பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, July 21, 2012

மேம்பாலம்

பட்டத்து மேம்பாலம்

இந்தப்
பட்டிக்காட்டான்
பட்டணம் போனேன்.
ஒரு
பொட்டிக்கடை தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை-ஆனால்
தென்பட்டதோ  மேம்பாலங்கள்!

பஞ்சுமிட்டாய்
குச்சி ஐஸ்
தங்கிவிட்ட என் நாக்கில்
பிஸ்ஸாவும் பர்கரும்
சுவைக்கவில்லை-
போகட்டும்!

வேட்டியும்
லுங்கியும்
கட்டிக்கொண்ட இடுப்பில்
ஜீன்சும் ஷார்ட்சும்
நிற்கவில்லை-
போகட்டும்!

கட்டவண்டி
ரயில்வண்டி
ஏறிப்பார்த்த கால்களுக்கு
தூசியில்லா
ஏசி வண்டி
ஏறிப்பார்த்தால் பிடிக்கவில்லை-
போகட்டும்!

கட்ட மதகு
ஒத்த பாலம்
மேய்ந்துவந்த கண்ணுக்கு
பட்டத்து மேம்பாலம்
ஆச்சரியம்! அதிசயம்!!

ஆகாயத்தில் சாலை!
இந்த
மாயம் எப்படி ஆனது?
அன்றே இருந்திருந்தால்
ராமாயத்தில்
அனுமனுக்குப் பாத்திரம் இருந்திருக்காதே!

பாதையில் பளிங்கைப்  பதித்து
இதோ
வானத்தை நோக்கும் இந்தப்பாதை
போவது
இந்திரன் வீட்டுக்கா?

தூரத்திலிருந்து பார்த்தால்
அந்தரத்தில் ஒரு நதி!
நெருங்கிப் பார்த்தால்-
உயரத்தால்
கழுத்தில் வலி!

தொங்கும் தேராய் இருக்கிறது
இந்தத்
தார் சாலையில்
நூறு வாகனம் ஓடும் அழகு!

மத்தாப்பு இல்லாத தீபாவளியா?
கூரை இல்லாத வீடா?
இதயம் இல்லாத உயிர்களா?
மேம்பாலம் இல்லாத பட்டணமா?

தும்பிக்கையில் இருக்கு
யானைக்கு பலம்!
பட்டணத்துக்கு இருக்கு
அதன்
மேம்பாலத்தில் பலம்.!!

-தனுசு-

4 comments:

Yaathoramani.blogspot.com said...

சென்னைப் பட்டணம் குறித்த
என் போன்ற கிராமத்தானின் பார்வையும்
இப்படித்தான் இருக்கிறது
அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்
பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்

thanusu said...

என் கவிதையை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்


நன்றி ரமனி அவர்களே.

சென்னை வரும் கிராமத்தாருக்கு அத்தனையும் அதிசயம் தான் .அந்த கிராமத்தான் வரவில்லை என்றால் சென்னையுமில்லை அதுவும் அதிசயம் தான் .

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகளில் தகவல்... அருமை ! நன்றி !

Unknown said...

ராம் மோகன்

மிக மிக அருமையான கவிதை .