குழாயடி
ஊர்க்கோடியின்
குழாயடியில் கூட்டம்!
தங்கம் தோண்டி எடுக்க அல்ல!
இலவச
தண்ணீர் பிடிக்கத்தான்!
கூட்டம் கூடினால்
கச்சேரி களைகட்டும்.
குழாயடிக்கு மட்டும் விலக்காகுமா?
"விளங்கமாட்டான்
அடுத்தவனையும்
விளங்கவிடமாட்டான்"
இந்த
வட்டார மொழி
தட்டாமல் குழாயடியிலும் கும்மியடிக்கிறது!
அங்கு
குரலெடுத்து
குழு சேர்த்து
குடம் பிரித்து
வடம் இழுக்க
இடம் வழுக்க
தடம் மாறி தடுமாறுது!
குடம் உருண்டு
சேறும் தெளிக்குது!-இருந்தும்
புழுதி கிளம்ப
ஆட்டமும் தொடருது!
குழாயில் நீர் இல்லையெனில்
குடமும் காலி! இடமும் காலி!
பிறகு
கும்மியடிக்க
ஏது இடம்?
கும்மிப்பாட்டை நிறுத்திவிட்டு
குடத்தை நிரப்பப் பாருங்கள்.
குழாயில்
நீர் நின்றுவிடப் போகிறது!
-தனுசு-
No comments:
Post a Comment