பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, August 22, 2013

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி 28 August 2013

                                ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

                                                 (தஞ்சை வெ.கோபாலன்)

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளை ஜென்மாஷ்டமி என்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் கிருஷ்ண பக்ஷம் அஷ்டமி நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் ஆங்கில நாள்காட்டியின்படி எந்த ஆண்டு பிறந்தார் என்பது நிர்ணயிக்காவிட்டாலும், குறிப்பாக இப்போதிலிருந்து 3413 ஆண்டுகளுக்கு முன்பு (அதாவது 1400 B.C.) பிறந்தார் என்று கணக்கிடப் பட்டிருக்கிறது.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். வசுதேவர் தேவகியின் மகனாக கம்சனின் சிறையில் பிறந்தவராயினும், கோகுலத்தில் யசோதையின் மைந்தனாக வளர்ந்தவர். கோகுலத்தின் ஆயர்பாடியில் குழந்தை கண்ணனின் லீலைகளை கவிஞர்கள் எல்லா மொழிகளிலும் புகழ்ந்து பாடி மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். கிருஷ்ணனின் பால லீலைகள் எந்த காலத்திலும் எவராலும் படித்து இன்புறத்தக்கவை. அவனுடைய குறும்புகள், அவனுடைய நட்பு வட்டாரம் கோகுலத்தில் செய்த சேஷ்டைகள், ஆயர்பாடியில் பெண்கள் பட்ட பாடு இவைகளை எத்தனை வகையில் பாடி வைத்திருக்கிறார்கள். ஊத்துக்காடு வேங்கட கவியின் "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி தாயே" எனும் பாடலில் கவி கிருஷ்ணனின் லீலைகளை வரிசைப்படுத்திப் பாடி மகிழ்கிறார். மகாகவி பாரதியும் தனது கண்ணன் பாட்டில் "தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை" எனும் பாடலிலும் கிருஷ்ண லீலை பேசப்படுகிறது. கோபியர்கள் வீட்டில் கிருஷ்ணன் சட்டியிலுள்ள வெண்ணையை எடுத்து நண்பர்களுடன் பங்கிட்டு உண்பது, தாயார் உரலில் கட்டிப்போட்டது, பூதகி எனும் அரக்கியை வதம் செய்தது, காளிங்கன் எனும் நச்சுப்பாம்பை அடக்கியது, மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவர்த்தனகிரி மலையைத் தூக்கி அடைக்கலம் கொடுத்தது, கம்சனை வதைத்தது இவைகள் எல்லாம் என்றென்றும் பேசப்படும் கிருஷ்ணனின் லீலைகள்.
இவைகள் எல்லாம் பாலகிருஷ்ணனின் லீலா வினோதங்கள்.

வளர்ந்து பெரியவனாக ஆனபின்பு ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்குச் சாரதியாக இருந்தது, அவன் மனம் சோர்ந்து நின்றபோது கீதையை உபதேசித்து அவனுக்கு தர்மத்தை எடுத்துரைத்தது போன்றவைகள் எல்லாம் என்றும் இந்த புண்ணிய பூமியில் போற்றிக் காப்பாற்றப்படும் செய்திகளாகும்.

மதுராபுரி மன்னன் கம்சன், தன்னுடைய தந்தையைச் சிறையிலிட்டுத் தான் முடிசூட்டிக் கொண்ட அசுரன். அவனுடைய சகோதரி தேவகி வசுதேவரை மணந்தவள். அராஜகங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய கம்சனின் அழிவு சகோதரி தேவகியின் எட்டாவது மகனால் நிகழும் எனும் அசரீரியின் குரல் அவனை வாட்டி வதைத்து அடாத காரியங்களைச் செய்யத் தூண்டியது. சகோதரி என்றும் பாராமல் தேவகியையும் அவள் கணவனையும் சிறையில் அடைத்து கொடுமைகள் செய்தான். இவர்களுக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தையல்லவா தன்னைக் கொல்லப் பிறக்கப்போகிறது எனும் எண்ணம், அவர்களுக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் பிறந்தபொழுதே கொன்று குவித்தான் அரக்கன். ஏழு குழந்தைகளைக் கொன்ற கம்சன் எட்டாவது குழந்தை தேவகிக்குச் சிறையில் பிறக்கப்போகிறது என்பதால் அங்கு ஏராளமான காவலர்களை நியமித்தான். வசுதேவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தான்.

கொட்டும் மழையில் நள்ளிரவில் ஊரும் உலகமும் உறங்கும் வேளையில் சிறையில் தேவகியின் எட்டாவது மகன் பிறந்தான். கண்ணன் பிறந்தான், நம் கண்ணன் பிறந்தான் என்று உலகத்து உயிர்கள் எல்லாம் குதூகலம் அடையும் வண்ணம் கண்ணன் சிறையில் பிறந்தான். கம்சன் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்று நினைத்தான். நள்ளிரவில் கண்ணன் பிறந்த நேரம், சிறைக் காவலர்கள் அசந்து உறங்கிப் போனார்கள். சங்கிலியால் கட்டுண்ட வசுதேவரின் சங்கிலிகள் அறுந்து விழுந்தன. இறைவன் முன்கூட்டிய தீர்மானித்தபடி வசுதேவர் பிறந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டு கிளம்ப, சிறைக் கதவுகள் தானாகத் திறக்க, கோகுலம் செல்வதற்காக யமுனை நதிக்கரையைச் சென்றடைகிறார். அந்த யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த நதியின் அக்கரையில் உள்ள கோகுலம் யாதவர்கள் நிறைந்த இடம். அங்கு கொண்டுபோய் பிறந்த குழந்தையை ஒப்படைக்க எண்ணி வசுதேவர் போகிறார். அங்குதான் நந்த ராஜா என்பவர் வசுதேவரின் நண்பர் அரசனாக இருந்து வந்தார்.

அந்த நள்ளிரவு நேரத்தில் இடியும் மின்னலுமாக மழை கொட்டித் தீர்க்கிறது. அந்த சூழ்நிலையில் தலையில் குழந்தையைக் கூடையில் வைத்து சுமந்துகொண்டு வசுதேவர் யமுனை நதிக்கரையை வந்தடைகிறார். எதிரில் இருப்பது கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மழையின் கடுமை இருந்தது. வசுதேவர் யமுனை நதிக்கரையை அடைந்த நேரம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. மழையோ காற்றுடன் கூடி கடுமையாகச் சாடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது?


என்ன செய்வதென்றறியாத வசுதேவர் இறைவனை எண்ணி உரக்க வேண்டினார். என்ன அதிசயம்? எதிரில் யமுனையின் வெள்ளம் இவருக்கு வழிவிட்டு இரு பிரிவாகப் பிரிந்து கொண்டது. தலையில் குழந்தையை வைத்துள்ள கூடையுடன் வசுதேவர் போக வழிவிட்ட யமுனையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். அவர் தலையில் பள்ளி கொண்டிருந்த குழந்தைக்கு வாசுகி எனும் பாம்பு குடைபிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் பாதுகாத்துக் கொண்டே வந்தது.

ஆற்றைக் கடந்து வசுதேவர் தலையில் சுமந்திருந்த குழந்தையுடன் கோகுலத்தில் நந்தனின் வீட்டை அடைந்தார். அங்கு அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் உள்ளே நந்தனின் மனைவி யசோதா அப்போதுதான் பிறந்திருந்த பெண்குழந்தை அருகில் படுத்திருக்க அவளும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். பொழுது விடிவதற்குள் வசுதேவர் மதுராவின் சிறைக்குத் திரும்பிவிட வேண்டும். என்ன செய்வது?

வசுதேவர் தான் கூடையில் கொண்டு வந்திருந்த தன்னுடைய ஆண் குழந்தையை உறங்கிக் கொண்டிருந்த அந்தத் தாய் யசோதையின் அருகில் விட்டுவிட்டு, அங்கிருந்த பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார். அந்த யாதவகுலப் பெண்மணி யசோதை செய்த பூஜாபலந்தான் என்னே! அந்த பரந்தாமனே அவளருகில் குழந்தையாகக் கைகால்களை அசைத்துக் கொண்டு மர்மப் புன்னகையுடன் படுத்திருந்த காட்சியை என்னவென்று வர்ணிப்பது?

வசுதேவர் தன்னுடைய எட்டாவது குழந்தையை யசோதையின் அருகில் விட்டுவிட்டு, அங்கு அவளுக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்த வழியே திரும்பி மதுராபுரிக்கு வந்து சேர்ந்தார். அவர் திரும்ப வந்தபோதும் சிறைக் காவலாளிகள் நல்ல உறக்கத்தில்தான் இருந்தார்கள். எனவே குழந்தை பிறந்ததோ, வசுதேவரின் விலங்குகள் கழன்றதோ, அவர் குழந்தையைக் கூடையில் வைத்து எடுத்துக் கொண்டு போனதோ, இப்போது திரும்ப வந்ததோ எதையும் அறியாமல் நல்ல உறக்கம் அவர்களுக்கு. போன வழியே திரும்பிய வசுதேவர் சிறைக்கு வந்தார், உள்ளே நுழைந்தார், பழையபடி விலங்குகள் பூட்டிக் கொண்டன, பெண் குழந்தையை தாயார் தேவகியின் அருகில் விட்டுவிட்டு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டார்.

இவை எல்லாம் நடந்து முடிந்தபின் காவலர்கள் உறக்கத்திலிருந்து எழுந்தார்கள். கண்களைத் துடைத்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தார்கள். குழந்தை அழும் குரல் கேட்டு, ஆகா! தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்துவிட்டது, அரசன் கம்சனுக்குச் செய்தி சொல்ல ஓடினார்கள் காவலர்கள். கம்சன் எங்கே எங்கே என்றல்லவா காத்துக் கொண்டிருக்கிறான். செய்தி கேட்டு ஓடிவந்தான் சிறை கொட்டிலுக்கு. வந்தான், பார்த்தான் நம்மைக் கொல்ல வந்த எட்டாவது பிள்ளை எப்படி என்று, பார்த்தான், அந்த குழந்தை ஆண்குழந்தை அல்ல, பெண்ணல்லவா பிறந்திருக்கிறது. என்ன இது? ஆணானால் என்ன, பெண்ணானால் என்ன? என்னைக் கொல்லப்போவது எட்டாவது குழந்தை அல்லவா? ஆகையால் இந்தக் குழந்தையையும் கையில் எடுத்துக் கொண்டு சுழற்றித் தறையில் அடித்து அதனைக் கொல்லப் போனான்.

தேவகி கதறினாள்; பெற்ற வயிறு. இதற்கு முன்பு ஏழுமுறையும் குழந்தைகளை அவன் இரக்கமின்றி அவள் கண்முன்னால் வெட்டிக் கொன்றானே, இப்போது இந்தப் பெண் குழந்தையையும் கொல்ல வந்திருக்கிறானே என்று அவள் கதறினாள், கெஞ்சினாள், இது பெண் குழந்தையாயிற்றே, இதைப்போய் கொல்வேன் என்கிறாயே, பாவம் அது என்ன பாவம் செய்தது, அதைக் கொல்லாதே, விட்டுவிடு என்று அண்ணனிடம் கெஞ்சினாள் தேவகி. அண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு இந்தக் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை கொடு என்று கதறினாள்.

அந்த களங்கமற்ற பெண்ணின் கதறலைக் கேட்டு மனம் இரங்கவில்லை அந்த அரக்கன் கம்சன். அவள் கதறக் கதற அந்தக் குழந்தையின் இரண்டு கால்களையும் ஒன்றாக ஒரு கையால் பிடித்துக் கொண்டு அதைச் சுழற்றி தரையில் அடித்துக் கொல்வதற்காக சுழற்றிய சமயம் அந்தக் குழந்தை அவன் கைகளிலில் இருந்த கழன்று வானத்தில் பறந்து சென்றது.

அதே நேரம் ஒரு தெய்வீகக் குரல் சிறையெங்கும் எதிரொலிக்க, "கம்சனே! உன்னைக் கொல்வதற்கென்று அவதரித்தக் குழந்தை கோகுலத்தில் வளர்கிறது" என்றது.

மறுநாள் பொழுது விடிந்தது. அந்த இரவுக்கு மட்டுமல்ல, கம்சனால் அவதியுற்ற மக்களுக்கும் துன்பம் எனும் இருளிலிருந்து வெளிச்சன் வர பொழுது விடிந்தது. அங்கு கோகுலத்தில் நந்தனின் மனைவி யசோதை கண் விழித்துப் பார்த்தாள். தனக்குப் பக்கத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை. இரவின் மயக்கத்தில் முந்தைய இரவு தனக்குப் பிறந்தது பெண்குழந்தை என்றல்லவா தோன்றியது. இது என்ன அதிசயம், ஆண் குழந்தையாக இருக்கிறதே, சரி போகட்டும் இதைப் போய் பெரிது படுத்தலாமா? எதுவானால் என்ன, பெண் என்று இரவின் மயக்கத்தில் நினைத்திருப்போம், நல்லது நமக்கு ஆண் குழந்தை பிறந்தவரையில் மிகுந்த மகிழ்ச்சி என்று மகிழ்ந்தனர் நந்தனும் யசோதையும். குழந்தையைக் காலை வேளை வெளிச்சத்தில் பார்த்தார்கள். குழந்தை நல்ல கருமை நிறம், ஆகவே அவனை கிருஷ்ணன் எனும் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

சிறையில் அசரீரி சொன்ன செய்தியைக் கேட்டு அரண்டு போயிருந்தான் கம்சன். என்னைக் கொல்வதற்கென்று பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்கிறதாமே! விடக்கூடாது. அன்று பிறந்த குழந்தை எதுவும் கோகுலத்தில் உயிரோடு இருக்கக்கூடாது. கூப்பிடு அந்த அரக்கியை என்று பூதகி எனும் ஒரு அரக்கியைக் கூப்பிட்டு முந்தைய இரவில் பிறந்த எல்லா குழந்தைகளையும் கொன்றுவிடு என்று உத்தரவிட்டான். கருத்த மலைபோன்ற உருவமுடைய அந்த பூதகி தன்னுடைய மார்பகங்களில் விஷத்தைத் தடவிக் கொண்டு கொகுலம் சென்று அங்கு பிறந்திருந்த குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்து அவைகளைக் கொல்ல முயன்றாள். முதலில் இப்படியொரு பெண், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்ததை அலட்சியமாக எண்ணிய மக்கள், அவள் பால் கொடுத்த குழந்தைகள் எல்லாம் அடுத்தடுத்து இறந்து போனதைக் கண்டதும் விழித்துக் கொண்டார்கள். இவள் யாரோவொரு மாயக்காரி, குழந்தைகளிக் கொல்வதுதான் இவள் எண்ணம், நல்ல எண்ணத்தில் இவள் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

எங்கே அந்த ராட்சசி? தேடினார்கள். அவளோ மெல்ல நந்தன் யசோதாவின் இல்லத்தைச் சென்றடைந்தாள். அங்கு அன்னை யசோதையின் மடியில் படுத்திருந்த குழந்தையைத் தான் கொஞ்சி மகிழ்வதற்காகத் தன்னிடம் கொடுக்கும்படி கேட்டாள். தன் குழந்தையை அன்போடு ஒருத்தி கொஞ்சவேண்டுமென்கிறாள் என்றதும் மகிழ்ச்சியோடு யசோதையும் குழந்தையை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் தன் வீட்டு வேலைகளைக் கவனிக்க உள்ளே சென்றுவிட்டாள்.

உள்ளே வேலையாக இருந்த யசோதையின் காதில் ஒருத்தி கொடூரமான குரலில் அலறுவதைக் கேட்டாள். ஐயயோ! தன் குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டல்லவா வந்துவிட்டோம் என்று வாசலுக்கு ஓடிவந்தாள் யசோதா. அங்கு முன்பு வந்து குழந்தையை வாங்கிக் கொண்ட அந்த ராட்சசி உயிரிழந்து அலங்கோலமாக மார்பகம் தெரிய விழுந்து கிடந்ததைக் கண்டாள். அருகில் கிருஷ்ணன் சிரித்துக் கொண்டு கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டு விளையாடுவதைக் கண்டாள். நல்ல காலம், நம் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை, இவள் யார்? ஏன் இவள் இறந்து கிடக்கிறாள்? என்று நினைத்தாள் யசோதா. இவள் யாராகவேனும் இருந்துவிட்டுப் போகட்டும், நம் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை, அதுமட்டுமல்லாமல் சிரித்து விளயாடிக் கொண்டிருக்கிறதே, இது ஒன்றும் சாதாரண குழந்தை இல்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

யசோதையிடம் கிருஷ்ணன் வளர்ந்தான். பால்ய லீலைகளை கோகுலத்தில் நிகழ்த்திக் காட்டினான். கோகுலத்துப் பெண்கள் அவனிடம் அன்பு கொண்டனர். நட்பு வட்டம் அவனுக்கு அதிகம். அவனுடைய விஷமம் பலரையும் கோபப்பட வைத்தாலும், அவனுடைய மலர்ந்த முகத்தைக் கண்டதும் அந்த கோபம் இருந்த இடம் தெரியாமல் அல்லவா மறைந்து விடுகிறது? யார் இவன்? என்ன மாயம் செய்கிறான்?

பிறகு கண்ணன் வளர்ந்து பெரியவனாகி கம்சனை வதம் செய்து, தன் பாட்டன் உக்கிரசேனனை சிறையிலிருந்து விடுவித்து அரசனாக்கிவிட்டு, தன் உண்மை பெற்றோர்களான வசுதேவர், தேவகியிடம் அன்பும் பாசமும் கொண்டு, அதே அளவில் தன்னை வளர்த்த நந்தனிடமும் யசோதையினடமும் அன்புடன் இருந்தான். உலகத்தைப் பீடித்திருந்த துன்பங்கள் விலகி, கண்ணனால் ஒளிபெற்றது. அந்த குழந்தை பிறந்த நாள் ஜென்மாஷ்டமி.

ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை கோகுலாஷ்டமி, கிருஷ்ணனின் ஜென்மாஷ்டமி, தீமையை அழித்து ஒளியூட்டிய நல்ல நாள். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!












1 comment:

துரை செல்வராஜூ said...

உலகைப் பீடித்திருக்கும் துன்பங்கள் விலகிட - கண்ணன் திருவருள் புரியவேண்டும்.