பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, August 24, 2013

ஆடாது அசங்காது வா கண்ணா!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல். ஊத்துக்காடு வேங்கடகவியின் சில பாடல் வரிகளை இங்கு காணலாம்.

              ஆடாது அசங்காது வா கண்ணா!


ராகம்: மத்யமாவதி                                                                        தாளம்: ஆதி.

                                                             பல்லவி

ஆடாது அசங்காது வா கண்ணா, உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடுது எனவே (ஆடாது)

                                                      அனுபல்லவி

ஆடலைக் காண தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே - ஒரு மாமயில் இறகணி மாதவனே நீ (ஆடாது)

                                                           சரணம்

சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவி மடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே - மயில்
பீலி அசைந் தசைந்து நிலை கலைந்திடுமே
பன்னிருகை இறைவன் ஏறுமயில் ஒன்று - தன்
பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே - குழல்
பாடிவரும் அழகா - உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால்
மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)

Friday, August 23, 2013

"தாயே யசோதே! உந்தன்"

இந்தப் பாடலை நீங்கள் பலரும் பாடக் கேட்டிருக்கலாம், அவை முழுமையாக அமைந்தவை அல்ல. முழுப் பாடலையும் இதோ படியுங்கள்!

                       "தாயே யசோதே! உந்தன்"

ராகம்: தோடி                                                                                           தாளம்: ஆதி

                                                            பல்லவி

தாயே யசோதே! உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)

                                                         அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

                                                           சரணங்கள்

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும், கையசைவும், தாளமோடிசந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனமாடுகிறான்!
பாலன் என்று தாவி அணைத்தேன், அணைத்த என்னை
மாலை இட்டவன் போல் வாயில் முத்தம் இட்டாண்டீ!
பாலன் அல்லடி உன் மகன், ஜாலமாகச் செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொன்னால் நாணமிக ஆகுதடீ! (தாயே) 1.

அன்றொரு நாள் இந்த வழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்
தின்றது போகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தை மிகு பழியிங்கே பாவம் எங்கே என்றபடி
சிந்தை மிக நொந்திடவும் செய்யத் தகுமோ?
நந்த கோபற்கு இந்த விதம் அந்தமிகு பிள்ளைபெற
நல்ல தவம் செய்தாரடி, நாங்கள் என்ன செய்வோமடி (தாயே) 2.

எங்கள் மனை வாழவந்த நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யுமுனா நதிப் போகையிலே - கண்ணன்
சங்கையும் இல்லாதபடி, பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
உங்கள் மகன் நான் என்றான், சொல்லி நின்றபின்
தங்கு தடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி எண்ணித் தவிக்கின்றார்! நாங்கள் என்ன செய்வோமடீ (தாயே) 3.

தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை அவிழ்த்து எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் மாட்டிக் கொண்டான்!
விட்டுவிட்டு "அம்மே" என்றான் கன்றினைப் போல்
அட்டியில்லாத மாடும் "அம்மா" என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் 'உன் செல்வமகன்'
பட்டியில் கறவையிடம் பாலை ஊட்டுறானடீ (தாயே) 4.

சுற்றி சுற்றி என்னை வந்து, அத்தை வீட்டு வழிகேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழிகேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து, மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடீ (தாயே) 5.

வெண்ணை வெண்ணை தாருமென்றான், வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும், என்று கண்ணடிக்கிறான்
வண்ணமாய் நிருத்தமாடி, மண்ணினைப் பதத்தால் ஏற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்
பண்ணிசையும் குழலூதினான்! - கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து, வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணி உனக்காகுமடி, கண்ணியமாய்ப் போகுதடீ (தாயே) 6.

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை, தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான், அடி யசோதா!
மைந்தன் எனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன், வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு, சிந்தையும் மயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு, எல்லாம் காட்டினானடி (தாயே) 7.







Thursday, August 22, 2013

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி 28 August 2013

                                ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

                                                 (தஞ்சை வெ.கோபாலன்)

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளை ஜென்மாஷ்டமி என்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் ஆங்கில நாள்காட்டியின்படி எந்த ஆண்டு பிறந்தார் என்பது நிர்ணயிக்காவிட்டாலும், குறிப்பாக இப்போதிலிருந்து 3413 ஆண்டுகளுக்கு முன்பு (அதாவது 1400 B.C.) பிறந்தார் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். வசுதேவர் தேவகியின் மகனாக கம்சனின் சிறையில் பிறந்தவராயினும், கோகுலத்தில் யசோதையின் மைந்தனாக வளர்ந்தவர். கோகுலத்தின் ஆயர்பாடியில் குழந்தை கண்ணனின் லீலைகளை கவிஞர்கள் எல்லா மொழிகளிலும் புகழ்ந்து பாடி மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். கிருஷ்ணனின் பால லீலைகள் எந்த காலத்திலும் எவராலும் படித்து இன்புறத்தக்கவை. அவனுடைய குறும்புகள், அவனுடைய நட்பு வட்டாரம் கோகுலத்தில் செய்த சேஷ்டைகள், ஆயர்பாடியில் பெண்கள் பட்ட பாடு இவைகளை எத்தனை வகையில் பாடி வைத்திருக்கிறார்கள். ஊத்துக்காடு வேங்கட கவியின் "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி தாயே" எனும் பாடலில் கவி கிருஷ்ணனின் லீலைகளை வரிசைப்படுத்திப் பாடி மகிழ்கிறார். மகாகவி பாரதியும் தனது கண்ணன் பாட்டில் "தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை" எனும் பாடலிலும் கிருஷ்ண லீலை பேசப்படுகிறது. கோபியர்கள் வீட்டில் கிருஷ்ணன் சட்டியிலுள்ள வெண்ணையை எடுத்து நண்பர்களுடன் பங்கிட்டு உண்பது, தாயார் உரலில் கட்டிப்போட்டது, பூதகி எனும் அரக்கியை வதம் செய்தது, காளிங்கன் எனும் நச்சுப்பாம்பை அடக்கியது, மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவர்த்தனகிரி மலையைத் தூக்கி அடைக்கலம் கொடுத்தது, கம்சனை வதைத்தது இவைகள் எல்லாம் என்றென்றும் பேசப்படும் கிருஷ்ணனின் லீலைகள்.
இவைகள் எல்லாம் பாலகிருஷ்ணனின் லீலா வினோதங்கள்.

வளர்ந்து பெரியவனாக ஆனபின்பு ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாக இருந்தது, அவன் மனம் சோர்ந்து நின்றபோது கீதையை உபதேசித்து அவனுக்கு தர்மத்தை எடுத்துரைத்தது போன்றவைகள் எல்லாம் என்றும் இந்த புண்ணிய பூமியில் போற்றிக் காப்பாற்றப்படும் செய்திகளாகும்.

மதுராபுரி மன்னன் கம்சன், தன்னுடைய தந்தையைச் சிறையிலிட்டுத் தான் முடிசூட்டிக் கொண்ட அசுரன். அவனுடைய சகோதரி தேவகி வசுதேவரை மணந்தவள். அராஜகங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய கம்சனின் அழிவு சகோதரி தேவகியின் எட்டாவது மகனால் நிகழும் எனும் அசரீரியின் குரல் அவனை வாட்டி வதைத்து அடாத காரியங்களைச் செய்யத் தூண்டியது. சகோதரி என்றும் பாராமல் தேவகியையும் அவள் கணவனையும் சிறையில் அடைத்து கொடுமைகள் செய்தான். இவர்களுக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தையல்லவா தன்னைக் கொல்லப் பிறக்கப்போகிறது எனும் எண்ணம், அவர்களுக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் பிறந்தபொழுதே கொன்று குவித்தான் அரக்கன். ஏழு குழந்தைகளைக் கொன்ற கம்சன் எட்டாவது குழந்தை தேவகிக்குச் சிறையில் பிறக்கப்போகிறது என்பதால் அங்கு ஏராளமான காவலர்களை நியமித்தான். வசுதேவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தான்.

கொட்டும் மழையில் நள்ளிரவில் ஊரும் உலகமும் உறங்கும் வேளையில் சிறையில் தேவகியின் எட்டாவது மகன் பிறந்தான். கண்ணன் பிறந்தான், நம் கண்ணன் பிறந்தான் என்று உலகத்து உயிர்கள் எல்லாம் குதூகலம் அடையும் வண்ணம் கண்ணன் சிறையில் பிறந்தான். கம்சன் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்று நினைத்தான். நள்ளிரவில் கண்ணன் பிறந்த நேரம், சிறைக் காவலர்கள் அசந்து உறங்கிப் போனார்கள். சங்கிலியால் கட்டுண்ட வசுதேவரின் சங்கிலிகள் அறுந்து விழுந்தன. இறைவன் முன்கூட்டிய தீர்மானித்தபடி வசுதேவர் பிறந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டு கிளம்ப, சிறைக் கதவுகள் தானாகத் திறக்க, கோகுலம் செல்வதற்காக யமுனை நதிக்கரையைச் சென்றடைகிறார். அந்த யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த நதியின் அக்கரையில் உள்ள கோகுலம் யாதவர்கள் நிறைந்த இடம். அங்கு கொண்டுபோய் பிறந்த குழந்தையை ஒப்படைக்க எண்ணி வசுதேவர் போகிறார். அங்குதான் நந்த ராஜா என்பவர் வசுதேவரின் நண்பர் அரசனாக இருந்து வந்தார்.

அந்த நள்ளிரவு நேரத்தில் இடியும் மின்னலுமாக மழை கொட்டித் தீர்க்கிறது. அந்த சூழ்நிலையில் தலையில் குழந்தையைக் கூடையில் வைத்து சுமந்துகொண்டு வசுதேவர் யமுனை நதிக்கரையை வந்தடைகிறார். எதிரில் இருப்பது கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மழையின் கடுமை இருந்தது. வசுதேவர் யமுனை நதிக்கரையை அடைந்த நேரம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. மழையோ காற்றுடன் கூடி கடுமையாகச் சாடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது?


என்ன செய்வதென்றறியாத வசுதேவர் இறைவனை எண்ணி உரக்க வேண்டினார். என்ன அதிசயம்? எதிரில் யமுனையின் வெள்ளம் இவருக்கு வழிவிட்டு இரு பிரிவாகப் பிரிந்து கொண்டது. தலையில் குழந்தையை வைத்துள்ள கூடையுடன் வசுதேவர் போக வழிவிட்ட யமுனையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். அவர் தலையில் பள்ளி கொண்டிருந்த குழந்தைக்கு வாசுகி எனும் பாம்பு குடைபிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் பாதுகாத்துக் கொண்டே வந்தது.

ஆற்றைக் கடந்து வசுதேவர் தலையில் சுமந்திருந்த குழந்தையுடன் கோகுலத்தில் நந்தனின் வீட்டை அடைந்தார். அங்கு அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் உள்ளே நந்தனின் மனைவி யசோதா அப்போதுதான் பிறந்திருந்த பெண்குழந்தை அருகில் படுத்திருக்க அவளும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். பொழுது விடிவதற்குள் வசுதேவர் மதுராவின் சிறைக்குத் திரும்பிவிட வேண்டும். என்ன செய்வது?

வசுதேவர் தான் கூடையில் கொண்டு வந்திருந்த தன்னுடைய ஆண் குழந்தையை உறங்கிக் கொண்டிருந்த அந்தத் தாய் யசோதையின் அருகில் விட்டுவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார். அந்த யாதவகுலப் பெண்மணி யசோதை செய்த பூஜாபலந்தான் என்னே! அந்த பரந்தாமனே அவளருகில் குழந்தையாகக் கைகால்களை அசைத்துக் கொண்டு மர்மப் புன்னகையுடன் படுத்திருந்த காட்சியை என்னவென்று வர்ணிப்பது?

வசுதேவர் தன்னுடைய எட்டாவது குழந்தையை யசோதையின் அருகில் விட்டுவிட்டு, அங்கு அவளுக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்த வழியே திரும்பி மதுராபுரிக்கு வந்து சேர்ந்தார். அவர் திரும்ப வந்தபோதும் சிறைக் காவலாளிகள் நல்ல உறக்கத்தில்தான் இருந்தார்கள். எனவே குழந்தை பிறந்ததோ, வசுதேவரின் விலங்குகள் கழன்றதோ, அவர் குழந்தையைக் கூடையில் வைத்து எடுத்துக் கொண்டு போனதோ, இப்போது திரும்ப வந்ததோ எதையும் அறியாமல் நல்ல உறக்கம் அவர்களுக்கு. போன வழியே திரும்பிய வசுதேவர் சிறைக்கு வந்தார், உள்ளே நுழைந்தார், பழையபடி விலங்குகள் பூட்டிக் கொண்டன, பெண் குழந்தையை தாயார் தேவகியின் அருகில் விட்டுவிட்டு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டார்.

இவை எல்லாம் நடந்து முடிந்தபின் காவலர்கள் உறக்கத்திலிருந்து எழுந்தார்கள். கண்களைத் துடைத்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தார்கள். குழந்தை அழும் குரல் கேட்டு, ஆகா! தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்துவிட்டது, அரசன் கம்சனுக்குச் செய்தி சொல்ல ஓடினார்கள் காவலர்கள். கம்சன் எங்கே எங்கே என்றல்லவா காத்துக் கொண்டிருக்கிறான். செய்தி கேட்டு ஓடிவந்தான் சிறை கொட்டிலுக்கு. வந்தான், பார்த்தான் நம்மைக் கொல்ல வந்த எட்டாவது பிள்ளை எப்படி என்று, பார்த்தான், அந்த குழந்தை ஆண்குழந்தை அல்ல, பெண்ணல்லவா பிறந்திருக்கிறது. என்ன இது? ஆணானால் என்ன, பெண்ணானால் என்ன? என்னைக் கொல்லப்போவது எட்டாவது குழந்தை அல்லவா? ஆகையால் இந்தக் குழந்தையையும் கையில் எடுத்துக் கொண்டு சுழற்றித் தறையில் அடித்து அதனைக் கொல்லப் போனான்.

தேவகி கதறினாள்; பெற்ற வயிறு. இதற்கு முன்பு ஏழுமுறையும் குழந்தைகளை அவன் இரக்கமின்றி அவள் கண்முன்னால் வெட்டிக் கொன்றானே, இப்போது இந்தப் பெண் குழந்தையையும் கொல்ல வந்திருக்கிறானே என்று அவள் கதறினாள், கெஞ்சினாள், இது பெண் குழந்தையாயிற்றே, இதைப்போய் கொல்வேன் என்கிறாயே, பாவம் அது என்ன பாவம் செய்தது, அதைக் கொல்லாதே, விட்டுவிடு என்று அண்ணனிடம் கெஞ்சினாள் தேவகி. அண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு இந்தக் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை கொடு என்று கதறினாள்.

அந்த களங்கமற்ற பெண்ணின் கதறலைக் கேட்டு மனம் இரங்கவில்லை அந்த அரக்கன் கம்சன். அவள் கதறக் கதற அந்தக் குழந்தையின் இரண்டு கால்களையும் ஒன்றாக ஒரு கையால் பிடித்துக் கொண்டு அதைச் சுழற்றி தரையில் அடித்துக் கொல்வதற்காக சுழற்றிய சமயம் அந்தக் குழந்தை அவன் கைகளிலில் இருந்த கழன்று வானத்தில் பறந்து சென்றது.

அதே நேரம் ஒரு தெய்வீகக் குரல் சிறையெங்கும் எதிரொலிக்க, "கம்சனே! உன்னைக் கொல்வதற்கென்று அவதரித்தக் குழந்தை கோகுலத்தில் வளர்கிறது" என்றது.

மறுநாள் பொழுது விடிந்தது. அந்த இரவுக்கு மட்டுமல்ல, கம்சனால் அவதியுற்ற மக்களுக்கும் துன்பம் எனும் இருளிலிருந்து வெளிச்சன் வர பொழுது விடிந்தது. அங்கு கோகுலத்தில் நந்தனின் மனைவி யசோதை கண் விழித்துப் பார்த்தாள். தனக்குப் பக்கத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை. இரவின் மயக்கத்தில் முந்தைய இரவு தனக்குப் பிறந்தது பெண்குழந்தை என்றல்லவா தோன்றியது. இது என்ன அதிசயம், ஆண் குழந்தையாக இருக்கிறதே, சரி போகட்டும் இதைப் போய் பெரிது படுத்தலாமா? எதுவானால் என்ன, பெண் என்று இரவின் மயக்கத்தில் நினைத்திருப்போம், நல்லது நமக்கு ஆண் குழந்தை பிறந்தவரையில் மிகுந்த மகிழ்ச்சி என்று மகிழ்ந்தனர் நந்தனும் யசோதையும். குழந்தையைக் காலை வேளை வெளிச்சத்தில் பார்த்தார்கள். குழந்தை நல்ல கருமை நிறம், ஆகவே அவனை கிருஷ்ணன் எனும் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

சிறையில் அசரீரி சொன்ன செய்தியைக் கேட்டு அரண்டு போயிருந்தான் கம்சன். என்னைக் கொல்வதற்கென்று பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்கிறதாமே! விடக்கூடாது. அன்று பிறந்த குழந்தை எதுவும் கோகுலத்தில் உயிரோடு இருக்கக்கூடாது. கூப்பிடு அந்த அரக்கியை என்று பூதகி எனும் ஒரு அரக்கியைக் கூப்பிட்டு முந்தைய இரவில் பிறந்த எல்லா குழந்தைகளையும் கொன்றுவிடு என்று உத்தரவிட்டான். கருத்த மலைபோன்ற உருவமுடைய அந்த பூதகி தன்னுடைய மார்பகங்களில் விஷத்தைத் தடவிக் கொண்டு கொகுலம் சென்று அங்கு பிறந்திருந்த குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்து அவைகளைக் கொல்ல முயன்றாள். முதலில் இப்படியொரு பெண், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்ததை அலட்சியமாக எண்ணிய மக்கள், அவள் பால் கொடுத்த குழந்தைகள் எல்லாம் அடுத்தடுத்து இறந்து போனதைக் கண்டதும் விழித்துக் கொண்டார்கள். இவள் யாரோவொரு மாயக்காரி, குழந்தைகளிக் கொல்வதுதான் இவள் எண்ணம், நல்ல எண்ணத்தில் இவள் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

எங்கே அந்த ராட்சசி? தேடினார்கள். அவளோ மெல்ல நந்தன் யசோதாவின் இல்லத்தைச் சென்றடைந்தாள். அங்கு அன்னை யசோதையின் மடியில் படுத்திருந்த குழந்தையைத் தான் கொஞ்சி மகிழ்வதற்காகத் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டாள். தன் குழந்தையை அன்போடு ஒருத்தி கொஞ்சவேண்டுமென்கிறாள் என்றதும் மகிழ்ச்சியோடு யசோதையும் குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் தன் வீட்டு வேலைகளைக் கவனிக்க உள்ளே சென்றுவிட்டாள்.

உள்ளே வேலையாக இருந்த யசோதையின் காதில் ஒருத்தி கொடூரமான குரலில் அலறுவதைக் கேட்டாள். ஐயயோ! தன் குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டல்லவா வந்துவிட்டோம் என்று வாசலுக்கு ஓடிவந்தாள் யசோதா. அங்கு முன்பு வந்து குழந்தையை வாங்கிக் கொண்ட அந்த ராட்சசி உயிரிழந்து அலங்கோலமாக மார்பகம் தெரிய விழுந்து கிடந்ததைக் கண்டாள். அருகில் கிருஷ்ணன் சிரித்துக் கொண்டு கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டு விளையாடுவதைக் கண்டாள். நல்ல காலம், நம் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை, இவள் யார்? ஏன் இவள் இறந்து கிடக்கிறாள்? என்று நினைத்தாள் யசோதா. இவள் யாராகவேனும் இருந்துவிட்டுப் போகட்டும், நம் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை, அதுமட்டுமல்லாமல் சிரித்து விளயாடிக் கொண்டிருக்கிறதே, இது ஒன்றும் சாதாரண குழந்தை இல்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

யசோதையிடம் கிருஷ்ணன் வளர்ந்தான். பால்ய லீலைகளை கோகுலத்தில் நிகழ்த்திக் காட்டினான். கோகுலத்துப் பெண்கள் அவனிடம் அன்பு கொண்டனர். நட்பு வட்டம் அவனுக்கு அதிகம். அவனுடைய விஷமம் பலரையும் கோபப்பட வைத்தாலும், அவனுடைய மலர்ந்த முகத்தைக் கண்டதும் அந்த கோபம் இருந்த இடம் தெரியாமல் அல்லவா மறைந்து விடுகிறது? யார் இவன்? என்ன மாயம் செய்கிறான்?

பிறகு கண்ணன் வளர்ந்து பெரியவனாகி கம்சனை வதம் செய்து, தன் பாட்டன் உக்கிரசேனனை சிறையிலிருந்து விடுவித்து அரசனாக்கிவிட்டு, தன் உண்மை பெற்றோர்களான வசுதேவர், தேவகியிடம் அன்பும் பாசமும் கொண்டு, அதே அளவில் தன்னை வளர்த்த நந்தனிடமும் யசோதையினடமும் அன்புடன் இருந்தான். உலகத்தைப் பீடித்திருந்த துன்பங்கள் விலகி, கண்ணனால் ஒளிபெற்றது. அந்த குழந்தை பிறந்த நாள் ஜென்மாஷ்டமி.

ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை கோகுலாஷ்டமி, கிருஷ்ணனின் ஜென்மாஷ்டமி, தீமையை அழித்து ஒளியூட்டிய நல்ல நாள். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!












Wednesday, August 14, 2013

"வெள்ளையனே வெளியேறு!" Part II


இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற தமிழ் அறிஞர் மற்றும் எழுத்தாளர்களுள் கு.ராஜவேலு ஒருவர். இவர் தனது சிறைவாசத்தை புதிய நூல்கள் இலக்கியங்களைப் படைக்கப் பயன்படுத்திக் கொண்டவர். 1942இல் மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்த "வெள்ளையனே வெளியேறு!" எனும் Quit India இயக்கத்தில் தனது மாணவப் பருவத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இந்த வரலாற்றை இவர் தனது "ஆகஸ்ட் 1942" எனும் புதினத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். பதினொன்று ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் பங்குபெற்று சிறைபுகுந்த மாணவப் பருவ போராட்டத்தைச் சிறிது பார்ப்போம்.

ஈரோடு நகரத்தைச் சேர்ந்த இந்த தேசபக்த இளைஞர் 1942இல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரத்தில் இருந்த அரசர் கல்லூரியில் தமிழ் படித்து வந்தார். அப்போதுதான் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அன்றே மகாத்மாவும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர், காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. வெளியில் பெயர் சொல்லக் கூடிய அளவில் எந்த தலைவரையும் ஆன்கில ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்கள் கூடி தலைவர்கள் கைதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய பந்தல் தீக்கு இறையாகியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அரசர் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடைத் தெருவில் கூடினர். ஆந்திராவைச் சேர்ந்த சமஸ்கிருதம் படிக்கும் மாணவர் எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, பிற்காலத்தில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என அழைக்கப்பட்டவரும் நமது கு.ராஜவேலு உள்ளிட்ட தீவிரமான தேசபக்தர்கள் இந்தக் கூட்டத்தில் இருந்தனர். அன்றைய மாணவர்கள் குறிப்பாக திருவையாறு கல்லூரியில் இருந்த மாணவர்கள் அனைவருமே தேசிய சிந்தனை உடையவர்களாக இருந்ததோடு, அவர்களை சோமசேகர சர்மா எனும் தீவிரமான தேசபக்தரும், கு.ராஜவேலும் வழிநடத்தி வந்தனர். இவர்கள் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது ஆட்கொண்டார் சந்நிதி எனப்படும் கடைத்தெரு பகுதியில் போலீஸ் இவர்களைக் கலைந்து போகும்படி கூறியது. அதற்குள் மாணவர்களோடு பொதுமக்களும் நூற்றுக் கணக்கில் கூடி விட்டனர். கடைத்தெருவின் கீழ்புறத்திலிருந்து மாணவர்களும், மேல்புறத்திலிருந்து பெரும் கூட்டமாக பொதுமக்களும் வந்து சேர்ந்ததனால் கடைத்தெரு கொள்ளாமல் மக்கள் கூட்டம். ஆத்திரம் கொண்ட போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியது. உடனே கூட்டத்திலிருந்து கலைந்து சென்றவர்கள் ஒருபுறம் தபால் அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, பொருட்களை நொறுக்கிவிட்டனர். மறுபுறம் மற்றொரு கூட்டம் காவிரி ஆற்றைக் கடந்து தஞ்சாவூர் சாலையில் இருந்த முன்சீப் கோர்ட் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தைச் சூறையாடியது. தஞ்சாவூரிலிருந்து மலபார் போலீசார் கலவரத்தை அடக்க வந்து சேர்ந்தனர். அப்போது முன்சீப் கோர்ட் உள்ளே இருந்த கு.ராஜவேலு காவிரியின் வெள்ளத்தில் குதித்து நீரோட்டத்தோடு நீந்திச் சென்று திருப்பழனம் எனும் ஊரில் கறை ஏறி, பிறகு அவருடன் படித்துக் கொண்டிருந்த அவ்வூர் மாணவனின் உதவியுடன் திருவையாறு வந்தார். அன்று மாலையே இவரும் மற்றும் 42 பேரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்த வழக்கில் இவரும் மற்ற 42 பேரும் 1943இல் தண்டிக்கப்பட்டனர். கு.ராஜவேலு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். இவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த கவிஞர் எஸ்.டி.சுந்தரம் (அவரும் அப்போது அந்தக் கல்லூரி மாணவர்) பதினெட்டு வயது ஆகாதவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து இவர் விடுதலையான நேரத்தில் தொடுவானில் சுதந்திர வெளிச்சம் தோன்றலானதை யொட்டி, இவர் சென்னை சென்று தனது படிப்பைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். தேசிய உணர்வும், தியாக பின்னணியும் கொண்ட இவரை அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ் அடையாளம் கண்டு, இந்த இளைஞரின் வாழ்வு முன்னேறவேண்டும் என்று விரும்பினார். இவர் கல்வி இலாகாவில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் கல்வி இலாகாவில் சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்து, ராஜதானி கல்லூரி முதலான இடங்களில் பணியாற்றி, பற்பல நூல்களையில் எழுதினார். ஓய்வுக்குப் பிறகும் தனது எழுத்துப் பணியில் ஈடுபட்டு வயது தொண்ணூறை எட்டும் இவர் இப்போது சென்னையில் அஷோக்நகரில் வாழ்ந்து வருகிறார். இவரது திருவையாற்று அனுபவத்தைக் கேட்டால் இவர் இப்போதும் மனம் உருகிப் பேசுகிறார். இவரோடு சிறைசென்ற பல தியாகிகள் இன்னமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் தஞ்சை ஸ்ரீநிவாசபுரத்தில் தியாகி கோவிந்தராஜு, திருவிடைமருதூரில் சண்முகம், மதுரையில் இராம சதாசிவம் போன்றோர் பழைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தில்லைஸ்தானத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மாணிக்கம் பிள்ளை சில மாதங்களுக்கு முன்புதான் அமரர் ஆனார். இவர்களுக்கு உடற்பயிற்சியும் கஸரத் போன்றவற்றைக் கற்பிக்க ஓர் உடற்பயிற்சி மையத்தை குஞ்சுப் பிள்ளை என்பவர் நடத்தி வந்தார். இவர்தான் திருவையாற்று தேசபக்தர்களுக்கெல்லாம் வழிகாட்டி, குரு எல்லாம். இவர்தான் 13-8-1942இல் நடந்த புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இவர் அமரராகிவிட்டார். இப்படிப்பட்ட தியாகிகளையெல்லாம் உருவாக்கிய திருவையாற்று மண்ணை வணங்குவோம். வாழ்க கு.ராஜவேலு! அவர் இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுவோம்.


"வெள்ளையனே வெளியேறு"

1942இல் நடந்த "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருமளவில் பாதிப்பு இல்லையென்றாலும், சீர்காழியிலும் மற்றொன்று திருவையாற்றிலும் நடந்த நிகழ்ச்சிகள் முக்கியமானவை. மற்ற இடங்கள் அமைதியாக இருந்தன. இவற்றில் சீர்காழி நிகழ்ச்சியின் நாயகன் சுப்பராயன் பற்றியும் இதனையடுத்து திருவையாற்று நிகழ்ச்சியின் நாயகன் கு.ராஜவேலு குறித்தும் இந்த சுதந்திர நாளன்று பார்ப்போம். இவற்றை என்னுடைய "தமிழ்நாட்டுத் தியாகிகள்" வலைத்தளத்தில் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருக்கிறேன். முதலில் சீர்காழி சுப்பராயன்......


1942இல் நடைபெற்ற "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளில் சீர்காழி உப்பனாற்று பாலத்துக்கு வெடி வைத்த சதி வழக்கு முக்கியமானது. இந்தப் போராட்டம் முழுவதும் வெற்றி பெறவில்லை யாயினும், இதில் ஈடுபட்ட சுதந்திரப் போர் வீரர்களை பிரிட்டிஷ் அரசு மிகக் கடுமையாக தண்டித்தது. இதில் குற்றவாளிகளாக அப்போது பிரபலமாக இருந்த பலர் சேர்க்கப் பட்டார்கள். அவர்களில் முதன்மையானவர் சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரர் சுப்பராயன் என்பவராவார். மற்ற பிரபலங்கள் குறிப்பாக தினமணி நாளிதழில் பணியாற்றி வந்த ஏ.என்.சிவராமன், ராமரத்தினம், டி.வி.கணேசன், கும்பகோணம் நகர காங்கிரஸ் தலைவர் பந்துலு ஐயரின் குமாரர் சேஷு ஐயர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

சுப்பராயனின் தந்தையார் குன்னம் ரகுபதி ஐயர் நூற்றுக்கணக்கான வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர். ஐந்தாறு கிராமங்கள் இவர் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்தது. இவர் தயாள குணமும், தன்னை அண்டியவர்களை அரவணைத்து ஆதரிக்கும் பண்பு பெற்றவர். தான் பெரிய நிலப்பிரபு என்பதற்காக மற்றவர்களை எளிதாக எண்ணக்கூடியவர் அல்ல. இவர் வீட்டுக் கதவு விருந்தாளிகளுக்கு உணவு படைக்க எப்போதும் திறந்தே வைக்கப் பட்டிருக்கும். அப்படிப்பட்ட குடும்பத்தில் தோன்றிய சுப்பராயன் தங்கத் தட்டில் வெள்ளி ஸ்பூன் கொண்டு சாப்பிடும் வசதி படைத்தவர். இவர் குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொண்டவர்கள் மிகப் பெரிய தொழிலதிபர்கள், தலை சிறந்த உத்தியோகஸ்தர்கள். அப்படிப்பட்ட தயாள குணமும், இரக்க குணமும் கொண்ட ரகுபதி ஐயரின் குமாரன் சுப்பராயன் தேசபக்தி காரணமாக ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று, வெளியே வர வாய்ப்பிருந்தும், பிடிவாதமாக சிறைவாசத்தை முடித்தே வெளிவருவேன் என்று நாட்டுக்காகத் தன்னை வருத்திக் கொண்ட மாபெரும் தியாகி. இன்று மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டாவது வெளியே வரத்துடிக்கும் அரசியல் வாதிகளோடு இத்தகைய தியாக உள்ளம் கொண்டு சுப்பராயனை என்னவென்று சொல்லுவது?

1942இல் பம்பாய் காங்கிரஸ் மாநாடு முடிந்த அன்றே மகாத்மா காந்தி அடிகள் முதலான அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களும் சிறை பிடிக்கப்பட்டு பாதுகாப்புக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் புரட்சித் தீ பற்றிக் கொண்டது. காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்டது. நாட்டின் பலபாகங்களிலும் வன்முறையும், தீ வைத்தல், தந்தி கம்பி அறுத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் கலவரமும், தீ வைப்பும் நடந்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாவட்ட தேசபக்தர்கள் சிலர் ஒன்றுகூடி, பிரிட்டிஷ் அரசாங்கம் போராட்டத்தின் கடுமையை உணரும் வண்ணம் சென்னை மாயவரம் இடையே ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்து அல்லது வெடி வைத்துத் தகர்க்க முடிவு செய்தனர். அதை செயல்படுத்துவதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா ஒரிசா ஆந்திரா எல்லையிலுள்ள சுரங்கத்திலிருந்து வெடிமருந்து குச்சிகளை வாங்கி வந்தார். பல மாவட்டங்களுக்கும் இந்த வெடிப் பொருட்கள் ராமரத்தினம் மூலம் அனுப்பப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கான வெடிகள் கும்பகோணம் பந்துலு ஐயரின் புதல்வரும், தினமணி உதவி ஆசிரியருமான டி.வி.கணேசன், அவரது சகோதரர் சேஷு ஐயர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு சொந்த ஊர் பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூர். இந்தப் பகுதியில் எங்கு வன்முறை நடந்தாலும் அது டி.வி.கணேசன் மீதுதான் விழும் என்பதால் இவர்கள் மாயவரம் அருகே ரயில் பாதையில் வெடி வைத்துத் தகர்க்க சீர்காழி உப்பனாறு பாலம்தான் சரியான இடம் என்று முடிவு செய்து, அந்தப் பகுதியில் இளமையும், ஆர்வமும், தேசபக்தியும் உள்ள சீர்காழியைச் சேர்ந்த சுப்பராயனைப் பார்த்துப் பேசினர். அவரும் தன் நண்பர்களுடன் இந்தக் காரியத்தை முடிப்பதாகச் சொல்லி வெடிகளை வாங்கிக் கொண்டார்.

சுப்பராயனும் அவரது நண்பர்களும் சீர்காழி ரயில் நிலையம் அருகேயுள்ள உப்பனாறு பாலத்தில் வெடி வைக்க எல்லா வேலைகளையும் செய்யலாயினர். பாலத்துக்கு அடியில் துளை போட்டு, வெடிகளை அதில் பொருத்தி, திரி தண்ணீரில் படாமல் கம்பி வைத்துக் கட்டி, தீ வைத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்து மறைந்து கொண்டனர். அப்போது அந்த வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் பார்ட்டியின் கண்களில் எரியும் திரி பட்டுவிட்டது. உடனே அவர்கள் அதை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து விட்டனர். போலீஸ் விசாரணையில் இந்தக் காரியத்தைச் செய்யக்கூடியவர் சுப்பராயனாகத்தான் இருக்க முடியும் என்று அவரைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் நண்பர்களும் கைதாயினர். பிறகு தினமணி சிவராமன், ராமரத்தினம், சேஷு ஐயர், டி.வி.கணேசன் ஆகியோர் கைதாகினர். வழக்கு நடந்தது. இந்திய பாதுகாப்புச் சட்டப்படி இவர்கள் அனைவரும் விசேஷ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். முதலில் சேஷு ஐயர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். முடிவில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் டி.வி.கணேசனும் விடுவிக்கப்பட்டனர். தினமணி ராமரத்தினத்துக்கு ஏழு ஆண்டுகளும், சீர்காழி சுப்பராயனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றும் பலருக்கு வெவ்வேறு தண்டனைகளுக் அளிக்கப்பட்டது. சுப்பராயன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

சுப்பராயன் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாதலால், இவரது தந்தை மகனை எப்படியாவது வெளியில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் சுப்பராயன் அப்படிப்பட்ட எந்த முயற்சிக்கும் இடமளிக்கவில்லை. சிறை தண்டனையை அனுபவிப்பேன் என்று உறுதியோடு இருந்தார். பின்னர் ஆந்திர கேசரி டி.பிரகாசம் சென்னை மாகாண பிரதமராக பதவி ஏற்று பொது விடுதலை செய்தபோது பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகு சுப்பராயன் விடுதலையானார். விடுதலையான பிறகு திருச்சிக்குச் சென்று அங்கு சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி, பெரும் தொழிலதிபரானார். தானொரு நிலப்பிரபு என்பதோ அல்லது பெரும் தொழிலதிபர் என்பதோ இவரது நடத்தையில் தெரிந்து கொள்ள முடியாது. மிகச் சாதாரண முரட்டுக் கதர் கட்டும் இவர், எவ்வளவு எளியவரானாலும், பழைய நண்பர்களை, உறவினர்களை, தியாகிகளை நேரில் கண்டுவிட்டால் அவர்களோடு பேசி, சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்து, தான் ஒரு பெரிய மனிதர்தான் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறார்.

எந்த வசதியும் இல்லாதவர்கள்கூட பதவிக்கு ஆலாய் பறப்பதும், பதவி கிடைத்ததும் பழைய நிலைமையை மறப்பதும், தலை கனம் கொண்டு அலைவதும் சகஜமாக உள்ள இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தியாகியா? ஆம். சீர்காழி சுப்பராயனைப் பாருங்கள். அவர்தான் ஓர் உதாரண புருஷர். வாழ்க தியாகி சுப்பராயன் புகழ்!


Tuesday, August 13, 2013

ஒளி பிறக்குமா?


இந்த ஆண்டு சுதந்திர தின சிந்தனைகள் இதோ. இதே பதிவை 2010ஆம் ஆண்டில் எனது வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறேன். இன்றைய தேவைக்காக இதில் நிறைவில் சில கருத்துக்களைத் தந்திருக்கிறேன். விடியலை நோக்கி நாம் தவமிருப்போம். நல்ல பலன் கிடைக்கும்.

பாரத தேசத்துக்கு ஒளி பிறக்குமா?

1. சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் அரசியல் அமைப்பு உருவாகி 61 ஆண்டுகள்
சுதந்திரத்துக்கு முன்பிருந்த இந்தியாவும் இன்றைய இந்தியாவுக்குமுள்ள மாற்றங்களை
உணர வேண்டும். அது முதியவர்களுக்குத்தான் அதாவது 70க்கும் மேலானவர்களே உணர்வர்.

2. சிலருக்கு எதிர்மறைப் போக்கும் தோல்வி மனப்பான்மையும்தான் வாழ்க்கை.
எதனையும் நேரடியாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். ”என்னத்தே கன்னையா” போல.
அது பெசிமிசம். அத்தகையோர் எழுதியது 'இரவில் பெற்றோம் சுதந்திரம் விடியவேயில்லை'
என்பது. இது தோல்வி குணம். இத்தகையோரால் நாடு முன்னேறாது.

3. நாட்டில் எங்கும் லஞ்சம், ஊழல். அடிமட்டத்தில் நிலவிய இந்த நச்சுப்பழக்கம்
இன்று எல்லா மட்டங்களிலும் இருக்கிறது. 'ஜனநாயகத்தில்' மக்களே உயர்ந்தவர்கள்,
அரசில் பணிபுரிவோர் வேலைக்காரர்களே. அவர்கள் வேலைக்கேற்ப கூலி பெறுகிறார்கள்.
எனில் அவர்களுக்கு ஏன் கையூட்டு?

4. அரசாங்கம் பலதரத்து மக்களுக்கு பல சலுகைகளை அறிவிக்கிறது. அந்தச் சலுகைகளைப்
பெற அவர்களுக்குப் பல சான்றிதழ்கள் தேவை. அவற்றைப் பெற கையூட்டு. இது என்ன நியாயம்? இத்தகைய ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒளிந்து கொள்ளும் இடம் அரசியல் புள்ளிகளின் பின்னால்.

5. ஊழலுக்கு என்ன காரணம்? முதலில் தேசபக்தி இன்மை. இந்த தேசத்தின் சுதந்திரத்தின் விலையை மக்கள் உணராத தன்மை. நமக்கு ஏன் வம்பு என்று கண்டும் காணாமல் போகும் அலட்சியப் போக்கு. இதனால் நஷ்டமடைவது மக்களே!

6. உலக நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள் எவை? ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில்தான் சுதந்திரப் போர். இங்கெல்லாம் ஒரே மாதிரி போராட்டம் இல்லை. இந்தியாதான் உலகத்துக்கு வழிகாட்டி. இங்குதான் அகிம்சை முறையில் மகாத்மா காந்தி வழிகாட்டிப் போராட்டம் நடந்தது. மற்ற நாடுகளில் தென்னாப்பிரிக்கா தவிர மற்ற இடங்களில் வன்முறை தான்.

7. இங்கெல்லாம் மக்கள் ஒருசேர எழுச்சியுற்று போராடினர். உயிர்ப் பலி ஏராளமாக இருந்தது. ரஷ்யப் புரட்சியில் Tsar மன்னனின் கொடுங்கோலை எதிர்த்து லெனின் தலைமையில் ரத்தப் புரட்சி. பிரான்சில் மன்னனின் கொடுங்கோலை எதிர்த்து மக்கள் புரட்சி. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் அகிம்சைப் புரட்சி. ஓரளவு தென்னாப்பிரிக்காவில்.

8. இந்தியாவில்: மகாத்மா காந்தி இந்தோனேஷியாவில்: சுகர்ணோ; பர்மாவில்: யு நு
கீன்யாவில்: ஜோமோ கென்யாட்டா தெ.ஆப்பிரிக்காவில்: நெல்சன் மண்டேலா

9. இந்திய சுதந்திரப் போரை நடத்தியது காங்கிரஸ். தலைமை வகித்தது மகாத்மா காந்தி.
கடைபிடித்த வழி: அஹிம்சை. அறவழி பிறழ்ந்ததால் போராட்டம் வாபஸ் பெற்றார்
காந்தி. ஆகையால் போரில் ஈடுபட்டவர் காந்தி அடிகளின் சீடர்களே. அவரது தொண்டர்களே. மக்களுக்கு ஒட்டுமொத்த பங்கு இல்லை.

10. இந்த காரணத்தால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலர் மட்டுமே போராட்டம் செய்தனர்.
மற்றவர்கள் அவர்களை காந்தி கட்சி என்றும், வந்தேமாதரம் கட்சி என்றும் தூர இருந்து
பார்த்து நின்றனர். நேரடி பங்கு இல்லை. எனவே சுதந்திரம் பெற்றதில் சிலர் தியாகம்
செய்ய, பலர் பலனை மட்டும் அனுபவித்தனர்.

11. சுதந்திரத்தின் விலை என்ன? தெரியாது. தெரிந்த தியாகிகளின் காலம் முடிந்து விட்டது.
இன்றைய தலைமுறையினருக்கு சுதந்திரப் போர் பற்றி சொல்லத் தொடங்கினால், 'bore' என்று விலகிவிடுவர். நம் சுதந்திரத்தின் விலை தெரியாத மக்கள் தேசபக்தி கொள்ள வாய்ப்பில்லை. தேசபக்தியை ஊட்டுவது தேசபக்தர்கள் கடமை.

12. 150 ஆண்டுகள் இந்தியர்கள் இருளில் இருந்தனர். 1858 சிப்பாய் கலகம் வட இந்திய சிப்பாய்கள் செய்தது. வெள்ளையர் விழித்துக் கொண்டனர். இந்தியர்களுக்கும் ஏதாவது நிர்வாகத்தில் பங்கு கொடுத்தால்தான் மறுபடி ஒரு கலகம் வராமல் தடுக்க முடியும் என்று நினைத்தனர். லார்டு மெக்காலே கல்வித் திட்டமும், வெள்ளையர்க்கு சேவை செய்ய இந்தியர்க்கு வாய்ப்பும் தரப்பட்டது.

13. 1885ல் காங்கிரஸ் மகாசபை ஒரு ஆங்கிலேயரால் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் தொடங்கப் பட்டது. தொடர்ந்து வெள்ளைக்காரர்கள் தலைவர். இங்கிலாந்து மன்னருக்கு பல்லாண்டு பாடித்தான் காங்கிரஸ் மகாநாடுகள் தொடங்கும். மரியாதையுடன் ஆங்கில ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள்கள் வைக்கப்படும்.

14. 1906க்குப் பிறகு திலகரின் காலத்தில்தான் இந்தப் போக்கு மாறத் தொடங்கியது. அவர் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றார். பிறகு கராச்சி காங்கிரஸ் மகாநாட்டில் ஜவஹர்லால் நேரு பூரண சுயராஜ்யம் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

15. இவ்வளவையும் மக்கள் வேடிக்கைப் பார்த்தார்கள். எங்கும் நேரடியாக மக்கள் இறங்கி வெகுஜன இயக்கமாக நடத்தவில்லை. 1942 மட்டும் ஒரு மாறுதல். காரணம் வழிநடத்த தலைவர்கள் வெளியில் இல்லை. இதில் மக்கள் நேரடியாக இறங்கினர். அரசு பணிந்து வந்தது.

16. இன்று நம் மக்களுக்குத் தேவை தேசபக்தி. ஊழலற்ற நிர்வாகம், நேர்மையான அரசு அதிகாரிகள். இந்த குறிக்கோளோடு தேசபக்தி கொண்டவர்கள் இணைந்து செயல்படுதல் அவசியம். இந்த நாட்டை தேசபக்தி ஒன்றுதான் காக்க முடியும்.

17. அப்படியொரு நிலைமை வரக்கூடாது என்றுதான் சில சக்திகள் முயற்சி செய்யும். அப்போதுதான் தங்கள் தேட்டையை தொடரமுடியும் என்பதால். மக்கள் - சாதியால், மதத்தால், மற்ற பல ஏற்றத் தாழ்வுகளால் பிளவுபடாமல் ஒன்றுபட்டு இந்த நாட்டைக் காப்போம். அப்படியொரு சபதத்தை சுதந்திர நாளில் ஏற்போம்.

18. கண்ணீரும் செந்நீரும் சிந்திப் பெற்றது நமது சுதந்திரம். இதற்காக உடல் பொருள்
ஆவி அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்த தியாகச் செம்மல்காள் ஏராளம்! ஏராளம்!!
பாரதத் திருநாடு சுதந்திர நாடாக இந்தப் பூமியில் தலை நிமிர்ந்து நிற்கும்; சேதமில்லாத இந்துஸ்தானம் உலகுக்கெல்லாம் வழிகாட்டும், ஆம்! இந்தியா உலகுக்கு வழி காட்டும்
என்று எண்ணிய எண்ணங்கள் இன்று? தூள் தூளாயின, துவண்டு போயின.

19. எங்கும் ஊழல், எதிலும் ஊழல், பதவி கிடைத்திட பணம் கொடுத்து வாங்கி ஊழல், பின்னர் அந்தப் பதவியின் துணை கொண்டு ஊரையடித்து உலையிலிட்டு கோடி கோடியாய் சுருட்டி ஊழல்; ஒப்பந்த வேலையில் ஊழல், உழைத்தவனுக்கு ஊதியம் தருவதில் ஊழல், கட்டடம் கட்டுவதிலும் ஊழல், கட்டிய கட்டடம் கீழே விழுந்தாலும் அதற்கு நஷ்ட ஈடு வாங்குகின்ற ஊழல், எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா! இந்தத் துயர் நீங்க ஓர் வழியிலையோ இறைவா!!

20. வேலை கிடைத்திட ஊழைல், கிடைத்த வேலையில் குறுக்கு வழியில் பொருள் ஈட்டிட ஊழல், கிடைத்த பதவியில் மக்களுக்கு உதவி செய்வதில் ஊழல்; ஊழலில் கைதானோர் எண்ணிக்கை கோடிக் கணக்கில், கிராம அதிகாரி முதல், மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கும் கோமான் வரை நம்மைச் சுற்றிலும் ஒரே ஊழல் மயம்! நாற்றமெடுக்கிறது பாரத தேசத்தின் புனிதமான பெயர், என்று மாறும் இந்த இழிநிலை விடியுமா பாமர இந்தியனுக்கு, விடியலுக்கு இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?

21. அன்று சுதந்திரத்துக்காக தன்னையே அழித்துக் கொண்ட தலைவர்கள் ஏராளம். பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, விபின் சந்த்ரபால், லாலா லஜபதி ராய், மாவீரன் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ், சந்திரசேகர ஆசாத், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், வ.உ.சிதம்பரம், மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா, வ.வெ.சு.ஐயர், திருப்பூர் குமாரசாமி, மாடசாமி பிள்ளை, வாஞ்சிநாதன், ராஜகோபாலாச்சாரியார், காமராஜ், ம.பொ.சி. வடநாட்டில் இன்னும் எத்தனையோ தலைவர்கள், இப்படி பாரத தேசம் தந்த பல அரிய பெரிய தலைவர்கள் நம்மை இப்போதும் வழிநடத்த வேண்டும். முன்பு குண்டுசி வேண்டுமானால் கூட இங்கிலாந்தை எதிர்பார்க்க வேண்டும். இன்று மாபெரும் போர்க்கப்பல் கூட கொச்சியில் கட்டப்பட்டுவிட்டது.  இந்தியனின் இதயத் துடிப்பை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்த ஒரு இந்தியத் தலைவன் வரமாட்டானா? நம்மை வழிநடத்த மாட்டானா? மோசடி, ஊழல், அதர்மம் இவற்றை சம்ஹாரம் செய்ய மாட்டானா? என்று எங்கிக் கிடப்பவர்களுக்கு இந்த சுதந்திர தினம் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்க வேண்டுமென்று பாரதமாதாவை அடிபணிந்து வேண்டுவோம்! தலைவர்களுக்கா பஞ்சம். தியாகம், தைரியம், தேசப்பற்று, ஊழலைக் கண்டு கொதிக்கும் நெஞ்சு இவை கொண்ட ஒரு இந்தியத் தலைவன் நம்மை வழிநடத்த வராமலா போய்விடுவான்? வருவான். நிச்சயம் எதிர்கால பாரதம் பசுமை பாரதமாக விளங்கும். ஜெய் ஹிந்த். வாழ்க பாரத நாடு. வந்தேமாதரம்.


சுதந்திரம்

எத்தனை யெத்தனை தியாகிகள்; எத்தனை யெத்தனை போராட்டங்கள்; அவை அத்தனையும் பெற்றுத் தந்த நமது இந்திய சுதந்திரத்தை மீண்டும் அன்னிய சக்திகளிடம் அடகு வைக்க அனுமதிக்கக்கூடாது. சுதேசி எனும் சொல்லின் பொருள் நமக்கு மறந்து விடவில்லை. அன்னிய துணிகளை ஒதுக்கிவிட்டு கையால் நூற்று நெய்த கதர் துணிகளை அணிந்தல்லவா மகாத்மா சுதந்திரப் போரை நடத்தினார். அவரது எண்ணங்களை அழிக்கும் வகையில் நாம் நடந்திடலாமா? அன்று கிடைத்தது அரசியல் சுதந்திரம். இன்று நமக்குத் தேவை அன்னிய மோகத்திலிருந்து மற்றுமொரு சுதந்திரம். வெற்றி பெறுவோம். ஜெய் ஹிந்த்!