தமிழிசை
மூவர் என்பார் தமிழில் கீர்த்தனங்களை இயற்றியும் பாடியும் புகழ்பெற்ற முதல் மூன்று
இசைக் கலைஞர்களைக் குறிப்பதாகும். அந்த மூவர் 1. அருணாசலக் கவிராயர், 2. முத்துத் தாண்டவர்
3. மாரிமுத்தா பிள்ளை. இவர்கள் காலத்துக்குப் பின் கர்நாடக இசையில் மும்மூர்த்திகள்
என வழங்கப்பட்டவர்கள் 1. ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 2. சியாமா சாஸ்திரிகள் 3. முத்துசாமி
தீட்சிதர் ஆகியோராவர்.
இந்தத்
தமிழிசை மூவர் என வழங்கப்பட்ட மேற்கண்ட மூன்று மகான்கள்தான் கிருதி எனும் கீர்த்தனங்களுக்கு
பல்லவி, அனுபல்லவி, சரணம் அல்லது எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்கிற அமைப்பை உருவாக்கியவர்கள்.
இவர்கள் தவிர மேலும் பலரும் தமிழில் பாடல்களை இயற்றிப் பாடவும் செய்திருக்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டில் பாபநாசம் சிவன் அப்படியொரு தமிழிசைக் கலைஞராகத் திகழ்ந்திருக்கிறார்.
தமிழிசை மூவர் வரலாற்றைச் சுருக்கமால இங்கே பார்க்கலாம்.
1. முத்துத் தாண்டவர்: (1525-1600).
தமிழிசை மூவரில் முதன்மையான காலம் இவருடையது. இவரும் சீர்காழியில் வாழ்ந்து பற்பல இசைப்
பாடல்களை இயற்றியும் பாடியும் வந்தவர். இவருடைய பாடல்கள் பதம் என்று சொல்லப்படுகின்றன,
இவை நாட்டியக் கலைக்குப் பயன்படுத்தப் படுகின்றன. இவர் பாடல்களில் குறிப்பிடத் தகுந்தவைகள்:
1. பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லாற் புவனத்தில் வேணும் உண்டோ” (கல்யாணி), 2. இன்னமொரு
தலம், இன்னமொரு கோயில், இன்னமொரு தெய்வம் இப்படியுண்டோ (தோடி) 3. சேவிக்க வேண்டுமையா,
சிதம்பரம் சேவிக்க வேண்டுமையா (ஆந்தோளிகா) 4. சிற்சபைதனிலே கண்டு கொண்டேன் (நீலாம்பரி)
5. நடனம் கண்ட போதே என்றன் (ஆகிரி) 6. தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும் (வசந்தா)
7. கண்டபின் கண் குளிர்ந்தேன் (மலையமாருதம்) 8. அருமருந்தொரு தனி மருந்திது அம்பலத்தே
கண்டேன் (காம்போதி) 9. தெண்டனிட்டேன் என்று (எமுனா கல்யாணி).
2. அருணாசல கவிராயர்: இவருடைய காலம் 1711-1779. இவர் தற்போதைய நாகை மாவட்டத்தில்
உள்ள தரங்கம்பாடிக்கு அருகில் தில்லையாடி எனும் ஊரில் பிறந்தார். தந்தை நல்லதம்பி,
தாய் வள்ளியம்மை. இந்த பெற்றோருக்கு இவர் நான்காவது புதல்வன். இவருடைய இளம் வயதிலேயே
இசையில் வல்லவராகவும், இசைக்கேற்ற தமிழ்ப் பாடல்களைப் பாடும் திறமையாளராகவும் இவர்
திகழ்ந்தார். இவருடைய திறமையை தில்லையாடிக்கு அருகிலுள்ள மாயூரத்தில் உள்ள தருமபுர
ஆதீனம் மகா சந்நிதானம் இவரை சீர்காழியில் வந்து குடியிருக்கச் செய்தார். இவர் சீர்காழியில்
வசித்து வந்த காலத்தில்தான் இவர் பெருமை வெளியுலகத்துக்குத் தெரிய வந்ததால் இவர் பெயரோடு
சீர்காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கத் தொடங்கினர். இவர் இசைப் பயிற்சி வழங்கி
வந்ததோடு, பல இசைப் படைப்புகளையும் இயற்றியிருக்கிறார். அதில் இவருக்குத் தெரிந்தவர்கள்
இராமாயண காப்பியத்தை இசை வடிவில் நாடகமாக அளிக்க பாடல்களை இயற்றித் தருமாறு கேட்க,
இவர் இயற்றித் தந்தது தான் “இராம நாடக கீர்த்தனைகள்”. இது இன்றளவும் புகழ்பெற்று, அனைத்து
இசைக் கலைஞர்களாலும் பாடப்ப்ட்டு வருகிறது.
இவருடைய படைப்புகளில்
‘அஜோமுகி’ நாடகம், சீர்காழி தலப்புராணம், சீர்காழிக் கோவை, சீர்காழி கலம்பகம், சீர்காழி
அந்தாதி, தியாகராஜர் வணக்கம், சம்பந்தர் பிள்ளைத் தமிழ், அனுமார் பிள்ளைத் தமிழ், இராம
நாடகக் கீர்த்தனைகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
இவருடைய “இராம
நாடக கீர்த்தனைகளில்” 258 பாடல்கள் அடங்கியுள்ளன. கீர்த்தனைகள் மூலமாக இராமாயணத்தை
உருவாக்கியவர் இவரே முதன்மையானவர். இசையோடு இராம காதையைச் சொல்வதனால் மக்களுக்கு ஆர்வம்
ஏற்படும்படி செய்தார். இது நாடகமாகவும் நடிக்கப்பட்டதால் பாமர மக்களும் பார்த்து, கேட்டு
பரவசமடைந்தனர். கம்பருடைய “இராம காதை” அரங்கேறிய
அதே திருவரங்கத்தில் தான் இவருடைய “இராம நாடக கீர்த்தனைகளும்” அரங்கேற்றின. தற்காலத்தில்
இவருடைய இராம நாடக கீர்த்தனைகள் அனேகமாக எல்லா இசைக் கலைஞர்களாலும் மேடைகளில் பாடப்பட்டு
வருகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்க பாடல்கள்:
1. யாரோ இவர் யாரோ (பைரவி-ஆதி தாளம்), 2. ராமனுக்கு மன்னன் முடி (ஹிந்தோளம்-ஆதி
தாளம்) 3. ஏன் பள்ளி கொண்டீர் ஐயா (மோகனம்- ஆதி தாளம்) .
3. மாரிமுத்தாப் பிள்ளை: (1712-1787).
இவரும் சீர்காழியில் பிறந்தவர். தமிழில் கீர்த்தனைகளை இயற்றியும், இசைத்தும் வந்தவர்.
இவருடைய பாடல்களில் குறிப்பிடத் தகுந்தவைகளாகச் சில பாடல்கள்: 1. தில்லை சிதம்பரமே
அல்லால் வேறில்லை தந்திரமே (ஆனந்த பைரவி) 2. தரிசித்த பேரைப் பரிசுத்தராக சிதம்பரமன்றி
உண்டோ (செளராஷ்டிரம்) 3. தெய்வீகத் தலம் இந்தத் தில்லை (பூர்வகல்யாணி) 4. எந்தத் தலத்தையும்
இந்தத் தலத்துக்கு இணை சொல்லக் கூடாதே ஐயா (தேவகாந்தாரி) 5. எந்நாளும் வாசமாம் சிதம்பர
தலத்திலே (பேகடா).
No comments:
Post a Comment