பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 3, 2012

அம்மா....

               அம்மா....

அம்மா....
எனக்கொரு ஆசை
ஒரே ஒருமுறை இதை செய்வாயா?
வழக்கம் போல்
ச்சீய்... போடா என்று சொல்வாயா?

தாலாட்டாகவே
இதனை சொல்கிறேன்!

நீ
உனக்கென
ஒரு நாள் வாழ்வாயா?
உனக்கென
ஒரு முறை சமைப்பாயா?
உனக்கென
ஒரு மூச்சு இழுப்பாயா?
உனக்கென
ஒரு ஆசை சொல்வாயா?
உனக்கென
பிடித்ததை கேட்பாயா?

நான் பிறந்த அன்றே
நீ
பிதற்ற ஆரம்பித்துவிட்டாய்!

என்னை தாலாட்டும் போதே
நீ
தீர்மானித்துவிட்டாய்!

நான் வளரும் போதே
நீ
வகுத்துவிட்டாய்!

நீ
வாழப்போகும்
வரம் நான்தானென்று.

எனக்காக
உன்
பத்தியமும் வைத்தியமும்
நீ
பைத்தியமோ என்றே
நினைக்கவைக்கிறது.

நீ
காடு போகும்வரை
நம் வீட்டில்
வாரத்தில் வேண்டாம்
மாதத்திலும் வேண்டாம்
வருடத்தில் ஒரு நாளாவது
விடுமுறை எடுக்க மாட்டாயா?
உனக்கென்று
ஓய்வாய் அமர மாட்டாயா?

நான் அதிகம் சாப்பிட்டால்
அன்று
உனக்கு பெருநாள்!
நான் அதிகம் சிரித்தால்
அன்று
உனக்கு திருநாள்!
உனக்கென்று ஏதும்
விசேஷ நாட்கள் கிடையாதா?

நான் கண் விழித்தால்
உனக்கு
சூரிய உதயம்!
நான் தூங்கினால்
உனக்கு
சூரியன் அஸ்தமனம்!
ஒரு நாள் பொழுதின் கணக்கை
நீ இப்படித்தானே செய்கிறாய்.

என் தவறுகளுக்கு
தெய்வத்தை திட்டுவாய்
என்னையும் அடிப்பாய்.
ஆனால்
வலியில் நீயே அழுவாய்.
என்னைத்தவிர
உனக்கு வேறு எதுவும் தெரியாதா?

தாயே தன் பிள்ளைகளுக்கு
விளக்காவாள்!
ஆனால் நம் விஷயத்தில் மாறிவிட்டது.
இங்கு
நான் தான் விளக்கு.
இல்லையென்றால்
ஏன்
விட்டில் பூச்சி போல்
என்னையே சுற்றிச் சுற்றி வருகிறாய்.

தாயே தன் பிள்ளைகளுக்கு
தெய்வம்!
ஆனால் இதுவும் நம் விஷயத்தில்
மாறிவிட்டது.
நான்தான் உனக்கு தெய்வமா?
இல்லையென்றால்
ஏன்
என்னை சாமி சாமி என
அழைக்கிறாய்.
உனக்கென சுய சுகம்
ஏதுமில்லையா?

நான்
பிறந்தது உனக்கு!-ஆனால்
நீ
பிறந்தது எனக்கா?

ஆழ்கடலின் சிப்பிகள்
அத்தனையும் முத்தாவதில்லை!
எத்தனைப் பூ பூத்தாலும்
உன்
புன்சிரிப்புக்கு ஈடில்லை!
நான்
எத்தனை கோடி தேடினாலும்
அதில் எதுவும் உனக்கு சமமில்லை!
நான் உனக்கு செய்ய
எதையாவது சொல்லேன்.

அம்மா என்று
நான் அழைப்பதுதான்
உனக்கு
நான் செய்யும் ஒரே கைம்மாறு,
இன்னும் ஒரு முறை
உன்னை
அழைத்துப்பார்கிறேன்

அம்மா......

-தனுசு-