பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, July 5, 2016

ஆனந்த தாண்டவ தரிசனம்.

                  
பாற்கடலில் மகாவிஷ்ணு பாம்பணைமேல் பள்ளி கொண்டிருந்தார். அருகில் மகாலட்சுமி ஐயனுக்கு சேவை புரிந்து கொண்டிருந்தார். உலகில் அதர்மம் ஓங்கி தர்மம் அழியத் தொடங்கும்போதெல்லாம் ஆங்கு அவதாரம் செய்து தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்டும் பணியைத் திரும்பத் திரும்பச் செய்து வந்த களைப்பு. ஆதிசேஷனின் பட்டுப் பாம்புப் படுக்கையில் சிரம பரிகாரம் செய்து படுத்திருந்தார்.
அப்போது வழக்கம் போல கலகக்கார நாரதர் தன்னுடைய தம்பூரை மீட்டிக் கொண்டு, “நாராயணா, நமோ நாராயணா” என்று இசைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். நாராயணனுக்குத் தெரியும் இன்று புதிதாக ஏதோவொரு கலகம் இங்கு உருவாகப் போகிறது என்று. அதை நினைத்து அவர் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை தோன்றி மறைந்தது. இதனை கவனித்துவிட்ட மகாலட்சுமி பிறர் பார்க்கா வண்ணம் ஜாடையில் ஐயனை நோக்கி என்ன என்று கேள்வி எழுப்பினாள்.

மகாவிஷ்ணு மீண்டும் சிரித்துக் கொண்டு, “வாருங்கள் நாரதரே! இன்று என்ன விசேஷம். எங்கெங்கும் திரிந்து கலகத்துக்கு ஆள் கிடைக்காததால் இவ்விடம் வந்து சேர்ந்தீர் போலிருக்கிறது” என்றார்.

லட்சுமி இடை மறித்து நாரதரிடம் “ஐயனே! நீங்கள் நன்றாக இருங்கள். உங்களது வழக்கமான பணியை எங்களிடம் காட்டி விடாதீர்கள். ஐயன் இப்போதுதான் அவதாரங்களை முடித்துவிட்டுச் சற்று ஓய்வில் இருக்கிறார். அவர் அமைதியை ஏதேனும் வம்பு செய்து கெடுத்து விடாதீர்கள்” என்றாள்.

நாரதர் விடுவாரா “அன்னையே! ஐயனின் அமைதியைக் குலைக்க அடியவனால் முடியுமா? ஏதோ, இருவரும் பணிகளையெல்லாம் நன்றாக நிறைவேற்றி விட்ட ஆனந்தத்தில் ஏகாந்தமாக வீற்றிருக்கிறீர்களே, இந்த சந்தர்ப்பத்தில் இருவரையும் கண்டு வணங்கிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நீங்கள் என்னவென்றால், என் மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறீர்களே” என்றார்.

அப்போது பாற்கடலில் தன் பிரம்மாண்டமான உடலை சுருட்டிப் படுக்கையாக்கி அண்ணலையும், அன்னையையும் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷன் இவர்கள் பேச்சில் குறுக்கிட்டான்.
“ஐயனே! தங்களிடம் எனக்கு ஒரு வேண்டுகோள்” என்றான் நாராயணனைப் பார்த்து.

“சொல்லு, உனக்கில்லாததா, என்ன வேண்டுமோ கேள். நீயும் ஒவ்வொரு அவதாரத்திலும் வந்து எனக்கு உதவியாக இருந்து கொண்டிருக்கிறாய். இப்போது நமக்கு வேறு எந்த அவசரப் பணியும் இல்லாத நேரத்தில் உன் வேண்டுகோளை நிறைவேற்ற நிச்சயம் வரமளிக்கிறேன்” என்றார் நாராயணன்.

நாரதர் குறுக்கிட்டார், “பெருமானே! ஆதிசேஷன் என்ன சொல்ல வருகிறான் என்று எனக்குத் தெரியும். அவன் எப்போதும் தங்களுக்குப் பணியாற்றுவதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதால், அவனுக்கென்று தனிப்பட்ட எந்த ஆசையோ, பற்றோ கிடையாது. இப்போது எல்லாம் அமைதியாக இருந்து கொண்டிருப்பதால் அவன் மனதில் ஏதோ வொரு ஆசை இருக்கிறது, அதை நிறைவேற்றிக் கொள்ள விரும்பியிருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.

மகாவிஷ்ணுவின் முகத்தில் புன்னகை தவழ ஆதிசேஷனைப் பார்த்துச் சொன்னார், “சேடா! சொல், உன் மனதிலுள்ள ஆசையை நான் நிச்சயம் நிறைவேற்றி வைக்கிறேன்” என்றார்.

லட்சுமியும் மகிழ்ந்து “ நமக்கு இப்படியொரு சேவகன் வந்து அமைந்ததே பெரும் பாக்கியம். அப்படிப்பட்ட பாக்கியவான் ஏதோவொரு பிரதிபலனை எதிர்பார்க்கிறான் என்றால் நாம் நிச்சயம் அவனுக்காக செய்ய வேண்டும்” என்று சிபாரிசு செய்தாள்.

நாம் தனிமையில் இரகசியமாகத் தன் எஜமானரிடம் கேட்டு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்க, இந்த நாரதர் வந்து விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டாரே என்று நினைத்துக் கொண்டு குரலைக் கனைத்துக் கொண்டு மிகவும் பவ்யமாக நாராயணனிடம் சொல்லத் தொடங்கினான்.

“ஐயனே! இந்த பூமி இப்போது சற்று அமைதியாக இருக்கிறது. தங்கள் கடைசி அவதாரமான கிருஷ்ணாவதாரத்தின் முக்கியத்துவம் முடிந்து போய் யாதவ குலம் முழுவதும் அழிந்து போனது. கிருஷ்ணி குலமும் தங்கள் பிரிவுக்குப் பிறகு சாபத்தால் பாதிக்கப்பட்டு விட்டது. இனி அடுத்துத் தங்களுக்கு எவ்வகை பணி வந்து சேருமோ தெரியாது. அதற்குள் என் மனதில் நீண்ட நெடு நாட்களாக இருக்கும் ஒரு ஆசையை இப்போது நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதற்காகச் சில நாட்கள் தங்களிடமிருந்து பிரிந்து சென்று பூலோகத்தில் தில்லையம்பலம் எனுமிடத்தில் புது யுகம் தொடங்கிய ஆனந்தத்தில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போகிறாராம். அதைப் போய் பார்த்துவிட்டு வரத் தாங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும். நாட்டியத்தைப் பார்த்து முடித்ததும் உடனே நான் தங்கள் பணிக்குத் திரும்பி விடுகிறேன்” என்றான் ஆதிசேஷன்.

அப்போது நாரதர் குறுக்கிட்டு, “சேடா! நீ இப்படி உன் சுய உருவத்தில் போனால் அங்கு சிவன் ஆடமாட்டார், உன்னைப் பார்த்த பயத்தில் அங்கு வேடிக்கை பார்க்கும் மக்கள் எல்லாம் ஆடத் தொடங்கி விடுவார்கள்” என்றார்.

நாராயணன் சிரித்துக் கொண்டு சொன்னார், “ஆதி சேடா! உன் விருப்பப்படி நீ பூலோகம் சென்று பொன்னம்பலத்தில் சிவபெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைப் போய் கண் குளிர பார்த்துவிட்டு வா. அதுவரை நானும் மகாலட்சுமியும் சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறோம்” என்றார்.
ஆதி சேஷன் குறுக்கிட்டான். “ஐயனே, இந்த நாரதர் பெருமான் சொல்வதைப் பார்த்தால் நான் என்னுடைய இந்த உடலோடு அங்கு சென்றால் பூலோகத்து மக்கள் அச்சம் கொள்வார்களாமே, என்ன செய்வது? என்றான்.

மகாலட்சுமி சொன்னாள், “ஆதிசேஷா! கவலைப் படாதே. நீ ஒரு முனிவர் உருவத்தில் போ, நானே உன்னை அப்படியொரு முனிவராக ஆக்கி விடுகிறேன். நீ தனியாகப் போக வேண்டாம். தினமும் இறைவருக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து கொண்டு ஒரு முனிவர் இருக்கிறார். அவர் மரங்கள் மீதேறி புஷ்பங்களைச் சேகரிக்க மிகவும் சிரமப் படுகிறார் என்பதற்காக அவருக்கு மனிதக் கால்களுக்குப் பதிலாக புலியின் காலைக் கொடுத்து, சிரமமின்றி மரமேறி புஷ்பங்களைப் பறிக்கும்படியான வசதி செய்து கொடுத்திருக்கிறேன். அவர் பெயர் புலிக்கால் முனிவர் எனப்படும் வியாக்கிரபாத முனிவர். நீங்கள் இருவரும் சென்று ஆடலை தரிசித்து விட்டு வாருங்கள்” என்றாள் லட்சுமி.

“அப்படியென்றால் முனிவராக நான் எந்தப் பெயரில் போவது?” என்றார் ஆதிசேஷன்.

லட்சுமி சொன்னாள் “உனக்குப் பதஞ்சலி முனிவர் என்று பெயர் சூட்டுகிறேன். நீயும் வியாக்கிரபாதரும் சென்று நடராசப் பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பொன்னம்பலத்தில் கண்டு தரிசித்துவிட்டு திரும்ப வந்து எங்களிடம் ஆட்டம் எப்படி இருந்தது என்று சொல்ல வேண்டும்” என்றாள்.

உடனே நாரத முன்வர், “நாராயண, நாராயண, நான் வந்த காரியும் முடிந்து போயிற்று. ஆதிசேஷனுடன் நானும் பொன்னம்பலம் சென்று நடராசப் பெருமானின் ஆனந்த நடனத்தைக் காண வேண்டும், சென்று வருகிறேன்” என்று புறப்பட்டு விட்டார்.

அங்கிருந்து அனைவரும் பிரிந்து சென்ற பிறகு நாராயணனும், மகாலட்சுமியும் மட்டும் தனித்து விடப்பட்டனர். வசதியாகப் படுத்துறங்க இருந்த ஆதிசேஷனும் இப்போது இல்லை. என்ன செய்யலாம்? அப்போது லட்சுமி கேட்டாள், “ஐயனே, நமக்கோ இப்போது பணி ஒன்றுமில்லை, கலியுகம் தொடங்கி மக்கள் ஆனந்த மயமாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாமும் ஆதிசேஷனைப் பின் தொடர்ந்து மாறு வேடத்தில் சிதம்பரம் சென்று அங்கு சிவபெருமான் ஆடுகின்ற ஆனந்தத் தாண்டவத்தைப் பார்த்துவிட்டு வந்தால் என்ன?” என்றாள்.

“நல்ல யோசனை! அப்படியே செய்வோம். இப்போதே கிளம்புவோம், நான் முனிவராகவும், நீ ஒரு முனிபத்தினியாகவும் சென்று தில்லை நடராஜனின் நடனத்தைக் காண்போம். எப்போதோவொரு முறை கிடைக்கக் கூடிய அரிய நடனம் இது. வா, புறப்படலாம்” என்றார்.
நாராயணனும் மகாலட்சுமியும் முனிவராகவும், முனிபத்தினியாகவும் வான் வழியாகச் சென்று தில்லையம்பலம் எனப் புகழ்பெற்ற சிதம்பரத்தை அதாவது ஆகாயத் தலத்தைச் சென்றடைந்தனர்.

பொன்னம்பலத்தில் கூட்டம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. தாங்கள் சுய உருவில் வந்திருந்தால் இந்நேரம் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு வந்து கலியுகத்தில் திரையுலக நட்சத்திரங்களை மொய்த்துக் கொள்வது போல மொய்த்துக் கொண்டு விடுவார்கள். ஆகையால் நாம் ஒருவரும் அறியாத வண்ணம் உள்ளே சென்று ஓரமாக ஒரு தூணின் பின்னால் நின்றுகொண்டு நடனத்தை ரசித்துவிட்டு வரலாம் என்றார் நாராயணன்.
பொன்னம்பல அரங்கைச் சுற்றி கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. நந்தி மத்தளம் வாசிக்கத் தொடங்கினார். தேவ கணங்கள் இசை வாத்தியங்களையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தனர். ‘தேம் தாம்” என்று நட்டுவாங்கம் தொடங்க, நடராஜப் பெருமான் தங்கம் போல ஒளிவீசும் ஜோதி மயமான உடலோடு புலித்தோலை அரைக்கு அணிந்து, பாம்பை இடுப்பில் சுற்றிக் கொண்டு, ஒரு கையில் தீயையும், இன்னொரு கையில் உடுக்கை எனும் ஒலிவாத்தியக் கருவியையும் ஏந்திக் கொண்டு ஆடத் தொடங்கினார்.

மெல்லத் தொடங்கிய ஆட்டம், போகப்போக உக்கிரமாகத் தொடங்கியது. உலகின் தீமைகள் எல்லாம் ஓர் உருக்கொண்டு அருவருக்கத் தக்க உருவத் தோற்றத்தோடு அங்கு வந்து நிற்க அதை இழுத்துத் தான் காலடியில் வீழ்த்தி அதன் மீதேறி ஐயன் ஆடத் தொடங்கினார்.
இப்போதாக இருந்தால் யாராவது ஒருவர் “யார் ஆடினார், இனி யார் ஆடுவார், தில்லை நடராசனைப் போல பொன்னம்பலத்தில் இனி யார் ஆடுவார்” என்று பல்லவியைத் தொடங்கி ஒரு அழகான பாடலைப் பாடியிருப்பார்.

அப்போதும் பாடினார்கள், தேவகணங்கள் இசை அமைக்க தெய்வீகப் பாடல்களை முழங்க உலகோர் வியந்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, பூமிப்பந்தின் மேலே இறைவன் சுற்றிச் சுற்றி ஆடினார். சுழன்று சுழன்று ஆடினார். அவர் ஆடிய ஆட்டத்தில் எங்கும் சுழற் காற்று பேய்க்காற்றாக வீசத் தொடங்கியது. பூமியில் பொந்தில் இருந்த நாகங்கள் தங்கள் தலைக்கு மேல் ஏதோ பெரும் ஓசை கேட்டு வெளியில் வந்து ஆட்டத்தைப் பார்த்த வண்ணம் படுத்துக் கிடந்தன. நாராயணனின் மாற்று வாகனமான கருடாழ்வார் வானத்தில் சுற்றிப் பறந்து வந்து இந்த ஆனந்தக் காட்சியைக் கண் இமைக்காமல் பார்த்து ரசித்தார்.

சரஸ்வதி தேவி தன் யாழை மீட்டி இசைக்கு இனிமை சேர்த்தார். பிரம்மன் வரமுடியவில்லை, படைப்புத் தொழிலில் மிகவும் தீவிரமாக இருந்ததால் அவருக்கு மனைவியோடு வந்து ஆட்டம் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

ஆட்டம் பல்வேறு தாளகதியில் நடந்து கொண்டிருந்தது. பூமி தன் சுழற்சியைச் சற்று நிறுத்திவிட்டு ஆட்டத்தைக் கண்டு களித்தது. வானம் கண்கள் பனிக்க ஆனந்தக் கண்ணீரை மழையாகப் பொழிந்து கொண்டிருந்தது. இடியும் மின்னலுமாக இந்திரன் தன் பரிவாரங்களுடன் வந்து இந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்தான்.

இப்படி கோலாகலமாக பொன்னம்பலத்தில் நடராசப் பெருமானின் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். நெடு நாட்கள் நடந்த இந்த நடனத் திருவிழா முடிந்து அவரவர் ஊருக்குத் திரும்பினர். ஆதிசேஷனும் பணிக்குத் திரும்ப பெருமாள் அவன் மீது சயனம் கொண்டார். லட்சுமி வழக்கம் போல் சேவை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, பூமியில் பொன்னம்பலமாம் சிதம்பரத்தில் ஒரு சோழமன்னன் அற்புதமான ஓர் ஆலயத்தை நடராசப் பெருமானுக்காக உருவாக்கிக் கொண்டிருந்தான். அந்த ஆலயத்தில் சிவபெருமான் லிங்க வடிவிலும், நடராஜப் பெருமான் ஆடல்வல்லானாகவும் கோயில் கொண்டனர். ஆலயம் எழுப்பிக் கொண்டிருந்த சோழ மன்னனுக்கு அமைச்சர்கள் இந்த இடத்தில் ஆடல்வல்லான் ஆடிக் கொண்டிருந்த போது ஆதிசேஷனும், வியாக்கிரபாதரும் முனிவர் வடிவில் வந்து தரிசித்ததையும், அவர்கள் அறியாமல் நாராயணனும், மகாலட்சுமியும் பாற்கடலை நீங்கி பொன்னம்பலம் வந்து அங்கு ஐயனின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தார்கள் என்ற விவரத்தையும் சொன்னதும், மன்னன் வியந்து போற்றி, பாராட்டி அப்படியானால் நான் சிதம்பரத்தில் உருவாக்குகின்ற இந்த ஆலயத்தில் நடராஜருடைய ஆட்டத்தை ரசிக்கும் பாங்கில் நாராயணனுக்கு ஓர் சந்நிதியை உருவாக்கி அவருக்கு கோவிந்தராசப் பெருமாள் என்ற நாமகரணத்தையும் சூட்டுவதாகச் சொன்னதும் அமைச்சர்களும், பிரதானிகளும், பொதுமக்களும் கேட்டு ஆனந்த மடைந்தார்கள்.
ஆலயம் உருவாகியது. சிவாலயமாக உருவெடுத்த சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ளேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உருவானது. இப்படியே காலம் ஓடிக் கொண்டிருந்தபோது கலியுகம் பல லட்சம் ஆண்டுகள் ஓடி நாகரிகம் முற்றிப் போய், இறை நம்பிக்கைக் குறைந்து மக்கள் புராணங்களையும், இறைவனையும் பொய் என்று சொல்லி நம்ப மறுத்த போது, அப்போது மக்களை மயக்கிக் கொண்டிருந்த ஒரு திரையில் நிழலாகத் தோன்றும் ஒரு கலை உருவானது. 

அப்படிப்பட்ட திரையில் நிழலாடும் ஒரு கதையில் தில்லை அம்பலத்தில் இருந்த நடராஜரின் சிவாலயத்தில் பெருமாளுக்கு எதற்கு சந்நிதி என்று வீர சைவனாக இருந்த ஒரு மன்னன் கோவிந்தராஜப் பெருமாள் சிலையையும், அவரை வழிபட்ட பட்டரையும் சங்கிலியால் கட்டு கடலில் போட்டுவிட்டதாகச் சொல்லி சைவ வைணவப் பூசலைக் கிளப்பி விட்டனர்.

நல்ல காலம் அப்போதெல்லாம் இதுபோன்ற சில்லரை காரணங்களுக்காக ஆறாம், ஏழாம் நூற்றாண்டு போல சைவ வைணவ கலகம் எதுவும் உருவாகி விடவில்லை. இந்த காலத்துக்கு ஏற்ப வேறு விதமான மதக் கலவரங்கள் வந்து விட்டதால் இது எடுபடாமல் போய்விட்டது.
இப்படியாக நாரத முனிவர் உருவாக்கிய கலகம் சிதம்பரத்தில் நல்லவிதமாக முடிந்து போனது. 
கதை ஆக்கம்:

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தலைவர், திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழு, 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.  # 9486741885






வீர சாவர்க்கர் செய்த சாகசம்.

                                     
வீர சாவர்க்கர் லண்டனில் இருந்த போது இந்தியா ஹவுசில் புரட்சி இயக்கத்தில் சம்பந்தப் பட்டிருந்தார் என்று வழக்கு நடந்தது. அவரை இந்தியாவுக்கு பலத்த காவலுடன் கப்பலில் அனுப்ப வேண்டுமென்று லண்டன் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி ஏராளமான காவலர்கள் புடைசூழ சாவர்க்கர் இந்தியா செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டார்.

இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் ஒரு வார காலம் பயணம் செய்திருக்கும். அப்போது அந்தக் கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்சேல்ஸ் எனும் பிரபலமான துறைமுக நகரில் வந்து நங்கூரம் பாய்ச்சி நின்றது. அங்கு ஒரு விடியற்காலை நேரம், சாவர்க்கர் கழிவரைக்குப் போகவேண்டுமென்று சொன்னதும், பலத்த காவலுடன் அவரை அங்கு செல்ல அனுமதித்தனர். காவலர்கள் கழிவரை வாயிலில் நின்று காவல் காத்தனர். உள்ளே நுழைந்த சாவர்க்கர் அந்த அறையின் கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டார். அங்கு எதிரில் சுவற்றில் காற்று வெளியேறுவதற்கென்று ஒரு வட்டமான துவாரம் காணப்பட்டது. மெல்ல அதனுள் நுழைய முயற்சி செய்தார் அவர் உடல் அதனுள் நுழைய முடியவில்லை. உடனே தன்னுடைய ஐரோப்பிய பாணி உடைகளையெல்லாம் களைந்துவிட்டு நிழைந்து பார்த்தார். அவர்கள் உடை ஏராளமானவை என்பதால், அவைகளைக் களைந்தவுடன் அவர் உடல் அந்த துவாரத்தினுள் நுழைந்தது. இந்த சந்தர்ப்பத்திற்காக அவர் பல நாட்கள் பட்டினி இருந்து உடலை இளைக்க வைத்திருந்தார்.

அந்த துவாரத்தினுள் நுழைந்து வெளிப்புறம் வெளியேறி கடல் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினார். அப்படி உடைகளை நீக்கிய நிலையில் நிர்வாண கோலத்தில் இவர் கடல் நீரில் நீந்துவதைக் கண்டு மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த சிலர் கூச்சலிட்டனர். உடனே கழிப்பறை வாயிலில் காவல் இருந்த காவலர்கள் ஒடிவந்து பார்த்தபோது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியக் கைதி கடலில் நீந்திச் செல்வதைக் கண்டனர்.
உடனே இரு காவலர்கள் கடலில் குதித்து “திருடன், திருடன், கைதி தப்பியோடுகிறான்” என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரைப் பின் தொடர்ந்து நீந்திச் சென்றார்கள். இப்படி தப்பியோடும் சாவர்க்கரின் முயற்சிக்கும், அவரைப் பிடிக்க கடமை உந்தப் பின்தொடரும் காவலர்களின் முயற்சிக்கும் வித்தியாசம் உண்டல்லவா? எப்படியும் தப்பிவிட வேண்டுமென்கிற வாழ்வா சாவா போராட்டத்தில் நீந்திய சாவர்க்கரே முதலில் கரை சேர்ந்தார். இங்கு கப்பலில் இருந்து சாவர்க்கர் தப்பியோடி வருவார் என்பது தெரிந்திருந்த மேடம் காமா அம்மையாரும், வேறு சிலரும் இவரது வரவுக்காகக் ஒரு காரோடு கரையில் காத்திருந்தனர். கடற்கரைக்கும் கார் நின்ற இடத்துக்குமிடையே சற்று தூரம் அதிகம் இருந்தது.

நிர்வாணமாக கரையேறிய சாவர்க்கர் காரை நோக்கி ஓடத் துவங்கினார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த பிரெஞ்சு காவலன்  ஒருவன் இவர் காரை நெருங்கும் முன்னரே அவரைப் பிடித்துவிட்டான். அதற்குள் கப்பலில் இருந்து இறங்கி வந்த சில காவலர்களும் தங்கள் கைதி தப்பி ஓடிவருகிறான், அவனைத் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்று பிரெஞ்சு காவலரிடம் கேட்டனர். அந்த நேரத்தில் வ.வே.சு.ஐயர் உள்ளிட்ட சில இந்திய புரட்சிக்காரர்கள் அங்கு வந்து, இந்த இடம் பிரெஞ்சு பிரதேசம், இங்கு ஆங்கில அதிகாரிகள் யாரையும் கைது செய்ய உரிமையில்லை என்று வாதிட்டார்கள். ஆனால், அவர்களுடைய வாதம் எடுபடாமல் போனது. அந்தப் பிரெஞ்சு அதிகாரி சாவர்க்கரை கப்பலில் வந்த ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் மீண்டும் ஆங்கில அதிகாரிகளிடம் கைதியாக மாட்டிக் கொண்டு கப்பலில் ஏற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மறுநாள் பிரெஞ்சு பத்திரிகைகள் இப்படி தங்கள் பிரதேசத்தினுள் நுழைந்து ஆங்கில அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்ததை கண்டித்து எழுதின. பிரெஞ்சு அரசாங்கமும் தங்கள் ஆட்சேபணையை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் அப்போது தி ஹேக் எனுமிடத்தில் இருந்த சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பிரிட்டிஷ் போலீசார் நியாயம் தவறவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இப்படி நாட்டுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தேசபக்தர்களையும் அவர்களுடைய தியாகங்களையும் புரியாமல் சிலர் பிற்காலத்தில் இவர் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி அவரை அவமரியாதை செய்தனர் என்பதை அறியும்போது, நம் இந்திய தேசத்தில் தேசபக்திக்கு இதுதானா மரியாதை என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

நாட்டியத்தைப் பற்றி.........வழுவூர் ராமையா பிள்ளை

                                      
(சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆசிரியராக இருந்த “தமிழன் குரல்” எனும் பத்திரிகையில் 1955ஆம் வருஷம் ஐயா வழுவூர் ராமையா பிள்ளை அவர்கள் எழுதியுள்ள கட்டுரை)

ம் தமிழ் நாட்டில் நாட்டியக்கலை ஐம்பது வருடங்களுக்குப் பின்னால், சுமார் பத்து வருடங்களாக (அவர் சொல்வது 1955இல்) முன்னேறத் தொடங்கி தற்காலம் உன்னத ஸ்தானத்தை அடைந்திருக்கிறது. பரத நாட்டியக் கலையின் பெருமை உலகில் எல்லோருக்கும் ஓரளவு தெரிந்து, உலகம் முழுவதும் நமது நாட்டியக் கலைக்கு நல்ல வரவேற்பும் உயர்ந்த மதிப்பும் இருந்து வருகிறது. இது மென்மேலும் நல்ல முறையில் அபிவிருத்தியாகி கலையின் தரம் குறையாமல் தெய்வீகமான நமது பரத நாட்டியக்கலை உலகெங்கும் என்றென்றும் சிறப்பாக வியாபித்து நிலைத்திருக்க வேண்டும்.

கலையின் தரம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால், கலைஞர்களும், ரஸிகர்களும் இக்கலையின் பெருமையையும், கலையின் நுணுக்கங்களை யும் ஓரளவிற்கு அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். கலைஞர்களாக உள்ளவர்கள் புத்தகங்களைப் படிப்பதனாலும், கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்ப தனாலும் மாத்திரம் கலைஞர்களாகிவிட முடியாது. அநேக வருடங்கள் நல்ல குருகுலவாசம் செய்து சிறந்த குருபக்தியும், ஈச்வர பக்தியும் உள்ள வர்கள்தான் உண்மைக் கலைஞர்களாக விளங்க முடியும். குருபக்தி உள்ள வர்களுக்குத்தான் ஈச்வர அநுக்கிரகம் ஏற்படும். அவர்களால் செய்விக்கப் படும் நாட்டியம், நாடகம், கவிதை, சங்கீதம், சித்திரம், சிற்பம் முதலியவை கள்தான் உலகத்தில் போற்றப்பட்டுப் பிரகாசிக்க முடியும். இது அனுபவ பூர்வமான விஷயமாகும்.

உலகத்தில், மனிதர்களிடத்திலும் சகல ஜீவராசிகளிடத்திலும் இயற்கையாக ஏற்படக்கூடிய பல செயல்களில் ஏற்படும் விசேஷமான அம்சங்களை யெல்லாம் ஒன்று திரட்டி வரையறுத்து நமது முன்னோர்களாகிய அநேக மஹானுபாவர்கள் பரத சாஸ்திரங்களை எழுதியிருக்கிறார்கள். பசுவின் கன்றானது தன் தாயிடம் பால் அருந்தி உற்சாக மிகுதியால் குதித்து விளையாடி ஓடும்போது அதனிடம் எத்தனை விதமான அசைவு, நெளிவு, பாய்தல், குதித்தல் முதலிய அழகு நிலைகளைக் காண்கிறோம். இதைப் போலவே தோகையை விரித்து ஆடும் மயிலினிடத்திலும் எவ்வளவு அழகிய தோற்றங்களை நாம் காண நேரிடுகிறது! இவ்விதமான இயற்கை நிகழ்ச்சிகளைக் கண்ட சிவபக்தர்கள் பாடிய தேவாரத்தில் ‘வண்டு பாட, மயில் ஆட, மான் கன்று துள்ள, வரிக்கெண்டை பாய’ என்று பாடியிருப்பதைக் காண்கிறோம்.

அகஸ்தியர் பரத சூத்திரத்தில் அகக்கூத்து, புறக்கூத்து, பொதுக்கூத்து என்று மூன்று விதமாகக் கூறப்படுகிறது. அகக்கூத்து மகான்கள் த்யான நிஷ்டை யில் அவர்கள் மனக்கண்ணால் காணக்கூடியது. புறக்கூத்து அறுபத்து நான்கு, பொதுக்கூத்து பன்னிரெண்டு. இவைகளில் நவரசத்தை அநுசரித்த ஆனந்த செளசியா தாண்டவம், அற்புதத் தாண்டவம், அகோர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், சதாத் தாண்டவம், பிரளய தாண்டவம், சண்டத் தாண்டவம், சந்தியா தாண்டவம், சாந்தித் தாண்டவம் என நவதாண்டவ விவரமும், ஆனந்த நடனம், கெளரி தாண்டவம், சந்தியா நடனம், திரிபுர நடனம், காளி நடனம், முனி நடனம், சங்கர நடனம் என்ற சப்த (ஏழு) தாண்டவங்களைப் பற்றியும் இன்னும் பல சாஸ்திரங்கள் விரிவாகக் கூறுகின்றன. புறக்கூத்தாகிய 64-ம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆடப்பட்ட வையாகும். அவைகளில் பாண்டரெங்கம் என்பது திரிபுராதிகளை எரித்த போது ஆடியது. கொடுகொட்டி என்பது திரிபுராதிகளை எரித்த சுடலையில் ஈஸ்வரன் கைகொட்டி ஆடியது. கபாலம் என்பது ப்ரம்மனின் ஐந்து சிரங்களில் ஒன்றைக் கிள்ளிக் கபாலம் ஏந்தி ஆடியது*. பதஞ்சலி வியாகிர பாதருக்காக சித்தரஹாசம் என்னும் சிதம்பரத்தில் ஆடியது ஆனந்த தாண்டவம் ஆகும். எனது ஜனன பூமியாகிய வழுவூரில் கரிஉரி (யானையின் தோல்) போர்த்தி – தாருகவன ரிஷிகளுக்கு ஏற்பட்டிருந்த மமதை, அகங்காரம் என்னும் மாயையான இருள் நீங்கி ஞானோதயமான சுடர் விளங்க ஆடியது நவதாண்டவமாகும். மூர்த்தியை ஞானமூர்த்தி என்றும், சபையை ஞானசபை என்றும் அவ்வூரை ஞானபூமி என்றும் சொல்வதுண்டு.

இவைகள் தவிர, ப்பாவப் பிரகாச ரசமஞ்சரி, அமர சதகம், முதலிய நூல்களிலும் நந்திகேஸ்வரர், பரதர் முதலியவர்களின் பரத சாஸ்திரத் திலும் ப்பாவங்கள் அதனால் ஏற்படும் நவரசங்கள், நாயகா நாயகி விதங்கள் பற்றியும் ராகம், தாளம், கீதம், வாத்யம் முதலியவற்றிற்கு லக்ஷணங்கள் முதலியவையும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. ஆங்கிகம், வாசிகம், ஆகார்யம், சாந்திகம் என்னும் நான்குவித ப்பாவங் களினால் ஏற்படும் ஸ்ருங்காரம், வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம், பயாதிகம், பீபத்ஸம், ரெளத்ரம், சாந்தம் முதலிய நவரசங்களில் ஸ்ருங்காரம், சம்போக ஸ்ருங்காரம், விப்ரலம்ப ஸ்ருங்காரம் என்று இரு வகையாகும். இதில் சம்போக ஸ்ருங்காரம் காதலர்கள் எண்ணம் கை கூடுவதால் ஏற்படுவது. விப்ரலம்பம் காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரிவதால் ஏற்படுவது அல்லது உத்தம நாயகி ஒருத்தி தான் நேரில் அல்லது கனவில் கண்டோ அல்லது குணாதி விசேஷங்களைக் கேள்வி யுற்றோ, காதலித்த கணவனை அடைய முடியாமல் இருக்கும் தருணத்திலோ, ஏற்படும் விரகதாபங்களை விப்ரலம்ப ஸ்ருங்காரம் என்று கூறுவர். உதாரணமாக ருக்மணிதேவி கிருஷ்ணனுடைய குணாதி விசேஷங்களைக் கேள்வியுற்று காதல் கொள்கிறாள். இதற்கு ‘ஸ்ருத்வாகுணான் புவன சுந்தரஸ்ருண்மதாந்தே’ எனும் ஸ்லோகப் பூர்வமாகத் தெரிகிறது. பாணாசுரனின் பெண் உஷாதேவி, அநிருத்தனைக் கனவில் கண்டு காதல் கொள்ளுகிறாள். சீதாதேவி ராமனை நேரில் கண்டு காதல் கொள்ளுகிறாள்.

இந்த விப்ரலம்ப ஸ்ருங்காரம் – விரகம், அயோகம், மானம், ப்ரபாசம், சாந்தம் என ஐந்து வகையாகும். இதில் விரக விப்ரலம்ப ஸ்ருங்காரத்திற்கு இதிகாச புராணங்களில் எவ்வளவோ சம்பவங்களும் விசேஷங்களும் காணக் கிடைக்கின்றன.

பழைய பதங்கள் என்னும் காரணத்தினால் ஆபாசமான கருத்துக்கள் உள்ள அநேக பதங்களையும், ஸ்லோகங்களையும் தற்காலம் அநேகர் கையாளுவதைப் பார்த்து வருந்தத்தான் வேண்டியிருக்கிறது. பழைய பதங்களாய் இருந்த போதிலும் ஆபாசமான கருத்துக்கள் இல்லாமல் உயர்ந்த கருத்துக்கள் உள்ளதாய்த் தேர்ந்தெடுத்துக் கையாளப்படுவதுதான் அறிவுடைமையாகும். பொதுவாக விரக விப்ரலம்ப ஸ்ருங்காரத்தால் ஒரு நாயகிக்கு ஏற்படும் விரக தாபத்தின் செயல்களை, பல நூல்களில் முன்னோர்களால் கூறப்பட்டிருப்பதைக் கீழே எழுதுகிறேன். அன்னம், பால், பழங்கள் முதலிய உணவுகளையும், ஆடை ஆபரணம் முதலிய அலங்காரங்களையும் அன்பாக வளர்க்கும் கிளி, மான், குயில், அன்புக்குரிய தோழிகள், தாய் முதலியோரையும் கூட வெறுக்கும்படி நேரிடும். தேகம் இளைத்துப் போகும். வெட்கம் நீங்கிப் போகும். நெஞ்சம் புண்ணாய் இருக்கும். கண்ணீர் பெருகும், பெருமூச்சு, அதிகமான சிந்தனை, நடுக்கம், சோகம் முதலியவைகள் உண்டாகும். ஒரு நிமிஷம் ஒரு யுகம்போல் தோன்றும். கழுத்தில் அணிந்திருக்கும் முத்தாரங்கள் நீற்றுப் போகும். அதரம் வெடித்துப் போகும். கை வளையல்களும், இடுப்பு ஒட்டியாணமும் நழுவிவிடும். தனிமையில் இருக்கப் பிரியம் உண்டாகும். நாயகன் வரும் காலத்தைக் குறி பார்ப்பாள். அவன் பிரிந்த நாளை எண்ணி வருந்துவாள். இனி எப்பொழுது வருவானோ என்று ஏங்குவாள். சொப்பனத்தில் நாயகன் வந்ததாகக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுவாள். ஜாக்ரதாவஸ்தையில் அவள் பார்க்கும் பொருள்கள் எல்லாம் நாயகன் போலத் தோன்றும். நாயகன் பேச்சு என்றால் சந்தோஷமும் மற்ற விஷயங்கள் பேசினால் அருவருப்பும் உண்டாகும். நாயகனால் செய்யப்படும் செய்கைகளையும் அவனுடைய படங்களையும் ஆடை ஆபரணங்களையும் தானும் நாயகனும் கூடியிருந்த இடங்களையும் கண்டு மலைப்பாள். தன் விதியை நினைத்து உருகுவாள். இனியேனும் இவ்வித சங்கடம் நேராமல் இருக்கவும் துயரங்கள் தீரவும் தெய்வத்தைக் கோருவாள். இதுபோல் இன்னும் அநேக விதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த விதமானப் ப்பாவங்களுக்குத் தகுந்ததாய்த் தெலுங்கு, சம்ஸ்கிருதம், தமிழ் முதலியவற்றில் அநேக பழைய பதங்கள் இருந்தாலும், சமீப காலத்தில் கவி சிரேஷ்டர்களாய் விளங்கியவர்களில் அமரகவி பாரதியார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களும் இயற்றிய பாடல்களில் இந்த விப்ரலம்ப ஸ்ருங்காரத்திற்குப் பொருத்தமான அநேக பாடல்கள் இருக்கின்றன. அமரகவி பாரதியார் இந்த விப்ரலம்ப ஸ்ருங்காரத்தை எவ்வளவு தெளிவாக “தூண்டில் புழுவினைப் போல்” என்ற பாடலில் வர்ணிக்கிறார்!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
(சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆசிரியராக இருந்து வெளியிட்ட “தமிழன் குரல்” எனும் பத்திரிகையில் பிப்ரவரி 1955இல் வெளியான கட்டுரை இதை நூல்வடிவம் ஆக்கியது ம.பொ.சி. அவர்களின் பெயர்த்தி தி.பரமேஸ்வரி, நூல் வெளியீடு நர்மதா பதிப்பகம், சென்னை 600083.)

*கரி உரி’ என்று வழுவூர் புராணத்தைப் பற்றிச் சொல்கிறார். அங்கு சிவன் கஜமுகாசுரனை வதம் செய்து அந்த யானை சிவனை விழுங்கிவிட்டதால், அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு சிவபெருமான் வெளிவருகிறார். ஆகையால் அந்த யானையின் தோலையே ஆடையாக அங்கு சிவன் அணிந்திருப்பதைக் குறிப்பது.

*ப்ரம்மனின் ஐந்து சிரங்களில் ஒன்றை சிவபெருமான் கொய்த வரலாற்றை இங்கு குறிப்பிடுகிறார். இந்த புராணம் நமது திருக்கண்டியூர் சிவபெருமானைப் பற்றியது. அதனால்தான் இங்கு சிவனுக்கு பிரம்ம சிரக் கண்டீசர் என்று பெயர். இவருடைய ப்ரம்மஹத்தி தோஷத்தை அங்குள்ள பெருமாள் நீக்கியதால், அவருக்கு “ஹரசாப விமோசன பெருமாள்” என்று பெயர்.

திருவையாற்றுத் தேவாரத்தில் திருஞான்சம்பந்தரும், திருநாவுக்கரசரும் நாட்டியம் இசை பற்றி அதிகம் குறிப்பிடுகிறார்கள். (விவரங்களுக்குத் திருவையாறு தேவாரங்களைப் பார்க்கலாம்)



Thursday, May 5, 2016

திருச்செங்கோடு ஆசிரமம்.



நாட்டில் விளம்பரமில்லாமல் பல நல்ல செயல்களை நம் முன்னோர்கள் செய்து வந்திருக்கிறார்கள். சுதந்திர இயக்கம் தீவிரமடைந்த நிலையில் மக்கள் கள் குடிப்பதிலும், படிப்பறிவில்லாமல் அறியாமை இருளிலும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டு பல இழிவுகளைத் தாங்கிக் கொண்டும் இருக்கும் நிலைமையை மாற்றி மனிதர் அனைவரும் சமம் எனும் நிலைமையைக் கொண்டு வரவேண்டுமென்று அன்றைய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் எண்ணினார்கள்.


இதையெல்லாம் அவர்கள் எண்ணத்தில் மட்டும் இருந்தால் போதுமா? இன்றைய நிலை அன்றிருந்தால் மேடை போட்டு நான் அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன் என்று வாய்ப்பந்தல் போட்டுவிட்டு போய்விடுவார்கள். ஆனால் அன்றைய தமிழ் நாடு இருந்த பிற்போக்கான நிலைமையில் தாழ்த்தப்பட்டவர்களை மீட்டு சமுதாயத்தில் கெளரவமான இடத்தில் வைக்க வேண்டுமென்று சுதந்திரப் போராளிகள் நினைத்தனர்.
விளைவு? 1925ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அதாவது ராஜாஜி தான் பிறந்து வளர்ந்த அப்போதைய சேலம் மாவட்டத்தில் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில், சில நல்ல மனிதர்கள் இலவசமாகக் கொடுத்த நிலத்தில் ஓர் ஆசிரமத்தைத் தொடங்கினார். அதுதான் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் என்ற பெயரோடு இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
                        ஆசிரமத்தில் ராஜாஜி வாழ்ந்த வீடு

ராஜாஜிக்கு அப்போதிருந்த ஒரே கவலை கிராமப் பகுதிகளில் இருக்கும் உழைக்கும் மக்கள் குடி போதைக்கு ஆளாகியிருப்பதை மாற்றி அவர்களை மற்றவர்கள் போல நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்பதுதான். மகாத்மா காந்தியடிகள் அறிமுகம் செய்த சர்வோதயமும், கிராமப்புற மேம்பாடும், வேலைவாய்ப்புகளை அளிக்கவும் இந்த ஆசிரமம் தோற்றுவிக்கப்பட்டது. கிராமப் பொருளாதர வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும், அதற்கு பேசினால் மட்டும் போதாது கிராமப் பகுதிகளிலேயே வந்து ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கி அந்த மக்களுக்கு அங்கு இருக்கும் வசதிகளைக் கொண்டு என்னென்ன தொழில்களைத் தொடங்க முடியுமோ அவற்றைத் தொடங்கி அவர்களுக்கு ஒரு நிரந்தர வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பது குறிக்கோள்.

அந்த மகான்களுடைய கனவு இன்று நனவாகி ஓரளவுக்கு அந்த கிராமப் புற மக்கள் முழுவதுமாக மாறியதோடு இல்லாமல் 2013 மதிப்பீட்டின்படி இது மிகச் சிறந்த கிராம காதி கைத்தொழில் விருதினைப் பெற்றதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
                             வீட்டினுள் ராஜாஜி

இப்போது இங்கு 116 நிரந்தரமான ஊழியர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தொழில் கலைஞர்களுக்கும் வாய்ப்பளித்து பல்வேறு காதி கிராமப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு காந்தியடிகளின் கொள்கைகள் கற்றுக் கொடுப்பதினும் நடைமுறைப் படுத்தப்படுவதை கடைபிடிக் கிறார்கள். இந்த ஆசிரமத்தை ராஜாஜி 1925இல் தொடங்கும் போது இந்தப் பகுதி வாழ் பெண்மணிகளுக்கு நூல் நூற்றல் கற்றுக் கொடுத்தார். ஏன் என்றால் அந்த கால கட்டத்தில் இங்கிருந்தெல்லாம் இலங்கைக்குக் கூலி களாக நமது பெண்மணிகளை கங்காணிகள் எனப்படுவோர் அழைத்துச் சென்று குடியேற்றிக் கொண்டிருந்தனர். இங்கு மழை இல்லை, விவசாயம் இல்லை, வேலை இல்லை, எனவே இவர்கள் பிழைப்பு தேடி இலங்கைக்குக் கூலிகளாகச் சென்று துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இங்கு உற்பத்தியாகும் பஞ்சைக் கொண்டு போய் வீடு வீடாக பெண்களிடம் கொடுத்து அவர்களை நூல் நூற்க வைத்து, அந்த நூலைக் கொண்டு தறி போட்டு துணி நெய்து இந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை இங்கேயே மகிழ்ச்சியோடு வாழ வழி செய்தது இந்த ஆசிரமம். அதோடு உடல் ஊனமுற்ற பெண்கள், ஆண்கள் உட்பட இவர்களை ஆசிரமத்திலேயே வைத்துக் கொண்டு அவர்களை நூல் நூற்கச் செய்து அவர்களையும் தங்கள் சொந்தக் காலில் நிற்க வைத்தனர் இவர்கள். இவர்களைப் போன்ற பலரும் இந்த ஆசிரமத்தில் இருக்கின்றனர். சாதாரண ஊழியருக்குக் கொடுப்பதை விட இவர்களுக்கு அதிகப்படியான கூலியும் உண்டு.
                   ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வருகை புரிந்தபோது

இன்றைய தினம் இங்கு மரச் சாமான்கள், கைத்தறி சேலைகள், மற்ற பல வகையான தினசரி தேவைக்கான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்று நவீன தொழிற்சாலைகளில் இதுபோன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப் பட்டாலும், இவர்களது பொருட்களுக்கு ஆதரவு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த ஆசிரமம் உருவாக்கிட 1925இல் நான்கு ஏக்கர் நிலத்தை ரத்தினசபாபதி கவுண்டர் எனும் நல்ல உள்ளம் கொண்டவர் தானமாகக் கொடுத்தார். இவர் இந்தப் பகுதியில் ஒரு வசதி படைத்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கொடுக்க மனம் வந்ததே, அதுதான் காந்தியடிகளின் மகிமை. எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் முதலில் ராஜாஜியுடன் இந்த ஆசிரமத்தில்தான் இருந்தார்.
திருச்செங்கோடு ஊரிலிருந்து சுமார் பதினொரு கி.மீ. தூரத்திலுள்ள புதுப்பாளையம் எனும் இடத்தில்தான் இந்த ஆசிரமம் இருக்கிறது. நுழை வாயிலில் ஆசிரமத்தின் பெயரும் அடர்ந்த ஆல மரமும் படத்தில் பார்க்கலாம். கவுண்டர் கொடுத்த நான்கு ஏக்கர் நிலப்பரப்பு இப்போது இருபத்தி நான்கு ஏக்கருக்கு விரிவடைந்து காணப்படுகிறது.

ஆசிரமத்தில் பெண்கள் ஆங்காங்கே பல பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் அங்கு எந்தவித பேச்சோ, ஆரவாரமோ இன்றி அமைதியாக இருக்கும். ராஜாஜி இங்கு தங்கிக் கொண்டுதான் மதுவிலக்குப் பிரசாரம் செய்து வந்தார். ராஜாஜி சேலம் ஜில்லாவைச் சேர்ந்தவர். ஆகையால் இவரது கொள்கையான மதுவிலக்கை முதன்முதலில் 1930இல் இவர் திருச்செங்கோடு, ராசிபுரம், சங்ககிரி ஆகிய தாலுக்காக்களில் அறிமுகம் செய்து கள்ளுக் கடைகளை மூடும்படி செய்தார். இதில் அதிசயம் என்னவென்றால் இவர் கொள்கையைத்தான் சொன்னார், ஆனால் மக்களோ தாங்களே முன்வந்து இந்தக் கடைகளை மூடினார்கள்.
இன்றும் புதுப்பாளையம் செல்வோர் காந்தி ஆசிரமத்தைப் பாருங்கள். அங்கு நடைபெறும் கிராம முன்னேற்றத் திட்டங்களைப் பாருங்கள், காந்திய சிந்தனைகள் புத்தகங்களில் மட்டுமல்ல, செயல் வடிவத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை உலகுக்குக் காட்டுவோம் வாரீர்!!


Tuesday, May 3, 2016

ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரி ஜயந்தி இசை விழா.

                                                     Marabu Foundation
Jatavallabar House,
6/78, Thillaisthanam,
Thanjavur Dt., 613 203.
Sri Syama Sastri Jayanthi Day Music Concert
We Cordially invite you to the Music Concert on Saturday, the 7th May 2016 between 6.30 P.M. to 9.00 P.M.  the Jayanthi day of Syama Sastri atBangaru Kamakshi Amman Temple West Main Street, Thanjavur.
Programme
Sri N Vijay Siva-Vocal
Kumari Amritha Murali-Violin
Sri N Manoj Siva-Mrudangam
                                                                                                                                                   Trustees

தஞ்சை மேல வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயத்தில் இம்மாதம் 7ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரி ஜயந்தி தினத்தையொட்டு திரு விஜய் சிவா அவர்களின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அவருடைய வரலாற்றுத் துளிகளை இப்போது பார்க்கலாம்.

வேங்கடசுப்ரமண்யன் எனும் திருநாமத்தோடு கூடிய இவர் 1762 ஏப்ரல் 26ஆம் நாள் பிறந்தார். தந்தையார் விஸ்வநாத ஐயர், தாயார் வெங்கலட்சுமி. பிறந்த ஊர் திருவாரூர்.

கர்நாடக இசை மூவரில் இவர்தான் மூத்தவர்; மற்ற இருவர் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர். ஸ்யாமா சாஸ்திரியும் முத்துசாமி தீட்சதரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அதே போல் சாஸ்திரிக்கு தியாகராஜரிடமும் மரியாதை உண்டு.

இவருடைய மூதாதையர்கள் பங்காரு காமாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகர்களாக இருந்து வந்தனர். இவருக்கு சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழிகளோடு இசையும் போதிக்கப்பட்டது. இவை அனைத்திலும் இவர் நல்ல பாண்டித்தியம் அடைந்தார். இவைகள் அனைத்திலும் மேலாக இவருக்கு இசையின்பால் நாட்டம் இருந்து வந்தது.

இவரது பதினெட்டாம் வயதில் இவர் குடும்பம் தஞ்சாவூருக்குக் குடிபெயர்ந்தது. அங்கு இவருக்கு ஒரு துறவி இசைக் கலைஞர் அறிமுகமானார். அவர் சாஸ்திரியின் ஆர்வத்தை அறிந்து அவர் தந்தையின் அனுமதியோடு இசையைக் கற்பித்தார். குருநாதர் ஒரு துறவியானபடியால் சுமார் நான்கு மாத காலத்தில் இசையை இவருக்குக் கற்பித்த போதும், இவரும் நன்கு தேர்ச்சி பெற்றார்.

இவர் இசையுலகில் பிரபலமாகத் தொடங்கினார். இவரது இசையை ஸ்ரீதியாகராஜ சுவாமியும் பாராட்டினார். தந்தை தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர், அதனால் இவரும் தந்தையுடன் கோயிலுக்குச் சென்று பணியாற்றத் தொடங்கினார். அங்கு அம்பாள் சந்நிதியில் காமாட்சியைத் தரிசனம் செய்யும் வேளைகளில் தன்னை மறந்து லயித்து விடுவார். அந்த சந்தர்ப்பங்களில் இவரிடமிருந்து மிக அற்புதமான கீர்த்தனைகள் அம்பாள் மீது இயற்றப்பட்டிருக்கின்றன. மற்ற இருவரைப் போல இவர் அதிக கீர்த்தனைகள் இயற்றவில்லை. ஆனால் அவர் செய்தவைகள் மிகப் பிரபலமடைந்தன. இவர் சுமார் 300 கீர்த்தனைகள் இயற்றியிருப்பார் என்கின்றனர். ஆனால் இவருடைய கீர்த்தனைகளை பிரபலப்படுத்த இவரிடம் சீடர்கள் இல்லை. இவருக்கு சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழிகளில் நல்ல புலமை இருந்ததால் இவரது கீர்த்தனைகள் நல்ல இலக்கியத் தரமானவை ஆகையால் பாமர மக்கள் அதிகம் பாடுவது கிடையாது. அன்னை காமாட்சி மீது இவர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார்.

இவரைப் பற்றிய ஒரு சுவையான வரலாறு உண்டு. ஆந்திர பகுதி பொப்பிலியிலிருந்து கேசவையா எனும் சங்கீத சாம்ராட் விருது பெற்ற பெரிய வித்வான் தமிழ்நாட்டு இசைக் கலைஞர்களை சோதிக்கும் பொருட்டு திருவையாறு சென்று தியாகராஜரிடம் விவாதித்திருக்கிறார். 
அங்கும் அவரது பெருமையை உணர்ந்து திரும்பினார். பின்னர் தஞ்சை வந்து சியாமா சாஸ்திரியிடமும் அவரது திறமையை சோதிக்க விரும்பினார். சாஸ்திரி அன்னை காமாட்சியிடம் சென்று வேண்டிக் கொண்டார். அப்போது அவர் பாடியதுதான் “தேவி ப்ரோவ சமயமிதே” எனும் பாடல். சோதனை வந்திருக்கிறது, இதிலிருந்து என்னைக் காப்பாற்றும் சமயம் இதுதான் எனும் பொருளில் அமைந்தது இது. பிறகு கேசவையாவுடன் நடந்த போட்டியில் சாஸ்திரி வெற்றி பெற்றார், ஆணவம் அழிந்து கேசவையாவும் ஊர் திரும்பினார்.

இவர் புதுக்கோட்டை பிரஹதாம்பாள் அன்னை மீது பாடிய பாடலொன்றைக் கேட்ட ஒரு துறவி, இவரை மதுரை சென்று அங்கு மீனாட்சி அம்மன் மீது பாடல்கள் இயற்றுமாறு வேண்டிக் கொள்ள இவரும் மதுரை சென்றார். அங்கு அவர் “நவரத்னமாலிகா” எனப்படும், சங்கராபரணத்தில் அமைந்த “சரோஜதளநேத்ரி”, “தேவி மீனநேத்ரி”, ஆஹிரியில் “மாயம்ம”, தன்யாசியில் “மீனலோசன ப்ரோவ”, ஆனந்த பைரவியில் “மரிவேரேகதி”, லலிதா ராகத்தில் “நனு ப்ரோவ லலிதே”, கல்யாணியில் “ராவே பர்வதராஜ குமாரி”, காம்போஜியில் “தேவி ஸ்ரீபதசரசமுலே” போன்ற ஒன்பது கிருதிகளைப் பாடிச் சிறப்பித்தார்.

இன்னொரு முறை ஒரு போட்டியில் நாகைப்பட்டினத்தில் அப்புக்குட்டி நட்டுவனார் என்பவரை தோற்கடித்து அவருடைய தம்பூருவை இழக்கும்படி செய்தார். இவர் தன்னுடைய வாழ்க்கை முடிவை முன்கூட்டியே அறிவித்துவிட்டு 1827ஆம் வருஷம் பிப்ரவர் 6ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். இவருக்கு முன்பாக ஒருசில நாட்கள் முன்னர்தான் இவர் மனைவி காலமாகியிருந்தார். 

Thursday, March 31, 2016

பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்

Courtesy: "TAMILHINDU' website and Mr.Jatayu, Bangalore.


முகப்பு » இலக்கியம்சமூகம்வரலாறுவிவாதம்

பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள்

March 30, 2016
 

bharathi01பெங்களூரில் வாரம் தோறும் நடந்து வரும் “பாரதி பயிலகம்” அமர்வுகளில், சென்ற வாரம் “சத்ரபதி சிவாஜி தன் சைன்யத்திற்குக் கூறியது” என்ற பாடலை எடுத்துக் கொண்டோம். “ஜயஜய பவானி ஜயஜய பாரதம்” என்று தொடங்கும் இந்த நீண்ட பாடல் பிரபலமான ஒன்று தான். இப்பாட்டின் சில முக்கிய வரிகளை சீர்காழி கோவிந்தராஜனின் சிம்மக் குரலில் எண்பதுகளில் ரேடியோவில் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.
வாசித்துக் கொண்டே வருகையில் ஒன்றைக் கவனித்தோம். பாரதியின் மூலப் பிரதியில், சொற்கள் தெளிவாக இருந்த சில இடங்களில் கூட வலிந்து திருத்தங்கள் செய்யப் பட்டு அதிகாரபூர்வமான “அரசாங்கப் பதிப்பு” வெளியிடப்பட்டுள்ளது. இன்று கிடைக்கும் எல்லாப் பதிப்புகளிலும் இந்தத் திருத்தங்கள் உண்டு. ஆனால் திருத்தங்கள் செய்யப் பட்ட விவரமோ, பாடபேதங்களோ கூட எவற்றிலும் தரப்படவில்லை. சீனி. விசுவநாதன் வெளியிட்ட “காலவரிசையில் பாரதியார் கவிதைகள்” என்ற ஆய்வுப் பதிப்பில் மட்டும் தான் இது பற்றிய குறிப்பைப் பார்த்தோம்.
“தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபடு துருக்கர்”  (வரிகள் 44-46)
இதில் *நவைபடு துருக்கர்* என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது.
சோதரர் தம்மைத் துருக்கர் ஆண்டழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க! (வரிகள் 83-84)
இதில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது.
இந்த இரு திருத்தங்களும், அந்தந்த இடங்களில் பாடலின் பொருளை எந்த அளவுக்கு மோசமாகச் சிதைக்கின்றன என்று சொல்லத் தேவையில்லை.
சரி, பாரதியார் என்ற கவிஞர் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பான கணத்தில் ஆவேசத்தில் எழுதியதை, பிறகு நாட்டின் நல்லிணக்கத்தைக் கருதி அரசு சென்சார் செய்து மாற்றிவிட்டிருக்கிறது. உண்மையில் இது தான் சரியான (நேருவிய திராவிடிய) கருத்துச் சுதந்திரத்தின் அடையாளம் என்று சமாதானங்கள் சொல்லப் படக் கூடும். ஆனால், பாரதியாரே இந்தப் பாடலை முதன்முதலாகப் பிரசுரிக்கும் போது கீழ்க்கண்ட தெளிவான குறிப்பையும் அதனுடன் சேர்த்தே எழுதியிருக்கிறார் என்பதையும் கணக்கில் கொண்டால் இந்த வாதம் அடிபட்டுப் போகும். மேற்கூறிய சீனி.விசுவநாதன் பதிப்பில் இக்குறிப்பு தரப்பட்டுள்ளது.
“இச்செய்யுளிலே நமது மகமதிய சகோதரருக்கு விரோதமாக சில வசனங்கள் பிரயோகிக்க நேர்ந்தது பற்றி விசனமடைகிறோம். இக்காலத்து மகமதியர்கள் பாரதபூமியின் சொந்தப் புத்திரர்கள் என்பதையும். ஹிந்துக்களும் முகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பலமுறை வற்புறுத்தியிருக்கிறோம் என்ற போதிலும், சிவாஜி மகாராஜா காலத்தில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் விரோதம் இருந்தபடியால், அவர்களைப் பற்றி மகாராஜா சிவாஜி சில கோபமான வார்த்தைகளைச் சொல்லியிருப்பது வியப்பாக மாட்டாது. மேற்படி செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீரரசத்தை மட்டுமே கவனிக்கவேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்”.
ஆக, தனது சொற்பிரயோகத்தின் மீதும், அது உருவாக்கும் விளைவுகள் மீதும் இவ்வளவு அக்கறையும் கவனமும் கொண்டிருந்திருக்கிறார் பாரதி என்பது புலனாகிறது. பாடலில் உள்ள துருக்கர் என்ற சொல் “புண்படுத்தக் கூடியதாகவோ” அல்லது தவிர்க்கப் பட வேண்டியதாகவோ அவர் கருதவில்லை என்பதை வெளிப்படையாகவே எழுதிவிட்டிருக்கிறார். இதற்குப் பிறகும் அந்தத் திருத்தங்கள் அரசுப் பதிப்பில் செய்யப் பட்டிருப்பது பாரதி மீதான அவமதிப்பன்றி வேறில்லை.
பாரதிக்கு எந்த அளவுக்கு மத நல்லிணக்கத்திலும், சமூக ஒற்றுமையிலும் கருத்து இருந்ததோ, அதே போன்று, கூர்மையான, சுயமரியாதையுடன் கூட வரலாற்றுப் பிரக்ஞையும் இருந்தது. கடந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும், இஸ்லாமிய அரசுகளும் புரிந்த கொடுமைகளை வைத்து தேசபக்தி கொண்ட இன்றைய முகமதியர்களை உதாசீனம் செய்யக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், “நல்லிணக்கம்” வேண்டும் என்பதற்காக, வரலாற்றை ஒரேயடியாக வெள்ளையடித்து மறைத்து விட வேண்டும் அல்லது இன்றைய முஸ்லிம்கள் மனம் நோகாத வகையில் போலித்தனமாக திரித்து, மாற்றி எழுத வேண்டும் என்பதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை. வரலாற்றிலிருந்து கற்க வேண்டிய பாடங்களைக் கற்று, அதன் பின்னர் கடந்தவற்றை மறந்து காலத்தில் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதே அவர் கொள்கையாக இருந்திருக்கிறது. உண்மையான சமன்வய நோக்கும், தீர்க்கதரிசனமும், அறிவார்ந்த கண்ணோட்டமும் கொண்ட ஒரு எழுத்தாளன் இப்படித் தான் சிந்தித்திருப்பான். காசி சர்வகலாசாலையில் பயின்ற போது, ஒவ்வொரு நாளும் காசி விஸ்வேஸ்வரரின் ஆலயத்தை அவுரங்கசீப் தகர்த்து உடைத்ததன் சுவடுகளை, இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்திய வடுக்களை பாரதி கண்டிருக்கக் கூடும். அதே படித்துறைகளில் கான் சாகிப்கள் மெய்மறந்து ஹிந்துஸ்தானி இசையில் கங்கை அன்னையையும் ராமநாமத்தையும் பாடுவதையும் அவன் கேட்டிருக்கக் கூடும். அப்படி ஒரு சூழலில் வளர்ந்தவனுக்கு இப்படி ஒரு தீர்க்கமான வரலாற்றுப் பிரக்ஞை உருவாகாமலிருந்தால் தான் அது ஆச்சரியம்.
மேலும் “மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில்” என்று பாரதி குறிப்பிடும் கீழ்க்காணும் விஷயங்கள் எதுவும் அவனது கற்பனையோ அல்லது கட்டுக் கதையோ அல்ல. அவை ஒவ்வொன்றையும் பற்றி ஆயிரக் கணக்கான பக்கங்கள் நவீன வரலாற்றாசிரியர்களால் எழுதப் பட்டுள்ளன. அக்காலத்திய இஸ்லாமிய ஆவணங்களிலும் அக்கொடுஞ்செயல்கள் படாடோபத்துடன் எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன.
“.. ஞானமும் அறியா நவைபடு துருக்கர்,
வானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல்
இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்!
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!
சாத்திரத் தொகுதியைத் தாழ்த்திவைக் கின்றார்!
கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்!
எண்ணில, துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்:
கண்ணியம் மறுத்தனர்; ஆண்மையுங் கடிந்தனர்;
பொருளினைச் சிதைத்தனர்; மருளினை விதைத்தனர்;
திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்;
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்;
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்?
மொக்குள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?…”
இன்னும் ஒன்றுண்டு. மேற்சொன்ன திருத்தங்களை முனைந்து செய்து அரசுப் பதிப்பை வெளியிட்ட மகானுபாவர்களுக்கு, பாரதியாரின் கீழ்க்கண்ட வரிகளில் அரசியல்சரிநிலை வேண்டி எந்தத் திருத்தங்களும் செய்தவற்கான எந்த அவசியமும் தோன்றவில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம் தான்.
ஈனப் பறையர்களேனும் – அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?…
பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை..
பேராசைக் காரனடா பார்ப்பான்..
பாயும் கடிநாய்ப் போலீசுக் காரப் பார்ப்பானுக்குண்டதிலே பீசு..
இன்னாளிலே பொய்மைப் பார்ப்பார் இவர் ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்..
பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய பாழடைந்த கலியுகமாதலால்..
****
சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது – பாடல் இங்கே.
பாடல் முழுவதையும் நாங்கள் வாசித்து விவாதித்ததன் ஒலிப்பதிவு கீழே:

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 
தொடர்புடைய பதிவுகள்

Thursday, March 17, 2016

மக்கள் நலம் வேண்டி ஒரு வேண்டுகோள்!

        
இப்போது மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரம். அரசியல்வாதிகள் அரிதாரம் பூசிக்கொண்டு, அன்பொழுக நெருங்கி, தேனொழுகப் பேசி, நம் வாக்குகளைக் கவர்ந்து செல்ல முயலும் நேரம். இப்போது விழிப்போடு இல்லாவிட்டால் மக்கள் அடுத்து வரும்ஆண்டுகளில் நாம் நரக வாழ்க்கை வாழ்ந்திட நேரிடும் என்பதை உறுதியாக மனதில் கொள்ள வேண்டும்.

இலவசங்களாக நமக்குக் கொடுக்கும் பொருட்களின் தரம் உலகம் அறிந்த செய்தி. அவை யார் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது? மக்களின் வரிப்பணம். உருப்படியாக மக்கள் வாழ்க்கைத் தரம் உயர செய்யப்பட வேண்டிய செலவுகளை நிறுத்திவிட்டு இலவசமாக பொருட்கள் தருகிறார்கள். அவை நன்றாக செயல்படக் கூடியவைகளா? தரமானவைகளா? யாரையும் கேட்க முடியாது, அழகுப் பொருட்களாக வாங்கி வீட்டில் அடையாளப்படுத்தி வைத்துக் கொள்ளலாம், அவ்வளவே!

கோடிக்கணக்கில் செலவு செய்து, ஆடம்பரமான விளம்பரங்கள் செய்து, கூட்டம் சேர்த்து கோஷங்களை எழுப்பி மக்கள் உள்ளங்களில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணி, அதன் பலனைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அரசியல் பாணிகளுக்கு முடிவு கட்டுவோம்.

எளிமையானவராக, விவரம் புரிந்தவராக, நிச்சயம் மக்களுக்காகப் பாடுபடுவார் என்பவர்களைப் பார்த்து அவரிடமிருந்து எந்த கைமாறையும் எதிர்பாராமல் மனசாட்சிக்கு ஏற்ப வாக்களித்தால் மக்கள் வாழ்க்கை நலம் பெறும். 

ஆடம்பரத்துக்கும், இலவசங்களுக்கும், இதர கவர்ச்சி மொழிகளுக்கும் மயங்கினால், பின்னர் நமக்கு வாழ்க்கை நரக வாழ்க்கையே! படித்தவர்கள், படிக்காதவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். அரசியல் கட்சியில் சேர்ந்து உயிரையும், நேரத்தையும், உடைமைகளையும் கூட தியாகம் செய்யும் தொண்டர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள், விழலுக்கு நீர் இரைக்காதீர்கள் என்று! கட்சியோ, கொடிகளோ, ஆடம்பரப் பேரணிகளோ, மனங்கவரும் கோஷங்களோ நமக்கு வழித்துணையாக வராது. நம் அறிவு, விழிப்புணர்வு, நியாய சிந்தனை, எடுக்கப்போகும் முடிவு இவை மட்டுமே நம் எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்யும். பார்ப்போம், சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 70 ஆண்டுகளை நெருங்கும் சமயத்தில்கூட நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்ளவில்லையானால், இனி எந்த நாளும் நாம் தலை நிமிரப் போவதில்லை. இப்போது தவறினால் இனி தெளிவடைய வாய்ப்பு இல்லை. தயை செய்து இவற்றை விருப்பு வெறுப்பின்றி ஆலோசித்து முடிவு செய்யுங்கள். நன்றி.