பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 19, 2012


 நான் ஒரு கூண்டுப் பறவை!
                                 ன் வி சுப்பராமன்
 12/1045, ஜீவன் பீமா நகர்
சென்னை 600101
நான் ஒரு கூண்டுப் பறவை!

வெளியே பறப்பதற்கு விருப்பமில்லை
உள்ளே  இருப்பதற்கு மறுப்புமில்லை!
வெளியே செல்வதற்கு அச்சமுமில்லை
உள்ளே  நிற்பதற்கு    அமுங்குதலில்லை!
வானில் பறப்பதில் புதுமையில்லை
வீணே இருப்பதில் வேதனையில்லை!

நான் ஒரு கூண்டுப் பறவை!

மனமெனும் சிறகினில் வானில் பறப்பேன்
உடலெனும் குடில்தனில் நிறைந்து வாழ்வேன்!
காதம் ஆயிரம் விரைந்தே சிறப்பேன்
காதல் பறவையொடு களித்து மகிழ்வேன்!
கற்பனை நிலவினில் காலடி வைப்பேன்
சொற்களில் திகழ்ந்து சொர்க்கம் அமைப்பேன்!

நான் ஒரு கூண்டுப் பறவை!

நெற்களைத் தின்று வலிமை சேர்ப்பேன்
நித்திரை   உலகில் சாத்திரம் கற்பேன்!
கூண்டில் அமர்ந்து காப்பியம் படைப்பேன்
மீண்டும் இவ்வுலகில் பறவையாய்ப் பிறப்பேன்!
ஆண்டும் அமைதியொடு இளமை காப்பேன்
தாண்டியே விண்ணை வானகம் செல்வேன்!

நான் ஒரு கூண்டுப் பறவை!

அரபிக் கடலில் கப்பல் விடுவேன்
நிலவில் நின்று கவிதை புனைவேன்!
வானில் பறந்து திருக்குறள் படிப்பேன்
நானிவ் வுலகில் சரித்திரம் படைப்பேன்!
நாளும் நன்மை செய்தே வாழ்வேன்
தோளைக் கொடுத்து உதவிகள் செய்வேன்!

நான் ஒரு கூண்டுப் பறவை!

கடலில் மூழ்கி முத்தினை எடுப்பேன்
உடலால் உலகிற்கு உழைத்தே நிற்பேன்!
ஏழைகளுக்குதவி இயன்றதைச் செய்வேன்
பாழும் வறுமையை ஒழிக்க முயல்வேன்!
சத்திய வாழ்வை நிதமும் காப்பேன்
பாரதி பாடலை தினமும் இசைப்பேன்!

நான் ஒரு கூண்டுப் பறவை!

உப்பிட்டவரை உள்ளளவும் நான் நினைப்பேன்
சப்பென்ற வாழ்விதென என்றும் நான் நினையேன்!
தப்பான  பாதைதனில் தவறியும் நான் போகேன்
அன்பினையே அனைவருக்கும் அள்ளியே தந்திடுவேன்!
அழகான இவ்வுலகை அணு அணுவாய் நான் ரசிப்பேன்!
பழகாமல் இருந்தாலும் பாங்குடனே வாழ்ந்திடுவேன்!

நான் ஒரு கூண்டுப் பறவை!



   

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கருத்துக்கள் உள்ள வரிகள் ... வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி...