கவிமணி கண்டிக்கிறார்!
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் எழுதிய கட்டுரை இது. அவர் காலத்தில் கம்பனையும், கம்ப ராமாயணத்தையும் இகழ்ந்தவர்கள் பலர். மகாகவி பாரதியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலர். அந்த சூழ்நிலையில் ஐயா ம.பொ.சி.அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரையை இப்போது படித்துப் பாருங்கள்!
'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'என்பது பழமொழி. அதுபோல, ஒரு கவிஞனின் உள்ளத்தை- உணர்வை இன்னொரு கவிஞந்தான் சரியாக அளந்து காட்ட முடியும். அறிஞன், கவிஞனை அனுபவிக்கலாம். ஆனால், கவிஞனுடைய உள்ளத்தின் ஆழத்தை அறியமுடியாது. அதனாற்றான்;"அணிசேய் காவியம் ஆயிரங்கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்" என்றார் பாரதியார்.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. இக்காலக் கவிஞர்களுள் தலை சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். கட்சிச் சார்பால் சில கவிஞர்கள் பெருமை பெற்றதுண்டு. கவிமணி தேசிக விநாயகனார், காலமெல்லாம் கட்சிச் சார்பற்று விளங்கினார். அதுமட்டுமா? மக்களுடைய காட்சிக்கும் அப்பாற்பட்டவராக இருந்தார்.
இப்படிக் கட்சிக்கும், மக்களுடைய காட்சிக்கும் அப்பாற்பட்டவராக இருந்தும், கவிதைத் திறன் ஒன்றின் மூலமே புகழ் பெற்றார் தேசிகவிநாயகம்.
கவிமணி தேசிகவிநாயகம் ஆணவமற்றவர்: அப்பழுக்கற்ற நெஞ்சுடையவர். அவருடைய குழந்தை உள்ளத்தை அவரோடு பழகியவர்கள் நன்கறிவர் தம்முடைய கவிதையில் மட்டுமல்லாமல், தமது பேச்சிலும் தமிழின் இனிமையை வெளிப்படுத்தி வந்தார்.
இந்நாளில், ஒரு கவிதை கூட எழுதத் தெரியாதவரெல்லாம் பெருங் கவிஞர்கள் எழுதிய காப்பியங்களைக் குறை கூறுகின்றனர். கம்பனுடைய காப்பியத்தில் இங்கொரு கவிதை, அங்கொரு கவிதை எனப்படித்துவிட்டு, காப்பியம் முழுவதையுமே கரைத்துக் குடித்து விட்டவர்கள் போலப் பேசுகின்றனர் - எழுதுகின்றனர்.
கவியரசர் பாரதியார் தமக்கு முன்தோன்றிய கவிஞர் பெருமக்களைப் போற்றிப் புகழ்ந்தார்:
- யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.
கவிமணி தேசிகவிநாயகனார் கம்பனைப் புகழ்ந்து அவனுக்கென்றே தனியாகப் பல கவிதைகள் எழுதியிருக்கிறார். தாம் இயற்றிய வேறு பல கவிதைகளிலும் இடை இடையே கம்பனின் பெருமையை நுழைத்திருக்கிறார்.
ஒரு கவிதையில், கம்பனுடைய காப்பியத்தை நாவினிக்கப் பருகத்தக்க சுவை மிக்க பாற்கடலுக்கு ஒப்பிடுகின்றார் கவிமணி:
- பாலின் சுவைக்கடல் உண்டெழுந்து-கம்பன்
பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை
நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்
நன்னய முற்றும் தெளிகுவமே.
கம்பன் ஆரிய மொழியைக் கற்றறிந்தவன்; கன்னித் தமிழின் ஆழத்தை அளந்தவன். அதனாற்றான் மாரியைப் போன்று கவிதை மழை பொழிய முடிந்தது அந்த இருமொழிப் புலவனால்!
- ஆரியம் நன்குணர்ந் தோன் - தமிழின்
ஆழம் அளந்து கண்டோன்
மாரி மழைப் போலக் - கவியின்
மழை பொழிந்திடு வோன்.
ஒரு சில தமிழர்கள் 'கம்பனைப் பழிப்போம். அவனுடைய காப்பியத்தை எரிப்போம்' என்று காட்டுக் கூச்சலிடுகிறார்கள் அல்லவா? இந்தக் கூச்சல் நமது கவிமணி காதுக்கும் எட்டியபோது, அவர் ஆத்திரப்படவில்லை. கூச்சலிடும் மக்களின் அறியாமை குறித்து அனுதாபப்பட்டார்.
"கம்பனை எரிக்க விரும்பும் அன்பர்களே! கம்பன் வெறும் தமிழ்க்கவி அல்லன். உலக மகாகவி. சாதாரண கவிஞன் அல்லன்-அருட்கவி; அவனுடைய கவிதைகள் பிணி, மூப்பு, சாக்காடு போக்கும் தேவலோகத்து அமிழ்தம்" என்று எரிக்க விரும்புவோருக்கு அன்போடு அறிவுரை கூறினார். இதோ அந்தக் கவிதையைப் படியுங்கள்:
- அம்புவிக்கு வாய்த்த அருட்கவி; ஐயமின்றி
உம்பரமு தொத்த உயிர்க்கவி-கம்பனும் தன்
மந்திரச் சொல்லால் வனைந்த கவி; என்றேனும்
வெந்திடுமோ தீயால் விளம்பு.
- ஓலை எரியும் தாளெரியும்
உள்ளத் தெழுதிவைத்து நிதம்
காலை மாலை ஓதுகவி
கனலில் வெந்து கரிந்திடுமோ.
உண்மைதானே, கம்பன் கவிதைகள் ஓலையோடு தாளோடு நின்றுவிடவில்லை. லட்சாதி லட்சம் மக்கள் உள்ளங்களிலே குடிபுகுந்திருக்கின்றன. ஓலையை எரிக்கலாம், காகிதத் தாளையும் எரிக்கலாம்; உள்ளங்களை எரிக்க முடியுமோ? அங்கன்றோ கம்பன் இருக்கின்றான்! இதோடும் விடவில்லை கவிமணி:
- சிந்தை மகிழ விழாக் கண்டு
தேர்ந்த புலவர் முன்வந்து
சந்த மெழவே பாடுகவி
தழலில் வெந்து நீறாமோ?
கம்பன் பாடல்களை சந்தத்தோடு பாடப் போட்டியிடுவோர் எத்தனை பேர்! அந்தப் பாடலும் எரியுமோ- எரிக்கத்தான் விடுமோ நாடு!
- உள்ளத் துவகை பொங்கியெழ
உரைகள் சொல்லப் பொருளேறித்
தெள்ளத் தெளிந்த கவியமுதம்
தீயில் வெந்து பொடியாமோ?
திருமாலே இராமனாக அவதரித்தான் என்பர் சமயவாதிகள். அந்தத் திருமாலும் தன்னைப்பற்றி எழுதப்பட்ட காவிய்த்தை- கவிதையை காதாரக் கேட்டுக்களிக்க ஆர்வமுற்று மனித உடல் தாங்கி மண்ணில் வந்தால் கன்னித் தமிழ் நாட்டுக்குத்தான் வருவானாம்.
ஆம்; இங்கேதானே கம்பனுடைய கவியமுதம் இருக்கிறது!
இந்தக் கருத்தைக் கவிமணி எவ்வளவு அழகாகச் சொல்லுகின்றார் கேளுங்கள்:
- கம்பன் கவியின் களியமுதம் உண்டிட, மால்
அம்புவியில் வந்திங்கு அவதாரம் செய்தானோ!
-------------
No comments:
Post a Comment