பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, April 23, 2013

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள்

 ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள்

சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி

                                       

சதாசிவ பிரம்மேந்திரர் உருவம்


   சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டான நுழைவு வாயில்

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அவருடைய அதிஷ்டானம் கரூர் அருகிலுள்ள நெரூர் எனும் ஊரில் காவிரிக் கரையில் அமைதியான சூழ்நிலையில் பசுஞ்சோலைகளுக்கிடையே அமைந்திருக்கிறது. அவருடைய கீர்த்தனைகள் சிலவற்றை அவ்வப்போது இசைக் கச்சேரிகளில் பாடுவதையும் கேட்டிருப்பீர்கள். சில பாடல்கள் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவை. அவருடைய பாடல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுமுன் திரைப்படங்களில் வந்த ஒரு சில பாடல்களை இங்கு பார்க்கலாமே. முதலில் "மானஸ ஸஞ்சரரே" எனும் பாடல். இது சங்கராபரணம் எனும் படத்தில் வந்த பாடலாதலால் பலரும் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு.

ராகம் நவ்ரோஜ்/ஆதி தாளம்:


பல்லவி
மானஸ ஸஞ்சர ரே ப்ரஹ்மணி (மான)

சரணம்
ஸ்ரீ ரமணி குச துர்க்கவிஹாரே
ஸேவக ஜனமந் திரமந்தாரே (மான)

மதஸிகி பிஞ்சா லங்க்ருத சிகுரே
மஹணீ யகபோ லவிஜித முகுரே (மான)

பரம ஹம்ஸமுக சந்த்ர சகோரே
பரிபூரித முரளீ ரவதாரே (மான)

இந்தப் பாடலின் பொருளைத் தெரிந்து கொண்டால் இன்னமும் ரசிக்க முடியும் அல்லவா? அது இதுதான். "ஏ மனமே! உலாவிக் கொண்டிரு! பிரம்மத்தை நோக்கி உலவுவாய். அங்கு ஸ்ரீதேவியானவள் இருக்கிறாள். அவளுடைய இரு கொங்கைகள் எனும் மலைகளுக்கிடையே மகிழ்ச்சி தருவதும், அடியார்களுக்கு அருளும் ஐந்து கல்பக விருக்ஷங்களில் சிறந்த மந்தார விருக்ஷமாகவும் உள்ள பிரம்மத்தை நோக்கி உலவுவாய். கர்வம் கொண்ட மயிலின் பீலியைத் தலையில் அணிந்து, ஒளிவீசும் கன்னங்களை உடையதுமான பிரம்மத்திடம் ஏ மனமே உலவுவாய். புண்ணியர்களின் முகங்களான திங்களின் ஒளியைப் பருகும் சகோரப் பறவையாகவும், முரளி எனும் குழல் எழுப்பும் நாதமாகவும் இருக்கும் பிரம்மத்திடம் ஏ மனமே உலாவுவாய்!

இனி மற்றொரு பாடல். இது பழம்பெரும் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடி வெளிவந்த ஒலித்தட்டுகளில் கேட்டிருக்கலாம். அது இதோ.

ஹூருடி ராகம்/ஆதி தாளம். பாடல்: ப்ரூஹிமுகுந்தேகி

பல்லவி
ப்ரூஹி முகுந்தேவி ரஸனே (ப்ரூஹி)

சரணம்
கேசவ மாதவ கோவிந்தேதி
கிருஷ்ணானந்த ஸ்தாநந்தேதி (ப்ரூஹி)

ராதா ரமண ஹரே ராமேதி
ராஜு வாக்ஷ கனச்யா மேதி (ப்ரூஹி)

கருட கமன நந்தகஹஸ்தேதி
கண்டித தசகந்தர மஸ்தேதி (ப்ரூஹி)

அக்ரூரப்ரிய சக்ரதரேதி
ஹம்ஸ நிரஞ்சன கம்ஸஹரேதி (ப்ரூஹி)

அற்புதமான இந்தப் பாடல் சொல்லும் கருத்து என்ன தெரியுமா? "என் நாவே! முகுந்தா! என்று சொல்வாய். கேசவா என்றும் மாதவா என்றும் கோவிந்தா என்றும், ஆனந்த மயமான கிருஷ்ணனே என்றும் எப்போதும் சொல்வாய் என் நாவே. ராதையின் நாயகனே, ஹரி, இராமா, தாமரைக் கண்ணா, கருமேகத்தை ஒத்தவனே, நந்தகம் எனும் வாளை உடையவனே, இலங்கேசன் இராவணன் தலைகளைக் கொய்தவனே என்றெல்லாம் சொல்லி ஏத்து என் நாவே. அக்ரூரரின் நண்பரே, சக்கராயுதம் கைக்கொண்டவனே, அன்னம் போல மாசற்றவனே, கம்ஸனைக் கொன்ற சூரனே என்றும் போற்றுவாய் என் நாவே."

எஸ்.ஜி.கிட்டப்பாவைப் பற்றி கேள்விப் பட்டிருப்போம். அந்தக் கால நாடகமேடைக் கலைஞர். அவரது இசையால் கவரப்படாத மனமே அந்த நாளில் இல்லை எனலாம். தன் கானத்தால் கானக்குயில் கே.பி.சுந்தராம்பாளைத் தன் மனைவியாகக் கொண்டவர் இந்த இசைத் தென்றல். அவர் அந்த நாளில் நாடக மேடைகளில் இந்தப் பாடலைப் பாடாத நாட்களே இல்லையாம். இதோ அந்தப் பாடல். நாமும் படிக்கும்போது அவர் பாடலைக் கேட்பது போன்ற உணர்வை அடைவோம்.

குந்தலவராளி ராகம்/ஆதி தாளம். பாடல்: காயதி வனமாலி.

பல்லவி
காயதி வனமாலீ மதுரம் (காயதி)

சரணம்
புஸ்பஸு கந்தஸு மலயஸமீரே
முனிஜன ஸேவித யமுனா தீரே (காயதி)

கூஜிதசுகபிக முககககுஞ்சே
குடிலாளகபஹு நீரதபுஞ்சே (காயதி)

துளஸீ தாமவி பூஷணஹாரி
ஜலஜபவஸ்துத ஸத்குண செளரீ (காயதி)

பரமஹம்ஸ ஸ்ருத யோத்ஸவகாரி
பரீபுரிதமுர ளீரவதாரீ (காயதி)

வனத்தில் மலர்ந்த மாலை அணிந்த கண்ணன் பாடுகிறான்; இனிமையாய்ப் பாடுகிறான், மலர்ந்து மலர்களின் மணமும், மாமலையிலிருந்து வீசும் தென்றலும், முனிவர்கள் பலரும் சென்று தேடுகின்ற யமுனை நதிக் கரையில் அவன் பாடுகிறான். கிளி, குயில்கள் கூவும் காவினில், கருத்த மேகக் குழல்கள் படியும் யமுனை நதிக்கரையில் பாடுகிறான். கழுத்தில் துளசி மாலையணிந்து மனதைக் கவருகின்றவனும், தாமரையில் பிறந்த பிரம்மன் வழிபடுபவனும், நற்குணங்கள் வதிகின்றவனும், வீரர்வழித் தோன்றலான கிருஷ்ணன், முரளி எனப்படும் தன் புல்லாங்குழலில் இனிமையை வழியவிட்டுப் பாடுகிறான்.




2 comments:

snkm said...

http://www.sringeri.net/2012/07/17/stotra/guru/sri-sadashivendra-stava.htm,
http://www.sringeri.net/2012/07/16/stotra/guru/sri-sadashivendra-pancharatna-stotram.htm,

balakrishnan said...

Thanks for this devine article