1. பரதநாட்டியம்
"இந்தியாவின் பெருமைமிகு நடன வகைகள்" எனும் கட்டுரையைப் படித்தபின் வளைகுடா நாட்டில் இருக்கும் நண்பர் கவிஞர் தனுசு அவர்கள் ஒவ்வொரு வகை நடனம் பற்றியும் அறிந்து கொள்ள ஆவல் எனத் தெரிவித்திருக்கிறார். ஆம்! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் இந்த கலையில் ஆர்வம் உள்ளவன் என்பதைத் தவிர அதன் முழு பரிமாணத்தையும் அறிந்தவன் அல்ல. அப்படி முழுமையாகத் தெரிந்தவர்களைக் கொண்டு எழுதவைக்க நேரமும் இல்லை. ஆகையால் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைத் தொகுத்து இங்கே தருகிறேன். இதில் என் சொந்த சரக்க, மொழி நடையைத் தவிர, வேறு எதுவும் இல்லை. இதெல்லாம் ஏற்கனவே விஷயம் தெரிந்தவர்கள் எழுதி வைத்ததிலிருந்து தொகுத்தெடுத்தது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் பரத நாட்டியம் பற்றி ஓரளவு தெரிந்து கொள்வோம்.
தமிழகத்தில் உருவானது பரதநாட்டியம். தமிழகத்திலும் தஞ்சாவூரில் உருவானது இது. தஞ்சை நால்வர் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள், அவர்களால் பிரபலப்படுத்தப் பட்டது இது. அதற்கு முன்பும் பரதநாட்டியம் இந்த நாட்டில் சிறப்பாக ஆடப்பட்டு வந்திருக்கிறது, வேதங்களிலிருந்து தான் நடனக் கலை தோன்றியதாகவும், பின்னர் பரத முனிவர் உருவாக்கினதாகச் சொல்கிறார்கள். நம் ஊர்களில் ஆலயங்களில் காணப்படும் பல சிற்பங்கள் பரதக் கலையின் சிற்பங்களே. தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம் ஆகிய ஆலயங்களில் காணப்படும் நடனச் சிற்பங்கள், கரணங்கள் குறித்து நடன மேதை பத்மஸ்ரீ பத்மாசுப்ரமண்யம் அவர்கள் ஆய்ந்து ஒரு நூலை இயற்றியிருக்கிறார்கள். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டி முடித்தபோது நானூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களை நியமித்து, அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து குடியேற்றியதாக கல்வெட்டுகள் இருக்கின்றன. தஞ்சை கோயிலுக்கு முதன்முதலாக திருவையாற்று கோயிலில் இருந்து பல நடனமாதர்களை மாற்றல் செய்து தஞ்தைக்கு அனுப்பியதாகவும் செய்திகள் இருக்கின்றன.
இந்த அரிய நடனக் கலை 1946 வரை குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மட்டும் பாதுகாக்கப்பட்டு ஆலயங்களில் ஆடப்பட்டும், மன்னர்கள் சபைகளில் ஆடப்பட்டும் வந்திருக்கிறது. இவர்கள் மட்டும் இந்தக் கலையை புனிதம் கெடாமல் பாதுகாத்திருக்காவிட்டால், இந்த அரிய கலை மறைந்து போயிருக்கவும் வாய்ப்பு உண்டு. நம் கலைகள் அனைத்துமே இறைவனை மையப்படுத்தி நடத்தப்படுவதால், இந்த நடனக் கலை நமது ஆலயங்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. நாட்டை ஆள்கின்ற உயர்ந்த நிலையில் இருந்ததால் மன்னர்கள் தங்கள் அவைகளிலும் இவர்களை ஆடச் செய்திருக்கின்றனர். பின்னர் பல செல்வந்தர்களும் ஆடற்கலையைப் பார்த்து ரசித்திருக்கின்றனர். இந்த கலை இன்று மக்கள் கலையாக மாறி, நம் அனைவர் வீட்டுக் குழந்தைகளும் பயிலுகின்றதொரு அற்புதக் கலையாக மாறி இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.
மகாகவி பாரதியார் "அபிநயம்" எனும் தன்னுடைய கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:--
"நாட்டிய சாஸ்திரத்தை உண்மையாகப் பயின்றால் அதிலிருந்து ஆண்களுக்கு ஆண்மையும், பெண்களுக்குப் பெண்மையும் உண்டாகும். அதை நெறி தவறிப் பயிற்சி செய்தால் அதிலிருந்து ஆணுக்குப் பெண்மையும், பெண்ணுக்கு ஆண்மையும் விகாரமாகத் தோன்றும்"
"நாட்டிய சாஸ்திரத்தை ஆதியில் பரமசிவன் நந்திக்குக் கற்றுக் கொடுத்தார். அப்போது பகவான் நந்தியை நோக்கி, 'கேளாய் நந்தி! அபிநயம் தவறுவதாலே ஜனங்கள் நரகத்தை அடைகிறார்கள். தர்மிஷ்டனாகிய கூத்தன் அபிநய உண்மைகளை ஆசார்யனிடமிருந்து நியமங்களுடனே கற்றுக்கொள்ள வேண்டும். ........ தர்மிஷ்டனாகிய சிஷ்யன், நெறிப்படி அசார்யனிடமிருந்து கற்றுக் கொண்ட நாட்டியத்தில் நவரஸங்களும் ஸமரஸப்பட்டுக் காண்போருக்கு ஆனந்தத்தையும், லக்ஷ்மி கடாக்ஷத்தையும் ஏற்படுத்தும். நல்ல ஆசார்யன் இல்லாமல் இந்த நாட்டிய சாஸ்திரத்தைப் பழகுவோன் உண்மையான பக்தியுடையவனாக இருக்க வேண்டும். தெய்வ பக்தியினாலே ஸகல வித்தைகளும் வசப்படும்"
மகாகவியின் கருத்துப்படி இதுபோன்ற கலைகள் தெய்வ பக்தியினாலே கைகூடுவது என்கிறார். இந்த நாட்டிய சாஸ்திரத்தை விரும்பியவர் எல்லோரும் கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அதில் சிறந்து விளங்குவதற்கு எல்லோராலும் முடிவதில்லை. யாரோ சிலர்தான் இந்தக் கலையில் சிறந்து விளங்கும் நிலைமையை இன்றும் நாம் பார்த்து வருகிறோம். திறமை, முயற்சி, குருபக்தி, உடல்வாகு, இவை அத்தனையும் இருந்தாலும் தெய்வானுக்ரகம் என்பது மிக அவசியம் என்பது தெரிகிறது. ஆடற்கலை இறைவனால் கொடுக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். அந்தக் கலையில் நாம் தேர்வதற்கு அவன் அருள் அவசியம் தேவை. இவற்றால் எல்லால் நாம் அறிந்து கொள்ளும் உண்மை, தெய்வத்தின் பெயரால், தெய்வத்தை முன்னிட்டு நாம் கற்கும் இந்தக் கலை அவனுக்கே அர்ப்பணிக்கப் படுகிறது. அப்படிச் செய்யும்போது அதில் மேலும் ஒளியும், சிறப்பும் உண்டாகிறது என்பதே. இந்த கட்டத்தில் இந்த தெய்வீகக் கலையில் சிறந்து விளங்கும் ஆயிரமாயிரம் அற்புதமான கலைஞர்களை வணங்கிப் போற்றிவிட்டு மேலே தொடர்கிறேன்.
இனி, பரத நாட்டியம் பற்றி நான் தொகுத்த சில விஷயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பரத நாட்டியம் இன்றைய நிலைமையில் பலரும் விரும்பி கற்றுக் கொள்ளும் கலையாக விளங்குகிறது. இறைவனை வழிபடுவதற்கு 9 மார்க்கங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவை முறையே:--
1. ஸ்ரவணம்: புராண இதிகாஸ வரலாற்றுக் கதைகளை புராணிகர்கள் சொல்ல அமர்ந்து கேட்பது.
2. கீர்த்தனம்: இறைவன் புகழை இசைவடிவில் பாடி, பஜனை செய்து இன்புறுதல்.
3. ஸ்மரணம்: இறைவன் நாமத்தை சதாகாலமும் உச்சரிப்பது அல்லது மந்திரங்களை சொல்வது.
4. பாதஸேவனம்: கர்ம யோகத்தில் கண்டபடி பக்தி செய்து பிறருக்குச் சேவை செய்வது.
5. அர்ச்சனம்: பூஜை, ஹோமம் போன்றவற்றால் இறைவனுக்கு அர்ச்சனை செய்தல்.
6. வந்தனம்: உடலின் எட்டு பாகங்கள் தரையில் பட பூமியில் பணிந்து வணங்கி எழுதல்.
7. தாஸ்யம்: இறைவனுக்கு தன்னலமின்றி, நான் எனது எனும் உணர்வு நீக்கிப் பணி செய்வது.
8. ஸஹ்யம்: இறைவனுக்குத் தோழன் போன்ற நட்புறவு பூண்டு பணியாற்றுதல்.
9. ஆத்மநிவேதனம்: இறைவனிடம் பூரண சரணாகதியடைந்து பக்தி செய்தல்.
இந்த ஒன்பது வகைகளில் கீர்த்தனம் என்பது இசை, பஜனை, ஆடல், பாடல் மூலம் இறைவனை நினைந்து வழிபடுதல். பாண்டுரங்கனை நினைத்து பக்தர்கள் தன்னை மறந்து பாடி ஆடி பஜனை செய்து வழிபடுகிறார்கள் அல்லவா? மக்கள் ஒரிடத்தில் கூடி இறைவன் மீது பாடல்களைப் பாடி மகிழ்கிறார்கள் அல்லவா? அதைப் போல இறைவன் வகுத்துக் கொடுத்த அந்த நடனக் கலையைப் பாடலோடு ஆடி வழிபடுவது ஒரு முறை, அதுவே பரதக் கலை.
தொழில் முறையில் ஆலயங்களில் ஆடுவதும் பாடுவதும் பக்தி மார்க்கத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது என்பதையும், அதனை இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் செய்து வந்தார்கள் என்பதையும் பார்த்தோம். அந்த முறை 1946க்குப் பிறகு சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது. பின்னர் இந்த ஆடலையும், பாடலையும் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரும் கற்றுக் கொள்ளவும், ஆடவும் பாடவும் தலைப்பட்டனர். ஒரு வகுப்பினருக்கு மட்டும் உரிமை எனக் கருதப்பட்ட இந்தக் கலை இன்று பொதுமக்கள் அனைவருக்கும் உரித்தான் பொதுவான கலையாக ஆகிவிட்டது. 1930களில் சென்னை மாகாணத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்பார் இந்த தேவதாசி முறை ஒழிப்புக்கு முன்நின்று பாடுபட்டு அவர்களிடம் இருந்த கலையை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வழிவகுத்தார்.
முன்பே குறிப்பிட்டபடி இந்து மதத்தில் சிவபெருமான் நடராஜனாக ஆந்த நடனமும், ஊர்த்துவ நடனமும் ஆடி நடனத்துக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். இதனைச் சிவதாண்டவம் என்பர். கி.பி. 8 அல்லது 9ஆம் நூற்றாண்டில் சிவபெருமானை நடராஜ மூர்த்தியாக இப்போது நாம் காணும் வடிவத்தில் சோழ நாட்டில்தான் முதன்முதலாக சிற்பம் வடித்தனர். அந்த சிற்பத்தின் சிறப்பு குறித்து நிறைய பேசமுடியும். நான்கு கரங்களையும், அந்த கரங்களின் பாவங்களையும், கையிலுள்ள தீ, உடுக்கை போன்றவற்றுக்கும், கால்களில் வீழ்ந்து கிடக்கும் அபஸ்மாரம் என்பவனைப் பற்றியும், அவரைச் சுற்றி தீ ஜ்வாலைகளோடு அமைந்த திருவாசி பற்றியும் நிறைய செய்திகள் உண்டு, அவற்றைத் தனியே பார்க்கலாம்.
தஞ்சையில் சின்னண்ணா பெரியண்ணா எனும் அமைச்சர்கள் கடைசி மராத்திய மன்னரின் அவையில் இருந்தார்கள். இவர்கள் இசை, நடனம் இவற்றைப் போற்றி பாதுகாத்தவர்கள். பரதநாட்டியத்தை முறைப்படுத்தி ஆடுவதற்கு இலக்கணம் வகுத்த பெருமை தஞ்சாவூர் கிருஷ்ணய்யர் என்பவருக்கு உண்டு. திருமதி ருக்மணி தேவி அவர்கள் இந்தக் கலையில் மேன்மையடைந்து பந்தநல்லூர் பாணி எனும் வகையை நாட்டியத்தில் நுழைத்தவர். மேலை நாடுகளும் இந்தக் கலையைக் கண்டு வியக்கும் வண்ணம் செய்த பெருமை இந்த ருக்மணி தேவிக்கு உண்டு. பின்னாளில் கலாக்ஷேத்ரா எனும் அமைப்பின் மூலம் ருக்மணி தேவி அருண்டேல், மைலாப்பூர் கெளரி அம்மாள் போன்றவர்கள் இந்தக் கலையை மேலும் பிரபலப் படுத்தக் காரணமாக இருந்தவர்கள். பரதநாட்டியம் என்பது தெய்வீகமான, சில இலக்கணங்களுக்கு உட்பட்ட, அற்புதமான கலை என்பதை உலகறியச் செய்தவர்கள் இவர்கள்.
1936இல் திருமதி ருக்மணி தேவி அருண்டேல் சென்னையில் அடையாறு பகுதியில் கலாக்ஷேத்ரா எனும் நிறுவனத்தைத் தோற்றுவித்து அரியகலைகள் பலவற்றையும், பரதநாட்டியம் உட்பட பலவற்றைப் போற்றி வளர்த்து மக்கள் கரங்களில் கொடுக்க உதவியிருக்கிறார். அவருடைய காலத்தில் பெண்கள் மட்டுமே ஆடக்கூடியதாக இந்த பரதக் கலை இருந்திருக்கிறது. ஆண்கள் நட்டுவனாராக மட்டுமே இருந்தனர்.
தற்போது ஆண், பெண் பேதமின்றி அனைவருமே இந்தக் கலையில் தேர்ச்சி பெற்று ஆடிவருகின்றனர். தென்னிந்திய திரைப்படங்களும் ஓரளவு இந்தக் கலை பிரபலமடைய காரணமாக இருந்திருக்கிறது. புகழ்வாய்ந்த நடனக் கலைஞர்கள் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்திருக்கின்றனர் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தற்போது ஆயிரக்கணக்கான பரதநாட்டியக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் வாழையடிவாழையாக இந்தக் கலை இளைய தலைமுறைக்குப் போய்ச்சேரும், அவர்கள் இதனை இன்னமும் செம்மைப் படுத்தி காலத்திற்கேற்றவாறு அழகுபடுத்தி மக்கள் மத்தியில் பெருமை சேர்ப்பார்கள். ஆலயங்களில் மட்டும் ஆடப்பட்ட இந்தக் கலை இன்று ஆலயத்தினுள்ளும், வெளியிலும், சபாக்களிலும், திருமணம் மற்ற விசேஷங்களிலும் ஆடப்படுவதும், இதில் திறமைமிக்க இளைய தலைமுறை முன்னுக்கு வந்து கொண்டிருப்பதும் கலை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.
நிருத்யம் என்று முதலில் குறிப்பிட்டது நினைவில் இருக்கிறது அல்லவா. இது குறித்து நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருத்தை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன்.
Natyam refers to Dance, Drama and Music; it has three main aspects. i) Nritta or the purely rhythmic: This is confined to footwork and movements of the body and the hands, with no symbolic meaning. ii) Natya or mime: It is conveyed through gestures and facial expressions; we can call it "the suggestive language of imagination". iii) Nrithya. This employes both dance and drama to emphasise the meaning of lyrics and mood in the music.
These three aspects combined together create unique dance form. Abhinay Darpana says:
"Whither the hand goes, the glances lead,
Whither the glances lead, there the mind follows,
Whither the mind goes, there the mood follows,
Whither the mood goes, there is real flavour born."
இப்படி ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும்போது உருவாகும் கலையே பரதநாட்டியக் கலை.
பரதநாட்டியத்துக்கு மிருதங்கம், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு இவை மட்டுமே முதலில் இருந்தன. பின்னர் பல வாத்தியக் கருவிகளும் பயன்படலாயின. பரதநாட்டியத்துக்கென்று விசேஷமான உடை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதை அணிந்துகொண்டு ஆடும்போதுதான் அதன் சிறப்பு வெளிப்படும்.
பரதநாட்டியத்தில் கடைபிடிக்கப்படும் முறைகளை ஓரளவு வரிசைப்படுத்தித் தருகிறேன். இது நூறுசதவீதம் சரி என்பதற்கில்லை. மிகச் சிறந்த ஆசான்கள்தான் அதை கூறமுடியும்.
முதலில் அலாரிப்புடன் தொடங்குகிறது. நடனக் கலைஞர் நமக்கும் மேலே இருக்கும் இறைவனையும், கண்முன் அமர்ந்திருக்கும் குருவையும், கண்டு ரசிக்கும் மக்களையும் வணங்குவது. நடனமணியின் கால் கைகள்கள் தடங்கலின்றி செயல்படுவதை நிச்சயம் செய்துகொள்வது போல இந்த அலாரிப்பின்போது, தங்கள் அசைவுகளை இடமும் வலமும் கால், கை, உடல் இவற்றை மாற்றி மாறி அசைந்து காண்பிப்பார்கள். உடல் உறுப்புகள் மீது அவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு இதில் வெளிப்படும். கடவுள் வணக்கம் என்று இதனைக் கொள்ளலாம்.
அடுத்து ஜதிஸ்வரம்: இசைக்கும், அதன் ராகம், ஸ்வரம், ஜதி ஆகியவற்றுக்கு இணைந்து ஆடுவது. ஒலி, நடை, வேகம் இவற்றுக்கு ஈடுகொடுத்து ஆடும் பகுதி இது.
ஸப்தம்: லயத்திலிருந்து அபிநயத்துக்குக் கொண்டு செல்வது. பாடப்படும் பாடலின் பொருள் வெளிக்கொணரும்படியான நடனப் பாங்கு. கடவுளர்களின் லீலைகளை, விளையாட்டை விளக்கி பல்வேறு உணர்ச்சி பாவங்களோடு வெளிப்படுத்துவது.
வர்ணம்: நடனத்தின் முதுகெலும்பு, அல்லது நரம்பு மண்டலம் என்று வர்ணத்தைக் குறிப்பிடலாம். மிகவும் சிரமமான பகுதி இது. கிட்டத்தட்ட முக்கால் அல்லது ஒருமணி நேரம் ஆடக்கூடிய இந்த வர்ணத்தில் கலைஞர் தங்கள் திறமை முழுவதையும் காட்ட வேண்டியிருக்கும். கைகள், விரல்கள், கால்கள், தாளங்கள், அசைவுகள், முத்திரைகள் இவை அத்தனையும் வரிசையாக வந்து போகும்போது சீராக நீரோட்டம் போல் அமைந்திருக்கும் இந்தப் பகுதி. உணர்ச்சிகள், பாவங்களாக முகத்தில் வெளிப்படும். நன்கு தேர்ந்த மூத்த கலைஞர்கள், அனுபவமிக்க கலைஞர்களால்தான் இதனைத் திறமையாகக் கையாளமுடியும்.
பதம்: ஒரு பாடலின் உணர்ச்சிகளை பாவங்களோடு வெளிக் கொணர்வது. கிருஷ்ண லீலை என்று எடுத்துக் கொண்டால் அவற்றின் பல்வேறு பாவங்களைக் காட்ட வேண்டும்.
தில்லானா: தில்லானா என்பது வேகமும், விருவிருப்பான சொற்கட்டுகளும் கொண்ட பகுதி. இதில் வேகத்தோடு, கால், கை, விரல்கள் செயல்படும் விதமும், இதில் அடங்கியிருக்கும் பல்வேறு ஒலிஜாலங்களைக் காட்டும் சொற்களும் தில்லானாவை அழகுபடுத்திக் காட்டக் கூடியவை.
நிறைவில் ஏதாவதொரு ஸ்லோகத்தோடு நடனத்தை நிறைவு செய்வர். இது மேலோட்டமாக பொதுவான கருத்துக்களைச் சொல்லப்பட்டிருக்கும் கட்டுரை. இதில் நன்கு தேர்ந்த நடன ஆசிரியர்கள் சொல்வதே சரியென்று கொள்ள வேண்டும். இது அரிச்சுவடி போல ஒரு வழிகாட்டி அவ்வளவே. கவிஞர் தனுசுவின் விருப்பத்தை ஓரளவு நிறைவு செய்திருப்பதாக நினைக்கிறேன்.

No comments:
Post a Comment