பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, April 25, 2013

திருநெய்த்தானம்

திருநெய்த்தானம்

திருநெய்த்தானம் எனும் இத்தலம் திருவையாற்றுக்கு மேற்கில் சுமார் 2 கி.மீ.தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்திருக்கும் அழகான கிராமம். இவ்வூரில் தேவாரம் பாடப்பட்ட நெய்யாடியப்பர் ஆலயமும், வைணவ ஆலயமொன்றும், கிராம தேவதை ஆலயமும் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன.

இவ்வூர் சிவாலயம் நெய்யாடியப்பர் ஆலயம் என்று குறிப்பிட்டோமல்லவா. அந்த ஆலயத்துள் இப்போது செல்வோம். ஆலயம் காவிரிக் கரையில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. நதிக்கும், ஆலயத்துக்கும் இடையில் கல்லணையையும் திருவையாற்றையும் இணைக்கும் சாலை இருக்கிறது. ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறம் அமைந்திருப்பது அம்மன் கோயில் கொண்டிருக்கும் சந்நிதி உள்ளது. அம்மனின் பெயர் பாலாம்பிகை. தமிழில் இவரை இளமங்கையம்மை என்பர். அற்புதமாகக் காட்சியளிக்கும் பாலாம்பிகையை தரிசித்து நலம் பெறுவோம்.

சிவபெருமான் சந்நிதிக்குச் செல்வதற்கு நேராக மேற்கில் சென்றால் அங்கு விநாயகர், முருகன் சந்நிதிகளை தரிசிக்கலாம். இவர்களுக்கான தனி சந்நிதிகள் தவிர லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பிரம்ம ஆகியோர் மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். உட்பிரஹாரத்தைச் சுற்றி வந்து சிவபெருமான் சந்நிதியை அடையலாம். இருபுறமும் துவாரபாலகர்கள். அழகிய பெரிய சிலைகள். மூலஸ்தானத்தில் நமக்குக் காட்சியளிப்பவர் நெய்யாடியப்பர். இவருக்கு நெய்யினால் அபிஷேகம் நடைபெறும். திரு+நெய்+தானம் என்பதே இப்போது தில்லைஸ்தானம் என வழங்கப்படுகிறது.

பசு, பால், நெய் இவை சம்பந்தப்பட்ட தலபுராணங்களைப் பார்த்தால் ஒரே மாதிரியான வரலாறு சொல்லப்படும். அதாவது புல்வெளிகளில் மேய்வதற்காகப் பசுக் கூட்டங்கள் செல்லும். அங்கு கறவைப் பசுவொன்று ஓரிடத்தில் தன் மடியிலிருந்து பாலைப் பொழிந்துவிட்டு வந்து விடும். வீடு வந்ததும் அந்தப் பசு பால் கறக்கவில்லை என்றதும், அதன் உரிமையாளர் என்ன நடக்கிறது என்று பார்ப்பார். அப்போது அந்த பசு ஓரிடத்தில் தினமும் பாலைப் பொழிவதைக் கண்டு அந்த இடத்தைத் தோண்டிப் பார்ப்பார். அங்கு ஒரு சிவலிங்கம் புதையுண்டிருக்கும். அதை எடுத்து ஆலயம் எடுப்பித்து வழிபடுவர். அதே கதைதான் இந்த ஊரின் தல வரலாற்றிலும்.

திருநெய்த்தானம் சப்தஸ்தான தலங்களில் ஒன்று. மற்றவை திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துறுத்தி ஆகியவையாகும். இவ்வூரில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில்

மையாடிய கண்டன் மலைமகள் பாகமதுடையான்
கையாடிய கேடில் கரியுரி மூடிய வொருவன்
செய்யாடிய குளை மலர் நயனத் தவளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்தான மெனீரே

என்று பாடுகிறார். திருவையாறு வரும் அனைவருமே இங்கு வந்து நெய்யாடியப்பரை தரிசித்துச் செல்லலாம்.
முனைவர் இராம கெளசல்யா

இவ்வூருக்குச் சிறப்பு சேர்ப்பவை பல இருக்கின்றன. பிரபலமான தேசபக்தர் சாம்பசிவ ஐயர் என்பவர் இங்குதான் இருந்தார். தமிழுலகில் சேக்கிழாரடிப்பொடி எனப் புகழ்வாய்ந்த அறிஞர் வாழும் ஊரும் இதுதான். சிதம்பரம் பிள்ளை எனும் தியாகி வாழ்ந்த ஊர் இது. ராஜாஜி காலத்தில் அமைச்சராக இருந்த தி.செள்.செள.ராஜன் தந்தையார் ஊரும் இதுவே. இவை தவிர மரபு ஃபவுண்டேஷன் எனும் பெயரில் இந்த மண்ணுக்குரிய கலை பண்பாட்டு முறைகளைக் கட்டிக் காத்திடும் பொருட்டு ஒரு அமைப்பை ஏற்படுத்தி நடத்திக் கொண்டு வருபவர் முனைவர் இராம கெளசல்யா இங்கு தனது பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறார். தமிழகச் சிறுமிகளின் உடை, உணவு, பேச்சு அனைத்துமே மாறிக் கொண்டிருக்கும் இந்த நாளில், பண்டைய பண்பாட்டு முறைகளைக் குறிப்பாக சிறுமிகள் ஆடக்கூடிய கும்மி, கோலாட்டம், கோலமிடுதல், ஊசி நூல் கொண்டு துணி தைத்தல், வாழை நாறில் பூத்தொடுத்தல், தேவாரம் ஓதுதல் போன்ற பண்பாட்டு வழிமுறைகளை தன் செலவில் செய்து வருகிறார் முனைவர் இராம கெளசல்யா. இத்தனை பெருமை பெற்ற ஊருக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துகொள்வதோடு, முனைவர் கெளசல்யாவின் பணிகளையும், அதற்கு அவருடைய முதிய வயதான தாயாரின் பங்களிப்பையும் பார்த்துச் செல்லலாமே.


1 comment:

 1. இலங்கை மன்னன் கயவாகுவுக்கு நெய்யாடிய‌ப்பர் கோவிலே குல தெய்வக் கோயிலாம். தரிசிப்பதற்காக கயவாகு வந்து சென்ற வரலாறு உண்டு.

  தமிழ் எழுத்தாளர் தி சா ராஜுவுக்கும் திருநெய்த்தானமே பிறந்த மண்.

  தஞ்சை மாவட்டத்தில் முதல் முதலாக ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரால் கட்டப்பட்ட பள்ளி திருநெய்த்தானத்திலேயே உள்ளது.

  வேதாரண்யம் உப்பு சத்யாகிரகப் பாத யாத்திரை தி சே செள ராஜன் இல்லத்தில்
  திருச்சியில் துவங்கி திருநெய்த்தானம் வழியாகவே சென்றது.

  முனைவர் கெள‌சல்யாவிற்குப் பாரட்டுக்கள்.நல்ல தகவல்களைத் தொகுத்த தங்களுக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete

You can give your comments here