பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 5, 2012





குதம்பைச் சித்தர் பாடல்கள்

கண்ணிகள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ? 

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ? 

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ? 

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்
சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ? 

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ? 

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ? 

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ? 

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ? 

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ? 

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ? 

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ? 

வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ? 

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ? 

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்
தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ? 

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ? 

சித்திரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்
பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ? 

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ? 

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ? 

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ? 

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்
பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ? 

அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ? 

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ? 

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்
பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ? 

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ? 

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ? 

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ? 

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ? 

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ? 

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ? 

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்
பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ? 

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ? 

(முடிந்தது)

1 comment:

பார்வதி இராமச்சந்திரன். said...

மிக அற்புதத் தகவல்கள் அடங்கிய பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

//செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி ‍//

இந்த வரிகளுக்கும் பட்டினத்தார் பாடலில் வரும்

ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவிஎன்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தாரமுங் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.

என்ற வரிகளுக்கும் இருக்கும் ஒற்றுமை, சித்தர்கள் எல்லாம் உள்ளத்தால் ஒருவரே என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. குண்டலினி யோகமும் ஆதாரச் சக்கரங்களின் வடிவமும் மறைபொருளாக இருக்கும் குத‌ம்பைச் சித்தர் பாடல் வரிகளைத் தந்தமைக்கு மீண்டும் நன்றி.