பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 5, 2012

சென்னை பால மந்திர்

சென்னை பால மந்திர்

சென்னை தி.நகர் கோபதி நாராயணசாமி செட்டி சாலையில் பால மந்திர் எனும் இல்லம் அமைந்திருக்கிறது. இதில் என்ன விசேஷம்? இது முன்னாள் தமிழக முதலமைச்சர் கர்மவீரர் காமராஜ் அவர்களாலும் சமூக சேவகி திருமதி மஞ்சுபாஷிணி அவர்களாலும் 1949இல் தொடங்கப்பட்டது. இங்கு என்ன இத்தனை குழந்தைகள் கூட்டம்? இவர்கள் எல்லாம் யார்? இந்த கேள்வி நமக்கு எழுகிறது அல்லவா? அதற்கு இந்த பால மந்திரின் வரலாற்றைச் சற்று பார்க்க வேண்டும்.

பால மந்திர் காமராஜ் அறக்கட்டளை 1949இல் தொடங்கப்பட்டது. இங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக முதலமைச்சர் காமராஜ் அவர்களே முதன்மையானவராக இருந்து பல சமூக சேவகர்களின் ஆதரவோடு அந்தக் குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். குடும்பங்களில் குழந்தைகளுக்கு ஒரே அம்மாதான், ஆனால் இங்கோ அத்தனை சமூக சேவகர்களும் அம்மாக்கள், அத்தனை அன்பு மழை பொழிய வளருகின்றன அந்தக் குழந்தைகள்.

இங்கு ஆதரவற்ற குழந்தைகள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். பிறந்த குழந்தைகள் சிலவற்றுக்கு இங்கு பணிபுரியும் செவிலியர்களே தாய்மார்களாக இருந்து வளர்த்த வரலாறும் உண்டு.
இங்கு சென்று சில விவரங்களைச் சேகரிக்கச் சென்றால் அங்கு நம்மை வரவேற்கும் பணியில் முகம் மலர அன்போடு விசாரித்து நமக்கு விவரங்களை அளிக்கிறார் ஒரு சமூக சேவகி.
                                               
இங்கு மிகவும் வறுமையில் வாடும் குழந்தைகள், பிரச்சனைகளால் சிதைவுண்டு போன குடும்பத்திலுள்ள குழந்தைகள், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் என்று அத்தனை பேரும் இங்கு ஒன்றாக இருந்து வளர்ந்து, படித்து ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறார்கள். 

நிராகரிக்கப்பட்ட குழந்தைகள் பொதுவாம மனதால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இங்கு சேரும் போது மனதால் பாதிக்கப்பட்ட அப்படிப்பட்ட குழந்தைகள் இங்கு காட்டப்படும், அன்பு அரவணைப்பு ஆகியவற்றால் மீண்டும் தங்கள் புத்துணர்ச்சியைப் பெருகிறார்கள். இங்கு பணியாற்றும் தொண்டர்கள் அனைவருமே இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவதொரு முறையில் அம்மாவாகவோ, அக்காவாகவோ, அண்ணனாகவோ இருந்து அன்பு செலுத்துகிறார்கள். இங்கு அன்னியத்தன்மை கிடையாது. இது ஒரு குடும்பம். இங்குள்ளவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்களே; அந்த அளவில் அன்பு பரவலாக்கப்பட்டிருக்கிறது.இங்கு ஆதரவற்றவராக வளர்ந்து, இங்கேயே படித்து, பெரியவர்களாகி வேலைக்கும் போய், திருமணமும் செய்து கொண்டு வாழ்கிறார்கள். அப்படி திருமணம் ஆகி வெளியே போன பால மந்திர் பெண்கள் தங்கள் பிள்ளைப் பேற்றுக்காக திரும்பவும் பிறந்த வீடு போக வேண்டுமல்லவா? அதற்கு இங்கு பால மந்திருக்குத்தான் வருகிறார்கள். இது ஒரு இல்லம் அல்ல. ஒரு குடும்பம். அதுதான் இதற்குக் காரணம்.
காலையில் 'சர்வ தர்ம' எனத் தொடங்கும் சர்வமத பிரார்த்தனையுடன் நாள் தொடங்குகிறது. அதன் பின் பள்ளிக்கூடம் செல்கிறார்கள் குழந்தைகள்.

இங்கு எல்லா வேலைகளையும் குழந்தைகளே செய்து கொள்கிறார்கள். இங்கு குழந்தைகளுக்கு கணினி பயிற்சியும், தச்சு வேலை, தையல் வேலை, துணி சலவை முதலியன கற்றுத் தரப்படுகின்றன. இதனால் இவர்கள் படிப்புக்குப் பிறகு சுய தொழிலில் ஈடுபட முடியும்.
சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி "மனிதனுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை" என்பதை இங்கு கொள்கையாகக் கடைபிடிக்கிறார்கள். இதுபோன்ற சேவை மையங்கள் பல இடங்களில் இருக்கின்றன. அவைகள் குறித்தும் விவரங்கள் சேகரித்த பின் இந்த வலைப்பூவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

You can give your comments here