவர். 'நாம் எதற்காகப் பணம் சேர்க்கவேண்டும்? நன்றாகச் சாப்பிட வேண்டும், திருப்தியாக ஆடையாபரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். நம்முடைய சுகத்தில் சிறிதும் குறையாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்' என்று அடிக்கடி சொல்லுவார். இவருடைய தூய உடை யும் பட்டு உருமாலையும் வயிரக் கடுக்கனும் மோதிரங் களும் இவர் ஒரு சுகபுருஷரென்பதைக் காட்டுகின் றனவல்லவா?

    "தியாகராச செட்டியார் அடிக்கடி ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்; அல்லது யாருக்காவது பாடம் சொல்லுவார். அவர் அப்படிச் செய்வதைக் காணும்போது இக்கனவானுக்கு மிகுந்த கோபம் உண்டாகும். 'இப்படி யெல்லாம் உடம்பை வீணாகக் கெடுத்துக் கொள்ளக்கூடாது! இராத்திரி கண்விழித்துப் படிப்பதனால் யாருக்குப் பயன்? எதற்காக வாசிக்கிறோம்? தேக அசௌக்கியத்தை உண்டுபண்ணிக் கொள்ளவா படிக்கிறோம்? எல்லா வற்றைக் காட்டிலும் தேக சௌக்கியந்தான் முக்கி யம். சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுதவேண்டும்?' என்பார். இராத்திரி வேளை களில் தியாகராச செட்டியார் கையில் புத்தகத்தை இவர் கண்டுவிட்டாற் போதும்; உடனே உபதே சம் செய்யத் தொடங்கி விடுவார். சில சமயங்களில் அவர் கையிலிருந்து புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி வைப்பார்.

    "இவர் சில சமயங்களில் கச்சேரிக்கு ஏதாவ தொரு வழக்கின் சம்பந்தமாக வருவார். அப்போ தெல்லாம் அருகிலுள்ள எங்கள் வீட்டுக்கு வ‌ந்து சிறிது நேரம் இருந்து விட்டுப் போவார்.

    "அச்சமயங்களில் இவர் தம்முடைய பெருமை யையே அதிகமாகச் சொல்வார். தியாகராச செட்டி யாருடைய ந‌ன்மைக்குத் தாமே பல வழிகளில் காரணமென்று கூறுவார். அவரிடம் சொல்லி எனக்கு வேலை பண்ணிவைத்ததகவும் சில சமயங்களில் உரைப்பார். இவர் கூறுவது ஒன்றையும் நான் மறுப்பதில்லை.மறுப்பதிற் பயனில்லை யென்று சிரித்துக்கொண்டே கேட்டு வருவேன்.

    "ஒருநாள் பகல் ஒரு மணிக்கு இவர் கச்சேரியி லிருந்து வந்தார். நான் காலேஜிலிருந்து வீட்டிற்கு வந்தேன். இடையே ஒருமணி நேரம் ஓய்வு இருப்ப தால் அந்த வேளையில் ஏதாவது ஏட்டுச்சுவடியைப் பார்ப்பது வழக்கம். அந்தக் காலத்தில் நான் சிலப்பதிகாரத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருந் தேன். இந்தக் கனவான் வந்தபொழுது நான் சிலப்பதிகார ஏட்டுப் பிரதியையும் கையெழுத் துப் பிரதியையும் வைத்துத் தனியே ஓப்பிட்டுக் கொண்டிருந்தேன். இவர் வந்ததுகூட எனக் குத் தெரியாது. அவ்வளவு மன ஒருமையோடு அதில் நாட்டம் செலுத்தியிருந்தேன். 'ஐயா, கீழே வையுங்கள்' என்று அதிகாரக் குறிப் போடு ஒரு குரல் கேட்டது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். இந்தக் கனவான் நின்றார். 'நான் வந்ததைக்கூடப் பாராமல் அந்தப் புஸ் தகத்தை அவ்வளவு அழுத்தமாகக் கவனிகிறீர் களே. நல்ல காரியம் செய்தீர்கள்! நீங்கள் நல்ல வழக்கங்களை உடையவர்கள். சிறு பிராயம். இப் போதே இம்மாதிரியான காரியங்கள் செய்யத் தொடங்கிவிட்டீர்களே! உங்கள் உடம்பு எதற்காகும்? இங்கே பாருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு வேலையாக வேண்டும், சௌக்கியமாக இருக்க வேண்டுமென்று செட்டியாரிடம் சொல்லி வேலை பண்ணிவைத்தேன். நீங்கள் செட்டியாரைப் போலப் பைத்தியக்காரராக இருக்கமாட்டீர்க ளென்று நம்பினேன். நான் அவரிடம் அடிக்கடி இம்மாதிரியான காரியங்களையெல்லாம் செய்யக்கூடா தென்று சொல்லி வந்தேன். அதை நீங்களும் கவனித் திருக்கலாம். ஆனாலும் நான் சொன்னதை அவர் கேட்கவில்லை. அத‌னால்தான் சீக்கிரம் இறந்துபோய் விட்டார். புஸ்தகத் தொல்லையைவிட்டுச் சுகமாக இருக்கலாம். அப்படி இருந்திருந்தால் இன்னும் பலகாலம் அவர் ஜீவித்திருக்கலாம். அவ்வளவுதான் அவர் கொடுத்து வைத்தது. என்ன புஸ்தகம் வேண்டியிருக்கிறது! இவைகளை யெல்லாம் எடுத்து அப்படியே காவிரியாற்றில் போட்டு விடவேண்டு மென்ற ஆத்திரம் எனக்கு உண்டாகிறது' என்றார்.

    "நான் ஒன்றும் பேசாமல் சிரித்துக்கொண்டே அந்தச் சுவடிகளைக் கட்டி உள்ளே வைத்துவிட் டேன். இவர் என்மேல் கொண்ட அளவற்ற ஆதர வினால் தம்முடைய ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முற்பட்டால் என்ன செய்வதென்ற பயம் என் உள்ளத்துள் உண்டாயிற்று.'இந்தப் புஸ்தங்களை யெல்லாம் கட்டிப் போட்டு விடுங்கள். நான் சொல் வதைக் கேளாவிட்டால் எனக்குக் கோபம் வந்து விடும். உங்கள் முகத்திற்கூட விழிக்கமாட்டேன். உங்களுக்குச் சொல்லும் உரிமை எனக்கு உண்டு. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்' என்று இவர் இரக்கமும் அதிகாரமும் கலந்த தொனியில் பேசினார். 'உங்கள் அன்பு எனக்குத் தெரியாதா? செட்டி யார் காலமுதல் உங்களைத் தெரியுமே? உங்கள் விருப்பத்தை நான் அறிந்து கொண்டேன். எனக்கு நல்லது இன்னதென்றுதானே நீங்கள் சொல்லுகிறீர்கள்? எனக்கு எது நல்லதோ அதைச்செய்வது என்கடமை' என்றுசொன்னேன்.

    "என்னுடைய வார்த்தைகளின் உட்கருத்தை அவர் உணரவில்லை. தமக்கு அநுகூலமாகவே நான் பேசியதாக நினைத்துக்கொண்டு திருப்தியோடு விடைபெற்றுப் போய்விட்டர்.

    "அதுமுதல் இவர் வந்தால் என்னை இப்படி விசாரிப்பது வழக்கம். நான் ஒருவாறு பதிலளிப் பேன். இவர் வரும்போது இவர் கண்ணில் புத்த கங்கள் படாதவாறு ஒளித்து வைத்துவிடுவேன். நான்கு வருஷங்களாக இவர் கச்சேரிக்கு வருவ தில்லை. அதனால் நானும் பார்க்க நேரவில்லை. இப்போதுதான் பார்த்தேன். புத்தகப்படிப்பைத் தான் இவர் 'அந்தத் தொடிசு'என்று குறிப்பிட்டார்."

    இந்த வரலாற்றைக் கேட்டவுடன் நண்பர் நகைத்தார். "அட பாவி! இதையா சொன்னான்? நான் என்னவெல்லாமோ யோசனை செய்தேனே! அப்போது ஒன்றும் விளங்கவில்லை. இப்பொழுது தான் விளங்கியது" என்றார் அவர்.

2 comments:

Jobs said...

நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/

Unknown said...

உண்மையிலே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த "திராவிட வித்யா பூஷணனான" தமிழ் தாத்தவைத் தான் நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். உங்கள் வலைப் பூவில் அவரைப் பற்றியப் பதிவைப் பார்த்ததும் பரவசமானேன்.

தமிழ் தாத்தாவின் வாழ்வில் நடந்த இந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் அருமை!
சிலரின் நடவடிக்கைகளை முழுதாகப் புரிந்துக் கொண்டு அதே வேளையில் அவர்களின் போக்கை மாற்றவே முடியாது என்று அறிந்து கொண்டும் எப்படி சமாளிப்பது என்பதை மிகவும் அருமையாக உ.வே.சா ஐயர் அவர்களின் செயல்பாடு அற்புதம்.

பகிர்விற்கு நன்றிகள் ஐயா!