பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 17, 2013

காலி நாற்காலி


நடுக்கூடத்தில் காட்சி தரும்
அந்த காலி நாற்காலியைப்
பார்க்கும்தோறும் பார்க்கும்தோறும்
நெஞ்சு வலிக்கிறதே ஏன்?

அதில் எப்போதும் உட்கார்ந்திருந்த
என் தந்தையைப் பார்த்த பொழுதெல்லாம்
அடிமனத்தில் ஆத்திரமும்
கோபமும் கொப்பளித்ததே ஏன்?

எல்கேஜியில் சேர்த்துவிட்டு என்னைப்
பள்ளியில் கொண்டு விட்டவுடன்
தந்தை வீடு திரும்புமுன்னே
வீட்டுக்கு ஓடிவந்தேனே அதனாலா/

ஒரே ஒரு மாதத்தில் மட்டும்
மூன்று பள்ளிகளுக்கு மாறியபோதும்
மனம் தளராமல் என்னை
பள்ளிக்கு அனுப்பிவந்தானே அதனாலா?

கால்வலிக்க நான் நடக்கக்கூடாதென்று
தெருவோர மேடையருகே என்னை
உட்காரச் சொல்லிவிட்டு அங்கு
தானே வந்து அழைத்துச் சென்றானே அதனாலா/

படிக்கும் பருவத்தில் நான்
கேட்டதெல்லாம் வாங்கித் தந்து
விளையாடவிட்டு என்ன
குறையின்றி வளர்த்தானே அதனாலா?

என் அப்பன் எனக்கு இன்னம்
திருமணப் பேச்சை எடுக்கவில்லையென்று
நண்பர்கள் குழாத்திடம் முறையிட்ட பின்னர்
எனக்குத் திருமணம் செய்வித்த காரணத்தாலா?

வேலைக்குச் சென்ற பின்னர்
ஒவ்வொரு வேலையையும் விட்டுவிட்டு
வீட்டுக்கு ஓடிவந்து நின்றபோதும்
வருந்தாமல் என்போக்கில் விட்டதாலா?

தனிமையிலே வெளியூரில் நான்
வேலைக்குப் போகும் நிலைமை கண்டு
சோற்றுக்கு வழிசெய்ய என் தாயையும் எங்கூட
வெளியூர் அனுப்பி வைத்த காரணமா?

மனம் சோர்ந்து, உடல் வருந்தி
ஆதரவு நாடி நானும் அடிக்கடி ஓடிவந்து
அடைக்கலம் ஆனபோது ஆறுதல் கூறி
என்னை மனம் தேற வைத்ததாலா?

ஊரார் ஒன்றுகூடி என்மீது குறை சொல்ல
அவர்களை எதிர்கொண்டு என்பக்கம் நின்றுபேசி
மனத்தில் தெளிவு பெற ஆதரவு தந்து என்னை
ஊக்கம் கொடுத்து ஆதரித்த காரணமா?

தேவைப் பட்ட காலமெல்லாம்
தேவைப்பட்ட உதவிகளை
முகம் சுளித்து மறுத்திடாமல் மனமுவந்து
செய்து வந்த காரணமா?

பாசத்தை உணர்ந்திடாமல் நான்
மனம் வருந்தி நின்ற போது
தான் வருந்தி அன்புகாட்டி
துணையாக இருந்ததாலா?

ஏன், இன்று எனது மனம்
அந்த காலி நாற்காலியைப் பார்த்து
மரித்துப் போன என் தந்தைக்காக
உடல் குலுங்க அழுகின்றது?


Alasiam Govindhasamy commented on your photo.
Govindhasamy wrote: "அருமையான உணர்வுகளை அள்ளித் தெளித்தக் கவிதை ஐயா! அதன் கடைசிப் பகுதியில் இந்த வரிகளையும் சேர்த்துப் படிப்போமே!

 நெஞ்சிலே பல்லக்கு தந்த தெய்வத்தை 
அஞ்சுலே உணரவில்லை அதன் அடியொற்றி 
தஞ்சமென வந்த போதெல்லாம் கடலை 
விஞ்சும் அன்பைப் பொழிந்த கருணாமூர்த்தியியை இழந்து 
எஞ்சி நிற்கும் நாற்காலியே எந்தை 
கொஞ்சிப் பேசிய அந்த நாட்களை
மிஞ்சிய வாழ்வில் நினைக்கையில் உன்னைப்போல்
 செஞ்சுவைத்த மெளனமாக இருக்க முடியவில்லையே!"

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (18-1-2013)


                             மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (18-1-2013)

சுவாமிஜியின் மேலும் சில பொன்மொழிகள்.

1 ஒரு காரியத்தின் பயனில் கருத்தைச் செலுத்துமளவிற்கு அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்துச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்களுள் ஒன்றாகும். இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நான் எப்போதும் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்த வேண்டும் என்பதில், வெற்றிக்கு உரிய எல்லா ரகசியமும் அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

2. நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவி புரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும்தான். நாம் ஏன் உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகிற்கு நன்மை செய்வதாகத் தோன்றும். ஆனால் உலகிற்கு நன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமேதான் உதவி செய்து கொள்கிறோம். உயர்ந்த பீடத்தில் நின்று உனது கையில் ஐந்து காசுகளை எடுத்துக் கொண்டு, "ஏ பிச்சைக்காரா! இதை வாங்கிக்கொள்..." என்று நீ சொல்லாதே. மாறாக, அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே உதவி புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து, அந்த ஏழை அங்கு இருந்ததற்காக அவனிடம் நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான் பாக்கியசாலியே தவிர, பெறுபவன் அல்ல. இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையையும் இரக்க மனப்பான்மையையும் பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ளவனாக இரு. இதன் மூலம் தூய்மையும் பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும்.

3. தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம். கர்மயோகத்தின் விதியின்படி ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரிய பலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரிய பலனை விளைப்பதை இயற்கையிலுள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்குரிய துன்பத்தை நான் அனுபவித்தே ஆகவேண்டும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்கவும் முடியாது; நிறுத்தி வைக்கவும் முடியாது. அதே போல, நான் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அது தனக்குரிய நல்ல பலனை விளைவிப்பதைப் பிரபஞ்சத்திலுள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

4. எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல், பணம் புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன்தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான் இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும்போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான். உலகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகிறது.

5. உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவைதான் செய்ய முடியும். கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய். உனக்கு அப்படித் தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால், அவர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய்.

6. கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை - இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.

7. உலகமாகிய இந்த நரகத்தில் ஒருவனால் ஒரே ஒரு நாளைக்காகிலும் ஒரே ஒருவனுடைய இதயத்திற்குச் சிறிது இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால், அந்த ஒன்றே ஒன்று மட்டும்தான் உண்மையாகும். இந்த உண்மையை வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன். மற்றவை எல்லாம் பொருளற்ற வெறும் பகற் கனவுகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

8. தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச் சிதறவிடாமல், அமைதியுடனும் ஆண்மையுடனும் ஆக்க பூர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்த சக்தியாலும் முடியாது. இந்தக் கருத்தை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்தது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையப் போகிறது என்பதை நான் முழுமனதுடன் நம்புகிறேன்.

9. மோகமாகிய முதலையின் வாயில், மக்கள் எப்படிப் பரிதாபமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அந்தோ! இதயத்தைப் பிளக்கக்கூடிய அவர்களின் சோகக் குரலைக் கேளுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். கட்டுண்டு கிடக்கும் மக்களைப் பந்த பாசங்களிலிருந்து விடுவிப்பதற்காகவும், எளியவர்களின் துன்பச் சுமையைக் குறைப்பதற்காகவும், அறியாமையில் மூழ்கியிருக்கும் இருண்ட கிணறுகள் போன்ற உள்ளங்களை ஒளிபெறச் செய்வதற்காகவும், 'ஏ! வீரர்களே! முன்னேறிச் செல்லுங்கள்! அஞ்சாதே! அஞ்சாதே!' என்று வேதாந்த முரசு முழங்கிக் கொண்டிருப்பதைக் கேளுங்கள்.

10. தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.

11. கிராமம் கிராமமாகச் சென்று மனித குலத்திற்கும் பரந்த இந்த உலகத்திற்கும் நன்மை செய். மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கும் செல்ல வேண்டும். மரணம் வருவது இத்தனை உறுதியாக இருக்கும்போது நல்ல ஒரு காரியத்திற்காக உயிரைவிடுவது மேல்.

12. பெரியவர்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனித குலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால், அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்து விட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.

13. புனிதமான வாழ்க்கையின் விளைவாக எழும் உற்சாகத்தினால் எழுச்சி அடைந்தவர்கள்; கடவுளிடம் அழியாத நம்பிக்கை என்பதை அரணாகப் பெற்றவர்கள்; ஏழை எளியவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் கொண்ட இரக்கம் காரணமாகச் சிங்கத்தைப் போன்ற தைரியம் அடைந்தவர்கள் -- இத்தகைய ஆண்களும் பெண்களும் நூறாயிரம் பேர் வேண்டும். இவர்கள் மோக்ஷம், பரோபகாரம், தாழ்ந்தவர்களின் முன்னேற்றம், சமூக சமத்துவம் ஆகிய இந்த உயர்ந்த கொள்கைகளைப் பிரசாரம் செய்தபடி இந்த நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைவரை செல்வார்கள்.

14. நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்குக் கல்வியறிவைப் புகட்டு. இந்த முறையில் உன்னுடைய சகோதரர்களாகிய மக்களுக்கு நீ தொண்டு செய்ய ஆரம்பிப்பாயானால், நிச்சயமாக உனக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.

15. தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல், தன்னடக்கம் ஆகியவை வீரனுக்கு உரிய பண்புகள். அவை இன்று எங்கே போய்விட்டன? போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்து கொள்கிறானேயன்றி, தனது நலத்தைக் கருதுவதில்லை. ஒருவன் மற்றவனுடைய இதயத்திலும் வாழ்க்கையிலும் ஆணை செலுத்த வேண்டுமானால், முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

--ooOoo--

Wednesday, January 16, 2013

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி (17-1-2013)

                              தூய்மை, பொறுமை, விடாமுயற்சி (17-1-2013)

சுவாமிஜியின் உரைகளில் காணப்படும் மேலும் சில பொன்வரிகளை இப்போது பார்க்கலாம்.

1. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும் அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். தன்னுடைய சொந்த வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலும்கூட இடம் கிடைக்காது.

2. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்ப வந்து சேர்ந்துவிடும். வேறு எந்த சக்தியாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்துவிட்டால் அதனால் வரும் விளைவையும் நீ ஏற்றே ஆகவேண்டும். இதை நீ நினைவில் வைத்துக் கொண்டால் தீய செயல்களைச் செய்வதிலிருந்து அது உன்னைத் தடுத்து நிறுத்தும்.

3. மனிதந்தானே பணத்தை உண்டு பண்ணுகிறான்? பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? நீ உன்னுடைய எண்ணங்களையும் சொற்களையும் முற்றிலும் ஒன்றாக இருக்கும்படிச் செய்தால், அதைச் செய்ய உன்னால் இயலுமானால், பணம் தண்ணீரைப் போலத் தானாக உனது காலடியில் வந்து கொட்டும்.

4. இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடுமுரடாகவும் செங்குத்தாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்பதுதான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர் தோல்வி அடைந்து விழுந்துவிட்டதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.

5. ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தை விட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவான். எனவே எதிர்ப்பும் அடக்குமுறையும் வரவேற்கத் தக்கவையே. ஆனால் நாம் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடையூறுகள் எல்லாம் மறைந்து போய்விடும்.

6. பாமரனை வாழ்க்கைப் போராட்டத்துக்குத் தகுதியுடையவனாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான நல்லொழுக்கத்தையும், பிறருக்கு உதவக்கூடிய ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மனவுறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி -- அதைக் கல்வி எனச் சொல்வது பொறுத்தமுடையதா? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்கிறதோ, அதுதான் உண்மையான கல்வி.

7. வாழ்க்கையை நன்கு உருவாக்ககூடிய, மனிதனை மனிதனாக்கக்கூடிய, நல்லொழுக்கத்தை வளர்க்கக்கூடிய கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளைக் கிரகித்துக் கொண்டு, அவற்றை உன்னுடைய வாழ்க்கையிலும், நடத்தையிலும் பற்றி நிற்கச் செய்தால், ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாஅம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.

8. ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. பண்டைக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மச்சரிய முறை இந்த நாளில் மறைந்து போய்விட்டதுதான் இதற்குக் காரணம். முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள். பிறகு கட்டளையிடும் நிலைமை உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.

9. கல்வி, உண்மையான கல்வி, அது ஒன்றே இப்போதைய நமது தேவை. ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக் கூட கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும், கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நம் நாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை எண்ணி நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம்? கல்வி என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை.

10. நமது தேசிய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அது, எதையெடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தையில்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.

11. எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ, அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

12. மேலை நாட்டு அறிவியலோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும் வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தெவைப் படுகின்றன. எல்லாவிதமான அறிவும் மனிதனுக்கு உள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்லுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியருடைய பணியாகும்.

13. மதம்தான் எல்லாவற்றுக்கும் உயிர்நாடி. சமய வாழ்க்கை சோறு போன்றது. மற்றவை எல்லாமே கறி, கூட்டு போன்றவை. கறி, கூட்டு வகைகளை மட்டும் உண்பதனால் உணவு உண்தகாக ஆகுமா? அப்படியே சோற்றை மட்டுமே சாப்பிடவும் கூடாது. இவற்றை ஒருசேற உண்பதே உணவு.

14. கற்பு நிலையிலிருந்து வழுவுவதுதான் ஒரு நாட்டின் அழிவிற்கு முதல் அறிகுறி என்பதை வரலாற்றில் நீ பார்க்கவில்லையா? கற்புத் தவறுதல் என்ற கேடு சமுதாயத்தில் நுழையும்பொழுது அந்த இனத்திற்கு முடிவுகாலம் நெருங்குவது தெளிவாகி விடுகிறது.

15. ஒரு கொள்கையை எடுத்துக் கொள். அதற்காகவே உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் நிச்சயம் வரும்.

Tuesday, January 15, 2013

நம்பிக்கையும் வலிமையும். (16-1-2013)


                             நம்பிக்கையும் வலிமையும். (16-1-2013)

சுவாமி விவேகானந்தர் பேசிய சில முத்தான வரிகளை இப்போது பார்க்கலாம்:--

1. நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை -- இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது உங்களியையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து, அனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.

2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

3. 'இல்லை' என்று ஒரு போதும் சொல்லாதே. 'என்னால் இயலாது' என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

4. நீங்கள் கடவுளின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங்களா பாவிகள்! அப்படி மனிதனை அழைப்பதுதான் பாவம். அது மனித இயல்பின்மீதே சுமத்தப்படும் பழிசொல்லாகும். ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள்.

5. போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே. பசு ஒன்று பொய் பேசியதாக நான் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசுவே தவிர ஒருபோதும் மனிதனாகி விடாது. எனவே இந்தத் தோல்விகளையும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளையும் ஒரு போதும் பொருட் படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

6. பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப் பற்றி போதிப்பாயாக.

7. வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன் 'சமுத்திரத்தையே குடித்து விடுவேன்', 'எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும்' என்று சொல்கிறான். அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு. கடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.

8. இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா? தாரைகளும் தப்பட்டைப் பறைகளும் இந்தியாவில் கிடைக்காமலா போய்விட்டன? இத்தகைய கருவிகளின் பெரு முழக்கத்தை, நமது குழந்தைகளைக் கேட்கச் செய். பெண்களாக்கும் மென்மை மிக்க இசைகளைக் குழந்தைப் பருவம் முதலே கேட்டுக் கேட்டு, இந்த நாடே கிட்டத்தட்டப் பெண்கள் நிறைந்த சமுதாயமாக மாற்றப்பட்டிருக்கிறது.

9. அறியாமை மிக்க, உயிரற்ற புல் பூண்டு வாழ்க்கையைக் காட்டிலும் மரணமே மேலானது. தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதைவிடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.

10. சகோதரா! நீ அழுவதேன்? மரணமோ, நோயோ உனக்கு இல்லை. நீ அழுவதேன் சகோதரா? துன்பமோ துரதிருஷ்டமோ உனக்குக் கிடையாது. சகோதரா, நீ ஏன் அழ வேண்டும். மாற்றமோ மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு.

11. மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும். 'இவனை நம்பு அல்லது அவனை நம்பு' என்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன் மீதே நீ நம்பிக்கை வை. அதுதான் ஒரே வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வைத்தால், எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருப்பது தெரியும். அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று நம்பு. நீ உறுதியுடன் விஷத்தைப் பொருட்படுத்தாமல் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.

12. சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டேயிருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை.

13. உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும் சிந்தனையும் செயலும், அதற்கு ஏற்ற பலனைத் தரும் வகையில் உன் மனதில் இடம் பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப் போல் உன் மீது பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. அதைப் போலவே உனது நல்ல எண்ணங்களும் செயல்களும், ஒரு நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதறுத் தயாராக இருக்கின்றன.

14. நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையுடையதாகவும் இருந்தால் மட்டும்தான், உலகமும் சிறப்பும் தூய்மையும் பெற்றதாக இருக்க முடியும். அது காரியம்; நாம் அதை விளைவிக்கும் காரணம். எனவே நம்மை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோமாக. நம்மை நாம் பரிபூரணர்களாக்கிக் கொள்வோமாக.

15. சண்டையிடுவதிலும் குறை சொல்லிக் கொண்டிருப்பதிலும் என்ன பயன் இருக்கிறது? நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை நமக்கு உதவப் போவதில்லை.

--ooOoo--

மன அழுத்தம்

                                மன அழுத்தமும் தற்கொலை முயற்சியும்

மன அழுத்தம் ஒவ்வொருத்தருக்கும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் தற்காலிக மனோநிலை. இந்த மன அழுத்தத்தால் உலகம் முழுவதிலும் அதிகமானோர் துயருறுகிறார்கள். மிக அதிகமான தற்கொலைகள் நிகழ்வதும் இந்த மன அழுத்த நோயினால்தான். ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், பத்து முதல் 20 பேர் வரை அதற்கான முயற்சியைச் செய்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. அமெரிக்கர்களில் 35 முதல் 49 வயது வரையிலானோர் இறப்புக்கு மூன்றாவது காரணமாக அமைவது தற்கொலை. முதல் இரண்டும் சர்க்கரை நோய், இரண்டாவது விபத்து.

மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? ஏமாற்றம். வாழ்க்கையில் நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம், எதிர்காலம் இருண்டுபோய்விட்டது, எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியவில்லை இதுபோன்ற நம்பிக்கை இழப்பின் காரணமாகவே இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இவைகள் எல்லாம் மன நல பாதிப்பால் ஏற்படுபவை. மற்றொரு காரணம் உடல் நலம் சம்பந்தப் பட்டது. உடலில் ஊட்ட சக்தி குறைவு, சர்க்கரை நோய், ஒவ்வாமை இவைகள் காரணமாக இருக்கின்றன.

உலகப் புகழ் வாய்ந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ, ஜூடி கார்லாண்ட் இவர்கள் முடிவுதான் நமக்குத் தெரியுமே. போதைப் பொருட்கள் உபயோகிப்போரும், மது அருந்துவோரும் histadelic எனும் இந்த மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். ஹெராயின், மெதாடோன் ஆகியவைகள் விரைவாக பாதிக்கப்பட காரணமாக இருக்கின்றன. தூக்கத்தில் நடக்கும் பழக்கமும் இவர்களுக்கு உண்டாகும். அதற்காக சக்தி மிகுந்த தூக்க மருந்துகளை இவர்கள் உட்கொள்ளத் துவங்குவார்கள். இப்படி உட்கொள்ளும் தூக்க மருந்துகள்கூட இவர்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணக்கூடும். மன அழுத்தம் குறைவதற்கு பதில் இவைகள் அந்த நிலையை அதிகப்படுத்தக் கூடும்.

மன அழுத்த நோய் உள்ளவர்களுக்கு தற்கொலை உணர்வு நிச்சயம் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் மனநோய் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவதே சிறந்தது. அப்படிப்பட்ட சிகிச்சை பலனளிப்பதற்கு அக்கறையோடு நடந்துகொள்ளும் சுற்றத்தார் அவசியம் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு எப்போதும் துணையாக ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை சுற்றியிருக்கும் சுற்றத்தார் ஏற்படுத்த வேண்டும். குடிப் பழக்கமோ, மற்ற போதைப் பழக்கமோ இருந்தால் உடனடியாக விட்டுவிட வேண்டும். இந்த 21ஆம் நூற்றாண்டில் நமது சமூக அமைப்புகளும்கூட இவ்விதமான சூழ்நிலைகளை உருவாக்கிவிடுகின்றன.

சமயத்தின் மீது நம்பிக்கை வைத்து சமயச் சடங்குகள் இவற்றை முறையாக செய்து வந்த காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலை அதிகம் ஏற்பட்டதில்லை. மதம் என்றால் எதிரி என்று எண்ணி மதத்தின் பெயரால் செய்யும் நல்ல பல காரியங்களை கைவிட்டது ஒன்று, கூட்டுக் குடும்பமென்று இருந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக, நலிவுற்றபோது தோள் கொடுப்பவர்களாக பெரிய குடும்பம் ஒன்றாக இருந்த போது தன்னம்பிக்கை இருந்த நிலைமை மாறி தனித்து விடப்பட்டுவிட்டோமோ என்கிற பயம் மற்றொன்று இதுபோன்ற நிலைமைக்குத் தள்ளி விட்டுவிடுகிறது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய, நல்ல வழிகாட்டக்கூடிய நல்ல நண்பர் ஒருவர் கூட இருப்பது அவசியம். அவருடைய சொற்கள் நம்பிக்கைத் தருவனவாகவும், உற்சாகம் ஊட்டக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும். நண்பர் இல்லாவிட்டாலும் குடும்பத்தார் வேறு எவராகவும் கூட இருக்கலாம். எந்த பிரச்சினையானாலும், இந்த நண்பர் அல்லது உறவினர் இருக்கிறார், நமக்குச் சரியான வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்டவருக்கு இருக்க வேண்டும்.

அது தவிர பாதிக்கப்பட்டவர் நம்பிக்கை இழக்கவும், வாழ்க்கையைக் காண பயப்படும்படியாகவும் ஆவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால், அந்த பயம் எதனிடமிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்து அதை ஒதுக்கி விடவும் வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம், அல்லது ஏதாவதொரு செய்தி, டெல்லி கற்பழிப்பு போன்ற செயல்கள் மனத்தில் ஒரு பயத்தை, எதிர்ப்பை, வெறுப்பை உண்டாக்கியிருக்கலாம், இவற்றை உடனடியாக அவர் மனதிலிருந்து நீக்க முயற்சி செய்ய வேண்டும்.

மாறாக, நல்ல ஆக்க பூர்வமான சிந்தனைகள், இறைவழிபாடு, நற்சிந்தனைகளை ஊட்டக்கூடிய ஆன்மிக சொற்பொழிவுகள், இயற்கை வளம் மிகுந்த இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்தல் இவைகளுக்குப் பழக வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் தனிமையில் உட்கார்ந்து கொண்டு சென்றதையும், வருங்காலத்தின் கடுமையையும், இல்லாத கஷ்டங்களை நினைத்துப் புழுங்குதலும்கூடாது. இவை இந்த நோய் மேலும் அதிகரிக்கக் காரணங்களாக அமையும்.

எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் மனதை மட்டுமல்ல உடலையும் பாதிக்கக்கூடும். எதிலும் நல்லவைகளை, அதன் நற்பயன்களை மட்டும் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

சமய நூல்கள் சொல்லும் நல்ல பல விஷயங்கள் நமக்குக் கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. மாணிக்கவாசகரின் திருவாசகம், வள்ளலாரின் அருட்பாக்கள், மகாகவி பாரதியின் தன்னம்பிக்கை தரும் பாடல்கள் போன்றவற்றில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். மற்ற மதத்தார் அவரவர்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும் மத நூல்கள் அல்லது கதைகளைப் படித்தல் வேண்டும்.

தற்போதைய செய்தித்தாள், தொலைக்காட்சி இவற்றில் எடுத்ததும் இழவுச் செய்திகளைச் சொல்வதும் நல்ல மன நிலையை உருவாக்காது. தினமும் அங்கு கொலை, இங்கு விபத்து, இன்னொரு இடத்தில் கற்பழிப்பு என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நம்மைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் இவைகள்தான் நடக்கின்றது என்கிற எண்ணம் அவனுடைய எதிர்மறைச் சிந்தனைகளுக்குத் தீனி போட்டு அவனது மன பாரத்தை, மன அழுத்தத்தை அதிகப்படுத்தி விடும். மாறாக "ஜன்னல் கதவுகளைத் திறந்து விடுங்கள், தூய்மையான காற்று உள்ளே வரட்டும்" எனும் கருத்துக்கேற்ப ஆக்க பூர்வமான செய்திகளைக் கேட்கட்டும், படிக்கட்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்களின் கட்டுரைகளை, பேச்சுக்களைப் படிக்கட்டும்.

இப்படியொரு ஆரோக்கியமான சூழ்நிலையில், நல்ல சிந்தனை, நல்ல சூழ்நிலை, நல்ல நண்பர்கள், நல்ல உறவினர்கள், நம்பிக்கை தரும் செய்திகள், ஆக்கபூர்வமான புத்தகங்கள் இவைகள் எல்லாம் மருந்துகளைக் காட்டிலும் நல்ல மகத்துவத்தைத் தரக்கூடியவை. இவை போதாதென்றால் நல்ல மனநல மருத்துவரை அணுகி அவர் தரும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டு வந்தால் நிச்சயம் இந்த மன அழுத்த நோய் நீங்கும், தற்கொலை எண்ணம் மறையும். அப்படி இருந்து மறைந்த பலர் பின்னர் பல மகோன்னத நிலைமைகளுக்குப் போயிருப்பதை நாம் பட்டியலிடலாம். மன உறுதி தேவை. அதற்கு என்ன செய்ய வேண்டும். மீண்டும் ஒருமுறை இந்தக் கட்டுரையை நன்கு படித்து மனத்தில் ஆழப் பதிந்து கொள்ள வேண்டும். வேறென்ன வேண்டும்?

(P.S. As I myself suffered from this Depression once and came out of it, I can very well say these advises to others.)



Monday, January 14, 2013

இந்து மதம்.......(தொடர்ச்சி) 15-1-2013

இந்து மதம்.......(தொடர்ச்சி) 15-1-2013

சார்புப் பொருட்கள் மூலமோ எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும்; திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மிகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல; ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமை இல்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.

ஒன்று நான் சொல்ல வேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல; விலைமகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மிக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சிதான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள்; அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள். இந்து மத வெறியன் தன்னைத் தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப் பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.

இந்துவிற்கு உலகின் எல்லா மதங்களும் பலவித நிலைகளிலும் சந்தர்ப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம் தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள்தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் இருக்கக் காரணம் என்ன? மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஒரே உண்மையில் இருந்துதான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.

ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால் எல்லாவற்றின் மையத்திலும், அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின்போது இந்துக்களுக்கு பகவான், 'முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி' என்று சொன்னார். அதன் பலன் என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று சம்ஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். 'நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால்கூட நிறைநிலை பெற்றவர்களைக் காண்கிறோம்' என்கிறார் வியாசர்.

இன்னொன்று: அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திக வாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்? பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக்கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை, ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான்.

'சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இதுதான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும், காலத்தாலும் எல்லைப்படுத்தப் படாததாக இருக்க வேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லோர் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாபிகள் எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டுமிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றொர்வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லோரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும் மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.

அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பெளத்த மத சபையாக இருந்தது. அக்பரது சபை இதைவிடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத்தான் கொடுத்து வைத்திருந்தது.

இந்துக்களுக்கு பிரம்மமாகவும், ஷொராஷ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக!

விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.

சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்குவழி என்று கண்டிபிடிக்காத உனக்குத்தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருக்கிறது.

('இந்து சமயம்' தலைப்பிலான உரை நிறைவுற்றது. இனி வேறு தலைப்பிலான உரை தொடரும்)


Sunday, January 13, 2013

பொங்கல் திருநாள் வாழ்த்து


”பொங்கல்” வளமாய் வைக்கட்டும்!

இன்று முதல்....................!

மங்கலம் சிறப்பாய் பொங்கட்டும்
எங்கும் நிலையாய் நிற்கட்டும்
வங்கக்கடலின் அலையாய்ப் பெருகட்டும்
”பொங்கல்” வளமாய் வைக்கட்டும்!

வாழ்வு

கரும்பின்  இனிமையாய் அமையட்டும்
மஞ்சல் மணமாய்த் திகழட்டும்
இஞ்சியின் இதமாய் இருக்கட்டும்
வஞ்சமிலா வாழ்வு தொடரட்டும்!

நேர்மை நிறைவாய் மலரட்டும்
பார்வை நன்றாய்த் தெரியட்டும்
பால்போல் வெண்மை மிளிரட்டும்
கார்போல் குளுமை வீசட்டும்!

ஊழல் ஒழிந்து போகட்டும்
தேடல் சிறந்து தொடரட்டும்
 பாடல் தொடர்ந்து கேட்கட்டும்
நாட்டில் அமைதி நிலவட்டும்!

பொங்கல் திருநாள் வாழ்த்துக்களோடு

என் வி சுப்பராமன்

N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101