பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 11, 2012

ஸ்ரீ சித்தாந்தசாமி திருக்கோயில்


ஸ்ரீ  சித்தாந்தசாமி திருக்கோயில் 

புதுச்சேரியில் உள்ள இந்த சித்தாந்தசாமி கோயிலைப் பற்றி பாரதியாரே தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார் . வேதபுரம் என வழங்கப்பட்ட புதுச்சேரிக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் சித்தாந்த சாமி கோயில் இருக்கிறது. அங்கு ஒரு மடமும் உண்டு. அந்த மடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரதேசி இருந்தார் என்று பாரதி தனது கட்டுரையில் சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்து சொல்கிறார். அந்தப் பரதேசியின் மீதுதான் அந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கிறதாம்.

பாரதியார் புதுவையில் வாழ்ந்திருந்த போது ஒரு நாள் நாராயணசாமி என்பவருடன் போய் அந்த கோயிலின் மூலஸ்தானத்துக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் உட்கார்ந்தார்களாம். அன்று பகல் முழுவதும் புதுச்சேரியைச் சுற்றியுள்ள இயற்கை வளம் மிகுந்த பகுதிகளில் சுற்றிவந்து பொழுதைக் கழிக்க இருவரும் முடிவு செய்திருந்தனர். வழக்கமாக பாரதியார் அங்கிருந்த மடு ஒன்றில் ஸ்நானம் செய்துவிட்டு அங்கு அடர்ந்து வளர்ந்திருந்த மாந்தோப்பு, பின்னாளில் அவர் குயில் பாட்டை அங்கு பாடியதால் குயில் தோப்பு என்ற பெயர் பெற்ற இடங்களில் உட்கார்ந்து பாடுவார், நண்பர்களுடன் உரையாடி மகிழ்வார். அப்போது அடித்த புயற்காற்றில் தோப்பிலிருந்த மரங்களெல்லாம் விழுந்து வெட்டவெளியாகி விட்டதால் நிழல் தேடி பாரதியும், நாராயணசாமியும் அருகில் இருந்த இந்த சித்தாந்தசாமி கோயில் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

கோயிலைச் சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மரங்கள் விழுந்து கிடந்த காட்சிகள்தான் தென்பட்டன. சில மரங்கள் காற்றில் சாய்ந்து இப்போதோ எப்போதோ விழும் என்கிற நிலையில் காணப்பட்டன. ஒரு சில மரங்கள் மட்டும் எந்த காத்து வந்தால் என்ன, எங்களை என்ன செய்யமுடியும் என்கிற மதார்ப்பில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தன. புயற்காற்று கார்த்திகை மாதத்தில் அடித்தது; இவர்கள் அங்கு போன சமயம் புயல் அடித்து ஐந்தாறு மாதங்கள் ஆன பின்பும் அதே கதைதான். இந்த விழுந்த மரங்களை என்ன செய்வது? எப்படி அகற்றுவது என்று மக்கள் முடிவு செய்யமுடியாமல் இருந்தனர்.

பாரதியாரை நண்பர்கள் 'காளிதாசன்' என்று அழைப்பதாக பாரதி தன் கட்டுரைகளில் எழுதுகிறார். அந்த முறையில் கூட வந்திருந்த நாராயணசாமி பாரதியாரைப் பார்த்து சொல்கிறார், "கேட்டீரா காளிதாசரே! இந்த ஹிந்து ஜனங்களைப் போல சோம்பேறிகள் மூன்று லோகத்திலும் இல்லை. இந்த மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு போய் எப்படியேனும் உபயோகப்படுத்தக் கூடாதா? விழுந்தால் விழுந்தது. கிடந்தால் கிடந்தது. ஏனென்று கேட்பவர் இந்தியாவில் இல்லை. பாமர தேசமய்யா! பாமர தேசம்" என்று.

மகாகவியோ மனநிலைக்கேற்ப பேசவோ, பாடவோ, மெளனமாக சிந்திக்கவோ செய்பவர். இப்போது அமைதி நாடி இயற்கை சூழ்நிலைக்குப் போயிருக்கிறார். அங்கு அந்த நாராயணசாமி இப்படிச் சொன்னதும் பாரதி சொல்கிறார், "நாராயணா! ஹிந்துக்கள் எப்படியேனும் போகட்டும், தனியிடமாயிருக்கிற இந்த இடத்தில் மனுஷ்ய வாசனை கிடையாது. எந்தத் தொந்தரவும் இல்லை. மடத்தில் எப்போதும் கூடியிருக்கிற பரதேசிகள் கூடப் பிச்சைக்குப் போயிருக்கிறார்கள். பகல் பன்னிரெண்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்கள். நீ தொணதொணவென்று பேசாமல் 'சிவசிவா' என்று படுத்துத் தூங்கு" என்றார்.

நாராயணசாமி உடனடியாக பாரதியார் வாக்கை ஏற்றுத் தன் மேல் துண்டை எடுத்துத் தரையில் விரித்துப் படுத்துக் கொண்டான். உடனே தூங்கியும் போய்விட்டான்.

பாரதியார் கையில் "குருபரம்பரா ப்ரபாவம்" எனும் வைஷ்ணவ நூலொன்றைக் கையில் கொண்டு வந்திருந்தார். அவரும் அமைதியான அந்த இடத்தின் நிலைமைக்கேற்ப தன் மேல்சட்டை, அங்கவஸ்திரம் முதலியவற்றைக் கழற்றித் தலைக்கு வைத்துக் கொண்டு கீழே படுத்துக் கொண்டார். கையிலிருந்த நூலைப் படிக்கத் தொடங்கியதுமே தூக்கம் வந்து தூங்கிவிட்டார். நல்ல குளுமையான காற்று, அமைதியான சூழல், கேட்க வேண்டுமா? பாரதியாருக்கு நல்ல தூக்கம்.

அவர் தூங்கி கண் விழித்துப் பார்த்த போது பகல் மணி பதினொன்றைத் தாண்டிவிட்டது. எழுந்ததும் கோயில் கிணற்றில் தண்ணீர் இறைத்து இருவரும் ஸ்நானம் செய்தார்கள். அந்தக் கிணற்று நீர் நல்ல ருசியான குடிநீர். அப்போது புதுச்சேரியிலிருந்து ஒருவர் இவர்களுக்காக உணவு கொண்டு வந்தார். அதைச் சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல பாரதியார் தாம்பூலம் தரித்துக் கொண்டார். சற்று நேரம் வரை அங்கு பாரதியாரின் பாட்டும் பேச்சுமாகப் பொழுது கழிந்தது. அதன் பின் வீட்டுக்குத் திரும்பிவிட்டோம் என்று சித்தாந்தசாமி திருக்கோயிலுக்கு அவர் முதன்முதல் நுழைந்த செய்தியை நமக்குத் தருகிறார் பாரதி.

இங்கு சமாதி கொண்டிருக்கும் சித்தர் சித்தானந்த சுவாமி யார்? அவருடைய வரலாறு என்ன? என்பதைப் பார்க்கலாம்.

தென்னாற்காடு என அழைக்கப்பட்ட கடலூரைத் தலைநகரமாகக் கொண்ட பழைய மாவட்டத்தில் வண்டிப்பாளையம் எனும் ஊரில் இவர் பிறந்தார். திருப்பாதிரிப்புலியூர் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் பாடலீஸ்வரரை இவர் குடும்பத்தார் வழிபட்டு வந்தனர். சித்தானந்தரும் அங்கிருந்த அம்மன் திருக்கோயிலுக்கு மலர்கள் கொய்து கொண்டு வந்து கொடுப்பார். ஒரு நாள் கடுமையான மழை; கோயிலைச்சுற்றி வெள்ளப் பெருக்கு; ஆலயத்தில் பூஜைகள் செய்ய முடியவில்லை. அப்போது எங்கிருந்தோ கைகளில் பூக்களோடு ஓடும் வெள்ளப் பெருக்கில் குத்தித்து நீந்தி கோயிலினுள் சென்று பூஜை செய்தான் சிறுவன் சித்தானந்தன்.

பகல் முழுதும் வெள்ளத்தைத் தாண்டி சிறுவனால் வெளியே வரமுடியாததால் இரவு வரை அங்கேயே இருக்க நேர்னதது. இரவு நல்ல குளிர்; இருட்டு. சிறுவன் சித்தானந்தன் அங்கேயே தரையில் படுத்துக் கொண்டு இறைவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டு தூங்கிவிட்டான். அவன் கனவில் கண்டானா, அல்லது உண்மையில் நிகழ்ந்ததா என்று சொல்லமுடியாத மயக்க நிலையில் இறைவர் பாடலீஸ்வரரும் பெரியநாயகி அம்மையும் இவனுக்குக் காட்சியளித்தனராம். ஊனுருக, உளம் உருக இந்த அற்புதக் காட்சியைக் கண்டு நிலைதடுமாறி நின்ற சிறுவனுக்கு இறைவன் அருட்கடாட்சம் நல்கி மறைந்தாராம்.

அதுமுதல் சித்தானந்தரின் செயல்பாட்டில் மாற்றம் தெரிந்தது. பல சித்துக்களை அவன் செய்யத் தொடங்கினான். அவன் சொன்ன வாக்கு பலித்தது; தொட்ட வியாதியஸ்தர்கள் குணமடைந்தனர். இவன் புகழ் பரவத் தொடங்கியதும் மக்கள் வெள்ளம் இவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டது. சித்தானந்தன் சித்தானந்த சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். கடலூரைத் தாண்டி இவர் புகழ் அண்டையிலுள்ள புதுச்சேரியையும் சென்றடைந்தது. ஆங்காங்கிருந்த மக்கள் இவர் தங்கள் ஊருக்கு வரமாட்டாரா? நமக்கெல்லாம் தரிசனமும் அருட்கடாட்சமும் தரமாட்டாரா என்று ஏங்கத் தொடங்கி விட்டார்கள்.

அப்போது புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்துக்குமாரசாமி பிள்ளை என்பவர் இவரைப் பற்றிக் கேள்விப் பட்டு, தீராத வயிற்று வலியால் தவித்து வரும் தனது மனைவி அன்னம்மாளின் துன்பத்தை இவர் போக்கமாட்டாரா என்று எண்ணினார். உடனே புறப்பட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சித்தானந்த சுவாமிகளை தரிசித்தார். பிள்ளை அவர்களைக் கண்டதுமே, அவரது பிரச்சினையைப் புரிந்து கொண்ட சுவாமிகள் அவரிடம் "சரி! புறப்படு போகலாம்" என்று சொல்லிக்கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு போனார்.

இவ்விருவரும் புதுச்சேரியில் முத்தியால்பேட்டைக்குச் சென்று அவரது வீட்டிற்குள் நுழைந்ததுமே பிள்ளை அவர்களின் மனைவி அன்னம்மாளின் வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாம். பிள்ளைக்கு மிகுந்த மகிழ்ச்சி. பின்னர் சிலகாலம் சித்தானந்த சாமி அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

அங்கு இவர் தங்கியிருக்கும் செய்தி கேட்டு குறைகளுக்கு நிவர்த்தி தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். அப்படிப்பட்டவர்களின் மனக்குறைக்கு சுவாமிகள் நிவாரணம் அளித்து வந்தார். ஒரு நாள் மாலை பிள்ளையுடன் சுவாமிகள் கருவடிக்குப்பம் எனும் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார். வழியில் பிள்ளைக்குச் சொந்தமான தோட்டமொன்று இருந்தது. இது நமது இடம்தான் என்றார் பிள்ளை. உடனே சுவாமிகள், "அப்படியா? வா! போய் பார்க்கலாம்" என்று தோட்டத்திற்குள் நுழைந்து விட்டார். அப்படி அந்த தோட்டத்தைச் சுற்றி வருகையில் ஓரிடம் வந்ததும் சிந்தனையோடு சுவாமிகள் அந்த இடத்தில் உட்கார்ந்து விட்டார். பிள்ளைக்கு ஒன்றும் புரியவில்லை. கண்மூடி மெளனமாக தியானத்தில் இருக்கும் அவரை எழுப்பமுடியாமல் பிள்ளை தயங்கினார்.

சிறிது நேரம் கழிந்தபின் சுவாமி கண் திறந்து பார்த்து பிள்ளையைத் தன் அருகில் அழைத்து, அவர் காதருகில் மெல்லிய குரலில் சொன்னார், "இது இங்கேதான் இருக்கப் போகுது" என்று. அப்படிச் சொல்லிக் கொண்டே தன் உடலையும் காட்டி கீழே அந்த தரைப்பகுதியையும் மூன்று முறை ஜாடை செய்து காட்டினார். உடனே அருகில் மற்றொரு இடத்தையும் காட்டி இங்கேதான் அன்னம்மாளின் சமாதியும் அமையப் போகிறது என்றார். பிள்ளைக்கு ஒரே அதிர்ச்சி.

அதன்பின் அவ்வூரில் இவர் பல சித்துக்களை நிகழ்த்திக் காட்டினார். பலரது குறைகளை தீர்த்து ஒன்றுமில்லாமல் செய்தார். குடிகாரர்களை குடிப்பழக்கத்தை நிறுத்தச் செய்தார். திருவண்ணாமலை தீபதரிசனத்தை அங்கேயே காணச் செய்தார். இவரது சித்து வேலைகள் அவரை நாடி வந்து உண்மையில் அவர் மீது நம்பிக்கை வைத்து வேண்டியவர்களுக்கு வேண்டியவைகளை செயல்படுத்திக் காட்டினார். இவர் புகழ் எங்கெங்கும் பரவத் தொடங்கியது.

இப்படி அங்கு இவருக்கு அறுபது வயது கடந்தது. 1837ஆம் வருஷம் மே மாதம் 28ஆம் நாள் வெள்ளிக் கிழமை அவரிடம் ஒரு மாறுதல் ஏற்பட்டது. திடீரென்று அவர் மெளனமானார். இவரிடம் பேச வந்து நின்றவர்களுக்கு இது ஓர் அதிர்ச்சி. இவர் முத்துக்குமாரசாமி பிள்ளை அவர்களை அழைத்து அவரிடம் குறிப்பால், ஹேவிளம்பி வருஷம் வைகாசி 28இல் வெள்ளிக்கிழமை தனக்குக் கல்யாணம் என்பதாகத் தெரிவித்தார். பிள்ளைக்கு ஒரே குழப்பம். இந்தச் செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்குமாறு வேறு சுவாமி சொல்லிவிட்டார். என்ன செய்வார் பிள்ளை? திகைத்துப் போனார்.

1837 மே மாதம் 28இல் சித்தானந்த சுவாமி பிள்ளை அவர்களின் வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து முத்தியால்பேட்டையில் இருந்த சிங்காரத் தோட்டம் சென்று அமர்ந்து கொண்டார். அங்கு அவர் பத்மாசனம் இட்டு உட்கார்ந்தார். அவர் முன்பே பிள்ளையிடம் சொல்லி வைத்திருந்தபடி அவருக்கு அபிஷேகம் நடந்தது. கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டது. ஊன் உருக கும்பிட்டுக் கண் திறந்த பக்தர்கள் சுவாமிகள் அமர்ந்தபடி பரிபூரண சமாதி அடைந்திருப்பதை உணர்ந்தனர்.

இப்படி சித்தானந்த சுவாமிகள் தங்கியிருந்து, சமாதியான இடத்தில் அவருக்கு ஒரு சமாதி கோயில் அமைக்கப்பட்டது. அதுதான் சித்தாந்தசாமி திருக்கோயில். இவ்விடத்தைப் புகழ்ந்து பாரதி பாடியிருக்கிற பாடல் இதோ:--

சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலி
தீப வொளி யுண்டாம் - பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச் சுடராம் - பெண்ணே

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம் - பெண்ணே
கள்ளத் தங்க ளனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம் - பெண்ணே

தோன்று முயிர்க ளனைத்து நன்றென்பது
தோற்ற முறுஞ் சுடராம் - பெண்ணே
மூன்று வகைப்படு கால நன்றென்பதை
முன்ன ரிடுஞ் சுடராம் - பெண்ணே

பட்டினந் தனிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிர் சுடராம் - பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காண வொளிர் சுடராம் - பெண்ணே.


No comments: