பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, April 15, 2013

பூ.கக்கன்

எளிமையின் சின்னம் பூ.கக்கன்

தமிழகத்தில் திரு காமராஜ் அமைச்சரவையில் இருந்த போலீஸ் துறை அமைச்சர் பூ.கக்கன். அவர் மதுரை ஏ.வைத்தியநாத ஐயரின் நிழலில் ஒரு தேசபக்தராக வளர்ந்தவர். வைத்தியநாத ஐயரின் மகனைப் போல அவருடனேயே இருந்தவர் பூ.கக்கன். மதுரைக்கருகிலுள்ள மேலூரைச் சேர்ந்தவர். இவர் மக்கள் மத்தியில் பிரபலமானதே இவரது எளிமையினால்தான். 1908 ஜூன் 18இல் பிறந்தவர் கக்கன். எங்கோ மேலூருக்கருகில் தும்பைப்பட்டி எனும் ஊரில் பிறந்து வளர்ந்த இந்த மனிதர் இந்திய அரசியல் வானில் ஒளிமிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்தது மட்டுமல்ல, இவரது எளிமை, மனிதாபிமானம், தூய்மை இவற்றுக்காக இவரைத் திரும்பிப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. இப்படியும் ஒரு மனிதரா? இவர் அமைச்சராக இருந்தவரா? சாதாரண மக்களுடன், மிகச் சாதாரணமாகப் பழகி வாழ்ந்த இவரை என்னவென்று சொல்லி போற்றுவது?

தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்துவிட்டாலும், இவர் மிக உயர்ந்த பண்புகளால் மேல் தட்டுக்காரர்களில் உத்தமமானவர்களுக்கு இணையாக, ஏன் மேலானவராகவே வாழ்ந்து புகழ் பரப்பியவர். மத்திய அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்தவர். நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இப்படி இவர் வகிக்காத பதவிகளே இல்லை எனும்படி பணியாற்றியவர்.

மிக இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்திற்கு இழுக்கப்பட்டுப் பணியாற்றினார். பள்ளிப் பருவத்திலேயே மகாத்மா காந்தி, இந்திய சுதந்திரம், அதற்காகப் பாடுபட்டு பெருமக்கள் என இவரது சிந்தனை தூய்மையான அரசியல் பணியில் ஈடுபட்டது. 1939க்கு முன்பு வரை தாழ்த்தப்பட்டவர்களையும், சாணார் எனப்படுவோரையும் ஆலயங்களுக்குள் அனுமதிப்பதில்லை. இந்த கொடுமைக்கு எதிராக மகாத்மா காந்தியடிகளின் முன்முயற்சியால் ராஜாஜி தமிழகத்தில் ஆலயப் பிரவேசத்தைத் தொடங்கி வைத்தார். இது மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்தது. இந்த ஆலயப் பிரவேசத்துக்குச் சநாதனிகள் மத்தியிலும், பரம்பரையாக இந்த ஆலயத்தின் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த பெரிய இடத்து மனிதர்கள்: மத்தியிலும் எதிர்பு இருந்தது. ராஜாஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் ஆலயப் பிரவேசம் செய்த வைத்தியநாத ஐயர் அவருடன் உள்ளே நுழைந்த தொண்டர்கள் ஆகியோருக்கு ஆதரவு கொடுத்த போது, அந்த தொண்டர்கள் வரிசையில் பூ.கக்கனும் இருந்தார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு அலிப்பூர் சிறையில் தண்டனை அனுபவித்தார்.

1946இல் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 முதல் 1950இல் அரசியல் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இவர் அங்கு உறுப்பினராக இருந்து பணியாற்றினார். 1952இல் இவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு 1957 வரை இருந்தார். தமிழ்நாட்டில் கு.காமராஜ் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு சென்னை முதலமைச்சராக ஆனபோது இவர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார். 1957 தேர்தல் வெற்றிக்குப் பிறகு இவர் தமிழ்நாடு அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றுக்கு அமைச்சர் பொறுப்பேற்றார். பிறகு விவசாயத்துறை அமைச்சரானார். 1963இல் போலீஸ் துறைக்கு அமைச்சரானார். அவர் இந்தப் பதவியில் 1967இல் காங்கிரஸ் தோற்றது வரை இருந்தார்.

1967இல் அடித்த அரசியல் புயலில் ஆனானப்பட்ட பெருந்தலைவரே தோற்கடிக்கப்ப்ட்டபோது இவரும் மேலூர் தொகுதியில் தி.மு.க.வின் ஓ.பி.ராமன் என்பவரிடம் தோல்வியுற்றார். இந்தத் தோல்விக்குப் பிற்கு கக்கன் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். கக்கன் எனும் இந்த அரிய மனிதருக்குக் குடும்பம் என்று ஒன்று இருந்ததா? உறவினர்கள் இருந்தார்களா? அவர்களில் யாராவது அரசியலில் ஈடுபட்டார்களா? என்றால் இல்லை.

இவருக்கு ஒரு தம்பி, விஸ்வநாதன் என்று பெயர். இவருக்கு போலீசில் வேலைக்கு உத்தரவு வந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அண்ணன் கக்கன் அவர்களிடம் சென்று தனக்கு அவருடைய இலாகாவில் வேலை கிடைத்திருக்கிறது என்று சொன்னதும், ஊகூம் வேண்டாம், நீ போலீஸ் வேலைக்குப் போகக்கூடாது. நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், என் சிபாரிசில் வந்ததாகச் சொல்வார்கள் என்று அவரை போலீசில் சேர கக்கன் அவர்கள் அனுமதிக்கவில்லை. இப்படியும் ஒரு மனிதர்! அந்த விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆனார். பின்னர் இந்து முன்னணியின் துணைத் தலைவருமானார். இவர் காஞ்சி சங்கராச்சாரியார்களிடம் அபரிமிதமான பக்தியுடையவர். அண்ணனின் பாரம்பரியத்தையொட்டி இவரும் 2006 தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியிலிருந்து ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 23-12-1981இல் உடல்நலம் கெட்டு பூ.கக்கன் அவர்கள் இந்த உலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார். தான் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதைக்கூட மருத்துவமனையில் சொல்லாமல், தரையில் பாய்விரித்துப் படுத்திருந்த இவரை அங்கு வேறு யாரையோ பார்க்க வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தபோது திடுக்கிட்டுப் போய், இவரா, இங்கேயா, இப்படியா என்று வருந்தி இவருக்குப் படுக்கையளித்து சிகிச்சைக்கு ஆணையிட்டதாகச் சொல்வார்கள். மகாகவி பாரதி தன் சுயசரிதையில் சொல்வான், "தந்தை போயினன், பாழ்மிடி சூழ்ந்தது, தரணி மீதினில் அஞ்சல் என்பாரிலர், மன்பொருள் போக்கிப் பயின்றதாம் மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை, ஏது செய்குவன், ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே" என்று இந்த நாட்டை எப்போதும் போற்றிப் பாடும் வாயால், இத்துயர் நாடு என்று சொல்லவைத்தது எதுவோ, அதுவே தியாகி கக்கனையும் தரையில் படுக்க வைத்து சாகடித்தது. வாழ்க தியாகசீலர் பூ.கக்கன் புகழ்.




No comments: