பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, July 23, 2012

ஸ்ரீ ஆண்டாள் திருஆடிபூரம்-1

From: vasuvanaja <srinivasanvanaja@gmail.com>
Subject: ஸ்ரீ ஆண்டாள் திருஆடிபூரம்-1
To: "Ramkripa Google Group" <ramkripa@googlegroups.com>
Date: Sunday, July 22, 2012, 11:04 AM

22-07-2012
Sourced from another group and presenting the same in 7 parts for easy reading. 
Our due thanks to the original up loader.
regards, 
vasu

ஸ்ரீ ஆண்டாள் திருஆடிபூரம்-1


“கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர், சோதி மணிமாடம் தோன்றும் ஊர், நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர், நான்மறைகள் ஓதும் ஊர், வில்லிபுத்தார் வேதக்கோனூர்” என்று புகழப்பெற்ற தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்.

‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று பரந்தாமனை வாழ்த்திப் பாடிய பெரியாழ்வார் தோன்றிய திருத்தலம்; பூமாலை சூடிக் கொடுத்தும் பாமாலை பாடியும் அவனையே மணாளனாக வரித்த ஸ்ரீஆண்டாள் அவதரித்த அருட்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். வியாஸபாரதம் அருளிய வில்லிபுத்தூர் ஆழ்வார் பிறந்த புனிதத்தலம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கி.பி.9ஆம் நூற்றாண்டில், குரோதன வருஷம் ஆனிமாதத்தில் வளர் பிறையில் சுவாதி நக்ஷத்திரத்தில் கருடனின் அம்சமாகத் தோன்றியவர் பெரியாழ்வார். இவர் பெயர் விஷ்ணுசித்தர். இவர் தமது நிலத்தில் நந்தவனம் அமைத்து, வடபத்ரசாயிக்குப் புஷ்ப கைங்கர்யம் புரிந்து வந்தார். இவருக்கு பட்டர்பிரான் என்று பட்டமும் அளிக்கப்பட்டது. ரங்கமன்னார் பெருமாள் மீது நானூற்று அறுபத்தொரு பாசுரங்கள் இயற்றினார். அவருடைய வளர்ப்புப் பெண் கோதை, தந்தை தொடுத்த மாலையை, சூடி மகிழ்ந்து, பின்பு ரங்கமன்னாருக்கு அணிவித்து மகிழ்ந்தவள். பாவைப் பாட்டுப் பாடியவள். நாச்சியார் திருமொழியும் பாடியருளியவள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாள் கோவிலின் இராஜகோபுரம் கவினுறு அழகும் இணையற்ற சிறப்பும் பெற்றுள்ளது. வடபத்ரசாயியாக, பெருமாள் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார். புஜங்கசயனராக பெருமாள் காட்சி தருகிறார். கிழக்கு நோக்கிய நிலையில் சயனித்துள்ள பெருமாளின் அருகிலே பெரிய பிராட்டியும் பூமாதேவியும் காட்சி தருகிறார்கள். சூரியன், பிருகு மகரிஷி, மார்க்கண்டேய மகரிஷியுடன், வில்லிபுத்தூர் ஊரை உருவாக்கிய ‘வில்லி’ என்பவரின் உருவமும் இங்குள்ளன.

ஆலிலைக் கண்ணனாக ஊழிக்காலத்தில் தோன்றும் மகாவிஷ்ணுவை, ஆதிசேஷன் இத்தலத்தில் சேவிக்கிறார். திருக்குருகூர், திருவரங்கம் போன்ற திருக்கோவில்களில் அரையர் சேவை, தாளமும் இசையும் கலந்து நடைபெறுகிறது. அதைப் போன்றே ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் இரண்டு தளங்களுடன் காட்சி தருகிறது. மேல் தளத்தில் பெரியாழ்வார் என்று போற்றப்படுகிற விஷ்ணுசித்தருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. கீழே உள்ள தளத்தில் நரசிம்ம மூர்த்தியும், பன்னிரு ஆழ்வார்களும், தசாவதார மூர்த்திகளும் திவ்ய அனுக்ரஹ மூர்த்திகளாக சேவை சாதிக்கிறார்கள். மூல கர்ப்பக்கிரஹத்தில் ‘வடபத்ரம்’ எனப்படும் ஆலிலையில் வடபத்ரசாயியை தரிசிக்கலாம். அர்த்த மண்டபம் சக்கரத்தாழ்வார், உற்சவமூர்த்திகளுடன் நீண்டு அகன்று விளங்குகிறது.

வடபத்ரசாயியின் கோவிலை ஜடாவர்மன் குலசேகரத்தேவர் கட்டினார். தொடர்ந்து பாண்டிய மன்னர்களும் திருமலை நாயக்கரும் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். திருவரங்கன், கருடன் மீது தோன்றி இத்தலத்தில் ஆண்டாளை ஆட்கொண்டதால், இங்கு கருடன் கோவில் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டாளுக்குத் தனிக்கோவில் உள்ளது. கல்யாண மண்டபம், பந்தல் மண்டபம், ஸ்ரீஇராமர், ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதிகள் ஆகியன தவிர பிராகாரத்தில் பல ஓவியங்களும் கண்களுக்கு விருந்தாக உள்ளன.

ஆண்டாள், கருவறையில் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். திருவரங்கனையே மணமுடிக்க விழைந்து, தந்தையுடன் அரங்கனுடன் ஒன்றறக் கலந்த நாயகி ஆண்டாள். இத்தலத்திலே, ரங்கராஜனாக மணக்கோலம் கொண்டு நிற்க, மணமகளாக ஆண்டாள் அருகிலே இருக்க கருடாழ்வார் பெருமானைக் கைதொழுது இருக்கும் ஒப்பரிய காட்சியைக் காணும் பேறு பெரும்பேறாகும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் உதித்த நன்னாளான ஆடிப்பூர உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பங்குனி உத்திர நன்னாளில் பரந்தாமனின் கைத்தலம் பற்றிய மணநாளும் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

வடபத்ரசாயி கோவிலில் உள்ள புஷ்கரணி திருமுக்குளம் என்று அழைக்கப்படுகிறது. “மைத்துனன் நம்பி மதுசூதனன் தன்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி” என்று பாடியவள் ஆண்டாள் கண்ட கனவை மெய்ப்பிக்க பாவை நோன்பு நோற்று

“நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காலை நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்”

என்று விரதம் காத்து, அரங்கனுடன் ஒன்றியவள் ஆண்டாள். நல்ல நாயகனை அடைய விரும்பி அவனையே மணந்து அவனுடன் ஒன்றிய ஆண்டாளின் திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். அங்குள்ள கோவிலில் கருவறையில் திருமணக் கோலத்துடனே அரங்கன் ஆண்டாளுடன் சேவை சாதிக்கிறார். திருமணமாக வேண்டிய கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடைய வேண்டிக் கொள்ளும் திருமணத் தலமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் திகழ்கிறது. ஆண்டாள் அடைந்த பேற்றினை அவளருளாலே நாமும் அடையலாம்.
--
 
 
Parthasarathy Srinivasan[vasu]
Camp Dubai :)
என்றும் எப்பொழுதும் அன்புடன் 
பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் என்கின்ற வாசுவனஜா 
"Every Sunrise Gives Us One Day More To Hope!!!"