பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 7, 2020

கோபாலகிருஷ்ண பாரதியார் (1811 – 1881)


                                                
            கோபாலகிருஷ்ண பாரதியார் என்ற பெயரைக் கேட்டதும் நமக்கு நந்தனார் சரித்திரம் எனும் இசைக் கதம்பம் நம் நினைவுக்கு வரும். இவருடைய சமகாலத்தவர்களுள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரும் சொல்லலாம்.

            கோபாலகிருஷ்ண பாரதியார் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த நரிமணம் எனும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை ராமசாமி பாரதி என்பவர் இசையில் வல்லவர். இவர் இப்போது போல கல்வி முறை இல்லாததால், அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு குருவிடம் குருகுல வாசம் இருந்து கல்வி கற்றார். இவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். இவருடைய குடும்பக் இசையில் தோய்ந்த குடும்பம் என்பதால் இவரும் இசையின் பால் நாட்டம் கொண்டார். இவர் பாடகராய் இருந்ததோடில்லாமல், இவரே பாடல்களை இயற்றி பாடக்கூடிய திறமை கொண்டிருந்தார். இசை ஒன்றையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு இவர் வாழ்ந்து வந்தார்.

இவருடைய இளம் பருவத்தில் சில காலம் இவர் முடிகொண்டான் எனும் ஊரில் வாழ்ந்து வந்தார். இந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் அருகில் இருக்கிறது. பிறகு மாயவரத்தை அடுத்த ஆனதாண்டவபுரம் எனும் கிராமத்துக்குச் சென்றார். அப்போது மாயவரத்தில் வாழ்ந்து வந்த கோவிந்தசிவம் என்பாரிடம் இவர் அத்வைத சித்தாந்தக் கருத்துக்களைப் பாடம் கேட்டார். யோக சாஸ்திரத்திலும் ஆழங்கால் பட்டார்.

            இவருடைய பாடல்கள் அனைத்துமே அரிய வாழ்க்கைத் தத்துவங்கள் நிறைந்த பாடல்களாக இருக்கும். இவர் இயற்றிக் கொடுத்த பாடல்களைப் பற்பல இசைக் கலைஞர்களும் மேடைகளிலும் ஆலயங்களிலும் பாடி பிரபலமாக இருந்தனர். இவர் காலத்திலேயே இவருடைய பாடல்களை பிற இசைக் கலைஞர்கள் பாடி வந்தனர்.

           பெரிய புராணத்தில் உள்ள நாயன்மார்களில் ஒருவர் திருநாளைப்போவார் என்பவர். இவர் தில்லைக்குச் சென்று நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்ய வேண்டுமென்று எண்ணி முடிவெடுக்கும் போதெல்லாம் அது நிறைவேறாமல் போகவும், நாளை போகலாம், நாளை போகலாம் என்று வாழ்ந்ததால் இவரைத் திருநாளைப் போவார் என்று குறிப்பிடுகிறார்கள். இவருடைய வாழ்க்கை வரலாற்றை “நந்தனார் சரித்திரம்” என்ற பெயரில், பெரிய புராணத்திலுள்ள கதையில் இவரது கற்பனையையும் கலந்து எழுதினார். பெரிய புராணத்தில் நந்தனார் வரலாற்றில் அவரைக் கோயிலுக்குப் போகவிடாமல் தடை செய்து வேலை வாங்கிக் கொண்டிருந்ததாக ஒரு அந்தணர் பாத்திரத்தைச் சேர்த்து இவர் நாடகமாக இயற்றி, அது மேடை ஏறியதும், அதையே நந்தனார் வரலாறாக மக்கள் கருதத் தொடங்கி விட்டனர். அதே முறையில் தான் அன்றைய பிரபல இசைக் கலைஞர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் நந்தனாராக நடித்த படம் வெளியாயிற்று. அதிலும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் கற்பனைப் பாத்திரமான அந்தணர் பாத்திரம் முக்கிய பங்கு வகித்தது.

            இது குறித்த ஒரு சுவையான செய்தி. கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்தை ஒரு கதா காலட்சேபமாக நடத்தி அந்தக் காலத்தில் பெரு வெற்றி பெற்றிருந்தது. நம் காலத்தில் நகைச்சுவை நடிகராக விளங்கிய என்.எஸ்.கிருஷ்ணன், அந்த நந்தனார் சரித்திரத்தை அப்படியே பெயர்களை மாற்றி, நந்தனார் சிதம்பரத்தில் நடராஜப் பெருமானை தரிசிக்க முயன்ற செய்தியை மாற்றி, அதில் கிந்தன் என்று ஒரு பாத்திரத்தைப் படைத்து, அவர் படிப்பதற்காக சென்னை சென்ற கதையை “கிந்தனார் சரித்திரம்” என்று என்.எஸ்.கிருஷ்ணன் அதை ஒரு கதாகாலட்சேபமாக நடத்தி ஒரு திரைப்படத்தில் சேர்த்து,  அது பெரும் புகழ் பெற்றது.

            நந்தனார் திரைப்படத்தில் எம்.எம்.தண்டபாணி தேசிகர் எனும் இசைக் கலைஞர் பின்னாளில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இசைத்துறையில் இருந்தவர் நந்தனாராக நடித்தார். இந்தப் படம் 1942இல் எடுக்கப்பட்டது. இந்தப் படம் வெளியான காலம் நம் நாட்டில் சுதந்திரத்துக்காக போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலம். அதற்கு மகாத்மா காந்தி தலைமை வகித்து நடத்தி வந்ததோடு, அவருடைய சமுதாயக் கொள்கைகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு இந்த நந்தனார் படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார்கள், அவர் பார்த்துவிட்டு மனம் உருகினார் என்கிறார்கள்.

            இவர் எழுதிய பாடல்கள் ஏராளம் . இவர் ஒரு முறை திருவையாற்றுக்கு வந்து, அப்போது அங்கு வசித்து ஸ்ரீராமன் மீது பாடல்களைப் பாடியும், சீடர்களுக்கு இசைப் பயிற்சி கொடுத்தும் வந்த ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளைச் சந்தித்துப் போவதற்காக வந்தார். அது காலை நேரம், சுவாமிகள் தன் சீடர்களுக்கு ஆபோகி ராகத்தைப் பற்றி விளக்கிவிட்டு அந்த ராகத்தில் பாடலொன்றையும் கற்பித்து விட்டு, காவிரியில் ஸ்நானம் செய்வதற்காக வீட்டுக்கு வெளியில் வந்தார். அப்போது அவர் வீட்டின் திண்ணையில் கருத்த தடித்த குள்ளமான நபர் ஒருவர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவரை யார் என்று விசாரித்தார். அது நமது கோபாலகிருஷ்ண பாரதியார் தான். அவர் எப்படி இருப்பார் அவர் தோற்றம் பற்றி தெரிந்து கொள்ள இந்த வரலாறு வழி செய்கிறது.

            ஸ்ரீ தியாகையர் கேட்டதற்கு தான் மாயவரத்திலிருந்து வருவதாகச் சொன்னார். அதற்கு சுவாமிகள், அப்படியா சந்தோஷம், அந்த ஊரில் கோபாலகிருஷ்ண பாரதியார் என்று ஒருவர் தமிழில் கீர்த்தனங்கள் எல்லாம் இயற்றுபவர் இருக்கிறாராமே, அவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். அதற்கு அவர் “அடியேன் தான் அந்த கோபாலகிருஷ்ண பாரதி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் ஸ்ரீதியாகையர் மகிழ்ச்சியடைந்தார். உங்கள் கீர்த்தங்கள் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன், நான் இப்போது என் சீடர்களுக்கு ஆபோகி ராகத்தில் பாடலொன்றைச் சொல்லிக் கொடுத்தேனே கேட்டீர்களோ என்றதும், ஆமாம், கேட்டேன் என்றார். அதற்கு சுவாமிகள் நீங்கள் ஆபோகியில் ஏதேனும் கீர்த்தனம் இயற்றி இருக்கிறீர்களா? என்றதும் இதுவரை இல்லை என்று அவர் விடையளித்தார். சரி! இருங்கள், நான் போய் ஸ்நானம் செய்துவிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி சுவாமிகள் காவிரிக்குச் செல்ல, கோபாலகிருஷ்ண பாரதியர் அவ்வூரில் இருந்த ஐயாறப்பர் ஆலயத்தினுள் சென்று சுவாமியை வழிபட்டுவிட்டு, உள் பிரகாரத்தில் இருந்த யோக மண்டபத்தில் உட்கார்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

            அப்போது அவர் மனதில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆபோகி ராகத்தில் கீர்த்தனம் ஏதும் செய்திருக்கிறீர்களா என்று கேட்டது நினைவுக்கு வர, அவர் வாய் ஆபோகி ராகத்தை ஆலாபனை செய்யத் தொடங்கியது. அவர் மனதில் ஸ்ரீதியாகராஜர் ராமனுக்கு நிகரானவன கடவுள் யார் என்பது போன்ற ஒரு கீர்த்தனை இயற்றி இருப்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். அந்த கீர்த்தனை கரஹரப்பிரியா ராகத்தில் ரூபகத் தாளத்தில் அமைந்த “ராம நீ சமான வெவரு” என்பது. இந்தக் கீர்த்தனத்தில் ஸ்ரீதியாகராஜர் ராமனை விளித்து, ஓ ராமா! உனக்கு இணையானவர் யார்? சூரிய குலத்தை உயர்த்திய ராமா! மரிக்கொழுந்தைப் போன்ற சீதாதேவியின் பக்தி எனும் கூட்டில் இருக்கும் கிளி போன்றவனே, உனக்கு இணையானவர் யார்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டும்படி உரையாடும் தம்பிகளையுடைய ஸ்ரீதியாகராஜனின் குலதெய்வமே, இனிய உரையாற்றும் ராமா, உனக்கு இணையானவர் யார்”  இதுதான் அந்த கீர்த்தனையின் பொருள். 
       
கோபாலகிருஷ்ண பாரதியார் சிதம்பரம் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானைப் போற்றி பாடியிருப்பவர். அந்த தில்லை நடராஜரை நினைவில் கொண்டிருக்க வேண்டும். அதுவே ஒரு பாடலாக ஆபோகி ராகத்தில் அங்கு அவர் மனதில் ஓடப் பாடத் தொடங்கினார். அந்தப் பாடல்தான் “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?” என்பதாகும். இந்தப் பாடல் ஆபோகி ராகம் ரூபக தாளத்தில் அமைந்தது. அது
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?                                                                                                                                        தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?
 கிருபாநிதி இவரைப் போல கிடைக்குமோ                                                                      இந்தத் தரணி தன்னில்

ஒரு தரம் சிவசிதம்பரம் என்றால் துமே                                                                                    பரகதிக்கு வேறு புண்ணியம் செய்ய வேண்டாமே                                                                       அரிய புலையர் மூவர் பதம் டைந்தார்                                                                                       என்றே புராணம் சொல்லக் கேட்டோம்                                                                               கோபாலகிருஷ்ணன் பாடும் (சபாபதிக்கு)

            இவர் இயற்றிய நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் மேடைகளில் இசைக் கலைஞர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நந்தனார் சரிதப் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்தவை.

            டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தன் வாழ்க்கை வரலாற்றை “என் சரித்திரம்” எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார். அவரைத் தமிழ் கற்க அவர் தந்தை மாயவரம் சென்று திருசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் சேர்த்து விட அழைத்துச் செல்கிறார். அப்படி அவ்விருவரும் மாயவரத்தில் நடந்து செல்கையில் எதிரில் கோபாலகிருஷ்ண பாரதியாரைச் சந்திக்கின்றனர். உ.வே.சாவின் தந்தைக்கு தன் மகன் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றுக் கொள்வதோடு இவரிடம் இசையும் கற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் எதிரில் வந்த கோபாலகிருஷ்ண பாரதியாரை ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து பேசுகிறார்கள். அப்போது தான் அவரது தோற்றத்தை உ.வே.சா. வர்ணிக்கிறார்.  உ.வே.சா. கோபாலகிருஷ்ண பாரதியாரை வருணிக்கும் பாங்கு எப்படி தெரியுமா? “இறுகிய கழுத்தும், சப்பைக் காலுமாகக் காட்சி அளித்தார்” என்கிறார் தன் சுயசரிதையில். அவரைக் கண்டு முதலில் வியப்படைந்தாலும் பிறகு ஒரு எண்ணம் தோன்றுகிறது. கோணலான யாழில் இருந்துதானே நல்ல இசை பிறக்கிறது, அது போல இந்தப் பெருமானிடமிருந்து இன்னிசை தோன்றுகிறது என்று எண்ணிக் கொண்டாராம். மாயவரத்தில் உ.வே.சா. தமிழ் கற்பதோடு கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசையும் கற்கத் தொடங்குகிறார்.

            சில நாட்களில் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்குத் தன் மாணவன் சாமிநாதன் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசையும் கற்கிறான் என்பது தெரிய வருகிறது. இசையில் நாட்டம் கொண்டால், தமிழ் படிப்பது தடங்கலாகும் என்பதை பிள்ளை அவர்கள் எடுத்துச் சொல்ல, உ.வே.சா. இசை பயில்வதை நிறுத்திவிட்டு தமிழ் படிப்பைத் தொடர்ந்தார் என்பது தெரியவருகிறது. இவருடைய கீர்த்தனங்களில் இறுதி வரிகளில் தன்னுடைய பெயரையும் சேர்த்து கோபாலகிருஷ்ணன் வணங்கும் என்பது போன்ற முத்திரையை பதித்திருப்பர். வேறு பலரும் இந்த முறையைக் கையாண்டிருப்பதைக் காணலாம். தியாகராஜ சுவாமியும் தன்னுடைய கீர்த்தனங்கள் சிலவற்றில் இந்த முறையைக் கையாண்டிருப்பார்.

            இவருடைய பாடல்களை இன்றைக்கும் இசைக் கலைஞர்கள் அதிகம் பாடி வருகிறார்கள். அவற்றில் “எப்போ வருவாரோ” எனும் ஜோன்புரி ராகப் பாடல், “இன்னமும் சந்தேகப் படலாமோ” எனும் கீரவாணி ராகப் பாடல் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

            பிரபல பரதநாட்டியக் கலைஞர் திருமதி பாலசரஸ்வதி இவருடைய பல பாடல்களுக்கு பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் அபிநயம் பிடித்து ஆடியிருக்கிறார். இவருடைய இறுதி நாட்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை. தமிழிசையில் கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்கள் நிரந்தரமான இடத்தைப் பெற்றிருக்கும்.
           

No comments: