பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 26, 2012

வியக்க வைக்கும் விந்தை!


           வியக்க வைக்கும் விந்தை!            
   (உருது “கஜல்கள்மொழியாக்கக் கவிதைகள்)
                                                                                           என்.வி.சுப்பராமன்
சென்னை
துள்ளித் திரியும் புள்ளிமானை
கட்டிப் போடக் கதவும் கூறையும்
வைத்து எழுப்பும் மாளிகை ஒன்று
வியக்க வைக்கும் விந்தையன்றோ!                      (1)

தென்றல் காற்றில் வீசும் வாசம்
மன்றில் மலர்ந்த வலிமை வேகம்
வண்ணக் கூண்டில் வாழும் இனிமை
பண்ணிய புண்ணிய விளைவின் பெருமை!               (2)

இலக்கினை அடையும் அந்நேரத்தில்
இறப்பினை ஒத்தது ஓய்வு வேண்டுதல்!
பயணம் தொடரும் வழிநடைப் பயணியர்
பறந்து செல்வர்! விரைந்து முயல்வர்!                    (3)

உனது நினைவை உயர்வாய்த் தழுவி
தனதுகண் நீரைக் காலம் சொறியும்!
உலகின் எடையில் உறைந்து விழுந்தவர்
உணர்ந்து கொள்வர்! உயர்ந்து செல்வர்!                   (4)

ஊனைச் சுருக்கி உயிரைத் தந்தவர்
வானினும் உயர்ந்த அன்னவர் தாள்களில்
நிலவெனக் குளிர்ந்த நிழலைத் தந்திடும்
அரச மரத்தின் நிழலைஅற் பணிப்போம்!                    (5)


மின்மினிப் பூச்சி நிலவாகுமென
எண்ணிப் பார்ப்பது இயலாதொன்றே!
சிறுதீப் பொறியும் பெருந் தீயாக
விரைவாய் மாற வேண்டியே நிற்போம்!                     (6)


முதிர்ந்த முகந்தனில் புதிதாய் மலர்ந்த
விரிந்த சுருக்கமும் அழகாய்த் தெரியும்!
சிறந்த திரையில் அமுதக் கைப்பட
நிறைந்த ஓவியம் நிறைவாய் அமையும்!                    (7)

சிலுவைதனிலும், திரிசூலத்திலும்
பெருமையாய் நிற்கும் பெரியோர் தலைகள்!
சரியும் கோட்டையில், சாயும் வீட்டிலும்
சிறந்து நிற்க அருள்வாய் இறைவா!                          (8)

இதயம் அங்கே மூடும் நேரம்
இதோ திறப்பது அழகிய வாயில்!
உலகம் உன்னை மறந்திடும் நேரம்
திரும்பிடு உந்தன் திருமுகம் காட்டி!                        (9)

P.S. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைக் கூர்ந்து கவனியுங்கள். இவை திரு என்.வி.சுப்பராமன் அவர்களுடைய கவிதைகளுக்காக ஒரு ஆர்வலரால் எடுக்கப்பட்டவை. கவிஞருடைய பெயரும் அதில் இருக்கிறது.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

இதயம் அங்கே மூடும் நேரம்
இதோ திறப்பது அழகிய வாயில்!
உலகம் உன்னை மறந்திடும் நேரம்
திரும்பிடு உந்தன் திருமுகம் காட்டி!

வியக்க வைக்கும் விந்தை!
கவிதைக்குப் பாராட்டுக்கள்..

Unknown said...

துள்ளித் திரியும் மானை கட்டிவைக்க மாளிகை... அப்படியானது தான் இந்த உடல்...
இகலோக இன்பம் இனிமைஎன்றாலும் அது வண்ணக் கூண்டில் அகப் பட்டப் பறவையாகிறது....
உண்மைதான் சுதந்திரம் தானே பிறப்புரிமை...
யார் கண்டார் இதுவே கடைசிப் பிறப்பாக இருக்கலாம்!
ஆகும் காலத்தன்றி யாதொன்றும் நிகழா!
தந்தை அவனுக்கு நன்றி கூறவே இந்த ஜன்மம்...
உண்மையைப் போலக் காணும் யாவும் ஒருபோதும் உண்மையாகாது!
அறிவொன்றே அழகு அது எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம்...
வீழும் போது அல்ல விழாமல் தாங்கிப் பிடிக்கும் சமயம் வேண்டும்
மனமது மறையும் என்றால் அந்த பேரொளியின் கதவது தானாய் திறக்கும் அன்றோ!
அசத்தியம் ஆடும் ஆட்டம் அதை அழிக்கும் பொருட்டே மீண்டும் வருவாய் தேவனே!

இவைகள் தான் இந்தப் பாடல்களின் கருவாக இருக்க வேண்டும்... இருந்தும் அற்புதமான கவிதை... அழகாய் தமிழ் செய்த அண்ணலுக்கும் அதை பதிவிட்ட தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா!