- திரு. ப. ஜீவானந்தம் அவர்களால் எழுதப்பெற்ற "புதுமைப் பெண்" எனும் நூல் , பெண்ணுரிமையை வலியுறுத்தும் சிறந்த திறனாய்வு படைப்பாகும். பெண்ணைப் பற்றிய சமுதாய கண்ணோட்டம் ஈராயிரம் ஆண்டுகளாக எப்படி இருந்தது; இருந்து வருகிறது? என்பதையும் இனி 'புதுமைப் பெண்' எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அமரர் ஜீவா அழகுற விளக்கியுள்ளார்.
- அன்பே!
மரங்களில் பூவாது காய்க்கும் மரங்கள் உண்டு என்கிறார்கள். அதுபோல், மக்களில் ஆண்டு முதிராதவர்களிலும் அறிவில் முதிர்ந்தவர்கள் இருக்கிறார்கள். பாத்தி கட்டி விதைக்காமலேயே முளைக்கிற விதைபோல ஒரு சிலர், பிறர் அறிவுரை இல்லாமலேயே அறிவுடையோராய் விளங்குகிறார்கள்.
இன்று அதிகாலையில் உனக்குக் கடிதம் எழுத நான் உட்கார்ந்ததும்,இந்தக் கருத்துக்கள் என் மனதில் 'பளிச்சுப் பளிச் சென்று' மின்னின.
சென்ற வாரம் நான் உனக்குக் கடிதம் எழுதவில்லை. அது உனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்றும், அதனால் மனம் மறுகியிருப்பாய் என்றும் அதன் விளைவாக எனக்குக்காரசார மாய்க் கடிதம் தீட்டுவாயென்றும் எதிர்பார்த்தேன். நீ என்னை இலவு காத்த கிளி ஆக்கிவிட்டாய்.
"வாழ்க்கையிலே ஒரு கதவு மூடிக்கொண்டால் இன்னொரு கதவு திறந்துகொள்ளும். இது இயற்க்கை விதி. பின் ஏன் நாம் சங்கடப்படுகிறோம்? காரணம் இதுதான். திறந்த கதவை நாம் பார்ப்பதில்லை; மூடிக்கொண்ட கதவைப் பற்றியே சாதாரணமாக நாம் ஆசையும் அழுகையுமாய் நிற்கிறோம்" என்று உன் கடிதத் தைத் தொடங்குகிறாய். இந்த ஒளவைக்கு நகர திரையில்லையே என்று நான் மூக்கில் விரல் வைக்கத் தூண்டுகிறாய்.
அப்பால், "நீங்கள் எனக்குக் கடிதம் தீட்டதாது எனக்கு நஷ்டந்தான். ஆனால் அதைவிடப் பெரிய லாபம், நீங்கள் எட்டய புரம் சென்று பாரதி விழாவில் கலந்துகொண்டது என்று கருதுகிறேன்" என்று நிதானத்துடன் எழுதுகிறாய்.
தொடர்ந்து அதை விளக்கு முகத்தான், "தமிழ் மக்களின் ஒப்பற்ற பெரும் புலவனான பாரதி, புதுமைப் பெண்ணின் பேரன்பன் அல்லவா? அவன் நினைவு விழாவில் கலந்துகொண்டிருக்கிறீர்கள்; கலைஞர்களோடு அளவளாவி இருக்கிறீர்கள்; லட்சக்கணக்கான மக்களிடையில் பேசியிருக்கிறீர்கள். இரண்டு நாட்களும் பேசி இருக்கிறீர்கள்.
வானொலி நிலையத்தாரின் அற்ப மனம் உங்களின் பெரும் பேச்சை இரண்டு நாட்களும் ஒலிபரப்பாவிட்டாலும், ஒரு நாள் பேச்சை தமிழுலகம் முழுவதும் கேட்குமாறு பேசியிருக்கிறீர்கள். இது பெரும் லாபமல்லவா? எனவே, ஒரு கதவு அடைத்தது, நஷ்டயீடாக, ஏன், கொஞ்சம் அதிகமாகவே மற் றொரு கதவு திறந்தது" என்று அந்தம் சிந்த அழகு ஒழுக நீ எழுதியிருக்கிறாய். இவ்வாறு என்னைப் பரவசக் கடலில் ஆழ்த்தி யிருக்கிறாய்.
அடிக்கடி இம்மாதிரிக் கடிதம் எழுதி உங்களை இந்தப் பெண்மணி ஏமாற்றமாட்டார்களா என்று என் அந்தராத்மா
என் னிடம் ஆவல் துடிக்கக் கேட்கிறது. நிற்க,
முதன் முதலில் அன்பே! 'புதுமைப்பெண்' பற்றிய புத்தம் புதிய கண்ணோட்டத்தை உனக்குக் காட்ட விரும்புகிறேன்.
"பொதுவாக நாட்டின் அரசியல் வாழ்விலும் சரி, சமு தாயப் பொது வாழ்விலும் சரி, பெண்கள் தங்களுக்குரிய நியாயமான நிலையான இடத்தைப் பெறவேண்டும். அது ஏற்படாத வரையில், சமதர்மத்தைப் பற்றிப் பேசுவதிருக் கட்டும், ஜனநாயகத்தைப் பற்றிக்கூட, பிசகின்றி முழுமை யாகப் பேசுவது முடியாது."
புது உலகச் சிற்பி என்று மனித வர்க்கத்தின் நெஞ்சில் அழி யாத இடம் பெற்றுவிட்ட பெரியாரில் பெரியார் மேற்கூறியவாறு சொல்கிறார்.
புதுமைப் பெண் தழைக்க வேண்டிய புதிய வாழ்வில் இரண்டு கூறுகள் பொதிந்து கிடக்கின்றன. ஒன்று, அழித்தல் கூறு; மற்றொன்று, ஆக்கல் கூறு.
'ஆணைவிடப் பெண் தாழ்ந்தவள்' என்ற எண்ணம், பேச்சு, எழுத்து, நடப்பு யாவும் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட வேண்டும். இது 'அழித்தல்' கூறு.
ஆணோடு பெண்ணுக்கு ஒரு புதிய சமத்துவம் ஏற்பட வேண்டும். அன்பே! நினைவில் வைத்துக்கொள். சமத்துவத்தைப் பற்றிய பார்வையிலும் 'பழைய' 'புதிய' பார்வைகள் உண்டு.
இந்த 'புதிய சமத்துவம்' என்பது என்ன?
கல்வித்துறையில் ஆண்-பெண் சம நிலை ஏற்பட வேண்டும், அரசியல் உரிமைகளைப் பொறுத்தமட்டில், ஆண்-பெண் ஏற்றத் தாழ்வுகளுக்கு எந்த வகையிலும் இடம் இருக்கக் கூடாது. தொழில் நுட்பத் துறையில், ஆணும் பெண்ணும் ஈடு ஜோடாக வாழ வேண்டும். சமுதாயத் துறையில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று நடத்தப்பட வேண்டும். கலாசாரத் துறையில் ஆணும் பெண்ணும் இரு கண்களென, ஒப்பாகத் தழைக்க வேண்டும். இதுபோன்றே ஆன்மீகத் துறையிலும், குடும்பத் துறையிலும், சுருங்கக்கூறின் எத்துறையிலும், சமத் துவம் நிலவ வேண்டும். இது ஆக்கல் கூறு.
அழித்தாலும் ஆக்கலும் துண்டு துண்டாக, தனித்தனியாக, நடைபெறுவதில்லை. அழிதலில் ஆக்கலும், ஆக்கலில் அழிதலும் நடந்துகொண்டே இருக்கின்றன. இயற்கையிலும், சமுதாயத்திலும், மனக்களத்திலும், இந்த அழிதல்-ஆக்கல் இயக்கம் சதா சர்வசதா, நிகழ்ந்துகொண்டே இருக்கிறது - ஜீவ நதியின் நீரோட்டம் போல்.
அன்பே! கற்ற மனிதன் ஓர் குளம்; அறிவுடைய மனிதன் ஒரு ஊற்று என்பார்கள். நீ அறிவுடைய நங்கை. நான் எடுத்துக் கூறும் எந்த உண்மைகளையும் தத்துவார்த்தங்களையும் நீ எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை. ஆனால் லட் சோப லட்சம் பெண் மக்கள் நான் சொல்வதையெல்லாம் எளிதில் புரிந்துகொள்ள முடியாது.
எனவே, நீ, நான் கூறும் கருத்துக்களைப் படித்து நன்றாகப் புரிந்துகொள். பின்னர், தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் புரியும்படி எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல். முழுத் தேங்காயை எடுத்து, மட்டை நாரை உரித்து, ஓட்டை உடைத்து, பருப்பாகவோ, பருப்பைப் பாலாகவோ கொடுக்க வேண்டுமா, அவ்வாறு கொடு. பழத்தைத்தோலுரித்தோ, துண்டு துண்டாக நறுக்கியோ கொடுக்க வேண்டுமா, அவ்வாறு கொடு. திராட்சைப் பழம்போல் அப்படியே கொத்தாகவோ, உதிரியாகவோ கொடுக்க வேண்டுமா, அவ்வாறு கொடு.
ஏன் இவற்றையெல்லாம் கூறுகிறேன் தெரியுமா? அழித்தல் கூறு, ஆக்கல் கூறு என்றெல்லாம் சொன்னேன் அல்லவா? நீ அவற்றைக் கண்டு மிரளக்கூடாது என்றுதான். நீ மிரளமாட்டாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லி வைக்கிறேன்.
இனி விஷயத்தைத் தொடர்கிறேன்.
ஆணோடு சரி, நிகர், சமானமான புதிய சமத்துவம்தான் 'புதுமைப் பெண்' ணின் கண்ணோட்டம் என்று மேலே எடுத்துக் காட்டினேன், அல்லவா? இந்தப் புதிய சமத்துவம் வாழ்வில் மென் மேலும் வெற்றி சூட எத்தகைய உத்தரவாதம் வேண்டும் என்பது பற்றி புதுமைக் கண் படைத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை உனக்குச் சொல்ல விரும்புகிறேன். விரிவாகப் பின்னால் சில கடிதங்களில் தீட்டுவேன். என்றாலும் இந்தக் கடிதத்தில் ஒரு குறிப்பு தர விரும்புகிறேன்.
வேலை செய்வதில் ஆண்களோடு பெண்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும். இதில் முடியுமா முடியாதா என்ற கேள்விக்கு இடமில்லை. உண்டென்றால் அது இரு பாலாருக்கும் பொதுவான கேள்வியாக இருக்க வேண்டும். அதுதான் கண் கூடான அனுபவம் கூறும் தீர்ப்பு.
வேலைக்குச் சம்பளம் (உழைப்புக்கு ஊதியம்) ஆண், பெண் இரு பாலாருக்கும் ஒரே தரமாகவே இருக்கவேண்டும்,
ஓய்வும் விடுதி நேரமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரிக் கிடைக்க வேண்டும்.
சமூக இன்ஷுரன்ஸ், கல்வி போன்ற விஷயங்களில் சம வாய்ப்பும் சமவசதியும் ஆணைப்போல் பெண்ணுக்கும் வேண்டும்.
சமுதாய நலவுரிமைகளிலெல்லாம் பெண்ணின் பங்கும் உரிமையும் ஆணைவிட இம்மியும் குறைதல் கூடாது.
இதுவரைக் கூறிய புதிய சமத்துவத்தின் வெளியீடுகளும் எதிரொலிகளும் உன் மனத்தை இன்பக் கடலாக்கும் என்பதை நான் அறிவேன்.
மேற்கூறியவை மட்டுமல்ல, இன்னும் கேள்!
புதிய சமத்துவத்தை உத்தரவாதம் செய்ய பெண்களுக்குத் தனிச் சலுகைகள் பல வேண்டும். அவை எவை? சில சொல் கிறேன்.
தாய்-சேய் நல உரிமைகளை அரசாங்கம் கற்கோட்டையும் இரும்புக் கதவுமாக நின்று காக்க வேண்டும்.
குழந்தை குட்டிகள் அதிகமாகவுள்ள பெரிய குடும்பங்களுக்கு சர்க்கார் உதவி தாராளமாகக் கிடைக்க வேண்டும்.
பிரசவகால ஓய்வு, முழுச் சம்பளத்தோடு பெண்களுக்குக் கிடைக்க வேண்டும்.
தாய்-சேய் நல விடுதிகளும், குழந்தை வளர்ப்பு நிலையங்களும் நாடு முழுவதும் சங்கிலிப் பின்னல்போல் முளைத்துத் தழைக்க சகல ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.
அன்பே! மேலே நான் எடுத்துக் காட்டிய சம உரிமைகளுக்கும் தனி உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கிற சூழ்நிலையில் தான், பெண்களின் புதிய சமத்துவம் தழைத்துச் செழிக்க சாத்தியக் கூறு உண்டு. இதுதான் 'புதுமைப் பெண்'ணின் கண்ணோட்டம், உலக முழுவதிலும் சமதர்மிகளின் கண்ணோட்டமும் இதுவே.மேற்கூறியவைகளும், விட்டுப் போனவைகளும், தெரிந்தவைகளும், தெரியப் போகிறவைகளுமான வாய்ப்புகளும் வசதிகளும் முழு நிறைவாகக் கிடைக்கிறபொழுது, பெண்களின் பல்வேறு திறமைகளும், படைப்பாற்றல்களும் பல்கிப் பெருகி வளர்ச்சி அடையும். சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரத் துறைகளின் பல்வேறு கிளைகளிலும் பெண்ணின் திறமையும் ஆற்றலும், ஆணோடு இணைந்து பிணைந்து நிற்கும்.அன்று, பெண் மனித வாழ்வுக்குத் தன் முழுப்பங்கைச் செலுத்துவாள். இந்த மண்ணுலகம் பொன்னுலகமாக மலர்ந்து மணக்கும்.
இந்தக் கடிதத்தில் இதுவரைக் கூறிய கருத்துக்களில் உனக்குப் பிடித்தமான கருத்துக்களை, நீ தன் மயம் ஆக்கிக் கொள்வாய் என்பது உறுதி. அதோடு, என் கடிதத்தோடு அழிந்து போகாத அந்தக் கருத்துக்களை, உனக்கு இயல்பான ஆழமான உணர்ச்சியோடு, மிக அழுத்தமாக, அழகாக உனது சகோதரிகளுக்கும் எடுத்துச்சொல்வாய் என்று எதிர்பார்க்கிறேன். பூரணச் சந்திரனைக் கண்டு பொங்கும் கடல்போல் பெண் ணுரிமை வளர்ச்சியைக் கண்டு ஆணினம் முழுதும் மகிழ்ச்சியில் துள்ளும் காலம் தூரத்தில் இல்லை.
No comments:
Post a Comment