மகாகவி பாரதியாரின் "பாஞ்சாலி சபதம்"
முதல் பகுதி
மகாகவி பாரதியாரின்
முப்பெரும் பாடல்கள் வரிசையில் 'பாஞ்சாலி சபதம்' ஓர் சிறப்பிடம் பெறுகிறது. தனது 'வழி
வழி பாரதி' எனும் நூலில் சேக்கிழாரடிப்பொடி முது முனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்கள்
கூறுவதாவது: "மகாபாரதம் ஐந்தாம் வேதம் என்று போற்றப்படுகிறது. மறை நான்கொடு ஐந்து என்று நிலை நிற்பது 'மகாபாரதம்'
என்று வில்லிபுத்தூர் ஆழ்வார் அறிவிக்கிறார். இவ்விதிகாசத்தின் முக்கியப் பகுதி 'பாஞ்சாலி
சபதம்'. பெண்களைத் தாதர் என்று கருதி அவர்களுக்குக் கொடுமை இழைக்கும் சமூகத்தைச்
சுட்டெரிக்கப் பாஞ்சாலி சூளுரைக்கிறாள். அவள் உரைத்த சபதத்தை நிறைவேற்றித் தந்தவன்
கண்ணன். இதனை இந் நானிலம் அறிந்து பயனுறுதல் வேண்டுமென்று எண்ணி மகாகவி செயல்பட்டதால்
அவர் திருவாயினின்றும் 'பாஞ்சாலி சபதம்' உருப்பெற்றது".
புதுச்சேரியில்
ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் குடியிருந்த நாளில், ஒருநாள் மகாகவி பாரதியார் தனது இளைய
மகள் சகுந்தலாவுடன் உப்பளம் தேசமுத்துமாரி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது வழியில் ஈஸ்வரன் தர்மராஜா கோயிலுக்குள் இருவரும் நுழைந்தனர். அங்கிருந்த சிலாரூபங்களைக்
காட்டி சகுந்தலா இவர்களெல்லாம் யார் என்று கேட்க, பாரதியார், இவன் தான் பீமன், இவன்
தான் அர்ச்சுனன் என்றும் அவைகளைப் பற்றி கூறிவந்தார். அங்கிருந்த பெண் சிலையைக் காட்டி
இது யார் என்று கேட்க, இதுதான் திரெளபதி என்று விடையளித்த பாரதியிடம் பாப்பா, எனக்கு
இவர்களைப் பற்றிய கதையைச் சொல்லுங்கள் என்றவுடன், பாரதி திடீரென்று மெளனமாகி விட்டார்.
அவர் மனதில் மகாபாரதக் கதையும், பாஞ்சாலியின் சபதமும் ஆக்கிரமித்துக் கொண்டது போலும்.
பாஞ்சாலி சபதம் அவர் மனதில் நிழலாடத் தொடங்கி விட்டது.
'பாஞ்சாலி சபதத்தை'
உருவாக்கி அதனைப் பற்றி கூறவந்த மகாகவி, "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து
கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு - இவற்றினை யுடைய காவியம் ஒன்று
தற்காலத்தில் செய்து தருவோன் நமது தமிழ் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு
வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன்,
காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்." "காரியம்
மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறர்க்கு
ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக" என்று அவையடக்கத்தோடு இதனைத் தொடங்குகிறார் மகாகவி.
தனது இந்த நூலை யாருக்குச் சமர்ப்பணம் செய்கிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அவருடைய வாக்கால் அதனைத் தெரிந்து கொள்வோம்: "தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும்
இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு
கைங்கரியங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் இந்நூலைப் பாத காணிக்கையாகச் செலுத்துகிறேன்."
இந்த பாரத புண்ணிய
பூமியில் இராமாயணமும், மகாபாரதமும் காலங்காலமாக மக்கள் போற்றிப் புகழ்ந்து, கற்று வரும்
அறநூலாகும். இவ்வரலாற்றினை பல காலங்களிலும் பல்வேறு புலவர்களும் பாடிவைத்திருந்தாலும்,
அவை அத்தனையும் தமிழ் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கம்பனின் 'இராம
காதையும்', வில்லிபுத்தூராரின் 'வில்லி பாரதமும்' தமிழ் மக்களுக்குப் புதியதல்ல. வியாச
பாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ள இந்த 'பாஞ்சாலி சபதம்' பற்றி மகாகவி கூறும்போது,
"இந்நூல் வியாச பாரதத்தைப் பெரும்பாலும் தழுவி வரையப்பட்டது என்றாலும் பல அற்புத
மாற்றங்களையும் இதில் காணலாம்" என்கிறார்.
மகாகவியின் கூற்றுப்படியே, இதில் எளிய நடை, எளிய
பதங்கள், இனிய சந்தங்கள் அடங்கியவையாகக் காணப்படுகிறது. சொல்வழக்கு எளிமையென்றாலும்
கூட, அதில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் கனமானவை. மகாகவி இயற்றியுள்ள "பாஞ்சாலி
சபதத்தை" இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, முதல் பிரிவினை கவிதை வடிவிலிருந்து உரைநடையாக
கொடுத்திருக் கிறோம். இதன் இரண்டாவது பகுதி 'சூதாட்டச் சருக்க'மாக அடுத்த பதிவில் வெளிவரும்.
புதிதாகப் படிப்பவர்க்கு எளிதில் விளங்க வேண்டுமென்பதற்காகப் 'பாஞ்சாலி சபதம்' உரைநடை
வடிவில் கொடுக்கப்படுகிறது. எனினும் பாடத்தைப் படிக்கும்போது கவிதைப் பகுதியையும் உடன்
வைத்துக் கொண்டு படித்தால் பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை கவிதை, உரைநடை இரண்டையும்
படித்தபின் மகாகவியின் எழுத்துக்களைத் தொடர்ந்து கவிதை வடிவிலேயே படியுங்கள்.
புதிய எண்ணங்கள், சிந்தனைகள் ஒவ்வொரு முறையும் தோன்றக்கூடும். இக்காப்பியத்தின் தொடக்கத்தில்
மகாகவி பிரம்மத்தை வணங்கித் தொடங்குகிறார்.
எந்தவொரு தனிக் கடவுள்
வடிவத்தையும் போற்றி வணங்காமல், ஞானிகளுக்கே உரிய வகையில் பிரமம் எனும் மூலப்பொருளை
வணங்கி இந்தக் காப்பியத்தைத் தொடங்குகிறார்.
அந்த பிரமம்
எப்படிப்பட்டது? அது ஆணா, பெண்ணா, அலியா, அதற்கென ஒரு நாமம் உண்டா, உருவம் உண்டா, பிரபஞ்சத்தில்
உண்டு எனும் அத்தனை பொருளிலும் இலங்கிடும் பொருளே பிரமம் எனப்படுகிறது. அந்த நிர்மலமான
பொருளை நினைத்து மனம் கசிந்துருகி, பக்தியால் சிவசக்தி தன்னை ஆட்கொள்ளும்படியாக இந்த
புதிய இன்றமிழ் நூலினை இயற்றத் துவங்குகிறார் பாரதி.
இங்கு 'ஓர்
பொருள்' எனக் குறிப்பிடப்படுவதை 'உணரத்தக்க' 'ஓர்ந்தறியத்தக்க' என்று பொருள் கொள்ள
வேண்டுமென்று சேக்கிழாரடிப்பொடி தன் நூலில் குறிப்பிடுகிறார். இந்த பிரம ஸ்துதியில்
மகாகவி வேண்டுவது சிவஞானம்; சிவசக்தி மேவினாலன்றி சிவஞானம் தோன்றாது என்றும் அவர் விளக்குகிறார்.
ஸரஸ்வதி வணக்கம் பிரம ஸ்துதியைத் தொடர்ந்து கல்வியின் தேவதையான ஸரஸ்வதிக்கு வணக்கம்
செலுத்தப்படுகிறது. வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் அந்த கல்வி தேவதை கனியிசையை
வழங்கும் நல் யாழினைக் கைக்கொண்டிருக்கிறாள். வேதங்களைத் தன்னிரு கண்களாகக் கொண்ட அந்த
தேவி கலைவாணியைச் சரண் புகுந்து, அவள் அருள் வாக்களிப்பாள் என்ற தைரியத்தில் மகாகவி
ஐவர் பூவை திரெளபதி புகழ்க் கதையை மாணியல் தமிழ்ப்பாட்டால் உருவாக்கத் தொடங்குகிறார்.
பாஞ்சாலி சபதக்
கதை அத்தினாபுரத்தில் தொடங்குகிறது. இந்தக் காப்பியத்தில் தமிழ்க்காப்பிய முறைப்படி
நகர வர்ணனை கொடுக்கப்படுகிறது. அத்தினாபுரத்தில் நன்மைகளும் தீமைகளும் ஒருசேரக் காணப்படுகின்றன.
மெய்த் தவம் புரிந்தோர் ஒருபுறமென்றால், வெறும் வேடங்கள் பூண்டவர் மறு பக்கம். உயர்ந்த
சிவஞானம் ஒரு புறமென்றால், பொய்த்த இந்திர ஜாலம் நிகர் பொய்ம்மையில் பிழைப்போர் மறுபுறம்.
இருளும் ஒளியும் இணைந்தே காணப்படுவது அத்தினாபுரம். நன்மைகள் ஒரு புறம் என்றால் தீ
நிகர் தீமைகளும் மறுபுறமுண்டு.
அந்த நகரத்தில்
அரவக்கொடி உயர்த்தி நின்றான் துரியோதனன் எனும் பெயருடைய துணிவுடை நெஞ்சத்தான், கரி
ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடும் வீரத்தான். தந்தை திருதராட்டிரன் சொற்படி இந்தத் தடந்தோள்
மன்னன் அரசு புரிந்து வந்தான். மந்திரமுணர் பெரியோர் பலர் அவன் அவையில் இருந்தனர்.
அறமுறை தவறாத வீட்டுமாச்சாரியன், மெய்நெறி உணர் விதுரன், இவர்களோடு துரியோதனின் பொய்நெறித்
தம்பியரும், புலை நடைச் சகுனியும் உடனிருந்தார். இவர்களோடு கொடையில் சிறந்தோன், உயர்
மானமும் வீரமும் மதியுமுள்ள கர்ணனும் இருந்தான்.
இப்படி அரசாண்ட துரியோதனனிடம் எண்ணிலாப் பொருளின்
குவையும், நாலா திசைகளிலும் செல்லும் ஆக்ஞாசக்கரமும், கடல்போன்ற சேனையும், நினைக்கும்
இன்பங்களெல்லாம் துய்க்கும் வாய்ப்பும் இருந்தும், அந்த கண்ணற்ற திரிதராட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சோடு பொறாமைத் தீயால் வாடிநின்றான். பாண்டவர்கள் பாரில் புகழோடு வாழும்
வரை நான் ஆளும் அரசும் ஓர் அரசாகுமோ? என் வீரமும், செல்வமும் புகழ் பெறுமோ? அர்ச்சுனன்
நெஞ்சிலும், திறல் வீமன் எண்ணத்திலும் எனக்கெதிரான எண்ணங்களே இருக்கின்றன. துரியோதனனின்
பொறாமைத் தீ இவ்வுலகை ஆளுகின்ற மன்னர்கள் அனைவரும் வகைவகையா திரை செலுத்தி அந்த பாண்டவர்
காலடியில் கொண்டு குவிக்கின்றனரே. அந்தத் தருமன் தனது தம்பியரின் தோள் வலியால் அனைவரையும்
வென்று சக்கரவர்த்தி எனப் பெயர் சூட்டிக் கொண்டு விட்டான். இப்படி ஊராரும் உலகத்தாரும்
இவர்களைப் புகழ்வதை நான் எப்படிப் பொறுத்துக் கொள்வேன்?
அடடா! அவர்களுக்கு
வந்து சேர்ந்த பொருட்குவியல்தான் எத்தனை எத்தனை? இந்த உலகத்துச் செல்வங்கள் எல்லாம்
இந்தத் தருமனுக்கேவா? இப்படி எண்ணியெண்ணி மனம் நொந்தான் துரியோதனன். பொறாமை எனும் தீ
அவன் உள்ளத்தில் பற்றி எரிந்தது. என்ன நடந்தாலும், எந்த வகையாலும் அந்தப் பாண்டவர்
வாழ்வைத் தீது செய்து முடித்திட எண்ணி, அதனை எப்படிச் செய்வது என்று திகைத்து நிற்கும்போது,
அவனுடைய மாமனின் நினைவு வருகிறது.
அந்த மாமன்
சகுனி, சூதும் பொய்யும் உருக்கொண்டு நிற்கும் ஓர் கொடிய மனிதன். அவனை அணுகித் தன் மனத்தின்
ஓட்டத்தைச் சொல்லி சரணடைந்தான். தனது மனக் கிலேசத்தைப் பலவாறும் அந்தக் கொடிய பாதகன்
சகுனியிடம் முறையிட்டு அழுகிறான் துரியோதனன். அவர்கள் செல்வச் செழிப்பையும், மாளிகையின்
மாண்பையும் பார்த்து வரும்போது ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லி அந்த ஏந்திழையாள் திரெளபதி
என்னை எள்ளி நகையாடிச் சிரித்தாளடா மாமனே, அவர் பேற்றை அழிக்க ஓர் உபாயம் சொல் மாமனே,
அவர் செல்வம் கவர்ந்து அவரைத் தெருவில் விட ஓர் வழியைச் சொல் மாமனே என்று முறையிடுகிறான்.
பொய்மையும்
சூதும் வஞ்சகமும் ஒருங்கிணைந்த சகுனிக்கு இதைவிட ஓர் சந்தர்ப்பம் வேண்டுமா என்ன? சும்மா
பேசிப் பயனில்லை துரியோதனா? வீண் வார்த்தை வளர்க்காதே. நான் உனக்கு ஓர் உபாயம் உரைப்பேன்,
கேள். தெய்வ மண்டபம் ஒன்றை உருவாக்கு. அந்த மண்டபம் காண அவர்களை வருகவென அழைப்பாய்.
அங்கு நம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். அவர்களை சூதுக்கழைக்கலாம். ஒரு நாழிகைப்
போதினில் அவர்கள் செல்வங்களையெல்லாம் இழந்துத் தொண்டரென ஆக்கிடுவோம், என் சூதின் வலிமை
உனக்குத் தான் தெரியுமே என்றான் சகுனி.
போரிட்டு வெல்வோமெனில்,
போரில் வெற்றியும் தோல்வியும் யாருக்கு வருமென்று எப்படிச் சொல்ல முடியும்? அதிலும்
அந்த பாண்டவர் வீரம் பெரிது. ஒரு அர்ச்சுனன் வில்லுக்கு இணையுண்டோ? சூதாடுவதை இகழ்ச்சியாக
எண்ணாதே என்றான் சகுனி. இதற்கு முன்பும் சூதாடி எதிரிகளைத் தோற்கடித்தோர் ஏராளமாக உள்ளனர்.
நாட்டுக்காகவும், குடிமக்களுக்காகவும், செல்வத்திற்காகவும் பெரும் போர்களை இவ்வுலகில்
செய்திருக்கிறார்கள். அந்த செல்வங்கள் அத்தனையும் சூதாடி ஒரு நொடிப்பொழுதில் வெல்லமுடியும்
என்றால் உனக்கு வேறென்ன வேண்டும்?
அதுகேட்ட துரியோதனன்
நல்ல யோசனை சொன்னாய் மாமனே என்று சொல்லி ஒரு ஹாரத்தைப் பரிசாகக் கொடுத்தான். அவனை மார்புறத்
தழுவிக்கொண்டு எனக்கு இந்த பூமியில் இதமான சொற்களைக் கூறக்கூடியவர் உன்னைத்தவிர வேறு
யாருமில்லை என்றான் துரியோதனன்.
பிறகு இவ்விருவரும்
திருதராட்டிரனுடைய அவைக்குச் சென்று அவனை வணங்கிவிட்டு, இரக்கமில்லாத சகுனி சொல்லுகிறான்
"அரசே! உன் மகன் துரியோதனனைப் பற்றிய செய்தியைக் கேள். உடல் இளைத்துத் துரும்பு
போல ஆகிவிட்டான். உயிர்வாழ்வதையே அவன் வெறுத்துப் பேசுகிறான். எந்த உணவையும் சுவைபார்த்து
உண்பதை நிறுத்தி விட்டான். உடுக்கும் உடைகளிலும் கவனமின்றி அலட்சியமாகவே உடுத்துகின்றான்.
நண்பர்களோடு கூடி மகிழ்ந்து இருக்க மறுக்கிறான். இளம் மங்கைகளைக்கூட ஏரெடுத்தும் பார்ப்பதில்லை.
கண்கள் சோர்வடைந்து காணப்படுகிறான். இதற்குக் காரணம் உங்களுக்குத் தெரியுமா அரசே!"
என்றான் சகுனி.
தன் மகன் துரியோதனனைப் பற்றி சகுனி சொன்னதைத் திருதராட்டிரன்
கேட்டுக் கொண்டான். அவன் மனம் வருத்தமடைந்தது. என் மகனுக்கு என்ன குறை? இந்த சகுனி
சொல்வதில் ஏதேனும் உண்மையிருக்கிறதா? மகனே துரியோதனா! உனக்கு ஏதேனும் மனக்குறை உண்டா?
உன்னை எதிர்ப்பவர்கள்கூட இருக்கிறார்களா? நீ விரும்புவனவற்றை நொடிப்பொழுதில் கொண்டு
வந்து கொடுக்க ஆட்கள் இல்லையா? அமுதம் போன்ற உணவு வகைகள்; இந்திரன்கூட வெட்கப்படுமளவுக்கு
ஆடம்பரமான உடைகள்; இட்ட பணிகளைச் செய்யக் காத்திருக்கும் மன்னர்கள்; எதிர்வரும் பிரச்சினைகளைத்
தவிர்க்கும் ஆற்றல்மிக்க அமைச்சர்கள்; நல்ல குடிமக்கள், படைவீரர்கள்; இந்த பூமியெங்கும்
பெரும் புகழ் பெற்று விளங்கும் உன் சகோதரர்களான அந்தப் பாண்டவர்கள் இவர்கள் அனைவரும்
இருந்தும் உனக்குத் துயரமா?
தந்தை இப்படிக் சொல்லக் கேட்ட அரவக்கொடியுடைய துரியோதனன்,
கொடிய நெருப்பினைப்போல் சினம் கொண்டு பேசத் தொடங்கினான். அவன் பேச்சை இடைமறித்து சகுனி
சொல்கிறான், இவன் கொடுங்கோபத்தில் பேசுவதைப் பொறுத்துக்கொள்வாயாக. இவனுக்குள்ள குறைகளை,
வருத்தங்களையெல்லாம் தங்கள் சந்நிதியில் வந்து முறையிடுமாறு என்னைக் கேட்டுக் கொண்டான்.
அதற்கு சம்மதித்து இவனை நான்தான் இந்த அவைக்கு வலியக் கூட்டி வந்தேன். இவன் சொல்பவைகள்
நியாயமானவைதான், ஆனால் சரியாகச் சொல்லத் தெரியாமல் தடுமாறுகிறான். மனதில் கோபம் கொண்டவர்கள்
சொல்ல வந்த செய்தியைச் சரியாகச் சொல்ல முடியாதல்லவா? இவன் நீ பெற்ற பிள்ளை அல்லவா?
நீதி நெறி முறைகள் அறியாமல் போகுமா? ஒரு விளக்கில் பல தீபங்களைக் கொளுத்தினாலும் அவற்றின்
ஒளி குறைந்து போகுமோ? மன்னர்க்கழகு மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஆசையை
நெஞ்சில் வளர்த்துக் கொள்வது. அப்படியிருக்க தன்னைக் காட்டிலும் வேறொருவர் செல்வத்தில்
சிறந்து விளங்குவது ஆபத்து இல்லையா, அதனைத் தாங்கிக் கொள்ள முடியுமா?
இதோ உன் மகன்
துரியோதனன் ஆயிரம் யானைகளின் பலம் கொண்டவன். இந்த பூவுலகத்தை ஆளும் உந்தன் வம்சத்தில்
ஆளப்பிறந்த முதல் மகன் இவன். அந்த பாண்டவர் செய்த வேள்வியில் சூரியன் இருக்கும்போது
மின்மினிப் பூச்சியைப் போற்றுவது போல உன் மகன் இருக்க அந்த கண்ணனுக்கு மரியாதை செய்தனர்.
அவர்கள் கொடுத்த அர்க்கியம் உன் மகனுக்கு இல்லை. மாறாகப் புவி ஆளும் மன்னர்கள் கூடிய
சபையில் அந்தக் கண்ணனுக்குக் கொடுத்தனர். கூடியிருந்த மன்னர்கள் மனம் நொந்து போயினர்.
பலர் கேலி பேசும் படியாகவும், இளக்காரமாகப் பேசும்படியும் உன் மகனை வைத்துவிட்டனர்.
இப்போது இவன் வருத்தத்துக்குக் காரணம் புரிகிறதல்லவா? அந்த பாண்டவர்களுடைய செல்வத்தை
உன் மகன் அடைய விரும்புகிறான். இந்தப் புவியை ஆளும் உரிமையை வேண்டுகிறான். உன் குலப்
பெருமையை நிலைநாட்ட விரும்புகிறான். வீரனான உன் மகனின் ஆசை நியாயமானதுதானே! இல்லை என்றால்
இந்த உலகம் சிரிக்காதா?
கங்கை நதியில் நல்ல நீர் அளவின்றி வந்து என்ன பயன்?
அது அத்தனையும் கடலில் கொண்டுபோய் கொட்டுகிறதே. ஓர் அடர்ந்த காடு, அதில் மரங்கள் சூழ
சூரிய ஒளிபடாதவாறு கீழே ஒரு குளம், அதன் தண்ணீர் பாசிபடிந்து ஒருவருக்கும் பயன்படாமல்
இருக்கிறது. அது போல செல்வம் பிறருக்குப் பயன்படாமலே இருப்பது சரியா?
இப்படியெல்லாம்
கள்ள மனம் கொண்ட சகுனி பல கற்பனைக் கதைகளைச் சொல்லி திருதராட்டிரன் மனதைக் கலைக்க முயற்சிக்கிறான்.
சகுனியின் பேச்சைக் கேட்ட திருதராட்டிரனுக்குப் பெரும் கோபம் வந்தது. "அட!
என் பிள்ளையை நாசம் செய்வதற்கென்றே ஒரு பேயைப் போல வந்து சேர்ந்தாயோ? பெரிய வெள்ளம்
அடித்துக் கொண்டு வரும்போது ஒரு புதர் அதனை எதிர்த்து நிற்க முடியுமோ? இளம் வீரர்களான
பாண்டவர்களை நம்மால் வெல்ல முடியுமோ? சகோதரர்களுக்குள் ஏதடா பகை? சொந்தக்காரர்களுக்குள்
கோபதாபமா? நம்மை நம்பித்தானே அவர்கள் இருக்கிறார்கள்? இவன் முன்பு அவர்களுக்கெதிராகப்
பல சூழ்ச்சிகள் செய்த போதும் அந்த ஸ்ரீதரன் கண்ணபெருமான் அருளாலும் நல்லொழுக்கத்தினாலும்,
தங்கள் பலத்தினாலும் எந்த தீங்கும் வராமல் காத்துக் கொண்டு புகழடைந்தவர்களல்லவா அவர்கள்?
குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தப் பைத்தியக்காரனுக்கு அவர்கள் மீது பெரும் பகை! அவர்களுக்குச்
செய்த தீங்குகளால் இவனுக்குப் பெரும் பழிதான் வந்ததே தவிர ஏதாவது நன்மை கிடைத்திருக்கிறதா?
என்ன அப்படியொரு பகை அவர்கள் மீது? அவர்கள் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை தெரியுமா?
இங்கு வந்து குருட்டுக் கதைகள் சொல்லுகிறாய், தரும நூல்களை இழிவு படுத்துகிறாய்.
ராஜாக்களுக்குள்ள நீதிகளை வந்து சொல்லுகிறாயே, ஒரு பெரிய மலை சிறிய மண்குடத்திற்குள்
போனதாக ஒரு நூலைக் காட்டு.
இப்படிப் பலப்பல
சொல்லி சகுனியை திருதராட்டிரன் கோபித்துக் கொள்கிறான். தன் மகனைக் கெடுப்பதாக சகுனி
மீது குற்றம் சாட்டுகிறான். அவர்கள் மாளிகையில் இவன் போய் தடுமாறி விழுந்தால் அந்த
திரெளபதி சிரிக்காமல் என்ன செய்வாள்? அதில் என்ன பெரிய குற்றத்தைக் கண்டுவிட்டாய்?
தவறி விழுபவர்களைப் பார்த்து பெற்ற தாய் கூட சிரிக்கத்தான் செய்வாள். அப்படியிருக்கும்போது
இவன் விழுந்ததைப் பார்த்து மற்றவர்கள் சிரித்ததைப் பெரிய குற்றமாகச் சொல்ல வந்து விட்டான்.
மனதில் குறை வைத்துக்கொள்ள ஏதாவதொரு காரணம் வேண்டும், அவ்வளவுதானே. அதற்கு ஏன் இத்தனை
கதைகள் அளக்கிறாய். ஆயிரம் வேலை கிடக்கிறது. போய் அதனைப் பாருங்கள், போங்கள்! என்றான்
திருதராட்டிரன்.
கண்ணனுக்கு முதல் அர்க்கியம் கொடுத்தார் என்கிறாய்?
நமக்கு விருந்தினராக வந்தவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் நமக்குள்ளேயே செய்து கொள்வார்களா?
அண்ணன் தம்பிகளுக்குள் இத்தகைய சம்பிரதாயங்கள் தேவையா? அவர்கள் நம்மை அன்னியமாகக் கருதவில்லை
என்பதை உணரவில்லையோ. அந்த முகில்வண்ணன் கண்ணனை மரியாதைக் குரியவனாகக் கருதியதில் என்ன
தவறு? கங்கை மைந்தன் பீஷ்மரும் கண்ணனுக்குத்தான் முதல் மரியாதை என்று சொல்லிவிட்டார்.
பிறகு அவர்களைக் குறைகூறி என்ன பயன்?
அது கிடக்கட்டும்,
அந்தக் கண்ணனை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை
மன்னர்களுக்குள் எவரும் அவன் கால் தூசிக்குச் சமமில்லை தெரியுமா? உலகத்தில் ஞானமுடைய
பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியு மல்லவா? இந்தக் கண்ணன் சாதாரணமானவனா? ஆதிப்
பரம்பொருளான நாராயணன், பாற்கடலில் ஆதிசேடன் மேல் அனந்தசயனம் கொண்டிருப்பவன். அந்த சீதக்
குவளை விழிகொண்டவன் இந்த பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறான் என்கிறார்கள்.
இப்படிப் பலபல
சொல்லி திருதராட்டிரன் சகுனியின் பேச்சை மறுத்துப் பேசியது கண்டு துரியோதனன் கடும்
கோபமடைகிறான். அரவக்கொடி கொண்ட துரியோதனன் பாம்பு போல சீறி, "அட! பெற்ற பிள்ளைக்கே
தீங்கு நினைத்திடும் அப்பன் உன்னைப்போல உலகத்தில் வேறு யாரும் உண்டோ? என்னைக் கண்டால்
இவனுக்கு வேப்பங்காய் போல கசக்கிறது. அந்த பாண்டவர்களோ, இவனுக்கு சர்க்கரை போல இனிக்கிறார்கள்.
அவர்கள் என்ன தீமை புரிந்தாலும் அவர்களைப் புகழ்கிறான். என்னதான் செல்வத்தைக் கொண்டு
வந்து குவித்தாலும் என்னை இகழ்கிறான், என்று பலப்பல சொல்லி தந்தையை இழித்துப் பேசுகிறான்
துரியோதனன். எனக்கு நயமாகப் பேசத் தெரியாது. உன்னிடம் வாதம் செய்து ஜெயிக்க இங்கு
வரவில்லை. கருங்கல்லில் நார் உரிக்க முடியுமா என்ன? என்னைக் கொன்றாலும் சரி, வேறு என்ன
செய்தாலும் சரி, நான் என் மனதில் கொண்ட கருத்தை விடமாட்டேன். அந்த புல்லியர் பாண்டவர்
மேம்பட்டு வாழ நான் அதைப் பார்த்துக் கொண்டு வாழ விரும்பவில்லை. உன்னோடு வாதம் புரிய
நான் விரும்பவில்லை.
கடைசியாக உனக்கு
ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். நமக்கு எந்தவித தீங்கும் நேராமல் அந்த பாண்டவர்களை
வெல்வதற்கு ஒரு வழியிருக்கிறது. அவர்களைச் சூதாட அழைத்து அதில் அவர்களை வென்று அவர்களது
அளவிலடங்கா செல்வங்களையெல்லாம் அபகரித்துக் கொள்ளலாம். இந்த யோசனைக்கு நீ தடையெதுவும்
சொல்லாமல் என் இஷ்டப்படி செயல்புரிய அனுமதிக்க வேண்டும் என்றான் துரியோதனன்.
தனது தீய மகனுடைய
சொற்கள் காதில் தீயைப் போல புகுந்ததைக் கேட்ட திருதராட்டிரன் திகைத்துப் போனான். பெரும்
துயரத்தைக் கொண்டு வந்தாய் மகனே! பேய் போன்ற பிள்ளைகளைப் பெற்று விட்டேனே! சிங்கத்தைப்
போல அவர்களோடு போரிட உன்னால் இயலாது என்று நான் சொன்னேன், நீயோ நரியைப் போல் தந்திரமாக
இந்த வெட்கமில்லாத செயலைச் செய்ய நினைக்கிறாய். ஆண்மை இல்லாத இந்தச் செயலை வீரர்கள்
செய்வார்களா? உலகத்தில் மற்றவர் பொருளுக்கு ஆலாய்ப் பறக்கும் பதர்கள் உண்டோ? அளவற்ற
செல்வங்களும், புகழும், பெருமையும் பெற விரும்பினால் அதற்கு செய்யக்கூடிய காரியம் இதுவா?
என் வீரமகனல்லவா? இந்த நினைப்பை விட்டொழித்து விடு.
திருதராட்டிரன் இதுபோல மொழிகள் கூறியதைக் கேட்ட துரியோதனன்,
என் அப்பனாகிய உன்னிடம் நான் வாதம் புரிய விரும்பவில்லை என்று பலமுறை சொல்லியும் திரும்பத்
திரும்ப வாதம் செய்கிறாய். நான் இங்கு வந்த காரியத்தைக் கேள்; அதன்படி நட. நீ சொல்லி
அழைக்காவிட்டால் அந்த பாண்டவர்கள் இங்கு வரமாட்டார்கள். எனவே, நீ அவர்களை சூதாட இங்கு
வரச்சொல்லி அழைப்பு விடு. நீ அப்படி செய்ய மறுத்தால் உன் முன்னாலேயே என் உயிரை விட்டுவிடுவேன்
என்றான்.
ஒன்றை தெரிந்துகொள்,
வெற்றி என்பது நம் குலத்தொழில். எந்த விதத்திலும் வெற்றி பெறுவதில் தவறே கிடையாது.
நல்ல வழி, தீய வழி என்று நாம் அதில் பேதம் பார்க்க முடியுமா? நம் போக்கில் எதிர் வரும்
எந்தப் பகையையும் ஒழித்து வெற்றி காண்பது உத்தமம் என்றனர் பெரியோர்கள்.
இப்படித் துரியோதனன்
பேசிய பேச்சுக்களைக் கேட்டு திருதராட்டிரன் மனம் ஒடிந்து போனான். விதி
இப்படியெல்லாம் விளையாடுமென்று அறிவிற் சிறந்த விதுரன் அன்றே வரும்பொருள் உரைத்தான்.
இப்படியொரு வினையால் அரசர் குலம் அழிந்தே போகுமென்றான். நீ இப்போது சதி செய்யத் தொடங்கி
விட்டாய். அந்த சதியால் அவன் சொன்னபடி எல்லாம் நடக்கத்தான் போகிறது.
விதி! விதி!
விதி! மகனே, இனி நான் என்ன சொல்ல இருக்கிறதடா மகனே! கெட்ட காலம் வந்ததால் இந்த கயவன்
சகுனி உனக்குத் துணையாக சேர்ந்திருக்கிறான். நீ வீணாக ஆத்திரப்பட வேண்டாம். நீ விரும்பியபடி
நான் அந்த பாண்டவர்களை அழைக்கிறேன். நீ உன் மாளிகைக்குச் செல் என்று கண்களில் நீர்
வழியச் சொன்னான் திருதராட்டிரன்.
தன் மகனும்
அவன் மாமன் சகுனியும் அங்கிருந்து போனபிறகு மன்னன் பணியாளர்களை அழைத்து பாண்டவர்கள்
கட்டியுள்ள புது மாளிகையைப் போன்றதோர் எழில்மிகு மாளிகையொன்றைப் புதிதாக நிர்மாணிக்கப்
பணித்து அதற்காகப் பெரும் பொருள் தருவேனென்று உரைத்தான்.
மிகுந்த மகிழ்ச்சியோடு
சென்று அவர்கள் ஓர் பொற்சபையினை கட்டி முடித்தனர். அதனைக் கண்ட ஊரார் வானளாவ அந்த மாளிகையைப்
புகழ்ந்தனர். அது என்ன சாதாரண கட்டடமா? இல்லை இல்லை கல்லையும் மண்ணையும் பொன்னையும்
கொண்டு ஒளிவீசும் பல மணிகளைச் சேர்த்து அழகான சொற்களாலான சிறந்த காப்பியம் போல அதனைச்
செதுக்கினர்.
அறிவிற் சிறந்த
தன் இளவலான விதுரனை மன்னன் அழைத்தான். அவனைத் தன் தம்பியின் மக்களிடம் அரிய சிறந்த
பரிசுப்பொருட்களை எடுத்துச் சென்று கொடுத்து அவர்களையும் அவர்களோடு அவர்கள்தம் துணைவி
திரெளபதியோடும் தாங்கள் அமைத்திருக்கும் புதிய மண்டபம் காணவும் விருந்துண்ணவும் வருமாறு
உங்கள் பெரிய தந்தை திருதராட்டிரன் அழைத்தான் என்று கூறி அழைத்து வா என்றான்.
நாடு போற்ற நல்லதோர் புதிய மணிமண்டபம் எழுப்பியிருக்கும் செய்தியை அவர்களுக்குச் சொல்வாய்.
நீங்கள் நடத்திய பெரு வேள்விக்கு வந்து திரும்பிய பின் தன் மக்களை விருந்துக்கழைக்க
முதியவனான மன்னன் விரும்பி அழைத்தான் என்று அவர்களிடம் சொல்.
அப்படி இதமாக
அவர்களை அழைக்கும் போதே பேச்சோடு பேச்சாக, சகுனியின் சொற்கேட்டு பேயனத்தக்க பிள்ளை
துரியோதனன் தன் மனதில் கொண்ட செயலையும் குறிப்பால் சொல்லிவிடு என்றான் திருதராட்டிரன்.
மன்னன் சொற்கேட்ட
சான்றோன் விதுரன், "போச்சுது! போச்சுது பாரத நாடு! போச்சுது நல்லறம்! போச்சுது
வேதம்! இனி கொடுமையான காட்சிகளைத்தான் காணப்போகிறோம். இதனைத் தடுக்க முடியாதா?"
என்று பெரும் துயரடைந்து ஏங்கிப் பலப் பல பேசினான்.
மன்னன்,
"சென்று வா! தம்பி! இனிமேல் சிந்தனை எதுவும் இதில் செய்வதற்கில்லை. விதி வென்றுவிட்டது.
இதனால் விளையக்கூடியதை நீ அறிவாயே! அன்றே முடிவு செய்துவிட்டதை இன்று தடுத்து விட முடியுமா?”
என்று சொல்லி சோர்ந்து மயங்கி வீழ்ந்தான்.
மன்னனிடம் விடைபெற்று
விதுரன் சென்றான். வழியில் ஆறு மலைகளைக் கடந்து போய் வீரர்களாம் பாண்டவர்கள் ஆட்சி
செய்யும் எழில் மிகுந்த மாநகர் புகுந்தான். வழியில் கண்ட நாட்டு வளங்களையெல்லாம் எண்ணிப்பார்க்கிறான்
விதுரன். நீலநிற சிகரங்களைக் கொண்ட மலைகள், அமுதமென நீர் பாய்ந்து வளம் பெருக்கும்
நாடு, பயன் தரும் நல்ல மரங்களடங்கிய சோலைகள் சூழ்ந்த நாடு, பசி என்பதே இல்லாத வகையில்
நன்செயும் புன்செயும் வகையின்றி விளைந்து வளம்பெருக்கும் நாடு, பாலும் தேனும் உண்டு
மக்கள் நலம்பெறும் நாடு என்று அந்த நாட்டின் சிறப்புக்களையெல்லாம் எண்ணி அப்படிப்பட்ட
வளமிகுந்த பொன்னாடு நாசமடைய நானும் துணை புரிய நேர்ந்ததே என்று மனம் நொந்தவாறு சென்றடைந்தான்.
அங்கே பாண்டவர்
அரண்மனையில், விதுரன் தங்களை நாடி வருகிறான் என்ற செய்தி கேட்டு மனம் புளகாங்கிதமடைந்த
பாண்டவர் நால்வகைச் சேனையுடன், பரிசுகளை ஏந்தி, மேள தாளத்துடன் அவரை எதிர்கொண்டழைத்து,
தங்கள் மணிமுடி தாழ்த்தி வணங்கி விதுரனின் பாதமலர்களைப் போற்றிப் புகழ்ந்து, இன்மொழிகளால்
அவருடைய நலன்களை விசாரித்தறிந்தபின், அவனை அழைத்துக்கொண்டு அரண்மனை சென்றடைந்தனர்.
அரண்மனை சென்றடைந்த
விதுரன் குந்தி தேவியைச் சென்று வணங்கினான். அப்போது வீரம் செறிந்த பாஞ்சால மன்னன்
துருபதனின் மகளான திரெளபதி குனிந்த தலையோடு அங்கு வந்து, அந்திமாலையில் வானத்தில் உதிக்கும்
இனிய நிலவினைப் போல முகத்தோடு மாமனாரான விதுரனின் பாதங்களில் தலைவைத்து வணங்கினாள்.
தங்கப் பதுமைபோல்
வந்து தன்னை வணங்கிய மருமகளை விதுரன் ஆசீர்வதித்தான். அங்கு வந்திருந்த உறவினர், நண்பர்கள்,
புலவர்கள், சேவகர், வீரர்கள் என எல்லோருடனும் பேசிக் களித்தபின் ஊரை வலம்வந்து வீடுதிரும்பவும்
அன்றைய பகல் பொழுது முடிந்து இரவு தொடங்கியது.
இரவுப் பொழுது
வந்ததும் விதுரன் பாண்டவர் ஐவரையும் தனித்து அழைத்துச் சென்று ஓர் அழகிய மண்டபத்தில்
அமர்ந்து சொல்லுகிறான். "வேந்தர் பிரான் திருதராட்டிரன் நீங்கள் சீரோடும் சிறப்போடும்
என்னாளும் வாழ்க என்று உங்களை வாழ்த்தி, உங்களிடம் ஓர் செய்தியைச் சொல்லச் சொன்னான்"
என்றான். இந்த வையகம் மீது இணையற்றதாக ஓர் புதிய மண்டபத்தை உனது தம்பியர் சமைத்துள்ளனர்,
அதன் விந்தை அழகினைக் காண உங்களை அன்போடு அழைக்கிறான் வேந்தன். நீங்கள் அங்கு வந்து
விருந்துண்டு களித்திட வேண்டுமென்று மன்னன் விரும்புகிறான் என்றான் விதுரன்.
அத்தோடு நான்
உனக்குச் சொல்ல விழையும் செய்தி ஒன்றுண்டு. சகுனியின் சொற்கேட்டுத் தன் சுயத்தன்மையை
இழந்துவிட்ட துரியோதன மூடன் விந்தை பொருந்திய புது மண்டபத்தில் உங்களை சூதாடிக் களித்திட
அழைக்கும் சூழ்ச்சியொன்றும் அவன் மனத்தினில் இருக்கிறது என்பதையும் நான் உனக்குத் தெரிவித்தேன்
என்று விதுரன் இயம்பத் தருமன் மனம் கலங்கினான்.
சில சொற்களை
மட்டும் பேசுகிறான். புதிய மண்டபம் கட்டிய செய்தியும், அதில் சூதாட்டத்திற்கு அழைக்கப்போகும்
செய்தியும் என் மனத்தில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. மனத்தில் ஐயங்கள் எழுகின்றன. அந்த
சுயோதனன் நமக்கு நன்மை விரும்புவனுமல்லன், அவனை நம்புவதும் முடியாத காரியம். நம்மைக்
கொல்ல முன்பு பல சதிகள் செய்தவன் அவன். அவனால் நமக்கேற்பட்ட துன்பங்கள் எண்ணிலடங்கா
என்பது உனக்குத் தெரியாததோ? வெல்லக் கூடியவர்கள் என்றாலும் மன்னர்கள் சூதினை விரும்பலாமோ?
என் மனம் சங்கடப்படுகிறது, அது தெளிவடைய நீதான் ஓர் உபாயம் சொல்ல வேண்டுமென்றான்.
அதற்கு விதுரன்
சொல்லுகிறான்: "பெரியோர்கள் இச்செயலை மேன்மையுடையதாகவா நினைப்பார்கள்; விஷம்போலக்
கருதுவார்கள். இச்செயலின் தாழ்மையெலாம் அவர்களுக்கு உரைத்து விட்டேன் இது மிகத் தீது
என்று, அண்ணன் எத்தனை சொல்லியும் இளவரசன் மதுவை அதிகமாகக் குடித்தவன் போல் அந்த ஒரு
வார்த்தையையே திரும்பத் திரும்பக் கூறுகிறான்."
"அண்ணன்
கல்கூட கரைந்துவிடும்படி எடுத்துக்காட்டிய நீதிகளோ கணக்கற்றவை, ஆனால் அந்தப் புல்லன்
எதனையும் உள்ளத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. தனது மடமையினால் சூது ஒன்றையே குறியாக நிற்கிறான்,
மன்னனும் அதுகண்டு அவன் விருப்பப்படியே உங்களை அழைக்கும்படி சொன்னார்."
இதனைக் கேட்ட
தருமனும் மனத்தளர்ச்சி நீங்கி ஓர் உறுதி கொண்டு சொல்லுகின்றான், "என்ன சூது செய்தாலும்,
மதி மருண்டு அவர்கள் விருந்தினரை அவமதித்தாலும், நாம் கருமமொன்றையே கருத்தில் கொண்டு
நெறிப்படி நடப்போம். பெரிய தந்தை வரச்சொல்லி யிருக்கிறான், சிறிய தந்தை தூது வந்திருக்கிறான்,
இனி யோசிக்க எதுவுமில்லை. எது நடந்தாலும் சரி என்று துணிந்து விட்டேன். தவறுகளைச் செய்ய
மாட்டோம். அறநூல்கள் காட்டும் வழிப்படி நடப்போம்" என்றான்.
தருமன் வீமனை
அழைத்து நாம் இரண்டு நாட்களில் நமது படைகளோடு அத்தினாபுரம் செல்வதற்குரிய ஏற்பாடுகளை
உடனே செய்வாயாக என்றான். பீமன் திகைத்தான். இளைய வீரன் அர்ச்சுனனை நோக்கிச் சொல்லுகிறான்,
"மாமன் சகுனியும் மருகன் துரியோதனனும் நம்மை அழிக்கக் கருதி இந்த சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்.
இனியும் தாமதம் செய்யலாமா? போவோம் போவோம் என்று இடிபோல நகைத்தான்.
அண்ணன் ஆணைப்படியே
படைகொண்டு செல்வோம் என்றான் பீமன். நமக்குள்ளான இந்தப் பகை நெடுநாட் பகை. இதை நினைத்தே
நான் பலநாட்கள் கழித்தேன். கெடுநாள் வருமளவும் நாம் ஒரு பூச்சியைக்கூட கொல்லக்கூடாதல்லவா?
இப்போது வந்துவிட்டது. வில்லில் நாணைத் தொடுத்திடுவோம், நம் வில்லுக்கு இரை மிக விரைவில்
கிடைக்கப்போகிறது. போருக்குச் செல்வோம்; அப்பன் பிள்ளை இவர்கள் சாதுரியத்தை யாரிடம்
காட்டுகிறார்கள்? எத்தனை நாட்கள் இவற்றைப் பொறுத்திருப்பது?
இப்படி வில்விஜயனும்
பீமனும் பேசியபோதும் அண்ணன் தருமன் புன்னகை பூத்து அவர்களுக்கு மறுமொழி உரைத்தார்.
முன்பு துரியோதனன் செய்த கொடுமைகளும், இன்று மூண்டிருக்கும் இந்த கொடுங் கோலமும்,
இதன் பின்னர் விளையப்போவதும் நான் உணர்ந்தே யிருக்கிறேன். என்னைப் பித்தன் என்றெண்ணி
பேசுகின்றீர்கள். கைப்பிடி கொண்டு ஒருவன் சக்கரத்தைச் சுழற்றும்போது அது கூடவோ குறைவாகவோ
சுற்றுவது சுற்றுபவனின் வேகத்தைப் பொறுத்ததே தவிர சக்கரத்தின் தன்மையால் விளைவதல்ல.
இதனை புவி மீது வாழும் உயிர்களுக்கும் ஒப்பிடலாம். இது ஏதோ செப்பிடு வித்தை போல தோன்றினாலும்,
உண்மையில் இவை யாவும் தவறின்றி சீராக நடப்பது விதியின் செயல்களால்தான். இப்படிப்
பற்பல நீதிகளை தருமன் எடுத்துரைத்தான் தம்பியர்களுக்கு.
அண்ணன் சொற்கேட்ட
தம்பியர்கள் கைகளைக் கூப்பி உலகில் அறத்தினை நிலைநிறுத்த வந்தவன் நீ என்று தருமனைப்
புகழ்ந்தனர். உன் வார்த்தைகளை மீறி எந்தச் செயலையும் செய்ய மாட்டோம். ஆண்டான் ஆணையிட்டாலன்றி
அடியார்களுக்கு வேறு கடமையுண்டோ? ஐயனே பாண்டவர்தம் ஆவி நீயே! என்றனர். அதன் பின்
மூன்றாம் நாளில் தருமன் தம்பியரோடும் பாஞ்சாலன் திருவிளக்காம் திரெளபதியோடும், உற்றார்
உறவினரோடும், படைகளோடும் பயணம் செய்து தங்கள் நகரினை நீங்கி தீயோர் ஊருக்குப் புறப்பட்டான்.
விதி வழிகாட்ட
பாண்டவர் ஐவரும் பத்தினியோடும் மற்றவரோடும் நடந்து சென்றனர். நரி செய்யும் சூழ்ச்சியினால்
வீரமிக்க அரிமா வலையில் விழும். சிற்றெரும்பால் ஓர் யானை இறந்து போகும். வரிபடர்ந்த
புலிதனைக் கேவலம் புழுவும் கொல்லும். வருங்காலத்தை உணர்ந்தோரும் சிலநேரம் செய்வதறியாமல்
மயங்கி நிற்பர். இப்படி விதியினால் பலவும் ஏறுக்கு மாறாகவும் தலை கீழாகவும் நடக்கும்.
மாலைப்பொழுது வந்தது. திரெளபதியை அர்ச்சுனன் அழைத்துச்
சென்று ஓர் தனியிடத்தில் பசும்புல் வெளியில் மேலை வானத்தில் மறைகின்ற கதிரவனைத் தொழுது
கண்டான். அன்போடு அவன் மீது சாய்ந்த திரெளபதிக்கு அந்த மாலை நேர எழில் காட்சியை விளக்குகின்றான்.
“பாரடியோ வானத்துப் புதுமையெல்லாம். பண்மொழி! கணந்தோறும் மாறி மாறி ஓரிடம் போல் மற்றோரிடம்
இன்றி மனதில் உவகை பொங்கப் புதிது புதிதாகத் தோன்றும் காட்சிகளைப் பார்! புவிமீது எண்ணரியப்
பொருள் கொடுத்தும் இதுபோலே யாரே இயற்ற வல்லார்? வேத முனிவர்கள் போற்றும் இந்தச் செம்பொன்
ஜோதி வனப்பையெலாம் ஒரு சேர இங்கு காண்பாய். ஒவ்வோர் கணமும் வியத்தகு காட்சிகள் தோன்றும்.
கணந்தோறும் வெவ்வேறு கனவுகள் தோன்றும். நவநவமாங் களிப்பு தோன்றும். இதையெல்லாம் கருதவோ
சொல்லவோ முடியுமா? கணந்தோறும் புத்தம் புது வண்ணம் காட்டி காளி பராசக்தியவள் களிக்கும்
கோலம், இதனைப் பெரியோர்கள் கணந்தோறும் பராசக்தி பிறப்பாளென்று சொல்லுகின்ற விளக்கத்தை
இத்தோற்றத்தில் பார்ப்பாய்.”
“அடி வானத்தில்
பரிதியின் கோளம், அது அளப்பரிய விரைவோடு சுழலக் காண்பாய். வானத்தில் மின்னலும் இடியும்
கோடி கோடியாய், அவற்றை எடுத்து ஒன்றாய் உருக்கி வார்த்து, முடிவான வட்டத்தைக் காளி
ஆங்கே சுழற்றுகிறாள்.”
இப்படி இயற்கையின்,
மாலைக் காட்சியின் மாண்பு இவற்றை அர்ச்சுனன் காட்டி எழுந்து நின்று பல்லாண்டு வாழ்க
என்போம் என்கிறான். இனி பாரதியின்
வாக்கால் அடுத்தபாட்டைப் படித்தால்தான் அதன் சிறப்பு புரியும்.
'செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக'என்பதோர் நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியே-இவர்
தங்க வினங்க விருந்த பொழி விடைச்சார்ந் தனர்-பின்னர்
அங்கவ் விரவு கழிந்திட,வைகறை யாதலும்-மன்னர்
பொங்குகடலொத்த சேனைகளோடு புறப்பட்டே,-வழி
எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே,-கதிர்
மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்
இப்படி
அர்ச்சுனன் கண்ட இயற்கைக் காட்சியோடு முதல் சருக்கம் முடிவடைகிறது. இந்த இடத்தில் மகாகவி
பாரதியார் அருளியுள்ள பாடல் காயத்ரி மந்திரத்தின்
உட்பொருளை மக்களுக்கு விரித்துரைக்கிறது. இதோ அது: "செங்கதிர்த் தேவன் சிறந்த யொளியினைத் தேர்கின்றோம் - அவன் எங்க ளறிவினைத் தூண்டி
நடத்துக" என்பதோர் - நல்ல மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே
- இவர் தங்களினங்க ளிருந்த பொழிலிடைச் சார்ந்தனர் - பின்னர் அங் கவ்விரவு கழிந்திட
வைகறை யாதலும் - மன்னர் பொங்கு கடலொத்த சேனைகளோடு புறப்பட்டே - வழி எங்குந் திகழு மியற்கையின்
காட்சியி லின் புற்றே - கதிர் மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்" 'செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக'என்பதோர் நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியே-இவர்
தங்க வினங்க விருந்த பொழி விடைச்சார்ந் தனர்-பின்னர்
அங்கவ் விரவு கழிந்திட,வைகறை யாதலும்-மன்னர்
பொங்குகடலொத்த சேனைகளோடு புறப்பட்டே,-வழி
எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே,-கதிர்
மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்
2ஆம் பகுதி தொடரும்.
No comments:
Post a Comment